"

அத்தியாயம் 02

4.11 thirumuular

2.1 ஆத்திகமும் – ஆன்மிகமும்,

ஆத்திகம் (இதன் இன்னொரு பெயர் தெய்வீகம்).  ஆஸ்த்தா என்றால் வடமொழியில் – நம்பிக்கை. (ஆத்திகம் என்பது கடவுள் நம்பிக்கையும் அதோடு கூடிய மதங்கள் காட்டிய வழியில் நடப்பதையும் குறிக்கும்). ஆனால் ஆன்மிகம் ஆத்திகத்தை கடந்தது. இதை அறியாமல், நமது மக்கள் ஆத்திகத்தையும் ஆன்மிகத்தையும் கலந்து குழப்பிய குழப்பம்  எத்தனை காலம் நிலைத்திருக்குமோ!

ஆத்திகத்திற்கு எதிர்ப்பதம் நாத்திகம். இல்லையா?.

நாத்திகர்கள் ஆன்மீகத்தில் இருப்பார்களா? சந்தேகமே வேண்டாம்.  நிறையவே உண்டு. இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆன்மீகத்திற்கும் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

சாமியார்களுக்கு ஏதோதோ தெரியும் என்று பலருக்கு நீளமான ஒரு நம்பிக்கை. சில சமயம் அந்த  நீளமான பட்டியலில் ஆங்காங்கே மிக அபத்தமான மற்றும் ஆபத்தான ஐட்டங்கள் காணப்படும். அதில் ஒன்று, ரசவாதம். அதாவது இரும்பை (ஈயத்தை) தங்கமாக மாற்றும் விஞ்ஞானம். சாமியார்களுக்கும் கடவுளுடன் ஏதோ ஒரு தனிப்பட்ட நட்பு இருப்பதாக வேறு ஒரு நம்பிக்கை.

இதெல்லாம் பரவாயில்லை. ஏழையும் இல்லாமல் செல்வந்தராகவும் இல்லாமல், நம்மைப் போன்றவர்களில் பலர் காணும்  நூறு கனவுகளில் ஒன்று இரண்டு மாத்திரமாவது நிறைவேறுகிறது. அதனால்   நமக்கு,  ஒரளவாவது  மனது சமாதானம் அடைவதுண்டு.

உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும், பல கோடி ஏழைகள் எளியவர்கள் இருக்கிறார்கள்.    இவர்கள் கனவு காணும் வாய்ப்பே குறைவு. அப்படியே, கனவுகள் கண்டிருந்தாலும் எதுவுமே நினைவாகாமல் கருகிப் போவதுண்டு. இவர்கள் கூட சாமியார் பின்னால் சுற்றுவதில்லை.

ஆன்மீகத்திலிருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று தேடும் கூட்டம்  மத்திய தர மக்களே. இவர்களின் எதிர்பார்ப்பு என்னவாயிருக்கும்? ஞானிகள், அதாவது ஆன்மீகப் பெரியவர்கள் பக்தர்கள் தரும் ஒரு சில வாழைப்பழங்களுக்கு, போடும் கூழை கும்பிடுகளுக்கும் மயங்கி, தாங்கள் அரும்பாடு பட்டு பெற்ற கடவுளின் கனக்க்ஷனை வைத்து, பக்தர்களின் பொருள்  உலக கனவுளை நினைவாக்குவார்கள், என்பதே!

இப்படிப்பட்ட பல   தவறான நம்பிக்கைகளை அடைத்து வைத்துக் கொண்ட பல  தலைகள் அடிக்கடி மொட்டையான கதைகளுக்கும்,  உயிர் இழந்த அரைகுறை சாமியார்களுக்கும் கணக்கே இல்லை.

2.2  தேடுவோரின் தேடல்கள்

நாம் எல்லோருமே நமது வாழும் காலத்தில் எதையெல்லாமோ தேடுகிறோம்.   சிலர் உட்கார்ந்து  தேடினாலும், பலர் ஓடிக்கொண்டே தேடினாலும், எல்லோருமே தேடுகிறார்கள்.

இந்த தேடுதல்  உலக வாழ்க்கையின்   ஓயாத ஓட்டத்திற்கு ஒரு சக்தியாக, உந்துதலாக அல்லது காரணமாக அமைகிறது. இந்த புத்தகத்தில் நாம் படிக்கப் போவது சாதாரண மக்களின் தேடலில்லை.  ஞானிகளின் தேடல். அது ஒரு வித்தியாசமான தேடல். நாம் எல்லோருமே, எப்போதுமே எதையாவது தேடிக்கொண்டிருந்தாலும், நம்மிடையே,  தேடுவோர் என்று தனியாக சில மக்கள் உள்ளனர்.  இவர்களின் தேடல் மற்ற பெரும்பான்மை மக்களைவிடப் பலவிதத்தில் வேறுபட்டது. இவர்களை நாம் ஞானிகள், சித்தர்கள், குருமார்கள், ரிஷிகள், முனிவர்கள், யோகிகள், செயிண்ட், ஸுபிக்கள், புத்த பிக்குகள், ஜைன முனிகள் என்று பலவாராக அறியலாம்.

இந்த  ஒரு சிறுபான்மை மக்களைப் பற்றியும். மற்றும் இந்த மக்கள் விடாது தேடுவதையும், தேடியவருக்கு கிடைப்பதையும் பற்றிய எல்லா விவரங்களை தேடுவதுதான் இந்த புத்தகத்தில் நீங்கள் படிக்கபோவது.

2.3  தேடுவோரின்  தனித்தன்மை

இந்த தேடுவோரின் தேடலுடன் மற்ற மக்களின் தேடுதலை ஒப்பிடும்போது ஒரு மிக பெரிய வித்தியாசம் தெளிவாகும்.. அது என்னவென்றால், சாதாரண மக்களான நாமெல்லாம் புலன்களில் அறிவதை எல்லாமே தேடுவோம். புலன்களில் சிக்கியதை எல்லாமே மனதால் பிடிப்போம். மனதால் பிடித்ததை எதையுமே விடமாட்டோம்.

ஆனால், இந்த தேடுவோர் எல்லோருமே:  தாங்கள் பிடித்திருந்ததை  எல்லாம் அதாவது மண்,  பொன், சொந்த பந்தங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு மனிதனின் புலன்களில் சிக்காத எல்லாவற்றையுமே – (கடவுள், ஆத்மா, உண்மை, அணு, என்று)  தேடுவது வழக்கம்.

இந்த மனிதர்கள், சாதாரண மனிதர்களாக உலகே   மிதித்தவர்கள், தேடல்கள் தீவிரமாகும் போது  ஞானிகள் என்று அறியப்படுகிறார்கள்.

இந்த ஞானிகள் என்பவர்களில் சில உண்மை விஞ்ஞானிகளும், கணக்கில்லாத மெய்ஞானிகளும் அடக்கம். ஆனால், நாமெல்லாம் பெரும் பொருளை அடைய, வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்குக் கூட இல்லாத இந்த ஞானிகளை தேடிப்போகிறோம்.

இவர்களுக்கு கடவுளிடம் தொடர்பு இருக்கிறதோ? நிச்சயமாக தெரியாது ! ஆனால் நம்மிடம் இல்லாத (அமானுஷ்ய) சக்திகள் இந்த ஞானிகளிடம் இருக்கின்றன என்று தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள் எல்லோருமே நம்புகிறார்கள்.

இவர்களைக் காக்காய் பிடித்தால், தேர்தலில் ஜெயிக்கலாமா? ஜெயித்தவர் மந்திரியாகலாமா? இவர்கள் தயவில் திடீர் பணக்காரராக முடியுமா? கொடுமையான வியாதிகள் உயிரை பறிப்பதிலிருந்து தப்பிக்க முடியுமா?

முடியும் என்று நம்புபவர்கள் அனேகம். இந்த அனேகரில் சிலரை, ஒரு சில போலிச் சாமியார்கள் மொட்டையடித்த கதைகளும் அனேகம்.

2.4 மதங்கள், கடவுள்  அழிவுகள்?

மதங்கள் பல இருப்பதை நன்றாகவே அறிவோம். ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் என்று எல்லோருமே படிப்போம். ஆனால் என் கடவுள்தான் உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்போம். தான் கும்பிடாத சாமியை கும்பிடுபவரை குறை கூறுவோம், வெறுப்போம், முடிந்தால் அழிப்போம்.

இந்த உலகத்தில் பல மதங்களை சேர்ந்த சாமியார்கள். இந்து (சாதுக்கள்), இஸ்லாமிய (ஸுபி), கிறித்துவ (செயிண்ட்ஸ்) பௌத்த (புத்த பிக்குகள்) என்று உலகெங்கிலும் மதங்கள் அவைகளில் சாமியார்கள். அவர்கள் பலவிதமான, வண்ண வண்ண  உடைகளில் (சிலர் உடையே இல்லாத) வாழும் நல்லவர்கள். இவர்கள் நம்மைப் போன்ற மக்கள், அமைதியாக, நலமாக, நட்புடன் வாழ தங்கள் வாழ்க்கையின்  ஒரு கணிசமான காலத்தைச் செலவழிக்கிறார்கள்.

இதில் அப்பாவிகளை மற்றும் திக்குத் தெரியாமல் துயரத்தில் சிக்கியவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் போலிச் சாமியார்கள்,  ஞானிகள் நடுவே புகுந்துவிடுகிறார்கள்.  இவைகள் எல்லாமே ஒரு குழப்பம். நல்லது எது? பொல்லாதது அல்லது போலி எது என்று பிரித்தறியும் அறிவில்லாத மக்கள் போலிகளுக்கு பலியாவதை செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் தங்களிடையே நட்போடு வாழ, மக்களின் நல்வாழ்வுக்காக  உண்டான  மதங்கள் இன்று ஏனோ மக்கள் மத்தியில் சண்டை-பூசல் அழிவுகள் உற்பத்தி செய்ய ஒரு முக்கிய கருவி. அது ஏன் ? ஏன்? ஏன் ?

(கத்தி மனித உயிரை காக்க  அறுவை சிகிச்சைக்கும் பயன் படும். கொலை செய்து உயிரை எடுக்கவும் பயன்படும் –  நன்மையோ – தீமையோ, விளைவது கத்தியில் இல்லை.   கத்தி, யார் கையில் இருக்கிறது? அவர்கள் புத்தி என்ன சொல்கிறது  என்பதைப் பொருத்தே இருக்கிறது. அவ்வப்போது மதங்கள் தவறான கைகளை சேர்வதால் அழிவு வருகிறது.)

இந்த சாமியார்கள் எல்லோருக்குமே அமானுஷ்ய சக்திகள் உண்டா? அப்படி உண்டென்றால், அது இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது? இந்த சக்தியினால் யாருக்கு என்ன உபயோகம்?

பொருள்,பதவி என்று எதையுமே தேடாத சாமியாருக்கு சக்தி இருந்தென்ன. இல்லாவிட்டால் என்ன? பொருளைத் தேடியே வாழும் நமக்கு. இப்படிப்  பட்ட சக்தி கிடைத்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும்? இந்த சக்திகளை சாமியார்களால் எப்படி பயன்  முடிபடுத்த முடியும்?

உண்மையான சாமியார்கள் தங்கள் சக்தியை மக்கள்  நலத்திற்கு பிரயோகிப்பதை கதைகளாகப் படித்திருப்போம்.  அப்படி  உபயோகிக்கும் போது, ஞானிகள் பதிலாக நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

உலகெங்கிலும் மக்களில் சிறிய ஒரு பகுதி வளத்துடன் வாழ, ஒரு நாளைக்கு ஒரு வேளைகூட  உணவும், வாழ்க்கைக்கு அவசியமான அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் வாழ்ந்து மடியும் பெரும்பான்மை மக்கள் மறுபுறம்.  ஏன்? ஏன்? ஏன்?

கடவுள்தான்  இந்த உலகை உருவாக்கினால், உலகெங்கிலும் பசி, நோய்கள் என்று தினம் தினம் செத்து வாழும் இந்த ஏழைகளை ஏன் படைத்தார்? கடவுள் ஒரு சாடிஸ்டா?

இந்த சாமியார்களின் சக்தியை கொண்டு, உலகத்தில் அழிவுகளை தவிர்க்க முடியாதா? இவர்கள் உதவியுடன் உலகத்தில்  நிரந்தர அமைதியை உருவாக்க முடியாதா? ஏழை எளியவரின் வாழ்வில் என்றுமே வசந்தம் வரவழைக்க முடியாதா?

யார் இந்த பிலாசபர்கள்?. கிரேக்க மொழியில்  பிலோ என்றால் நட்பு அல்லது நண்பன்,  ஸோபி என்றால் ஞானம் அல்லது அறிவு. பிலாசபர் என்பவர் அறிவின் நண்பர். அல்லது அறிவை மாத்திரமே நண்பராகக் கொண்ட மக்கள்.

இந்த பிலாசபர்கள், ஞானிகள், துறவிகள், புத்த பிட்சுக்கள் சுபிமுனிவர்கள்  எல்லோருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, தன் வாழ்நாளில் தன்னைப்பற்றிய சிந்தனைகளை ஒதுக்கிவைத்து, (அறிவில்லாமல்) வாடும் மக்களைப் பற்றிச் சிந்தனை செய்து அவர்களின்  நலம் காண விரும்பும் மக்கள்.

எல்லாம் சரி, நாம் தாடி வளர்க்காமல், காட்டில் நுழையாமல் சாமியாராகி, சாமியாரின் சக்திகள் எல்லாமே அடைய முடியுமா? காட்டிற்குள் புகுந்து பல வருடங்கள் தவம் செய்வது அவசியமா? அதே சக்திகளை அடைய குறுக்குவழி உண்டா? அதையும் தேடி விடுவோம்.

இவைகள் என் மனதில் இருபது  வருடம் முன்னால் தோன்றிய கேள்விகளில் ஒரு சில. பதிலை தேடினேன். பதில் சொல்ல யாரேனும் கிடைப்பாரா என்று ஊர் ஊராக சென்று தாடிகளில் ஒளிந்திருக்கும் ஞானிகள் யாராவது கிடைப்பர்களா என்று தேடினேன். ஞானிகளால் உருவான புத்தகங்கள், எழுதப்பட்ட கவிதைகள்  எல்லாவற்றையும் தேடினேன். அதன் விளைவு, இந்த புத்தகம்.

2.5 நாமெல்லாமே ஞானிகள்தான்!

பிறவியில் நாம் எல்லோருமே ஒரு விதத்தில் ஞானிகள்தான், யோகிகள்தான். ஆனால் காலப்போக்கில்  நாம் வாழும் சமுதாயத்தை பல அறியாமையும், தவறான அறிவும் பாதித்துள்ளன. அதன் விளைவாக நம்மை பல அழுக்குகள், பயங்கள், தவறான நம்பிக்கைகள்   விடாமல் தொடர்கின்றன. இதனால் நாம் நமது ஞானிகளின் தன்மையையும் சக்தியையும்  இழந்து விட்டோம்.

நம்மை பிடித்த அழுக்கைக் களைந்துவிட்டாலே போதும் நாம் பாதி யோகிகள்தான். மீதத்திற்கு அறிவு பூரணமாக சிந்தனைகள், ஞானிகளின் வழிகாட்டல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

இதை தொடரும் கதைகள், வாழ்க்கை குறிப்புகள் எல்லாமே துறவிகளை நாம் முழுமையாக அறிந்து கொள்ள உதவும்.

License

Icon for the Public Domain license

This work (தேடல்கள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book