அத்தியாயம் 03
3 . 1 அறிமுகம்
சாமியார்கள் ஏன் உருவாகிறார்கள்?
வெளிப்படையாக, ஒவ்வொரு ஞானியின் வாழ்விலும் ஒரு அதிர்ச்சி, தோல்விகள் என்று ஏதாவது ஒர் திருப்புமுனையைக் காணலாம். அதுவே அவர்கள் பொருள் வாழ்க்கையிலிருந்து விலகி அருள் வாழ்க்கைப் பாதைக்கு மாறுவதாகச் சொல்லலாம்.
இது முழுவதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அதைவிட மோசமான நிகழ்வுகளின் நடுவே நிம்மதியாக பல கோடி மக்கள் வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே.
இந்த உலகம் மண் பெண் பொன் முதலான எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு இருப்பவரை ஏன் அதிசயமாக பார்க்கிறது.?
இல்லறத்தில் புகுந்து சந்ததிகளை உருவாக்கி, கடன் வாங்கி அவர்களுக்குக் கல்வி தந்து, திருமணம் செய்து வைத்து அதிலும் திக்குமுக்காடி, அல்லல் பட்டு எப்போது காலன் நம்மை அழைத்துச் செல்வான் என்று அலறுவதை நாம் அறிவோம்.
அப்படிப்பட்டவரைக் காணும் போது அனுதாபப்படும் நாம், இவைகளை விட்டு விலகி நிம்மதியாக துறவறத்தை விரும்பும் ஒரு மகனை அல்லது மகளைக் கண்டு, மகிழாமல், நாம் துயரம் அடைவது ஏன்?
அதற்கு சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொன்னால் மாயை.
எல்லா உயிர்களையும் தன் பிடியில் மனிதரைச் சிக்க வைத்திருப்பது மாயைதான். விளக்கமாகச் சொன்னால், இந்த அண்டம் இயங்க மாயை தேவை. அண்டம் இயங்க பிள்ளை-குட்டி, நன்மை-தீமை, பாவம்-புண்ணியம், லாபம்-நட்டம், விரோதிகள்- நண்பர்கள், திருடன்-போலீஸ் எல்லாமே தேவை. இவைகள் எல்லாமே மாயையின் வேலைதான். உலகின் நிகழ்ச்சிகள் எதுவுமே மாயை இல்லாமல் நிகழாது. இதை ஓட்டங்கள் என்ற புத்தகத்தில் அலசுவோம்.
ஆன்மிகம் என்றால் என்ன? ஆத்மா என்ற வட சொல் ஒருமாதிரியாக திரிந்து தமிழ் மக்கள் வாயில் அகப்பட்டு ஆன்மாவாகியது ஒருபுறம். ஆன்மா சம்பந்தப்பட்ட அறிவுக்கு, செயல்பாட்டிற்கு ஒரு பெயர் வேண்டாமா? அதன் பெயர்தான் ஆன்மிகம்.
ஆத்மா நம் புலன்களுக்குள் சிக்காது. அதுபோலவே கடவுளும் புலன்களுக்குள் சிக்குவதில்லை. ஆக புலன்களில் சிக்காத எல்லா அறிவையும் தேடுவது ஆன்மீகத்தில் அடங்கும்.
ஆன்மிகத்தை அறிவது எப்படி?
ஆன்மிகத்தின் அடிப்படையை அறிய காலம் காலமாக என்னைப் போன்ற பலர் முயற்சிகள் செய்வதுண்டு. அதற்கு சரியான வழி என்ன?
தற்போது சுற்றிவரும் ஐந்து நட்சத்திர ஆன்மிகவாதிகளை விட்டுவிடுவோம். இவர்கள் கள்ள நோட்டு, கற்பழிப்பு, கொலை என்று ஆன்மிகத்திற்குச் சிறிதும் தொடர்பே இல்லாத செயல்பாட்டுடன் தலைவர்களின் துணையுடன் ஏமாறும் மக்களை ஏமாற்றும் வித்தை அறிந்தவர்கள்.
அறிவதில் சிறிதும் சந்தேகம் இல்லாமல், ஆன்மிகத்தை அறிவதற்கும், அறிந்த அறிவினால் பயன் பெறவும், சிறந்த வழி என்ன? கடந்த கால ஆன்மிகவாதிகளை ஆராய்வதுதான் சரி என்று மனதில் உதித்தது.
முதற்படியாக, புகழ் பெற்ற சில ஆன்மிக பெரியோர்களைத் தேர்ந்தெடுத்து. அவர்கள் வாழ்க்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பற்பல பரிமாணங்களை அலசி அறிந்ததுதான், எனது முதல் கட்டத் தேடல்களின் சாரம்.
வாழ்க்கையில் மூன்று வகை உண்டு.
- அதிகமான மக்கள் வாழ்வது, இல்லறம் என்னும் வாழ்க்கைப் பாதை.
- இரண்டாவது பொருள் ஆதாரத்தில் இயங்கும் வாழ்வைத் துறந்த துறவறம்.
- மூன்றாவதாக இல்லறத்திலிருந்தே பொருள் ஆதார வாழ்வை தள்ளி வைத்து மனதால் நடத்தும் விதமான துறவறம்.
பொருள் அல்லது இல்லற வாழ்க்கை என்பதை நாம் நன்கு அறிவோம். எதை எல்லாமோ கண்ணால் கண்டு, கண்டதை எல்லாம் மனதால் எடுத்து, துக்கம் – மகிழ்ச்சி, நல்லது-கெட்டது, என்ற கணக்கில்லாத, இரு-துருவங்களை மனதால் உருவாக்கி, அதை தொடர்ந்து சென்று, சென்றதால் துன்பத்தோடு இணைந்து வாழ்ந்து வளர்ந்து மடிவதே.
அருள் வாழ்க்கையில், நாம் புலன்களால் உணர்வதை, படிப்படியாக ஒதுக்கி வைக்கப் பழகுவது தியானம். அதில் தேர்ந்து, பிறகு புலனில் சிக்காதவைகளைத் தேடி, அவற்றை மனக்கண்களால் கண்டு, அறிவால் உணர்வது. பொருளுலக த்தில் வாழ்பவரின் துயர்களைத் துடைப்பது.
3 . 2 . சாமியார்கள் உருவாகிறார்கள்.
சரியாகப் பார்த்தால் சாதாரண மனிதரே மகானாக மாறுகிறார். அது உண்மையானால், ஏன் நாம் எல்லோருமே மகானாகவில்லை? அது சிறிது சிக்கலான விஷயம். இப்போ, ரொம்ப சுருக்கமா சொல்லிட்டு ஓட்டங்கள் என்கிற அடுத்த புத்தகத்திலே அதை அலசிடுவோம்.
மனதளவில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவர் சாமியாராக அல்லது ஞானியாக மாறக் காரணமாகின்றன. எதிர்பாராத ஒரு சிக்கல், தொடரும் ஏமாற்றங்கள், எல்லையில்லாத் தோல்விகள், மரண பயம் போன்ற பல காரணங்கள் மன மாற்றங்களை தருவிக்கின்றன. இவைகளை இப்போது விளக்கமாக பார்க்கலாம்.
சிலர், திட்டமிட்டு பாதை மாறுவதும் உண்டு. இவர்கள் இறக்காமலேயே, சில சடங்குகள் மூலம், இரண்டாவது பிறவி எடுக்கிறார்கள். தமது புதிய பிறவிக்குத் தானே பெயர் ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த இரண்டாம் பிறவி எடுக்க வேள்வித்தீயிலே தனது பழைய உடைகளை எரிப்பது சடங்கின் ஒரு அம்சம். இதோடு தன் மனத்தில் இருந்து பழைய பிறவி, அதில் கண்ட அனுபவங்கள், அதோடு இணைந்த சொந்தங்கள் பந்தங்கள் எல்லாமே வேள்வித் தீயில் அழிக்கப் பட்டுவிட்டது என்று கொள்ளவேண்டும்.
இப்போது இந்த விளக்கத்தை இங்கே நிறுத்துவோம். அடுத்த வகையை அலசலாம். கற்ற அறிவு, அறிஞர்கள் அல்லது ஞானிகளின் அருகாமை ஆகியற்றை சிலருக்கு ஞானப்பாதையில் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது.
தனிப்பட்ட முறையில் உண்டான விசித்திர அனுபவங்கள்கூட இந்த வகையில் அடங்கும்.
இப்போது மூன்றாம் வகை மக்களை ஆராய்வோம். பொருள் வாழ்வில், தொல்லைகள் படாதவர் என்றுமே இருந்ததில்லை, இப்போதும் இல்லை, இனியும் இருக்கப் போவதும் இல்லை. அப்படியிருந்த போதும் பெரும்பாலான மக்கள் அந்த தொல்லைகளோடு வாழப் பழகிவிடுகிறார்கள். போதாத குறைக்கு, நமது துயரங்களுக்குக் காரணம் நமது ஊழ்வினைகள் மட்டுமே அதாவது முந்தய பிறவியில் நாம் செய்ததாக சொல்லப்படும் தீய செயல்கள், பிறருக்கு இழைத்த கொடுமை என்று காரணம் சொன்னால் போதும். உடனே சமாதானமாகி, அதே துயரத்தோடு ஒன்று கலந்து, இனிதே வாழ்ந்து கடைசியில் மடிகிறோம். இதுவும் போதாது என்றால், எல்லாமே ஈசன் செயல் என்று எல்லா துன்பத்தையுமே ஈசியாக விழுங்கி, ஏப்பம் விட்டு விடவும் நாம் தயார்.
இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத சிலரும், முரண்டு பிடிக்கும் பிடிவாதக் காரர்களும் எப்போதுமே உண்டு. இவர்கள் வித்தியாசமானவர்கள். இந்த பொருளுலக தொல்லைகள் இவர்களை அதிகமாகவே பாதித்துவிடும். அதிலிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்து, தங்களை அறியாமல் அருள் உலகில் தடுக்கி விழுவார்கள்.
ஒட வந்தவர் எல்லோருமே ஞானியாகிவிடுவதில்லை. இதில் பலர் பொருளுலகுக்கே திரும்புவதும், சிலர் அருள் பாதையிலேயே தங்குவதும் சரித்திரம். வால்டயர் என்ற பிரஞ்சுநாட்டு பிலாசபர் அதாவது தத்துவ ஞானி, ரொம்ப தமாஷான ஆள். இவருடைய கற்பனையில் ஒரு கதை உருவாகி அதில் ஒரு போர்வீரரை ஓடவிட்டு அவரை ஒரு ஞானியாக்கி காட்டுகிறார்.
(தத்துவஞானிகளின் சிறப்பே, அவர்கள் பேசுவது எதுவும், நமக்கெல்லாம் புரியாது. நமக்கு புரியாததை எவரேனும் பேசினால் அவரை தத்துவஞானியாக நாம் அறிவோம் இல்லையா?
தத்துவ ஞானிகளில் வால்டயர் அதிக வித்தியாசமானவர். முக்கியமான ஒன்று, இவர் எழுதியதை எளிதாகப் புரிந்தகொள்ள முடியும், இரண்டாவது, அவர் எழுத்துக்களில் நகைச்சுவை நிறைந்து இருப்பது). இங்கே இந்த அதிசயத்தைக் காண்போம்.
3.3 வால்டயர் எழுதிய ஜாடிக் என்கிற கதையைத் தழுவிய ஒரு சிறுகதை
கதை 01 ஜாடிக்
ஐரோப்பியா கண்டத்தில் எங்கோ ஒரு நாடு. ராஜா-ராணி ஆண்ட காலம். அந்த நாட்டில் ஒரு பிரபலம் – ஜாடிக் என்ற பெயர் கொண்ட ஒரு இளைஞர். அரசவையில் இடம்பெற்றவர். மேலும் ஒரு சிறப்பு, இவர் அரசரின் ஆலோசகரில் முக்கியமானவர். போர்களில் மன்னனுக்கு உறுதுணையாக நின்ற இவர், வாட்போரில் சிறந்தவர்.
அதே நாட்டில் வேறு ஒரு பிரபலம். வயதானவர். (பிரபலங்களைத் தான், சுருக்கமாக, பிரபு என்று அழைப்பார்களோ?) அவருக்கு மிக அழகான ஒரு பெண் உண்டு. ஜாடிக் திடீரென்று ஒரு நாள் இந்த பெண்ணை காண்கிறார். கண்ட உடனேயே தீராத காதல் கொள்கிறார்.
ஆனாலும், பல இளைஞர்களைப்போல இவருக்கும் ஒரு தயக்கம். அவர் மனம் கவர்ந்தவள் முன்னால் வந்து தன் காதலைச் சொல்லத் தயங்குகிறார்.
சொல்வதற்கு, ஒரு சரியான நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். (சில சமயங்களில் இந்த இடைப்பட்ட நேரத்தில் வேறு ஒருவர் தன் காதலைச் சொல்லி அப்படிக் காத்திருந்த பெண்ணோடு திருமணம் முடித்த கதைகளும் நமக்கு தெரியுமே!). அப்படி ஒரு சரியான நேரமும் வந்தது. எப்படி?
ஒரு நாள், கொள்ளையர்கள் இந்த பெண்ணை தாக்க முயற்சிக்க, தனது வாள் வீச்சுத் திறமையினால், கொள்ளையருடன் கத்திச்சண்டை போட்டு வெற்றி கொள்கிறார் ஜாடிக். அந்த பெண்ணையும் காப்பாற்றுகிறார். அப்போதே அந்த பெண்ணின் மனத்தில், இடமும் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.
கொள்ளையருடன் செய்த வாட்போரில், ஜாடிக்கின் கண் ஒன்று, காயம் அடைந்து, வீங்கியது.
இந்தக்காலத்தில் நம்ம ஊரில், பெரிய மனிதர்களை குணப்படுத்த, அமெரிக்காவில் இருந்து டாக்டரை வரவழைப்பது போல, அந்தக் காலத்தில் கிரேக்க நாட்டிலிருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப் பட்டார்கள். இவர்கள் ஏராளமான மருந்து மூட்டைகளுடன் வந்து சேர்ந்தார்கள்.
ஜாடிக்கின் கண்ணைப் பரிசீலித்து, வலது கண்ணில் பட்ட காயம் ஆராது என்றும், இடது கண்ணின் நோயை சுலபமாகக் குணப் படுத்தலாம் என்றும் கூறினார்கள். அதுமட்டுமல்ல, சில நாட்கள் தங்கியிருந்து, ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், இந்த நபர் மரணம் அடைவார் என்று ஒரு புத்தகமும் எழுதிவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பி விட்டார்கள். ஜாடிக் மட்டும் இந்த புத்தகத்தைப் படிக்கவில்லை.
வலது கண்ணில் பட்ட காயம் ஆராது என்று கிரேக்க மருத்துவர்கள் கூறியதை காற்று வழிக் கேட்டு அறிந்த சமீரா (அதுதான் அவள் பெயர்) மனம் உடைந்தாள். ஒரு ஒற்றைக் கண் மனிதருடன் வாழ்க்கை நடத்துவது இயலாத காரியம் என்று ஏற்கனவே நினைத்திருந்ததால், வேறு ஒருவரை மணக்கத் தயாரானாள்.
வைத்தியர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிய பின்னர், திடீரென்று ஒருநாள், எந்த ஒரு வைத்தியரின் உதவியும் இல்லாமல், கண்ணின் மீது வந்த காயத்தில் இருந்த கொப்புளம் தானாகவே உடைந்தது. ஓரிரு நாட்களில் காயமும் சரியாகிவிட்டது. அப்போது, இரு கண்களும் அவருக்கு நன்றாகவே தெரிந்தது.
இந்த நல்ல செய்தியை சமீராவுக்கு தெரிவிக்க ஒடினார். அப்போது, சமீராவின் திருமணம் நடந்து முடிந்து விட்டது. உலகமே அவர் கண் முன்னால் இருண்டு விட்டது. தான் வாழ்வதற்கு ஒரு காரணம் இல்லாமல் போனதுபோல உணர்ந்தார். உலகமே மாயை என்று உணர்ந்தார். அவரை, நாடு போ – போ என்று விரட்டியது. காடு வா – வா என்று அழைத்தது. காட்டை அடைந்தார். தினமும் நீண்ட நேரம் தியானத்தை மேற்கொண்டார்.. கடவுளுக்கும் தனக்கும் உள்ள தூரத்தை அளக்க எத்தனித்தார்.
சில நாள் கழித்து, காட்டில் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருத்தியைக் கண்டார். சில காலம் முன்னால், தமது நாட்டில், கடைசி நிமிஷத்தில் கோட்டை விட்ட, பிரபுவின் மகள் சமீராவிடம் காணாத நளினத்தையும், கொள்ளை அழகையும் அந்த காட்டுவாசியான மங்கையிடம் கண்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தனர்.
இருண்ட ஜாடிக்கின் வாழ்க்கை, இப்போது ஒளிமயமானது. நாட்களும் மகிழ்ச்சியாகவே நகர்ந்தது.
திடீரென்று ஒருநாள், ஜாடிக்கின் மனதில் ஒரு சிறிய சந்தேகம். மனைவி தன்னை உண்மையிலேயே நேசிக்கிறாளா? இதைக் கண்டறிய விரும்பினார்.
தனது நெருங்கிய நண்பனை உதவிக்கு அழைத்தார். திட்டம் ஒன்று தயாரானது. அவர்கள் தீட்டிய திட்டப்படி, ஜாடிக், ஒரு சவப் பெட்டியில் கண்ணை மூடிப் படுத்திருப்பார். நண்பர், ஜாடிக்கின் மனைவிக்கு, கணவன் இறந்த தகவல் தருவார். அவள் வருவாள். பின்னர் நண்பர் தன் அனுதாபங்களைத் தெரிவிப்பார். அதன் முடிவில், தான் அவளை மணக்க விரும்புவதாகத் தெரிவிப்பார். அவள் பதிலைப் பொறுத்து, அவள் ஜாடிக்கை உண்மையாகவே நேசிக்கிறாளா இல்லையா என்பது தெரிந்து கொள்ளலாம், இல்லையா?
நண்பரும் நன்றாகவே நடித்தார். முதலில் நண்பனின் விருப்பத்தை ஆவேசமாக மறுத்த ஜாடிக்கின் மனைவி, உடனடியாக அவரை மணந்து கொள்ள சம்மதம் அளித்தாள்.
சவப்பெட்டியிலிருந்து எழுந்த ஜாடிக் காட்டிலிருந்து ஒடினார், இப்போது, வேறு ஒரு நாட்டிற்கு.
நடுவழியில் ஒரு இளம் பெண்ணை ஒரு மனிதன் அவள் தலை முடியைப் பிடித்து அடித்து துவைத்தவண்ணம் இருக்கிறான். இப்போது, அந்த பெண்ணோ, அய்யய்யோ, என்னை யாராவது காப்பற்றுங்களேன், என்று அலறுகிறாள். பொதுமக்கள் வேடிக்கை பார்க்கிறார்களே ஒழிய யாருமே அந்த அப்பாவிப்பெண்ணின் உதவிக்கு வருவதாகக் காணோம். (ஊருக்கு ஊர் இதே கதைதானோ?)
ஜாடிக் இந்த இருவரையும் பிரித்துவிட முயற்சி செய்கிறார். தன் மேலும் ஓரிரு அடிவிழுகிறது. போர்வீரரான நமக்கே இந்த அடி இவ்வளவு வேதனை தந்தால், இந்த அப்பாவிப் பெண்ணுக்கோ! என்று வியந்து, வாட்போரில் உரமேறிய தன் கைகளால் பலமாக அந்த மனிதனின் மேல் ஒரே ஒரு அடிபோடுகிறார் ஜாடிக். பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்த மனிதன், செத்து விழுகிறான்.
ஜாடிக்கை நோக்கி, இப்போது அடி வாங்கிய பெண் முன்னைவிடத் தீவிரமாகக் கதறுகிறாள். படுபாவி, சண்டாளா. என்னைக் காப்பாற்ற சொன்னால் என் கணவனை கொன்று விட்டாயே, என்று தொடங்கி நீ உருப்படுவாயா? நாசமாகப்போக என்றெல்லாம் கதற, அரசரின் காவலாளிகள் (அந்த ஊரில், அந்தக்கால போலீஸ்) ஜாடிக்கைப் பிடித்துச் சென்று சிறையில் அடைக்கிறார்கள்.
இப்படி மாறிமாறி கதை, அமர்க்களமாக நகர்கின்றது. நாம் இங்கே இதை நிறுத்திவிடுவோம். (இண்டெர்னெட்டில் தேடினால் வால்டயர் எழுதிய ஜாடிக் என்ற கதை கிடைக்கும் அதைத் தேடிப் படியுங்கள்)
3 . 4 ஜாடிக் கதையின் பாடங்கள்
மனிதன் கனவுகளில் மூழ்கி மாயையின் பிடியில் சிக்கி வாழ்கிறான். உறக்கமும் கனவுகளும் நிரந்தரமல்ல. இரண்டும் கலையும் தன்மையுடையது. மனிதன், தன் கனவுகள் கலைந்தால் (தான் எதிர்பார்த்ததை அடைய முடியாவிட்டால்). உடைந்து போகிறான். உருக்குலைந்து போகிறான். உடனே, காடு, சாமியார், தியானம் கடவுள் என்று திசை மாறுகிறான் – காலங்கள் காயங்களை ஆற்றுகின்றன. காயங்கள் ஆறிய உடனே, அதே மனிதன், அடுத்த கனவு காண்பதற்குத் தயாராகிறான் !
ஆனால் கிடைத்த அடி பலமாக இருக்குமானால், ஒருவன் அருள் உலகத்தினுள்ளே வீசப் படுவான். அப்படி ஒரு முறை அருள் உலகை அடைந்தால், எவரும் பொருள் உலகுக்குத் திரும்பி வர வாய்ப்புகள் குறைவு. பொருள் உலகத்தின் ஈர்ப்பு ஞானியாவதற்கு ஒரு இடையூறு.
காட்டில் புகுந்து ஞானியாவதற்கு கண்மூடித்தனமான காதல் ஒன்று மட்டும் காரணமல்ல, இடைவிடாமல் தொடரும் வெற்றியும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு அதாவது, அறிவதில் ஆர்வம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
பலவித ஏமாற்றங்கள் பொருளுலகத்திலிருந்து மக்களை விரட்டி அருளுலக வாசியாக, ஞானியாக மாற்றிவிடும். பொருள் உலகத் தோல்விகளை அருளுலகத்தின் உதவியால் வெற்றி காண முயற்சி செய்த சிலர் எப்போதுமே உண்டு. இவர்கள் வித்தியாசமான முடிவுகளுடன் வாழ்ந்து முடிகிறார்கள்.
ரமண மகரிஷியின் வாழ்க்கையை புரட்டும்போது நாம் அறிவது, சிறுவயதில் தான் இறந்து போனதை போல ஒரு அனுபவம், திருவண்ணாமலைக்கு அவரை விரட்டியது அன்று.
பக்தி மார்க்கத்தில் திளைத்த காளி கோவில் பூசாரி ஆன்மீகத்தில் அடிவைத்ததற்கு பின்னணியில் காரணம் ஒரு தோல்வியோ அல்லது துன்பமோ இருந்ததாகத் தெரியாது. அவர்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
இவை ஒன்றுமில்லாமல் இரண்டு வயதே ஆன குழந்தை ஒரு ஞானியின் மனதில் இடம் பிடித்து பின் ஆன்மிகப் பள்ளியில் வளர்ந்து, பிற்காலத்தில் ஸ்வாமி ராமாவாக, உலகப் புகழ் பெற்ற ஞானியாக, யோகியாக அங்கீகரிக்கப் பட்டார். அவருடைய ஆன்மிகப் பயணத்திற்கும் பொருள் உலகப் புயல் ஏதும் காரணமல்ல.
உலகத்தின் பல பகுதியிலிருந்து மக்களை இழுத்தார். நம்மைப்போன்ற இரண்டுங்கெட்டான் அல்லது அரை குறைகள் என்பார்களே, அப்படி பட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத்தை அறியும் வகையில் தனது சுய சரிதை மூலம், ஆன்மீகத்தின் பல பரிமாணங்களை உலகுக்கு எடுத்து உணர்த்தினார்.
3 . 4 போலிகள் மிகுந்த உலகத்தில்,
நல்ல ஞானிகளை எப்படிக் கண்டுபிடிப்பது?
கீழே வரும் கதை, இதற்கான பதிலைச் சொல்லும்.
கதை 02 கந்தசாமி ஞானியைத் தேடினார்.
நம்ம ஊர் மனிதர் ஒருவர் ஒரு ஞானியைத் தேடிய ஒரு கதையைப் படியுங்கள்.
கவலைகள் வாழ்க்கையின் முக்கியமான அம்சம். விவசாயியான கந்தசாமிக்கு எது இருக்கிறதோ இல்லையோ, கவலைக்கு மட்டும் அதில் குறைவே வந்தது இல்லை.
அவருக்கு ஒரு பெரிய குடும்பம் அதோடு சிறு விவசாயியை என்றுமே இணைபிரியாத சிறிய வருமானம். (இவை இரண்டுமே ஏழைகளின் மீதுள்ள சாபமோ) பெரும் மழையோ, நேரம் தவறிய மழையோ, முழுவதும் தவறிய மழையோ, இவர் வீட்டின் அருகே சுற்றித்திரியும் பூனைகளுக்கு இவர் வீட்டு அடுப்பில் குடிவர பல வாய்ப்புகளை அள்ளித்தரும்.
திருமணத்திற்கு தயார் நிலையில் இருக்கும் பெண் குழந்தைகள், குடித்து விட்டு, வம்பை வளர்த்து, ஊர்சுற்றும் பொறுப்பில்லாத பெரிய மகன், அவசியமில்லாத அடிதடியிலும் சில்லரைக் குற்றங்களில் நேரத்தைச் செலவிடும் ஒரு செல்ல மகன். போதுமா, கந்தசாமியின் கவலைக்கான காரணங்கள்.
மனத்தில் இந்தக் கவலைகளின் சுமை ஒரு புறம் அழுத்த, தலையில் காய்கறி மூட்டையின் சுமையுடன் சில கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்து, அடுத்துள்ள உழவர் சந்தைக்குள் நுழைந்தார்.
களைப்பு நீங்க ஒரு மரத்தடியில் மூட்டையை இறக்கி வைத்துவிட்டு, தானும் சற்று இளைப்பாறினார். சற்று கண் அயர்ந்தார். எத்தனை நேரம் கண் அயர்ந்தாரோ தெரியாது. அருகில், இருவர் பேசிக்கொண்டதால் எழுந்த சத்தம், அவரது உறக்கத்தைக் கலைத்தது.
பேச்சிலிருந்து, அவர்கள் இருவரும் கந்தசாமியைப் போலவே தங்கள் துயரங்களுக்கு ஒரு நீண்ட பட்டியல் போட்டுக் கொண்டு அவற்றைத் துடைக்கும் வழி தேடிவரும் மனிதர்களாகவும், தன்னைப் போன்ற கவலைகளுக்கு மட்டுமே சொந்தமான மனிதர்களாக, உணர்ந்தார்.
அவர்கள் சமீபத்தில் ஒரு ஞானியை சந்தித்ததால் அவர்கள் தற்போது சற்று தெளிந்த நிலையில் உள்ளதாக அவர்களின் பேச்சு தெரியப் படுத்துகிறது. தன் கண்களை விழித்து, நின்று, சோம்பல் முறித்து, அடுத்து அமர்ந்திருந்த இரு மனிதர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அதோடு, அவர்கள் கண்ட ஞானி வசிக்கும் இடத்தையும், போகும் வழியும் தெரிந்து கொண்டார்.
அவ்வளவுதான், அவருடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் துளிர்விட்டது. அந்த வினாடியிலேயே தன் மனதின் பாரம் குறைய ஆரம்பித்து விட்டதாக உணரலானார்.
ஒரு நல்ல நாளை அவர் மனைவி தேர்ந்து எடுக்க, அந்தக் குறிப்பிட்ட ஞானியைச் சந்திக்கக் கந்தசாமி தயாரானார். காலையில் தொடங்கியது பயணம். இப்போது மாலை பொழுது நெருங்கியது.
கடைசியில், மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியில் ஒரு குடிசை. அதன் வெளிப்புரத்தில் ஒரு முதியவர் குடிசையின் வெளிப்புரத்தை சுத்தம் செய்த வண்ணம் இருந்தார். அவரை சந்திக்க ஒருவர் காத்திருப்பதைக்கூட அவர் கவனிக்கவில்லை.
சற்று பொருத்து, விவசாயி கந்தசாமி தான் வந்திருப்பதை அந்த முதியவருக்கு அறிவித்தபடி கேட்டார், நான் ஞானியை காணமுடியுமா, என்று. (வீட்டை சுத்தம் செய்பவரை வேலையாளாக புரிந்துகொண்டார்) சுத்தம் செய்யும் வேலையாளை, ஞானியாக எப்படிக் கொள்வது?
தனது வேலையிலிருந்து சற்று விடுபட்டு முதியவர் பதில் சொன்னார்.
ஞானியை ஏன் காணமுடியாது? நமது ஒவ்வொரு உயிரிலும் உள்ளேயும் ஒருவரல்ல. உள்ளே எத்தனையோ வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். நல்லவர், பொல்லாதவர், சிற்பி, கலைஞன், நடிகர், பாடகர், கொலையாளி, மருத்துவர், கொடையாளி, ஞானி, யோகி, ரோகி, ஏமாளி, கோமாளி, வல்லவர் திருடர், கொள்ளைக்கார், என்று பல ஆயிரம் ஆயிரம் பேர். நம்மில் அனைவரும் ஒளிந்தே உள்ளார்கள்.
நாம் பிறந்த சமுதாயம், வாழும் சூழ்நிலை, கற்ற கல்வி, பெற்ற அறிவு, ஆகியவை நம்மில் ஒளிந்துள்ள பல ஆயிரக்கணக்கான முகங்களில் ஒரே ஒரு முகத்தை மாத்திரம் பெறுகிறோம்.
நாம், வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். சுய பச்சாதாபம், பேராசை, பொறாமை ஆகிய தீய எண்ணங்களை மனதிலிருந்து அறவே ஒழித்து விட வேண்டும். வாழ்க்கையின் போராட்டங்களைக் கண்டு ஓடி ஒளியாமல், துணிவுடன் எதிர்கொண்டு நல்வழியில் நடந்தால், நீங்கள் உங்களில் ஒளிந்திருக்கும் ஒரு ஞானியை கண்டுபிடித்து வெளியே கொண்டுவரலாம்.
வெளியில் தேடுவதை விட்டுவிட்டு உங்கள் உள்ளே ஒளிந்திருக்கும் ஞானியை தேடுங்கள் என்று பதிலளித்தவர், தன் வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் மீண்டும் ஈடுபட்டார்..
கந்தசாமிக்கு பல விஷயங்கள் புரிந்தது.
முதலாவது, தான் கண்டது ஒரு வேலையாள் இல்லை. மாறாக தாம் தேடிவந்த ஞானிதான் என்பது. இரண்டாவதாக, சுய பச்சாதாபத்தை ஒழிப்பது அவசியம். வாழ்க்கையின் கட்டாயங்களை நிமிர்ந்து எதிர்கொள்வது வெற்றியைத் தரும். எதை எதை தவிர்க்க வேண்டியதோ அவைகளைக் கண்டறிவது. அதோடு நம்முள் ஒளிந்திருக்கும் ஞானியைக் கண்டுபிடித்து, வெளியே கொண்டு வரவேண்டும். உங்களுக்குப் புரிந்ததா?
3 . 5 எளிமை
கதை 03: எல்லோருமே பயணிகள்தான்.
எளிமையானவரைத் தாழ்ந்தவராகக் காணும் பிரச்சினை இல்லாத ஊரும் இல்லை, மக்களும் இல்லை. அதற்காக ஒரு கதையை படிக்கலாம்.
ஒரு முறை கீழைநாட்டு கலாசாரம் முக்கியமாக, மதங்களைப்பற்றி நேரில் கண்டு கேட்டு அறிய சில அமெரிக்கப் பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் ஜப்பான் சென்றார்கள். அங்கிருந்த புகழ்பெற்ற ஒரு புத்தமத ஞானியை பேட்டிகாணச் சென்றார்கள்.
ஞானி தங்கிய இடத்தில் சோபா முதலான இருக்கே வசதிகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். சிறிதும் பழக்கம் இல்லாமல் தரையில் உட்காரவேண்டிய கட்டாயம். அவர்கள் இயலாமை. ஒரு பிரபல ஞானியாக அறியப்பட்டவரிடம் வசதியாக உட்கார சோபா கூட இல்லாதது இவர்களுக்கு அதிசயம்.
ஏனென்றால், இவர்கள் எளிமையை ஏழ்மையாகப் பார்க்கும் மக்கள். ஞானியை நோக்கி, சோபா போன்ற இந்த சிறிய வசதிகள் கூட உங்களிட.ம் ஏன் இல்லை என்று கேட்டதற்கு, ஞானி பதிலுக்கு, நீங்களெல்லாம் உங்களுடைய சோபாவை ஏன் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.
“நாங்கள் இப்போது பயணம் செய்கிறோம், நிரந்தரமாக இருப்பதற்கு இங்கே வரவில்லையே, அதனால் தான் நாங்கள் சோபாவை எடுத்துக் கொண்டு வரவில்லை” என்று பதிலளித்தார்கள்.
ஞானி பதில் தந்தார். “இப்போது உங்கள் கேள்விக்கு பதில் தருவது எனக்கு வெகு சுலபமாகி விட்டது” என்று ஆரம்பித்தார்.
“நானும் உங்களைப்போல ஒரு பயணிதான். இந்த உலகத்தில் நிரந்தரமாக இருப்பதற்காக வரவில்லை. அதனாலேயே நான் சோபா முதலான பொருள்களை வைத்துக்கொள்ளவில்லை” என்றார்.
இது எப்படி?
பெரிய மனிதரென்றால் கார், பங்களா போன்ற வசதிகள் இருக்கவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு! எளிமையில் யாருக்கும் விருப்பமோ அல்லது அதனால் கிடைக்கும் சுகத்தில் நம்பிக்கையோ இல்லை, ஆனாலும், உலகெங்கிலும், இன்றும் என்றும் மாமன்னர்களும், பெரும் செல்வந்தர்களும் தலைவணங்குவது (வங்கியில் ஒரு சாதாரண சேமிப்பு கணக்கு ஒன்றுகூட இல்லாத) ஒரு கோவணாண்டியை, அதாவது, துறவிகளைத்தான்.
இந்த அத்தியாயத்தில் உங்களுக்கு பல உண்மைகள் புரிந்திருக்கவேண்டும். இல்லையானால் கவலைப்பட வேண்டாம்., நீங்கள் புரிந்து கொண்டதும், புரிந்து கொள்ளவேண்டியதும். அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து வேறு ஒரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.
3 . 6. நான் துறவிகளைத் தேடி அலைந்தேன்
நாம் எல்லோரும் (இதை படிப்பவர்களில் பெரும்பாலோர்) ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு தேடலில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சாமியாரையோ இல்லையென்றால், ஏதோ ஒரு சாமியாரையோ காண விரும்பியிருக்கலாம்.
நாம் வாழும் உலகம், நமக்குப் புதிராக இருக்கிறது. தோல்விகள் தொடரும்போது, உலகம் ஒரு மாயையாகத் தெரிகிறது. அப்படியானால் உண்மை என்ன? நான் யார்? கடவுள் எங்கே? எனக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு. இப்படிப்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒருவரை தேடியதுண்டு.
உலகமகா யுத்தம் தீவிரம் அடைந்த நேரம். ஐரோப்பா முழுவதும் லட்சக்கணக்கில் மனிதர்கள் உயிர் இழப்பது தொடர்கிறது. நகரங்கள், கிராமங்கள் என்றில்லாமல் பெரும் அழிவுகள். அப்போது பால் பிரண்டன் என்ற ஆங்கிலேயர், ஞானிகளைத் தேடி இந்தியா வந்தார். காஞ்சி மாமுனிவர் ரமணரை அடையாளம் காட்ட, ரமணரைக்கண்டு தன் ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார். இந்தப் போரினால் ஏற்படும் பேரழிவைத் தடுக்க ஞானிகள் உதவ முடியுமா என்று கேட்டார்.
இப்படி பலவித மக்கள் ஞானிகளை அல்லது சாமியார்களைத் தேட முக்கியமாக ஒரு காரணம் இருக்கும். சில சாமியார்களைப் பற்றி நாம் கேட்டு அறிந்த அதிசய சம்பவங்கள். தீராத நோயைத் தீர்த்து வைத்த கதை, சாமியாரை கண்டு வந்த சில நாட்களில் ஒரு ஓட்டாண்டி, செல்வந்தரான கதை.
சில குடும்பங்களில், வீட்டில் ஒரு திருமணமோ அல்லது ஏதாவது ஒரு சுபகாரியமோ நடத்தும் முன், தாம் அறிந்த ஆன்மீக பெரியவர்களைத் தரிசித்து, ஆசிகள் பெறுவதை அவசியமாக கொள்வதுண்டு.
நான் பல வருடங்கள் முன்னால் ஒரு சாலை விபத்தில் தப்பித்தது ஒரு அமானுஷ்ய சமாச்சாரம். அன்று அமானுஷ்யங்களை (மனித சக்திக்கு மீறிய சக்திகளை அறிய ஆவல் கொண்டு அதைத் தெரிந்து கொள்ள ஞானிகளை, துறவிகளைச் சந்திக்க அலைந்ததுண்டு. தாடி வைத்தவர்கள் பலர் பின்னால் சுற்றியதுண்டு. சில ஞானிகளுடன் சண்டையிட்டதுண்டு. சிலரிடம் ஆசிகள் பெற்றதுண்டு. எனது வாழ்வில் சில அமானுஷ்யமான அனுபவங்கள் அன்றும், இன்றும் நடப்பது சகஜம். இவைகள் எனது ஆன்மீகத்தைப் பற்றி அறிய வாழ்வின் பெரும் பகுதியை செலவழிக்க முக்கிய காரணங்களாக அமைந்தது.
அந்த அனுபவங்கள் சுவையானவை. பயனுள்ளவை. அன்று தேடியதெல்லாம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், உலகவாழ்க்கையில் மீண்டும் குதிக்க, ஒரு மாதிரியாக பல வருடங்கள் ஓடியது. திடீரென்று, மீண்டும் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபாடு திரும்ப அதில் கிடைத்த சில அனுபவங்களின் சாரத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
3 . 7. துறவி எப்படி இருப்பார்?
எனது ,ஆரம்ப கால தேடல்களில் தாடி, காவி உடை (அல்லது பல்வேறு மதங்களை சேர்ந்த குருமார்கள் அணியும் உடைகளை) உடுத்திய மக்கள் முக்கியமானவர்கள்.
கல்கத்தாவில் தக்ஷினேஸ்வர் பகுதியில் ஒருநாள், சாதுக்களைப்போல தோற்றமளித்தர்களுடன் பேசும்போது நான் காணவிரும்பிய சாதுக்களை ஒருவிதமாக விளக்கமாக சொன்னதும், அவர்கள் அப்படிப்பட்டவர்களை போலீஸ் பிடித்து சிறையில் அடைத்துவிட்டதாக தெரிவித்தனர். (கஞ்சாவிற்கும் ஆட்களை நான் தேடுவதாக புரிந்து கொண்டார்களோ) !
காவி துணிகள் நம் நாட்டில் ஒரு உயர்ந்த மதிப்பை பெற்றுள்ளது. காவி நிறம் மாத்திரமே மனிதனை துறவியாக மாற்றாது என்று எனது தேடல்களின் ஆரம்ப காலத்தில் தெரியாது. தோய்க்காத வெள்ளை துணிகூட காலப்போக்கில் காவி நிறமாக மாறலாம் அன்று எனக்கு புரிய வாய்ப்பு இல்லை.
பல சமயங்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், காவி உடை அணிந்து, பிச்சை எடுக்கும் சோம்பேறி மனிதர்களை, கோவில் அருகில் கண்டு, இவர்களையும் துறவிகளாக கணக்கிடுவதும் உண்டு.
திமிருக்கும் தன்னம்பிக்கேக்கும் மிக மெல்லிய இடை வெளிதான் உண்டு, அதே போல ஞானியின் அமைதிக்கும் சோம்பேறியின் சலனமில்லாமைக்கும் வெளிப்படையாக தெரிவது மிக மிக சிறிய இடைவெளிதான்
எனக்கு சில உண்மைகள் புரிய அதிக காலம் தேவைப்பட்டது.
(1) துறவிகள் காவி உடைதான் அணிந்திருக்க வேண்டும் என்பதில்லை.
(2) சில உண்மை சாமியார்கள் உடையே அணிவதில்லை ! நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சதாசிவ பிரும்மேந்திரர், இந்த வகை துறவியில் ஒருவர்.
பின் வரும் பக்கங்களில், உடை இல்லாததினால் நிகழ்ந்த ஒரு உண்மை நிகழ்ச்சி (சதாசிவ பிரும்மேந்திரர் ) ஒன்றையும் தெரிந்து கொள்ளலாம்.
(உடையினால் ஒரு சாமியாருக்கு நிகழ்ந்த போராட்டம் ஒன்றையும் (கற்பனை கதை), பத்து வருட உழைப்பை பஞ்ச காலத்தில் மக்களின் நலனுக்கு செலவிட்ட சாமியாரைப் பற்றி (உண்மை நிகழ்ச்சி) படிக்க நான் எழுதிய ஜென் கதைகள் என்ற புத்தகத்தை புரட்டவும் .)
3 . 8. துறவியும் தாடியும்.
தாடியை வைத்துக் கொள்வதாக, நாம் சொல்லுவோம். உண்மை என்னவென்றால் தாடியை யாரும் வைத்துக் கொள்ளுவதில்லை. அது தானாகவே வளரும் அதை நம்மில் சிலர் மொத்தமாக மழித்து எறிகிறோம், வேறு சிலர் வித விதமாக வெட்டுகிறார்கள். சிலர் வெட்டுவதில்லை..
ஒரு சிலர் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடியை மாத்திரமோ, அல்லது தாடி மீசை இரண்டையும் மழிப்பதில்லை.
நகரத்தில் பலவேறு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலன மக்களுக்கு தாடி மீசையை மழிப்பதற்காஓ ஒரு கட்டாயம் அல்லது அவசியம் உள்ளது. இவர்களில் வேண்டுதல்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற காரணங்களுக்கு சிறிய காலம் வரை முகம் மழிக்காமல் இருக்க ஒரு அனுமதி உண்டு.
ஆனால், இதைப்போல கட்டாயம் சுய தொழில் செய்பவருக்கு இல்லை. முக்கியமாக துறவிகளுக்கு எந்த வித கட்டாயமும் இல்லை. .அதற்கான நேரத்தை உபயோகமாக செலவழிக்க அவர்களுக்கு பல தேவைகள் உண்டு. எனவே எல்லாவற்றையும், உலகத்தையே துறந்தவர்கள், தாடியை மாத்திரம் தங்கவைத்து விட்டார்கள். மற்றபடி தாடிக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கண்டுபிடிக்க எனக்கு பல வருடங்கள் தேவைப்பட்டது.
3 . 9. துறவியல்லா துறவிகள்
தக்ஷிணேஸ்வர் என்ற இடம். ஒரு அழகான ஆன்மிக அமைப்பு. அதன் தலைவர், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான ஒரு சாது. ஒரு சிரித்த, சாந்தமான முகம்கொண்ட மனிதர். அவரிடமிருந்து நான் கற்றது மிக முக்கியமான ஒரு பாடம். அவரைப்போன்ற மனிதர்கள் பலர் துறவியல்லாத் துறவிகள். பொருள் வாழ்க்கையிலிருந்து முழுவதும் விடுபடாமல், துறவியின் குண நலன்களுடன், மக்கள் மத்தியில் தங்களை உடை தோற்றம் மற்றும், அலங்காரங்களால் தங்களை தனிப்படுத்திக்கொண்ட பலரை நாம் காணலாம்.
புத்தர், யேசு, ராமகிருஷ்ண பரஹம்ஸர், விவேகானந்தர் போன்ற மகான்கள் ஒருவரின் சிந்தனைகளில் தமது மனதைப் பறிகொடுத்து, தானே ஒரு இயக்கம் தோற்றுவித்து அல்லது அவ்வாறு ஏற்கெனவே தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களில் அங்கமாகி விடுவார்கள்.
அதாவது குறிபிட்ட மகான்கள் தந்த செய்திகளை மக்களிடையே பரப்புவதில் இவர்கள் உதவுகிறார்கள். இவர்களை மகான்களின் கொள்கை பரப்பும் செயலர்கள் என்று அழைப்பதும் சரியானது. இவர்கள் நல்ல இதயம் கொண்டவர்கள். நலிந்தவர்களுக்கு மற்றும் எளியவர்களுக்கு சேவை செய்வதில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.
இங்கே கவனிக்க வேண்டிய ஒரு வித்தியாசமென்னவென்றால், மேலே கண்ட இருவகை துறவிகள் ஒரு விவசாயிக்கும் ஒரு (காய்கறி, மற்றும் பலசரக்கு) கடைக்காரருக்கும் உள்ள வித்தியாசம் தான். முதலாமவர் உற்பத்தி செய்கிறார். மற்றவர் வினியோகம் செய்பவர். சிலகாலம் உற்பத்தி செய்பவரே வினியோகம் செய்வதும் உண்டு.
நாம் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டியது , வினியோகம் செய்பவர்களை உற்பத்தியாளராக நினைக்க கூடாது..
மகான்கள் விட்டுச் சென்ற அறிவுரைகளையும், செய்திகளையும் மக்களிடையே பரப்ப, சில அமைப்புகள் உள்ளன, உதாரணத்திற்கு ராமகிருஷ்ணா மடம் சங்கரமடம், யோகதா சத் சங் போன்ற எண்ணற்ற அமைப்புகள் இயங்குவது நாம் அறிந்ததே.
இவைகள் எல்லாமே, இந்த அமைப்புகளைத் தேடிவரும் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுவது, ஏழை எளியவர்களுக்கு இலவச அல்லது குறைந்த செலவில் தரமான கல்வி கிடைக்கச் செய்வது, மருத்துவ வசதி செய்து தருவது மற்றும் வெள்ளம் முதலான இயற்கை அழிவுகளை ஏற்படுத்தும் நேரத்தில் அவசர சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
மற்ற காலங்களில் பொது மக்களுக்கு ஆன்மீகம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் உதவியும் செய்வார்கள். இவர்களும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவிகளைப் போல வாழ்வார்கள். ஆனாலும் இவர்கள் துறவிகளிலிருந்து முற்றும் மாறுபட்டவர்கள். இவர்கள்,முக்கியமாக, தேடல்களில் ஈடுபட்டவர் இல்லை.
சீருடை – நகரத்தில் நம்மிடையே நடமாடும் இந்த வகை சாமியாரல்லாத-சாமியார்கள் தம்மை சாதாரண மனிதர்களிடமிருந்து தனிபடுத்திக் கொள்ள, சாதாரணரிடமிருந்து வேறுபட்டவராக தெரிவிக்க, சாதாரண மக்கள் மத்தியில் நாங்கள் ஆன்மீக பாதையில் பயணம் செய்பவராக அறிமுகப் படுத்திக்கொள்ள, இந்த காவி அல்லது அதுபோன்ற சீறுடை உதவுகிறது.
தொழில் முறையில் காக்கி, நீலம், வெள்ளை உடைகளை நாம் அணிவதில்லையா? அதுபோல இந்த ஆன்மீக (ஆபீஸர்களுக்கு) துறைக்கு காவி உடை, ஒரு சீருடை அல்லது யூனிபாரம் என்று புரிந்து கொள்வோம். பல மதங்களை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு கலரில் வெவ்வேறு டிசைனில் சீருடை அவ்வளவுதான்.
3 . 10 துறவிகளைக¢ காண்பது எப்படி?
முதலில் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி துறவிகளை காண நான் ஏன் துடிக்கவேண்டும்?
அடுத்த கேள்வி, நாம் ஓட்டுப்போட்ட மக்கள் பிரதி நிதிகளே நமக்கு பார்த்துப் பேசக் கிடைக்காத போது, நமக்கு சம்பந்தமே இல்லாத துறவி நம் கையில் ஏன் சிக்கவேண்டும்?
நமது மக்களுக்கு ஒரு அளவில்லாத நம்பிக்கை.
ஞானிகள், அதிகாரிகள், முதலாளிகள் (கடவுள் உள்பட) போன்ற பெரிய மனிதர்கள் எல்லோரும் ஒரு விதத்தில் அறிவில்லாதவர்களே. இவர்கள் எல்லோரும் ஒரு கூழைக்கும்பிடு, சில வாழைப் பழங்கள் என்று சில்லரையாக எதையேனும் காட்டியே நமது பெரிய காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்பதுதான் இந்த நம்பிக்கை.
முதலில் இந்த மாதிரியான முட்டாள்தனமான நம்பிக்கைகளைக் கைவிடுங்கள். இல்லையானால் ஏதேனும் ஒரு போலி சாமியாரிடம் சிக்கி, கடைசியில், போலீஸ் ஸ்டேஷனில் நிற்பது தப்பாது.
அப்படி ஒரு நிலமை வராமல் இருக்க நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. அதில் சில உடனடியாக, இங்கே, இதோ !
மிக மிக முதிர்ந்த துறவிகளை திடீரென்று மக்களிடையே காணலாம். சமீபத்தில் நம்மிடையே வந்த சிலரை பற்றி பின்வரும் பக்கங்களில் காண்போம். நிச்சயமாக இவர்கள் மாஜிக் காட்டும் வகையாக இருக்காது.
தவிர பொதுவாக வளரும் துறவிகளுக்கு, மக்கள் மத்தியில் வேலை எதுவும் இல்லை.
உண்மையாகவே துறவிகளை (பொருள் உலகை துறந்த பிறவிகளை) காணவேண்டுமா?
இந்து மதத்தை ஆதாரமாக கொண்ட பல துறவிகளை ஒரே இடத்தில் காண மகாசிவராத்திரி, குருபூர்ணிமா ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தில்லியிலிருந்து 6 மணி நேர பிரயாணத்திலுள்ள ரிஷிகேஷ் என்ற இடத்தில் பலரை காணலாம். இன்றும் இமயத்தின் பல பகுதிகளில் சுற்றிதிரியும் பலர் நமது பார்வையில் சிக்குவதாக அங்கே பயணம் செய்தவர் சொல்ல கேட்டதுண்டு.
இதை தவிர, 12 வருடங்களுக்கு ஒருமுறை, கும்பமேளா என்ற நிகழ்ச்சி நடைபெறும் நாளிலே வட இந்தியாவில் உள்ள சில நதிக்கரையில் – எல்லாவித – வண்ண மயமான உடைகளுடனும், உடை ஒன்றுமே இல்லாத சாதுக்கள் வரை அனைவரையும் , ஒரே இடத்தில் காணலாம். அன்று நமது நாட்டு மக்கள் மட்டுமல்லாது, உலகத்தின் பல பாகங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதிகளை முற்றுகை இடுவதுண்டு.
3 . 11 சாமியார்களை பற்றி மக்களிடையே பரவலான பல (தவறான) எண்ணங்கள்.
நம்ம ஊரைப்போல சாமியார்களுக்கு உள்ள வரவேற்பு உலகில் எந்த பகுதியிலும் இருக்குமா? சந்தேகம்தான். ஏன் அப்படிப்பட்ட ஒரு வரவேற்பு?
கடவுளிடம், இவர்களுக்கு ஏதோ தனிப்பட்ட முறையில் தொடர்பு இருப்பதாகவும், ஏதோ, அவர்கள் நினைத்தால் மனது வைத்தால் நாம் பதவிகள் பெறலாம், பெற்ற பதவியை இழக்காமல் இருக்கலாம், பொருட்களை குவிக்கலாம். எல்.கே.ஜி அட்மிஷனிலிருந்து, பிள்ளை பேறு இல்லாத குறைவரை எல்லாம் தீர்க்கும் சக்தி படைத்தவர்கள்.
எல்லா சாமியாருக்கும் நாம் பொருள் வாழ்க்கையில் வெற்றி பெற செய்ய மந்திரங்கள், மாயங்கள் தெரியும்.
சில சாமியார்களுக்கு இரும்பை தங்கமாக மாற்றும் ரசவாதம் (கெமிஸ்ட்ரி) தெரியும்.
ஒட்டு மொத்தமாக இந்த சக்திகளுக்கு ஒரு பெயர், அமாநுஷ்ய சக்தி. அல்லது சாதாரண மனிதரிடம் இல்லாத ஒரு சக்தி. என்ன விசித்திரமான கற்பனைகள்.??????
ஐயா, சிறிது சிந்தியுங்கள். அமானுஷ்ய சக்திகளை பெற்றவர்கள் எதற்காக வாழ்வில் மொட்டையாகிப் போய், துன்பத்தில் துடிக்கும் மனிதர்களிடம் பொருளை எதிர்பார்த்து நம்மிடையே சுற்ற வேண்டும்? கேயேந்த வேண்டும்.?
3 . 12 வளர்ந்த நாடுகளும் இதற்கு விதி விலக்கு இல்லை.
தொழில் விஞ்ஞானம் ஆகியவற்றில் முன்னேறிய அமேரிக்காவில், கடவுளின் அருள் பெற்றவராக தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு போலியாக (நன்றாக இருப்பவர்களை வைத்து) தீராத வியாதிகளை தீர்க்கும் நாடகம் நடத்தும் வேடிக்கை. . நல்ல உடல் நலம் உள்ளவர்களை, நோய் உள்ளவர்களாக நடிக்க வைத்து, ஆயிரக்கணக்கான மக்கள் முன், கடவுளை வேண்டுவதன் மூலம் குணப்படுத்துவதாக ஏமாற்றி கொள்ளை கொள்ளையாக பணம் சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சிலர் ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகும், ஏமாற்று வேலை தொடர்கிறது. சமீபத்தில் இந்த ஏமாற்று ஆசாமி இந்தியா வந்தார். இந்தியாவிலுள்ள பல பிரபலங்களும், மந்திரிகளும் இந்த ஏமாற்றும் மனிதர் பங்கு கொண்ட விழாவுக்கு வருகை தந்து கௌரவித்திருக்கிறார்கள்.
இந்த ஏமாற்றும் மனிதர் நாடு திரும்பும்போது, ஒரு அதிகாரி (?) விமான நிலையத்தில், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த ஆன்மீக மேதாவியை வழிமறிக்கிறார். தனது நோயுற்ற உறவினரை, அவரது அற்புத சக்தியை கொண்டு குணப்படுத்தும்படி வற்புறுத்தியிருக்கிறார். அப்படி ஒரு சக்தியே இல்லாத ஏமாற்று பேர்வழி என்ன செய்வார்?
இந்த ஆன்மிகவாதி போலீஸ உதவியுடன் தப்பித்து விமானத்தில் ஏறி தனது நாட்டிற்கு சென்றுவிட்டார் (செய்திதாள்கள், டீ.வி சானல்கள் இந்த நிகழ்ச்சியை தெரிவித்தது).
பேராசை பிடித்தவர்களும், அறிவில்லாதவர்களும் கற்பனையில் மாத்திரமே வளர்த்துக் கொண்ட அமாநுஷ்ய சக்திகளை நம்பி அலைவார்கள். இருப்பது எல்லாம் இழந்து, பின்னர் போலீசில் புகார் கொடுத்து என்ன லாபம்?
ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.?
.ஆகவே உடையும் விளம்பரமும் மாத்திரமே அமாநுஷ்ய சக்திகளை தராது. எனவே போலிகளையும் கண்டு ஏமாறாதீர்கள்.
- 13. உண்மையான சாதுக்களிடம் என்னதான் எதிர்பார்க்கலாம்?
அது நல்ல கேள்வி.
சாதாரண மனிதர்களிடம் துளிகூட இல்லாத எந்த விலைக்கும் கிடைக்காத, விலை மதிப்பு செய்ய முடியாதது, வாங்க முடியாதது என்று எவ்வளவோ உண்டு. ஒன்றுவிடாமல் பின்னால் வரும் பக்கங்களில் பார்க்கலாம்.