அத்தியாயம் 04
அறிமுகம்
ஜாடிக் – வால்டயர் என்ற பிரஞ்ச் அறிஞர் எழுதியதை அடிப்படையாக கொண்ட ஒரு சிறு கதையை தழுவிய கதை ஒன்றைப் படித்தோம். துரத்தும் தோல்விகள்கூட மனிதர்களை மட்டுமல்ல, மாங்காய் மடையர்களைக் கூட மகானாக்கும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டோம்.
சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து, ஞானப்பாதையில் கால் வைத்து அறிந்தோ அறியாமலோ பயணம் தொடங்கி, வழியில் குறிக்கிடும் அல்லல்களை பொருட்படுத்தாமல், அரும்பாடுபட்டு தமது இலக்கை அடைந்து, ஞானிகள். என்று அழைக்கப்படுவார்கள்.
முழுமையாக ஞானத்தை பெற்ற அவர்களில் சிலர், மீண்டும் அதே மக்கள் மத்தியில் வந்து, ஏதாவது ஒரு வகையில் அவர்களுடைய துயரங்களை துடைக்க செயல்படுவது சில ஞானிகளின் இலக்கணம்.
நாம் அதிகம் அறிந்த சில மகான்கள் பொருள் பாதையிலிருந்து அருள் பாதைக்கு வரவிருந்த சிறிய நிகழ்ச்சிகளை அலசுவோம். இந்த மகான்கள், தங்கள் வாழ்ந்த காலங்களில் நிகழ்த்திய அற்புதங்கள் அதோடு, அவர்கள் இந்த உலகைவிட்டு செல்லும் முறையிலும் வித்தியாச நிகழ்ச்சிகள் இருந்தால், அதையும் காண்போம்.
ஸ்வாமி என்ற அடை மொழி, திருமண பந்தத்தில் சிக்காமல் ஆன்மிகத்தில் உள்ளவருக்கு உரித்தாகும். இதன் மூலம் திருமண பந்தத்தில் இணைந்தவர்களும் கூட ஆன்மிகத்தில் உள்ளது தெளிவாகும். திருமணத்திற்கு பிறகு சந்நியாச வாழ்க்கை மேற்கொண்டவர்கள் கூட ஸ்வாமி என்ற அடை மொழியை பெறுகிறார்கள். (சன்யாசமே மறுபிறவி இல்லையா? கணக்கு சரிதானே.)
இதில் எதுவும் கற்பனை இல்லை.
இங்கே படிப்பது முழுவதும் உண்மையே !
4.1. சுவாமி ராமா ஞானியான கதை.
சுவாமி ராமா, தான் ஞானியாக வேண்டும் என்று யாரிடமும் கேட்கவே இல்லை. ஹிமாலய மலை பிரதேசத்தில். அங்கே ஒரு வயதான தாஸ்மான் என்ற வைஷ்ணவர் (கணவன் மனைவி) ஜோடி. இவர்கள் இருவரும். மாதவானந்த சரஸ்வதி என்ற ஞானியின் பக்தர்கள்.
வெகுநாளாக புத்திர பாக்கியம் இல்லாத இந்த ஜோடிக்கு ஒரு மகன் பிறப்பானென்றும், குழந்தைக்கு. இரண்டு வயதாகும்போது அந்த குழந்தையை தன்னிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்று ஆசி வழங்கினார். அது போலவே பிரிஜ் கிஷோர் தஸ்மான் என்ற பிற்கால சுவாமி ராமா தன் குருவை அடைந்தார். சுவாமி ராமா, ஞானப்பாதையில் நடை பயின்றபோது, ஹிமாலயத்தின் குகைகளில் தவமிருக்கும் பல ஞானிகளிடம் பாடம் கற்றதை அறிய ஆவலா?
விஞ்ஞானிகளே வியக்கும் அளவு இந்த மெய் ஞானிகள் தற்கால விஞ்ஞானிகளைவிட அதிகமாக விஞ்ஞான அறிவு பெற்றிருப்பதை, தெரிந்து கொள்ள ஆசையா? “லிவிக் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ்” என்ற சுவாமி ராமா அவர்களின் சுய சரிதையைப் படியுங்கள். அதில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. நவீன விஞ்ஞானத்திற்கும் கீழை நாட்டு ஞானிகள் கண்டறிந்தவைகளுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கும்.
ஸ்வாமி ராமாவை நான் அறிந்த விதம், அவரை அடைந்த விவரம் எல்லாமே இன்று ஒரு கனவுபோலவே இருக்கிறது, அவரை கண்டு, அவருடன் செலவழித்த அந்த இருபது நிமிடத்தில் நான் கேட்க நினைத்த கேள்விகள் எதையும் கேட்காமல், மௌனமாக, தியானத்தில் ஈடுபட, எனக்கு பதில்கள் எல்லாமே தெரிந்துவிட்ட உணர்வு ஏற்பட, வேறு பேச்சு எதுவும் இல்லாமல் விடை பெற்று திரும்பினேன். இந்த சம்பவம் எனது ஆன்மீக பயணத்தில், ஒரு முக்கிய திருப்பம்.
தனது குருநாதரின் விருப்பபடி, ஸ்வாமி ராமா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், இந்திய உபகண்டத்தின் செல்வமான யோக அறிவை பிரபலபடுத்தப் பயணமானார். பல வருட காலம் அங்கே தங்கி பல்வேறு மேடைகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி யோகா ஒரு விஞ்ஞானம் என்பதை உலகுக்கு காட்டினார். இது மாத்திரம் இல்லை. தன்னை மருத்துவ மற்றும் உடற்கூறு ஆராய்ச்சி நிபுணர்களிட.ம் சமர்ப்பித்து, யோக சாதனைகள் செய்து அதன் மூலமாக யோகாவின் மகிமையை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார்.
தனது வாழ்நாளின் இறுதியில் இந்தியா திரும்பினார். தாம் பிறந்த அதே மண்ணில் பிறந்த பல மக்கள் மருத்துவ உதவிக்காக, தில்லியிலுள்ள பிரபல மருத்துவமனையான சப்தர்ஜங், மற்றும் ஆல் இண்டியா இன்ஸ்டிதியூட் ஒப் மெடிகல் சயின்ஸஸ் – ஐச் சேர்ந்த மருத்துவமனை இரண்டை மாத்திரம் நம்பி இருந்தது அறிந்திருப்பார். இந்த மருத்துவ மனைகளின் வெளியே, நடைபாதையில் (தங்கி சிகிச்சை பெறவேண்டி படுக்கை கிடைக்காத காரணத்தால்) நாட்கணக்கில் நடை பாதையில் காத்திருந்து பலர் இறப்பதை அறிந்திருப்பார் போலும்.
சுவாமி ராமா, ரிஷிகேஷ், என்ற இமயத்தில் அடிவாரமும், புண்ணிய தலமுமாக விளங்கும் இடத்திற்கு அருகே (தேராதுன் விமான நிஏலையத்தை அடுத்து) மிகுந்த நவீன வசதிகள் கொண்ட ஒரு மாபெரும் மருத்துவ மனையையும் அதோடு ஒரு மருத்துவ கல்லூரியையும் நிறுவியுள்ளார். ஏழைகளுக்கு இலவச மருத்துவம், ஏழை நோயாளிகளுக்கு உதவ வந்த உறவினர்களுக்கு மிக சிறிய வாடகையில் தங்கும் வசதியுடன் கொண்ட அமைப்பு இது.
ஞானிகள் தனது ஆன்மீக பயணத்தின் எல்லையை அடைந்தவுடன், திரும்பவும் மக்கள் சேவையில் ஈடுபடுவார்கள் என்ற பொதுவான (கருத்தை) எண்ணத்தை, சுவாமி ராமாவின், இந்த செயல் உறுதி செய்கிறது.
4 . 2 புத்தர் ஞானியான கதை
இது பள்ளியில் பாடமாக படித்ததால், நம்மில் பலருக்கு புத்தரையும் அவர் வாழ்க்கையும் நினைவில் இருக்க நியாயமில்லை.
இன்றைய நேபாளத்தில், இயேசு கிறிஸ்து பிறக்க இன்னமும் சில நூறு வருடங்கள் இருக்கும் போது வாழ்ந்தவர். ஒரு ராஜ குடும்பத்தில் பிறந்து இவருக்கு வழக்கம்போல ஜாதகம் கணிக்கப்பட்டது. குழந்தையின் ஜாதகப்படி, அவர் துறவறம் கொள்வார் என்று தெரிய வந்தது.
பொருள் உலகில் நிலையாக உள்ள எந்த ஒரு பெற்றோரும் தனது புத்திரச் செல்வத்தை பொரியியல் நிபுணராக, மந்திரியாக, ராஜாவாக பார்க்க விரும்புவார்கள். நிச்சயமாக ஒரு துறவியாக இல்லை.
துறவி என்றால் ஏதோ அவசியத் தேவைகள் எதுவும் கிடைக்காமல் இயற்கையின் இடையூறுகளுக்கு இரையாகி மிகுந்த துன்பத்துடன் வாழ்ந்து மடிவார்கள் என்று ஒரு தவறான பயம். (இதுவும் மாயையின் வேலைதான்).
துறவியை பற்றி இப்படி சொல்லும்போது, ஒரு பழைய கதை ஒன்றை, (பெர்ஷியாவில் உருவானது) நிச்சயமாகச் சொல்லவேண்டும்.
கதை – ஏழை மன்னரும், செல்வந்தரான ஒரு துறவியும்.
ஒரு பக்கீர், (நம்ம ஊரில் ஒரு சாதுவுக்குச் சமம்) புனித தினமாகக் கருதும் வெள்ளியன்று நடைபெறும் பிரார்த்தனைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்கிறார்.
அந்த நாட்டின் அரசனும் அதே தினம், பள்ளிவாசலில் ஒரு சிறப்புப் பிரார்த்தனை செய்கிறார். தனக்கு படைபலம், செல்வம், பெரிய சாம்ராஜ்யம் எல்லாம் கிடைக்க வேண்டும் என விசேஷமாக பிரார்த்தனைகள் செய்கிறார். பிரார்த்தனையின் முடிவில் ஏழை எளியவருக்கு உணவு, துணி முதலானவைகளை தன் அதிகாரிகள் மூலம் மன்னர் அளிக்கவிருக்கிறார்.
பக்கீரும் அன்று பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வெளியேறுகிறார். மன்னர் அளித்த பரிசுகளை வாங்க வரிசையில் நிற்குமாறு அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். மன்னரின் இலவசங்களைப் பெற்றுக்கொள்ள பக்கீர் மறுக்கிறார். கோபம் அடைந்த காவலாளிகள், இவர் அரசரை அவமரியாதை செய்து விட்டார் என்ற குற்றத்தை சுமத்தி, அரசன் முன் நிறுத்தி புகார் செய்கிறார்கள்.
பக்கீர் சொல்கிறார், “நான் என்னைவிட ஏழ்மையில் இருப்பவர்களிடம் இருந்து நான் யாசகம் பெறுவதில்லை”. இதை கேட்ட மன்னர் திடுக்கிடுகிறார். பக்கீர் விளக்கம் தருகிறார். (நம்ம ஊரில் பக்கிரி என்ற சொல், உருது, மற்றும் அராபிய சொல். பக்கீர், இரண்டும் ஒன்றே தான்) நீங்கள் இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் தந்தீர்கள்.
எனக்கோ ஆண்டவனின் ஒரே ஒரு வேண்டுதல் மட்டுமே தான். அதாவது இறைவனின் கருணை மட்டுமேதான் வேண்டுகிறேன். அதை தவிர வேறு எதுவும் – பொன்னும், மண்ணும், புகழும், பெருமையும், பொருளும் – அவரிடம் நான் வேண்டுவது இல்லை. அவசியமும் இல்லை.
குறைவாக தேவை உள்ள நான், அதிகம் தேவை உள்ள உங்களை விட செல்வந்தனல்லவா?
என்னை செல்வந்தனாக கருதும் நான், உங்களிடம் யாசகம் பெறுவதை குற்றமாக, கருதுகிறேன் என்கிறார்.
என்ன, ஆணி அடித்த மாதிரி ஒரு லாஜிக்.?
மன்னர் இந்த ஸுபியின் அறிவுரையை நன்றாகவே புரிந்து கொண்டார். இவரை ஆலோசகராக கொண்டு நல்ல மன்னராக மாறி நாட்டை நல்ல விதமாக ஆண்டுவந்ததாக முடிகிறது கதை.
புத்தருக்கு போதி மரத்தடியில் தியானம் செய்யும்போது ஞான ஒளி பிறந்ததாக சொல்லபடுகிறது. புத்தருக்கு ஞான ஒளிவு பெற இந்த மரம்தான் வேண்டும் என்பதில்லை. ஆனாலும் அதை ஏன் பெரிது படுத்துகிறார்கள் என்று புரியவில்லை?
இப்போதைய மக்கள் புத்தர் சொன்னதை காற்றில் பறக்கவிட்டு இந்த மரத்தையே பலர் சுற்றிவருகிறார்கள். இந்த ஞானி மனிதநேயத்தையும் கடந்தவர். எல்லா உயிர்களையும் நேசிப்பவர். ஆகவே வேதங்களில் காணப்படும் உயிர் பலியை வெறுத்தார். அதனால் உயிர் பலி இல்லாத சமய வாழ்க்கை, வழிபாடுகள் கொண்ட பாதையை உருவாக்க பௌத்த (சமண மதமும் தான்) மதம் தோன்றியது. (இன்று மாமிசம் உண்ணும் பௌத்தர்கள் பலரை நாம் அறிவோம்).
ஒரு நண்பர் கேட்டார். புத்தரின் உபதேசம் அவ்வளவு பிரமாதமாக ஒன்றும் இல்லையே ?!
ஐயா, அதன் எளிமையே அதன் சிறப்பு. புத்தரின் உபதேசங்களை பாமரனும் அறிந்து பயன் பெறலாம் இல்லையா?
4 . 3. செயிண்ட் பேட்ரிக்
இந்த துறவி ஆன்மீகப்பாதையில் செல்லக் காரணமானது, அவர் கடத்தப்பட்டு, அடிமையாக அண்டை நாட்டில் விற்கப்பட்ட ஒரு துயரமான சம்பவம். இவருடைய வாழ்க்கை வரலாறு, பலத்த சர்ச்சைக்கு உள்ளானது.
அது நமக்கு அவசியம் இல்லை. பெரும்பாலோர் நம்புவதை நாம் ஆதாரமாகக் கொள்ளலாம். இவரின் வாழ்க்கை வரலாறு ஒரு மிக முக்கிய, பயனுள்ள உண்மையை நமக்கு உணர்த்தும். (நம்முடைய) மிகவும் பாதகமான சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதே! இவரது வாழ்க்கையைப் போற்ற, இது ஒன்றே போதுமானது.
இந்த ஐரோப்பியர்களின் – அதாவது – வெள்ளை மனிதர்களின் சரித்திரமே அலாதி. கடல் கொள்ளை, அடுத்த நாட்டை சூரையாடுவது. ஆயுத பலத்தைக்கொண்டு சமாதானமாக வாழ்பவரை அடக்கி ஒடுக்கி, ஒரம்கட்டி அவர்களின் செல்வங்களை கொள்ளை கொள்வதும், அயல்நாடுகளில் புகுந்து, அதன் மக்களை, நாட்டை அடிமைப் படுத்துவது, அடக்கி ஆள்வது, தங்களின் மதத்தை கட்டாயமாக புகுத்துவதும், இதெல்லாம், இவர்களின் இடைவிடாத உலக சாதனைகள்.
வளர்ந்த நாடுகள் சில வளர்ந்து கொண்டே இருக்க செய்யும் தந்திரம் புதியதல்ல, நமது நாட்டைப்போல மற்ற மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பதவி ஆசை, பண வெறி பிடித்த தலைவர்களை வளைத்துத் தன் கட்டளைக்கு உட்படுத்தி வருகிறது, அவர்கள் மூலம், அந்தந்த நாடுகளில் அவசியம் இல்லாத பொருட்களையும் ஆயுத தளவாடங்களையும் கொள்ளை விலைக்கு விற்பது,
இதை உறுதி செய்ய அடுத்துள்ள நாடுகளுடன் போர்களை நிரந்தரமாக உருவாக்குவது போன்ற தந்திரங்களை கடைபிடித்து ஆள்வது அவர்களது சிறப்பு..
விலங்கின நியதியை இன்று வரை மாறாது கடைபிடிக்கும் ஒரே இனம் இவர்கள் தான்.
உலக சரித்திரம் இன்று புத்தகமாகவும் இண்டெர் நெட் மூலமாகவும் படித்து தெரிந்து கொள்ளலாம். உலக சரித்திரத்தில் இவர்களின் சாதனைகளை ஆராய்ந்தால் மேலே குறிப்பிட்ட (பிறநாடுகளிலிருந்து) கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த செல்வங்கள், கணக்கில்லா கொலைகள், மற்றும் சுரண்டல்கள் மாத்திரமே கிடைக்கும்.
பதினாறே வயதான சிறுவனை வீட்டிலிருந்து கடத்தி, அடுத்துள்ள ஐர்லாந்தை சேர்ந்த ஒரு ஆட்டு மந்தை உரிமையாளாருக்கு விற்கப்படுகிறார். அந்த சிறுவன்தான், பிற்கால செயிண்ட் பேட்ரிக்.
விற்கப்பட்டவர், ஆடு மேய்ப்பதற்காக ஒரு மந்தை ஆட்டுடன் மலை உச்சிக்கு அனுப்பப்பட்டார். தாங்காத குளிரில், ஆட்டோடு ஆடாக, மனித வாசனை இல்லாமல் தவிக்கும்போது, மனதில் இரண்டு வழிகள் தோன்றும். முதல் வழி, சுய பச்சாதாபம் கொண்டு, அழுது புரண்டு கடைசியாக தற்கொலை செய்து கொண்டு சாவது. இரண்டாவது, இந்தத் தனிமையைப் பயன் படுத்தி, சிறுவயதில், மதகுருவான தன் தாத்தாவிடமிருந்து கற்ற, பழகிய தியானத்தை முழுமையாக மேற்கொள்வது. சிறுவன் இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்தார். சுமார் ஆறு வருடங்கள் தியானத்தில் கரைந்தது. பின்னர் ஒருநாள் அவர் மனதுக்குள் ஒரு செய்தி வந்தது. அவர் பயணம் செய்ய ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட திசையில் நடக்கும்படியும் வந்தது உத்தரவு. இப்போது 22 வயதான இளைஞன், அந்த செய்தியைப் பின்பற்றி இருநூறு மைல்கள் நடந்து ஒரு துறைமுகத்தை அடைந்தார்.
ஒரு கப்பல் காத்திருந்தது. கப்பலில் ஏறினார். உடையே இல்லாத அவரை யாரும் தடுக்கவில்லை. கப்பல் இங்கிலாந்தில் சொந்த ஊரின் அருகிலுள்ள ஒரு துறைமுகத்தை அடைந்தது.
வீட்டை அடைந்தவருக்கு ஒரு அதிர்ச்சி. இவர் காணாமல் போனது பற்றி யாரும் கலங்கியதாகத் தெரியவில்லை. இவர் திரும்பியதில் எவரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் காணப்படவில்லை. மனிதரின் மனம் உடைந்திருக்க வேண்டும்.
இந்த முறை அவரை யாரும் கடத்தவில்லை. தானாகவே அயர்லாந்தை அடைந்தார், கிறித்தவ மதத்தை தனி ஆளாக பரப்பினார் (அது சரியா தவறா என்பது நாம் இங்கே ஆராய்வதற்கு இல்லை. அவரை பொருத்தவரை அது மக்களுக்கு செய்யும் ஒரு சேவை. அதனால் விளையும் கலாசார குழப்பங்களையும், இதர உப விளைவுகளையும் தீங்குகளையும் பற்றி அவர் அறிந்திருக்க நியாயமில்லை. (அறிந்திருந்தாலும் நாம் கவலைப் படுவதிற்கில்லை). யோகா மற்றும் மூச்சுபயிற்சிகள் கீழைநாடுகளில் தோன்றியது. இது மனித உடலை ஆரோக்கியமாக வைக்கும். இதை இந்த வெள்ளையர்கள் நாட்டில் உள்ள ஆலயங்கள் மற்றும் மதத் தலைவர்கள் தடை செய்வார்கள். ஏனென்றால், இது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு புறம்பானது என்ற காரணத்தோடு!
மனிதர்களின் ஆரோக்கியத்தைவிட மத நம்பிக்கைகள் முக்கியமானதா? விவாதத்திற்கு ஏற்ற ஒரு கேள்வி. கல்வி அறிவு என்றால் எழுத படிக்க தெரிந்திருப்பது மாத்திரம் என்று இருவதாவது நூற்றாண்டிலும் நாம் நம்புகிறோம். அது உண்மையானால் அந்த காலத்தில் எவரும் கல்வி அறிவு பெறாத அயர்லாந்து நாட்டின் பெரும்பாலான மக்களை எழுதப்படிக்க செய்வித்தார். அது மிகப் பெரிய தனி மனிதர் சாதனை இல்லையா?
அவர்களைக் கொண்டு பல ஆயிரம் பைபிள் கைப் பிரதிகளை தயாரித்தார். (இதனால் அயர்லாந்து மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கக் கூடாது). இந்த சாதனையை வைத்து, அவர் ஒரு சிறந்த கல்வியாளராக கொண்டாடப் படுகிறார். இதனால் பல கிறித்தவ பள்ளிகளுக்கு இந்த துறவியின் பெயர் சூட்டப்படிருக்கிறது என்று கருதுவோர் உண்டு.
4.4. ரமண மகரிஷி
இவரின் வாழ்க்கையைப் புரட்டும்போது நாம் அறிவது, வெங்கடராமன் என்னும் சிறுவன் ஒரு ஞானியாக உருவாகக் காரணமானது, தான் இறந்து போனதைப் போல ஒரு அனுபவம். அதனால் உண்டான பயம் அவரை திருவண்ணாமலைக்கு விரட்டியது. விளைவு, இன்று. உலகத்திற்கு ஒரு ஞானி கிடைத்தார். அவர் ஆன்மீக பாதையில் தேடியது, நான் யார் என்ற கேள்விக்கு, ஒரு நல்ல பதிலை.
அவருடைய வாழ்க்கை குறிப்புகளை காணும்போது, சிறுவயதிலே அவ்வப்போது, சமாதி நிலையை அடைவதை அறியலாம். கும்ப கர்ணனைப் போன்ற உறக்கம் என்று குறிப்பிடப் பட்டிருப்பது, சாதாரண உறக்கமாக நினைக்க முடியாது.
(என் தந்தையார் பிறவியிலேயே அதிக ரத்த அழுத்தம் கொண்டவர். ஆனாலும், அந்த அதிக ரத்த அழுத்தம் பொதுவாக அவருக்கு எந்த உடல் நல கோளாறுகளையும் ஏற்படுத்தியதில்லை. அதற்கு மாறாக, யோகிகள் பல போராட்டாங்களுக்கு பிறகு அடையும் சில சக்திகள்(????) இவருக்கு இயற்கையாகவே உண்டு. உதாரணத்திற்கு, ஒரு முறை, இந்திய விடுதலைக்கு முன்பு ஒரு சம்பவம். ஆங்கிலேய அரசால் புதுக்கோட்டை (சமஸ்தானம்) யிலிருந்து நாடுகடத்தப்பட்டு, ஐதராபாத் அடைந்தவர் தன் உடலில் இருந்து பிரிந்து வெளியேறி, தன் உடலை தானே கீழே படுத்திருப்பதை கண்டு பயந்து அங்கும் இங்கும் சென்ற அனுபவத்தை எங்களுக்கு சொல்லுவார்.
சிறு வயதில் உடல் சோர்வு காரணமாகவும் அதிக ரத்த அழுத்தம் காரணமாகவும் (நோயால் – என்று சொல்வது பொருந்தும்) அனிச்சையாக, தான் இருக்குமிடத்திலிருந்து வெகுதூரத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை அருகிலே இருந்து காண்பதைப் போல ஒரு அனுபவம். இந்த அனுபவம், பிற்காலங்களில் தன்னிச்சையாக செயல் படுத்தியதை ஒரே ஒரு முறை நேரில் கண்டிருக்கிறேன்.
ரமணரை பின்பற்ற, அவரை ஞான குருவாக அடைய அமேரிக்கா மற்றும் மேலை நாடுகளை சேர்ந்த மக்கள் கூட்டம் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை சுற்றி இருக்கும்.
ரமணருக்கு தொண்டர்களாக, பக்தர்களாக பல இடங்களில் இருந்தும் பல தரப்பட்ட மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். இவரது ஆசிரமத்தில், பக்தர்கள், மத்தியில் பல விலங்கினமும் இடம் பெற்றது ஒரு சிறப்பு.
இன்றும் ரமணரின் மறைவுக்கு பல ஆண்டுகள் கழிந்தும் பலநாட்டு மக்களை (சில நூறு குடும்பங்கள்), தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊரான திருவண்ணாமலையில் காணாலாம். ரமணரின் ஆசிரமத்தில் வெள்ளைத்தோல் மனிதர்கள், ஜப்பானிய, சீன மக்கள் ஆண்கள் குர்த்தா-பைஜாமா அணிந்தும், பெண்கள் பொட்டும் பூவும், புடவை சூடிதார் அணிந்தும் சுற்றிவருவதைக் காணலாம்.
அவர்கள் மாலை வேளையில் தமிழில் சிவனைத் துதித்து பாடும் காட்சி சற்று வித்தியாசமான அனுபவம். இவருடைய வாழ்க்கை வரலாற்றை, புத்தகவடிவில் உள்ளதைப் படிக்கும்போது ஆன்மீகம் குறித்து புதிய சில கோணங்கள் தெரியவரும்.
அப்படி ஒன்றும் யோகசித்திகள் போன்ற சக்திகள் தனக்கு இருப்பதாகவோ அப்படி இருந்தாலும் தமது பக்தர்களிடம் காட்டிக் கொண்டதாகவோ குறிப்புகள் இல்லை. தனது அனுபவத்தையும் கற்று அறிந்தவைகள் என்ற வகை அறிவை தமது பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டார். இவரது வரலாறு, மற்றும் இவர் சொன்ன பல சிறுகதைகள் ஆன்மீகத்தில் கால் வைப்பவர்களுக்கு ஒரு நல்ல அடிக்கல்லாக, அதாவது அஸ்திவாரமாக அமையும்.
இவர் உடலை நீத்தது, முதிய வயதில், புற்று நோய் கண்டதால்.
4.5. ஸேஷாத்ரி ஸ்வாமிகள்.
சிறிய வயதிலேயே இறை வழிபாடு, மந்திர உச்சாடானம், பூஜைகள், தியானம் என்று தனது ஆன்மீக பயணத்தை தொடங்கியவர். சிறிய வயதிற்கே உரித்தான விளையாட்டுகளில் நாட்டமோ, அல்லது எந்தவித தீய வழியிலோ இந்தச் சிறுவன் செல்வதில்லை. வாழ்க்கையின் ஆரம்பமே, அப்படிப் பட்ட சுத்தமான வாழ்க்கை.
ஐந்து வயதில் காஞ்சி (வேத) பாடசாலையில் சேர்ந்து பிறகு, தந்தையாரின் மறைவுக்குப்பின் வழூர் என்ற ஊரில் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இருந்த பல கிரந்தங்கள் முக்கியமாக பகவத் கீதை, உபநிஷதுக்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றிலும், வேதங்கள், சங்கீதம் முதலானவற்றிலும் தேர்ச்சி பெற்றார். பாலாஜி ஸ்வாமிகள் என்ற வட இந்தியாவை சேர்ந்த ஒரு ஞானிக்கு சிறிய காலம், சீடராக இருந்தார்.
சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமணரை விட சுமார் பத்து வயது பெரியவர். ரமணர் காலத்தைச் சேர்ந்தவர். ரமணரை உலகுக்குத் தெரிய வைத்தவர் என்ற தனிப் பெருமையும் இவருக்கு உண்டு. இவரை அறிய ரமணரின் சரித்திரத்தில் அனேக குறிப்புகள் உண்டு. இவரும், இவரைப்போல வேறு சில ஞானிகளுக்கும் தொட்டது எல்லாமே (துலங்கும்) தங்கமாகும், என்ற புகழைப் பெற்றவர்கள். (மிடாஸ்-டச், என்ற புகழைப் பெற்றவர்கள்).
தங்கக்கை ஸேஷாத்ரி: சுமார் நான்கு வயதுச் சிறுவனாக இருந்தபோது, கோவில் திருவிழா ஒன்றில், தாயுடன் ஷாப்பிங் போனார் சேஷாத்ரி. அங்கே வெங்கலத்தில் கடவுள் சிலைகள், மற்றும் விளக்குகள் விற்கும் கடை ஒன்று. அதிலிருந்த கிருஷ்ணர் பொம்மையை ஒன்றை சிறுவன் விரும்ப, கடைக்காரர் காசு எதுவும் வாங்காமலேயே அன்புடன் தருகிறார். அடுத்த ஒரே நாளில் சுமார் 1000 கிருஷ்ணர் பொம்மைகள் விற்க, இந்த குழந்தையை தொட்டது எல்லாம் துலங்கும் என்று தங்க கை கொண்டவராக அழைக்கிறார். ஸ்வாமிகள் வாழ்ந்த நாட்கள் முழுவதும் இந்த பெயர் கொண்டவராக விளங்கினார்.
நம்ப இயலாத வெளித்தோற்றம். ஞானியை தேடுபவர்கள், கண்முன் இருந்த இந்த ஞானியை அடையாளம் கண்டிருக்க நியாயம் இல்லை. ஏன் தெரியுமா?
பயித்தியக்காரனைப் போல ஒரு தோற்றம் தந்து, எங்கோ ஒரு மூலை முடுக்கில் ஒடுங்கியும், கொட்டும் மழையில் திளைத்தும் காணப்படுவார். பணக்காரர்கள் தரும் உயர்ந்த உணவை மறுத்து, பழைய கஞ்சியை ஏழைகளிடமிருந்தும், பிச்சை எடுப்பவர்களிடமிருந்து கெஞ்சிக் கேட்டு, வாங்கித் தின்பாராம். விலை உயர்ந்த துணிகளை சிலர் பரிசாகத் தரும்போது, அதை உடனே ஏழைகளுக்கு தந்துவிடுவாராம். இல்லை என்றால், கிழித்து அதை மாட்டின் கொம்பில் மாலையாக மாட்டுவதையும், மாட்டின் வாலில் கட்டுவதையும் கண்டவர்கள் உண்டு.
இவர் ஒரு இசைப் பிரியர். பிறர் வேண்டுகோளுக்கு இணங்கி இனிமையாக பாடுவாராம். பாடும்போது அருகில் இருக்கும் பொருள்மீது அதற்கேற்ற தாளம் போடுவதாகவும் அறிகிறோம். சில சமயம் பைத்தியமாகவும், பல சமயங்களில் பைத்தியமாக நடிப்பதாகவும், பலர் நினைப்பதுண்டு.
அவரைபற்றிகிடைக்கும்வேறுதகவல்கள்
யோகசித்திகள் எனப்படும் சக்திகளையும் கொண்டவர். கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், பிற்காலத்தில் நிகழவிருப்பதையும், கூறுவார். நாம் மனதில் நினைப்பதை அப்படியே சொல்வார்.
மிகுந்த பக்தியுடன் அவரை அணுகிய வியாதிகள் பீடிக்கப்பட்டோரை குணமாக்குவதுண்டாம்.
தீயவர்களை தம்மிடம் நெருங்க விடுவதில்லை. நல்லவர்களை நெருங்கி, அவர்கள் விலகிப்போனாலும் விடாது தொடர்ந்து அவர்கள் கையை பிடித்துக் கொண்டு விளையாடுவது வழக்கமாம்.
சேஷாத்ரி ஸ்வாமிகள் மறைந்த விதம்.
சுமார்நாற்பதுஆண்டுகள்திருவண்ணாமலையில்வாழ்ந்தவர். தனதுபக்தர்களிடம், ’நான்புதியவீடுஒன்றைகட்டிக்கொண்டுபோகலாமா’ என்றுபலநாட்களாககேட்டுவந்திருக்கிறார். ஒருநாள் சரிபோகலாம்என்றபதில், ஒருபக்தையிடமிருந்து வந்தது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் ஸேஷாத்ரி ஸ்வாமியின் பக்தர்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ளவிரும்பி, அவருக்குஎண்ணைகுளியல்செய்வித்து, புதிய ஆடைகளும் மாலைகளும் அணிவித்து, போட்டோவும் எடுத்திருக்கிறார்கள். அன்று ஆரம்பித்த காய்ச்சல் 41 நாட்கள் தொடர்ந்தது
இறுதியாக உடலைக் களைந்தார்.
4.6. சதாசிவ பிரும்மேந்திரர்.
இவர் துறவியாக மாறிய கதை மிகவும் நம்பமுடியாத அளவு எளிமையானது.
இதைவிட தீவிரமான, பற்றி எரியும், பிரச்சனைகளை தலையில் வைத்துக் கொண்டு சம்சாரத்தில் நீந்தும் நாம் எல்லாம் இருக்க, இந்த மனிதன் இவ்வளவு சின்ன விஷயத்திற்காக ஓடிவிட்டாரே என்று நினைக்கத் தோன்றுகிறது. (சம்சாரம் என்ற சொல், குடும்ப வாழ்க்கையைக் குறிக்கிறது).
அப்படி என்ன பிரச்சனை? ஒரு நாள் காலை வேளையிலே இந்த சிறுவனுக்கு ஒரே பசி. “அம்மா, எனக்கு பசிக்கிறது” என்கிறார். பதிலாக தாயார் “இப்போது உன் கல்யாண விஷயமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். சற்று பொறு” என்றாளாம். கல்யாணத்திற்கு முன்னாலேயே சாப்பாடு கிடைக்க பிரச்சனை என்றால், பிறகு என்னவாகுமோ என்ற பயமோ, இல்லை கவலையோ, இந்த சிறுவனை ஞானப்பாதையில் சேர்த்ததாக சில குறிப்புகள் சொல்கின்றன.
வேறு ஒரு குறிப்போ, சிறிய வயதில் திருமணமான சதாசிவருடைய மனைவி, சில வருடங்கள் கழித்து, ஒருநாள் பெரிய மனுஷியான செய்திகேட்டு, அன்றிலிருந்து சுமார் 18 வருடங்கள் தீவிர, தியான யோகப் பயிற்சிகளில் முழுகினார் என்கிறது.
அவர் ஒரு அவதூத சன்யாசி, பிறந்த மேனியொடு, அலைந்தே வாழும் வகை.
சதாசிவர் நிகழ்த்திய சில அதிசயங்கள்.
மதுரையில் சித்திரைத் திருநாள். திருச்சி அருகே காவிரி ஆற்றின் கரையிலே பிரும்மேந்திரர் வருகிறார். சில சிறுவர்கள், இவரை அணுகி, தங்களை மதுரைக்கு, சித்திரை திருவிழாவைக் காண அழைத்துச் செல்ல வேண்டுகிறார்கள்.
ஏன், எப்படி குழந்தைகள் இந்த மனிதரை இனம் கண்டு, மதுரை அழைத்துத்துச் செல்லுமாறு கேட்கிறார்கள்? குழந்தைகளை கடவுளுக்கு ஒப்பிடுகிறோம். ஏன்? அவர்கள் மனதில் களங்கம் ஏற்படவில்லை. வெறுப்புகள் வேரூன்றவில்லை. பிறவியில் நாம் அனைவரும் ஞானிகளே. சிறுவராக இருக்கும்வரை தெளிவான கண்ணாடி போன்றவர்கள். நாம் அவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அதை அப்படியே பிரதிபலிப்பார்கள்.
இந்த பருவத்தை கடந்து, நாம் குரங்குகளாக மாறிவிடுகிறோம். குழந்தைப் பருவத்தில் இறைவன் படைத்தது போலவே அப்பழுக்கின்றி தூய்மையான உள்ளம் கொண்டதால், நம்மைவிட பிறரை அறியும் சக்தி கொண்டவராக இருக்கிறார்கள். தம்மைப்போன்ற புனித உள்ளம் கொண்ட ஞானிகளுடனான தொடர்பு மிகவும் எளிதில் நிகழ்கிறது.
இந்த ஆற்றங்கரையிலிருந்து சுமார் இருநூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது மதுரை.
இந்த ஞானிகளுக்கு, ஏழைகள், குழந்தைகள் என்றால் அளவு கடந்த கருணை, அதுவும் கடலாக பொங்கி எழும் என்கிறது வரலாறு. உடனே, குழந்தைகளை, தங்கள் கண்களை மூடச் சொல்கிறார்.
உடனே, குழந்தைகள் மதுரையில் இருக்கிறார்கள். சாமியையும், தேவியையும் தரிசிக்கிறார்கள். திருவிழாவைக் கண்டுகளிக்கிறார்கள். இரவு நேரமானதும், அதே ஆற்றங்கரையில் விழித்தெழுந்து தங்கள் வீடுகளுக்கு செல்கிறார்கள். தாங்கள் மதுரையில் திருவிழா கண்ட அனுபவத்தை பெற்றோரிடம் சொல்கிறார்கள்.
பெற்றவர்கள் குழந்தைகள் கூறியதை நம்ப மறுத்தார்கள். ஆனால் குழந்தைகள் நிகழ்ச்சிகளை பற்றிக் கொடுத்த விலாவாரியான விளக்கங்கள், நிகழ்ச்சிகளை நேரில் காணாமல் தரமுடியாது என்று ஒருவாராக பெற்றவர்கள் உணரலானார்கள். எனவே அலறி அடித்துக்கொண்டு ஆற்றங்கரையை அடைந்து அந்த ஞானியை தேடுகிறார்கள், குழந்தைகள் குறிபிட்ட அந்த மனிதரை எங்கும் காணவில்லை.
இந்த மனிதர், தனது கால்கள் கொண்டு சென்ற திசையில் போவதும் பலநாட்கள் மௌனமாக தியான நிலையில் இருப்பதும் ஒரு வழக்கம். ஒரு காலகட்டத்தில், இப்படி ஒரு நிர்வாண சாது இருப்பதை பெரும்பாலும் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று சொல்லலாம். அப்போது, ஒரு நாள், தன் நினைவு இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறார். (அவர் வழக்கமாக உடைகள் எதுவும் அணிவதில்லை). ஒரு முஸ்லீம் (குட்டி) சுல்தானுடைய அந்தப்புரம் வழியே நடக்கிறார். அதை அறிந்த சுல்தானுக்கு மூக்கின்மேலே கோபம். அதனால் அவர்மீது காவலாளிகளை ஏவி விட, காவலாளிகள் சதாசிவ பிரும்மேந்திரருடைய கையை வெட்டி விடுகிறார்கள். கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு, ரத்தம் ஒழுகுகிறது. அப்போதும் எதுவும் நடக்காததுபோல, தன் வழியே நடக்கிறார். அதைக் கண்டு சுல்தானும் அவர் காவலாளிகளும் திடுக்கிடுகின்றனர். பிறகு வெட்டப்பட்ட கைகள் தானாகவே ஒட்டிக்கொண்டது. இதை கண்ட சுல்தானும் அவருடைய காவலாளிகளும் சதாசிவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க ஒன்றுமே அறியாதவராக தன் போக்கில் போகிறார். (இந்த சம்பவத்தை விளக்கும் கதைகளில் சில வேறுபாடுகள் உள்ளது கவனிக்க தக்கது).
வழக்கம் போல, பல நாட்கள் மக்கள் மத்தியில் காணாமல், திடீரென்று ஆற்றங்கரையில் தியான நிலையில் இருப்பதை சிலர் காண்கிறார்கள். திடீரேன்று ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. பல நாட்கள் வெள்ளம் நீடிக்கிறது. சதாசிவர் ஆற்று நீரில் மூழ்கிவிடுகிறார். சுமார் மூன்று மாதம் கழித்து, வெள்ளப்பெருக்கு நின்றதும், நிதானமாக எழுந்து தன் வழி போகிறார்.
வேறு ஒரு சமயம், சில தொழிலாளிகள் ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் தோண்டுகிறார்கள். அப்பொழுது ஒரு தொழிலாளியின் மண்வெட்டியின் நுனியில் ரத்தம் காணப்பட. பயந்து சிலர் ஓடி விட்டார்கள். மீதமிருந்த தொழிலாளிகள் எச்சரிக்கையுடன் தோண்டுகிறார்கள். அவர்களுக்கு கிடைப்பது, சதாசிவ பிரும்மேந்திரர். சிறிது நேரம் கழித்து, எழுந்து, நடந்து, மறைந்து விடுகிறார்.
நேரூர் என்ற ஊரில் தனது உடலைக் களைந்துவிடத் தீர்மானித்தார்.
சமாதி எப்படி உருவாக்குவது என்று தன் பக்தர்களுக்கு விளக்கினார்.
அதன்படி மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. பிறகு, அதில் இறங்கி, யோக முத்திரையுடன் அதில் அமர்ந்தார். பிறகு அந்த பள்ளத்தில், விபூதி, மஞ்சள், உப்பு, கற்பூரம் ஆகியவை சுற்றிலும் நிரப்பினார்கள். பிறகு பொடி செய்யப்பட்ட செங்கல்
இட்டு நிரப்பட்டது. பிறகு மண்ணைக் கொண்டு மிகுந்த இடம் நிரப்பப்பட்டது.
பிரும்மேதிரர், தான் சமாதியான ஒன்பதாவது நாள் அந்த இடத்தில் ஒரு வில்வ மரம் (செடி) ஒன்று தோன்றும் என்றார். அதோடு காசியிலிருந்து பாண லிங்கம் ஒன்று அங்கே பன்னிரெண்டாவது நாள் வந்து சேரும் என்றார். இரண்டும் உண்மையானது. லிங்கம் சமாதியிலிருந்து பன்னிரண்டு அடிகள் தள்ளி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வருடந்தோரும் நிகழும் பிரும்மேந்திரர் ஆராதனை ஆதி சங்கரரின் பிறந்த நாளன்று வருவது ஒரு சிறப்பு.
4 . 7.ராமலிங்க அடிகளார் 1823 – 1873.
இந்தப் பின்னாள் ஞானி, தமிழ் நாட்டில் உள்ள சிறந்த சிவத்தலங்களில் ஒன்றான, சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.
திருச்சிற்றம்பலத்தில் ராமலிங்கம்:
பிறந்து சுமார் ஐந்து மாதமே நிறைந்த ராமலிங்கத்தை பெற்றோர் திருச்சிற்றம்பலம் என்று அழைக்கப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு எடுத்துச்சென்றார்கள். அன்று, அர்ச்சகர் நடராஜருக்கு தீப ஆராதனை செய்யும் போது இந்த ஐந்து மாத குழந்தை அதை கண்டு, உரக்க சிரித்ததாக சொல்லப்படுகிறது.
படிக்காத மேதை
அடுத்த மாதமே தந்தை மறைந்தார். அதனால் குடும்பம் சென்னையில் வசித்த ராமலிங்கத்தின் அண்ணன் குடும்பத்துடன் இணைந்தது. ராமலிங்கத்திற்கு ஐந்து வயதானதும், அண்ணன் பள்ளியில் சேர்க்க, தம்பிக்கோ பள்ளிப் படிப்பில் சிறிதும் நாட்டமில்லை. தண்டனைகள் எதுவும் பலன் தரவில்லை.
ஐந்து வயது ராமலிங்கம், தனக்கென்று தனியாக அறை ஒன்று பெற்று, அதில் ஒரு கண்ணாடியும் அதன் முன்னால் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து மணிக்கணக்காக தியானம் செய்துவந்ததாக வரலாறு கூறுகிறது. ஆறுமுகனை ஆராதித்தவருக்கு வழிநடத்த குரு என்று ஒருவர் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ராமலிங்கம் சன்யாசவாழ்வை ஏற்றபோது அவருடைய வயது 13.
நெருங்கிய உறவில் கட்டாயமாக திணிக்கப்பட்ட திருமணம், பயன் இல்லாமல் ஆனது. பல அதிசயங்களை ராமலிங்கர் நிகழ்த்தியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. உதாரணம் – எண்ணைக்கு பதில் தண்ணீரில் விளக்கு எரிந்த சம்பவம்.
புதிய கோவில்:
ஜாதி அடிப்படையில் மனிதர்கள் பிரிந்து இருப்பதையும் அதன் விளைவுகளையும் வெளிப்படையாக எதிர்த்தார். மக்கள் அவ்வளவு எளிதாக ஜாதிகளை விடுவார்களா? மனிதர்கள் எல்லோரும் சமம் என்று சமத்துவம் போதித்தார். கடலூர் – விருத்தாசலம் சாலையில், நெய்வேலி அருகே வடலூர் என்ற சிற்றூரில் ஜாதி-மத வேற்றுமைகள் இல்லாமல் அனைவரும் வழிபட, ஒரு வித்தியாசமான வழிபாட்டு தலம் ஒன்றை நிறுவினார். அது சத்திய ஞான சபை என்று அழைக்கப்பட்டது.
சமத்துவம், தொண்டு ஆகிய இரண்டையும் வலியுறுத்த காதர் சாயபு என்ற ஒரு இஸ்லாமிய அன்பர் உதவியுடன் ஒரு பள்ளியையும் ஒரு பத்திரிகையும் தொடங்கினார். பணம் அதிகாரம் இரண்டும் உள்ள பொல்லாத மக்கள் எதிர்த்தார்கள். இயேசுபிரானையும், தீர்க்கதரசியாரையும் விட்டு வைத்தார்களா என்ன? எந்த ஒரு நல்ல செயல்களையும், பொறுக்காதவர்கள் எல்லா காலத்திலும், உலகின் எல்லா பாகங்களிலும் இருப்பார்கள் இல்லையா?
வள்ளலார் காலத்தில் அப்படி ஒருவர் ஆறுமுக நாவலர் என்ற ஒரு நல்லவர் இருந்தார். இவர் வள்ளலார் மீது. வழக்கு தொடர்ந்தார் வள்ளலாரின் மேலே சொன்ன முயற்சியை முறியடிக்க முயன்றார். அதையும் மீறி வள்ளாலாரோ, விருத்தாசலம் கடலூர் சாலை, மற்றும் பன்ருட்டிசிதம்பரம் சாலைகள் கூடும் இடத்தில், நெய்வேலியை அடுத்த, வடலூர் என்ற ஊரில் ஜாதி சமயங்களை கடந்த ஒரு ஆலயத்தை நிறுவினார்.
இங்கே பக்தர்கள் இறைவனை வழிபடுவது ஜோதி உருவத்தில். இதை தவிர வேறு ஆராதனைகளோ சடங்குகளோ கிடையாது. மாமிசம் உண்பவர்களுக்கு மாத்திரம் ஆலயத்தினுள் வந்து வழிபட அனுமதி இல்லை. இதை எதிர்த்து போராட்டம், மூடுவிழா எல்லாமே நடந்தேறியது.
அஹிம்சை மற்றும் புலால் உண்ணாதிருப்பது என்ற இரண்டையும் மக்களிடையே வள்ளலார் வலியுறுத்தி வந்தார்.
கருணை:
வாடிய செடியை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பாடிய வள்ளலாரின் மனம், மனிதர்கள் ஆடு மாடு என்ற மற்ற உயிர்கள் மீதும் மட்டும் இல்லாமல், அசையாத உயிர்களான செடி கொடிகள் மீதும் எல்லையற்ற அன்பும், அனுதாபம் கொண்ட தன்மை, நமது நாடு கண்ட பல ஞானிகளின் இடையில் தனியாக பிரகாசிக்கிறார்.
அவர் சாப்பிடுவது மிக குறைவு. சில நாட்கள், சில சமயங்களில் சிறிதளவு உண்பார். பலநாட்கள் சாப்பிடுவதில்லை என்று அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. ஆனாலும், அவர் ஆரம்பித்து, பல நல்ல இதயங்களின் உதவியுடன் வள்ளாலார் தொடங்கிய, பசித்தவர்களுக்கு இலவச உணவு திட்டம், நூறு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் தொடர்கின்றது.
அவர் இயற்றிய திரு அருட்பா 5818 பாடல்களை கொண்டது. தனது பக்தர்களை ஒரு ஆன்மிக பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தினார் அதன்படி, ஒவ்வொருவரும் ஒரு தனி அறையில் ஒரு விளக்கை ஏற்றி அதன் சுடரில் மனதை நிறுத்தி (தியானம் செய்து), நமக்கு அப்பால் இருந்து ஆட்டிவைக்கும் சக்தியை அறிய அல்லது காண முயற்சி செய்ய வேண்டும் என்பதே அது!
வள்ளலார் மறைந்த கதை
உலகில் பெரும் சாதனைகள் செய்தவர்கள் வாழ்ந்தகாலம் எப்போதுமே குறைவு.- ஜீஸஸ் – 33 வயது, மகாகவி பாரதி 39 வயது, மார்ட்டின் லூதர் கிங் -39 போன்ற பலர், தங்கள் செய்த சாதனைகள் பெரியதானாலும் வாழ்ந்தகாலம் என்னவோ குறைவுதான்.
வள்ளலார் மறைந்தபோது அவருடைய வயது என்னவோ 51 தான். மறைந்த நாள் பிப்ரவரி முதல் தேதி,. வருடம் 1874.
தனி அறை ஒன்றில் நுழைந்தவர், யாரையும், அந்த அறையின் கதவை 16 நாட்கள் வரை திறக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அப்படியே திறந்தாலும் ஒன்றும் இருக்காது என்றார். அத்து மீறி திறப்பவர்களை என் அப்பன் பார்த்துக்கொள்வான் என்றார். அறையின் உள்பக்கமாக தாழ்ப்பாள் கூட போட்டுக் கொள்ளவில்லை.
இப்படி சொன்னதினால், பல ஊகங்களும் வதந்திகளும் மக்களிடையே பரவியதில் அதிசயம் ஒன்றும் இல்லை. அன்றைய மாவட்ட கலெக்டர் ஒரு ஆங்கிலேயர். தலத்துக்கு வந்தார். வள்ளலார் இறுதியாக நுழைந்த இடத்தை சோதனை செய்வதற்காக. வந்தவருக்கு, ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு. அதோடு கதவை திறக்க வேண்டும என்ற எண்ணம் வரவேயில்லை.
அந்நாளில் வள்ளலாரின் சார்பாக தினம் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. அன்றைய உணவுக்கான செலவை தான் ஏற்று, பணத்தை கொடுத்துவிட்டு வந்த வழியே திரும்பினார்.
அதே வருடம், மே மாதத்தில் ஒருநாள், அரசு அதிகாரிகளால் கதவு திறக்கப்பட்டது. அறைகாலியாக இருந்தது. அதுதான் அதிசயம்.
வள்ளலாரும் அமானுஷ்ய சக்திகளும்:
வள்ளலார் வாழ்ந்த காலத்தில், சில சம்பவங்கள் அவர் கொண்டிருந்த அமானுஷ்ய சக்திகளைத் தெரிவிக்கின்றன.
அவரது உடலின் நிழல், நமது நிழல் போல இல்லாமல், ஒளி ஊடுருவும் வகையாக அமைந்திருந்தது ஒரு அதிசயம்.
தனது வாழ்நாளின் இறுதி வருடங்களில் சிறிதும் சாப்பிடுவதில்லை என்றும் பேசப்படுகிறது.
எண்ணைக்கு பதில் தண்ணீரைக்கொண்டு விளக்கு எரிய வைத்தது போன்ற அரிய செயல்களைச் செய்ததாக குறிப்புகள் உள்ளன.
ஒரு இரவுப் பயணத்தின் போது, கொள்ளையர்கள் அவர் பயணம் செய்து வந்த மாட்டு வண்டியை மறித்து, தங்களைத் தாக்க எத்தணிக்க, வள்ளலாரின் கைஅசைவில் கொள்ளையர்கள் கைஅசையாமல்ப் போனது. பின் அவர்கள் மன்னிப்பு கேட்க, கைகள் சரியாகி இருட்டில் மறைந்த ஒரு சம்பவத்தையும் நாம் வள்ளலாரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளில் படிக்கலாம்
வள்ளலாரும் பாரதியும்
ஜாதியைபெரும்பாடுபட்டுவளர்த்துவரும்அரசியல்வாதிகள்நிறைந்தஇந்தநாளில், வள்ளலாரும், பாரதியும்கடவுள்தான். பாரதிக்குமுன்னால்ஜாதியினால், ஜாதிஅடிப்படையிலான
சமூகத்தின் கேடுகளை விளக்கி, அதனை எதிர்த்தவர் வள்ளலார். ஜாதிகளை ஒழித்திட அறைகூவல் விட்ட, வள்ளலாரை சும்மா விடுவார்களா? வழக்குகளைச் சந்திக்க வைத்தார்கள்.
எத்தனை பாரதி, எத்தனை வள்ளலார் வந்தால் என்ன? ஜாதி, மதங்கள், மொழி, இனம் ஆகியவைகளை ஆயுதமாகக் கொண்டு மக்களுக்குள் பிளவு ஏற்படுத்தி, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, அதன் மூலம் லாபம் அடையும் மக்கள் தலைவர்கள் ஒருபுரம். ஜாதியின் அடிப்படையில் வேலைக்கு ஒதுக்கீடு என்ற (இதனால் ஏழைகளுக்கு பலன் எதுவும் இல்லை என்று புரியாத மக்கள்) போலி திட்டங்களை காட்டி ஜாதிகளை அழியாமல் காக்க பாடுபடும் தேசீய அளவில் தலைவர்கள் வேறு. ஜாதிகளை காக்க ஜாதிக்கலவரங்கள் அவ்வப்போது நிகழ்த்தும் அரசியல் பிரமுகர்களும் உள்ளபோது, ஜாதிகள் அழியுமா?
அறிவில் குறைந்த மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது வள்ளலாரும், பாரதியும் தோற்றுக் கொண்டே இருப்பார்கள்.
4 . 8. காரைக்கால் அம்மையார்
புனிதவதி என்பது பெற்றோர் சூட்டிய பெயர். சிவன் குடும்பத்தை உடைத்த அதே ஒரு மாம்பழம், இவர் இல்லற வாழ்கையை உடைத்து இவர் துறவறத்தை மேற்கொள்ளக் காரணமாகியது.
காவிரிப்பூம்பட்டினம், ஒருகாலத்தில் தற்கால மும்பாய் போல. ஏற்றுமதி, இறக்குமதி என்று வியாபாரத்தால் செழித்த நகரம். அதனால் அந்த நகரம் பெரும் செல்வச் செழிப்புடன் விளங்கியது. அதனால் பெரும் செல்வம் படைத்த பலர் வாழ்வது இயற்கையே.
அந்த காவிரிப்பூம்பட்டினத்தில், பெரும் செல்வந்தருள் ஒருவர் இருந்தார். இறைவனிடம் பக்தியும், ஏழைகளை, துறவிகளை அன்புடன் ஆதரித்து நேர்மையாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு தவப்புதல்வி. அவள்தான் புனிதவதி.
பெயருக்கும் ஏற்ற வகையில் அமைந்தாள் இந்தப் பெண். நடக்க ஆரம்பிக்கும்போதே இறை உணர்வு கொண்டவளாக இருந்தாள். அவள் வளர, அவள் இறை சேவையும், பக்தியும் வளர்ந்தது.
திருமணம் செய்யும் காலம் அடைந்ததும், நாகபட்டினத்தில் ஒரு வியாபார குடும்பத்தினர், தங்கள் மகனுக்குப் புனிதவதியைப் பெண் கேட்டு வந்தனர்.
(இந்த குடும்பத்தில் ஆண்களின் பெயர் தத்தன் என்று முடிகிறது. வடமானிலங்களில் ’தத்’ என்ற பெயர் கொண்டவர்கள் உண்டு. அவர்கள்தான் அன்றய தமிழகத்தில் சிறந்த வியாபாரிகளாக திகழ்ந்தார்களோ)?
மிக மிக வசதியான அப்பா, தன் ஒரே மகள், தன் அருகிலேயே வாழ்வதை விரும்பினார். எந்த காலத்திலும் பணம்தான் வெல்லும் போலும். மணமகனும் அவன் பெற்றோரும் சம்மதிக்க திருமணம் நிறைவேறியது.
தனது ஊரிலேயே மணமகனுக்கு ஒரு வியாபார நிறுவனம் துவக்கி வைத்துக் கொடுத்து, பெரும் செல்வமும் அள்ளித்தந்தார்.
இல்லற வாழ்வு இனிமையுடன் தொடங்கியது.
புனிதவதி, தன் சிறுவயதில் தொடங்கிய இறை வழிபாடு, அவள் பிறந்த குடும்பத்துக்கே உரித்தான தான தர்மங்கள், இதோடு கணவனின் மனம் நோகாமல் நடந்துகொள்ளும் நல்ல இல்லதரசியாக வாழ்ந்து வந்தாள்.
ஒரு மாம்பழம் ஒரு நல்ல குடும்பத்தை நாசமாக்குமா? அது முடியுமா? புனிதவதியின் வாழ்க்கே, முடியும் என்று நிரூபிக்கிறது. சிவனுடைய குடும்பத்தை உடைத்த அதே மாம்பழம், புனிதவதியின் வாழ்விலும் விளையாடியது எப்படி என்று இப்போது படிப்போம்.
ஒரு நாள் கடையிலிருந்த கணவனிடம், அவன் நண்பர்களோ, அல்லது வாடிக்கையாளர்களோ, தெரியாது, இரண்டு மாம்பழங்களை தந்து, இதைவிட ருசியான மாம்பழம் உலகத்தில் கிடையாது என்று சொல்லி அன்பளிப்பாகக் கொடுத்தனர்.
இந்த மனிதன். தான் உணவுக்கு வரும்போது தன்னுடன் கொண்டு வந்திருக்கலாமே ! இங்கே தான் விதி விளையாடியது. தத்தன். தன் தொழிலாளி ஒருவரிடம் இரண்டு மாம்பழங்களையும் தந்து, தனது வீட்டுக்கு அனுப்பிவைத்தான்.
அன்று, என்றும் போல புனிதவதிக்கு ஒரு துறவி யாசகத்திற்கு வரவே, உணவுடன் இந்த இரண்டு மாம்பழங்களில் ஒன்றையும் தந்து உபசரிக்கிறாள். தம்மிடமுள்ள மிக சிறந்த உணவுப் பண்டங்களை விருந்தினருக்கு படைப்பது அன்றய நியதி. மகிழ்ச்சியுடன் உண்டு விட்டு செல்கிறார் விருந்தாளி.
மதிய உணவுக்கு வந்த கணவன், குளித்துவிட்டு உணவுக்கு அமர்கிறான். பிறகு அவன் அனுப்பிய மாம்பழத்தை கொண்டுவர மனைவியிடம் சொல்கிறான். எஞ்சிய ஒரு மாம்பழத்தை தருகிறாள் புனிதவதி. பழத்தின் ருசியில் மகிழ்ந்து இரண்டாவது மாம்பழத்தையும் தரும்படி கேட்கிறான். (மனைவியும் அந்த இனிய பழத்தை ருசித்து மகிழவேண்டும் என்று எண்ணாது, தானே இரண்டையும் தின்ன துடிக்கும் இவன் கணவனா, அல்லது பெருச்சாளியா?)
இங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. இரண்டாவது பழத்தைத் துறவிக்கு தந்தாகிவிட்டது. கணவனுக்கு இதை தெரிவிக்க ஒரு பயம். (செந்தில் – கவுண்டமணியின் இரண்டு வாழைப்பழ ஜோக் மாதிரி சமாளிக்கவும் மனைவிக்கு தெரியாமல் போனது.).
குற்ற உணர்வுடன் பூஜை அறையில் புகுந்து இறைவனிடம் மன்றாடுகிறாள். மாம்பழம் கொண்டு வருவதற்காக உள்ளே போன மனைவி திரும்புவதற்கு அதிக நேரம் ஆகவே, கணவன் மனைவியைத் தேடி சமயலறைக்கு வருகிறான். அங்கே இல்லை. பின் பூஜை அறையில் மனைவியின் குரல் கேட்கிறது. அங்கே வருகிறான் கணவன்.
அப்பொழுது மனைவியின்கண்களில் கண்ணீரும், அவள் கையில் மாம்பழமும் இருப்பதைக் காண்கிறான். எதுவும் புரியவில்லை. மாம்பழத்தை தின்கிறான். இதன் சுவையோ முதல் மாம்பழத்தை விட பலமடங்கு அதிகம். எப்படி இந்த மாம் பழம் கிடைத்தது என்று கேட்ட கணவனுக்கு உண்மையில் நிகழ்ந்தது என்ன என்று கூறினாள் மேலும் ஒரு பழத்தை தருவிக்க கேட்டுக் கொண்டான் கணவன். இந்த முறை கிடைத்த மாம்பழம் கணவனின கையில் கிடைத்ததும் மறைந்தது.
கணவனுக்கு இப்போது புரிகிறது. புனிதவதியின் பக்தியினால் நடந்த அதிசயம்தான் என்பது.
ஒரு விதத்தில் பார்த்தால் உண்மையை சொல்லிவிட்டு இரண்டு உதை வாங்கியிருந்தாலும் பரவாயில்லை. இந்த அம்மா, புருசனை புறக்கணித்து, கடவுளை நம்பியதாலோ என்னவோ, கணவனைப் பயம் பற்றிக்கொண்டது. விளைவு, என்னவாயிற்று?
(வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கும் பெண்ணோடு வாழும்போதே, கணவன்மார்கள் தங்கள் தனி மனித சுதந்திரத்தை இழந்து, பெற்றோரையும் உற்றோரையும் தியாகம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும்போது, கடவுளே பின்னால் நிற்கும் ஒரு பெண்ணிற்கு கணவனாக குப்பை கொட்டுவது அத்தனை சுலபமல்ல என்பதை நாம் அறிவோம். அந்த கணவனும் புரிந்துகொண்டான் போலும் )
இப்போது, மனைவியை கண்டு பயந்தான். பூம்புகாரைவிட்டே ஒடிவிட்டான். சில வருடங்கள் தலைமறைவாக வாழ்ந்து, மதுரையில் ஒரு வியாபாரம் தொடங்கி, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பிள்ளை குட்டிகளுடன் வாழ்ந்து வந்தான்.
புனிதவதி, காணாமல் போன கணவனை எதிர்பார்த்து, இறை வழிபாட்டில் காலம் கடத்தினாள். சில வருடங்கள் கழித்து ஒருநாள், கணவன், தன் புதிய மனைவி மக்களுடன் வந்து புனிதவதியின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
இதனால், கணவன் தன்னை கழட்டிவிட்டுவிட்டான் என்று தீர்மானமாக தெரிந்து கொண்டாள். .
இப்போது புனிதவதி, இறைவனிடம் புதிய வேண்டுகோள் ஒன்றை வைத்தாள். “எனது இளமையை, அழகே அழித்துவிடு” என்று.
தீவிர பக்தர்களின் வேண்டுதல்களுக்கு உடனடி செயல்பட காத்திருக்கும் கடவுள், அழகிய புனிதவதியை, எலும்பும் தோலுமாகவும், முதிய உருவம் கொண்டவளாகவும் இறைவன் மாற்றிவிட்டார்.
இவர்தான், காரைக்கால் அம்மையாராக பிற்காலத்தில் மக்களுக்கு அறிமுகமானார்.
4.9. காஞ்சிப் பெரியவர்
காஞ்சிப் பெரியவர், பெரியவர், மகா பெரியவர், பரமாச்சாரியார், என்று அன்போடும், மிகுந்த மரியாதையுடனும், பக்தியுடனும் அழைக்கப்பட்டார் காஞ்சியிலுள்ள சங்கர மடத்தின் கடந்த தலைவரான திரு சந்திரசேகர சரஸ்வதி அவர்கள். பல மதப் பெரியவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
இன்றும், பல வருடங்களாக காஞ்சி மடத்தை அடுத்து ஒரு பள்ளிவாசல், அதாவது, இஸ்லாமியர்கள் வணங்குமிடம் ஒன்று உண்டு, இந்த இரண்டு மத அமைப்புகளுக்கு இடையே உள்ள நல்லிணக்கம், நட்பு, ஒற்றுமை ஆகியவை உலகெங்கிலுமுள்ள மதத்தலைவர்கள் கடைபிடிக்க, ஒரு நல்ல உதாரணம்.
கடவுள் விஷயத்தில் என் தந்தையாரைப் போல எனக்கு ஒரு மனப்போக்கு உண்டு. எப்போதாவது மற்ற குடும்ப நபர்களுடன், கோவிலுக்கு செல்வதுண்டு. அப்போது கடவுளிட.ம் எதுவும் வேண்டுவதில்லை. அதிகம் போனால், தற்போதய நிலமையை தந்ததற்கு நன்றி சொல்லுவோம். அவ்வளவுதான்.
அதேபோல மூன்று முறை, பெரியவரின் முன்னிலையில் (சுமார் 30 அடி தொலைவில்) நின்றிருக்கிறேன். அப்போது என்னுள் ஒரு புதிய சக்தி பாய்வதை உணர்ந்திருக்கிறேன். அவர் அருகில் செல்லவோ, பிரசாதம் வாங்கிக் கொள்ளவோ அல்லது ஆசி பெறவோ என்றுமே முயன்றதில்லை.
பெரியவருக்கு அமானுஷ்ய சக்திகள் உள்ளன. அவசியமில்லாமல் அவர் அதை உபயோகப் படுத்துவததே இல்லை. நிச்சயமாக, தன்னை பற்றி மற்றவர்கள் உயர்வாக நினைக்கவேண்டி உபயோகப்படுத்துவது இல்லை என்பது உறுதி.
அவருடைய தீவிர பக்தர் ஒருவர், வைஷ்ணவர். வயதில் என்னை விட மிகச் சிறியவர். அவர் பெரியவரைப் பற்றி பேசும்போது அவருக்கு உண்டாகும் பக்தி பரவசம் ஒன்றே போதும். அவர் பெரியவரின் அருகாமையில் இருந்து பல நிகழ்வுகளை விளக்குவார்.
ஏழைகள் மீது பெரியவர் காட்டும் அனுதாபமும் கொண்டுள்ள அன்பும் செய்யும் உதவிகளும் அவருடைய பல செயல்களில் வெளிப்படும் என்பார்.
பெரியவருடன் வாழ்ந்து பெரியவரை பற்றி, எளிய இளைஞனான அந்தத் தொண்டன், அனுபவபூர்வமாக அறிது சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு தனி புத்தகமே எழுதலாம்.
அந்தத் துறவியை அருகிலிருந்தும் அனுபவங்களாக அறிந்தும் கண்டும் கேட்டும் சொல்லும்போது கேட்பவரின் மெய் சிலிர்க்கும். கீழே தந்துள்ள சில உதாரணங்கள், அவருடைய சிறப்புத் தன்மைகளை பிரதிபலிப்பதற்கே.
பொரியியல் நிபுணரான எனது தந்தை கடவுள் இல்லை என்று நாத்திகவாதம் செய்பவரும் இல்லை. கடவுளை எப்படியாவது காக்காய் பிடிக்க கோவில் கோவிலாக ஏறி, கடவுளை அதைத்தா, இதைத்தா. நான் பதிலாக இதை தருகிறேன் என்று கடவுளுடன் காண்ட்ராக்ட் பேசும் ரகமும் இல்லை.
எனது சிறு வயதில், என் தந்தை, உள்ளூரிலும், சில சமயம் வெளியூரிலும் கோவில்களுக்கு எங்களுடன் வந்தது உண்டு. தொடர்ந்து ஒரே ஒரு முறை சில வெள்ளிக் கிழமைகளில் ஒரு வைதிகர் எங்கள் வீட்டிற்கு வந்து மலர்கள் ஊதுவத்தி மணம் கமழ பூஜை செய்து, வடை பாயசம் நிவேதனம் செய்வார்.
அந்த நாளை ஆசையோடு (வடை, பாயசத்தை???) எதிர்பார்த்து காத்திருந்ததும் இன்றும் நினைவில் உள்ளது. அது தவிர தனியாக அவர் வழிபாடுகள் ஆராதனைகள் என்று செய்து நாங்கள் பார்த்ததில்லை.
புதுக்கோட்டையில் பெரியவர்.:
ஒரு முறை, எனது தந்தை, தான் வேலை பார்த்த வந்த நிறுவனத்தின் தலைவர், அடுத்த ஊரில் இருந்த ஒரு மடத்திற்கு வந்திருக்கும் பெரியவருக்கு, முறையாக மரியாதை செலுத்த எண்ணினார். தனது ஒரு அலுவலரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். அப்போது அந்த அலுவலர் பல தில்லு முல்லுகள் செய்து வருவதாக தகவல் வந்தது. அதன் விளைவாக அந்த நிறுவன தலைவர் என் தந்தையை அழைத்து, தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டிக்கொண்டார்.
என் தந்தை அடுத்த ஊர் சென்று, பெரியவருக்கு மரியாதை செய்வதற்கான காரியங்களை மேற்பார்வை செய்வதே அந்த உதவி என்று கேட்க,. என் தந்தை அதிர்ந்து போனார். தனக்கு ஆத்திக சம்பந்தமான அறிவு ஒன்றும் இல்லை. எனவே நான் இதற்கு தகுந்த ஆள் இல்லை என்று சொல்லிப் பார்த்தார்.
நிருவனத் தலைவரோ, அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. தாங்கள் அங்கே தலத்தில் இருந்தாலே போதுமானது என்று சொல்லி ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்.
அடுத்த ஊரிலுள்ள மடத்தை அடைந்து. செய்தித்தாளுடன், மடத்தின் வெளியே அமர்ந்திருந்தவரை மடத்திலுள்ள சிப்பந்தி ஒருவர் அணுகி, பெரியவர் உங்களை அழைக்கிறார் என்றார். என் தந்தை உறுதியாக, பெரியவர் இப்போது திருப்பதியில் இருக்கிறார் என்று சொல்லி, சிப்பந்தியுடன் வரமறுத்தார். (என் தந்தையின் நிருவனத் தலைவரையும் பெரியவர் என்று அவர்கள் அலுவலகத்தில் குறிப்பிடுவது வழக்கம்).
மடத்து சிப்பந்தியும் விடுவதாக இல்லை. நிதானமாக, பெரியவர் என்றால் காஞ்சி சங்கராச்சாரியார். அவர் அழைக்கிறார் என்று விளக்கினார். பதிலுக்கு என் தந்தையோ, அவரை எனக்கோ, என்னை அவருக்கோ தெரியாது என்று அடம்பிடிக்க, சிப்பந்தி விளக்கினார். பெரியவர் பூஜையை முடித்துவிட்டார். சற்று நேரம்முன்னால் என்னை அழைத்து, மடத்தின் வாசலில், வெள்ளை தலைமுடியுடன், வெள்ளை வெளேர் என்ற வேட்டி சட்டை, அணிந்து வெள்ளை சிகரெட் வாயிலும், செய்தித்தாள் சகிதம் உட்கார்ந்திருக்கும் ஆளை அழைத்துவா என்று உத்தரவு கொடுத்திருக்கிறார் என்று சொல்ல, சுற்றிலும் அப்படி எவரும் இல்லாததால் ஒரு வழியாக உள்ளே வர சம்மதித்தார். கைகால் கழுவிய பின் பெரியவரின் முன்னால் நிறுத்தப்பட்டார். அப்போது அமர வைத்து என் தந்தையின் பெற்றோரை, பிறப்பிடம் ஆகியவற்றை கேட்டு அறிந்து, உடனே, நீ மதுரை வக்கீல் ஏ.வைத்தியநாத ஐயரின் மருமகன்தானே என்று பெரியவர் கூறியதும் என் தந்தைக்கு, ஒரு அதிர்ச்சி.
அடுத்த இரண்டு மணிநேரம் இருவரும் பரிமாரிக்கொண்டது, தற்கால விஞ்ஞான முன்னேற்றத்தை பற்றியே. அன்றிலிருந்து பெரியவர் மீது என் தந்தைக்கு ஆத்திகத்தைக் கடந்த ஒரு விஞ்ஞான அறிவுள்ள ஆன்மிகத் தலைவர், ஞானி என்றெல்லாம் பெரிய மரியாதை. அது என்னையும் தொற்றிக்கொண்டது.
காரைக்குடியில் பெரியவர்:
நான் காரைக்குடியில் 9 ம் வகுப்பு மாணவன். அப்போது அங்கே பெரியவர் வருகை தந்திருக்கிறார். சங்கர ஜெயந்தியோ, அல்லது பெரியவரின் பிறந்தநாளோ நினைவில் இல்லை. (என் சித்தியின் மகன் அந்த சமயத்தில் பிறந்ததால், சந்திரசேகரன் என்று பெயர் வைத்ததாக நினைவு). அதுவரை நான் பார்த்திராத ஒரு கூட்டம். பூஜை முடிந்து, பெரியவர் காத்திருக்கும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கிக்கொண்டிருக்கிறார். திடீரென்று ஒரு நடுவயது பெண், பெரியவரிடம் கண்ணீருடன் ஓடுகிறாள்.
பெரியவர் அப் பெண்மணியை அமைதிப்படுத்தி அருகே அமரச் செய்கிறார். தீர்த்தம் வழங்குவது தொடர்கிறது. (இந்த பெண்ணின் தாலியை கூட்டத்தில் யாரோ அறுத்து எடுத்திருக்கிறார்கள். அதனால் பதறிப் போய்விட்டாள் இந்த பெண்). கூட்டம் நகர்ந்த வண்ணம் இருந்தது. திடீரென்று தீர்த்தம் கொடுப்பது நின்றது. தன் முன்னால் நின்ற ஒரு வயதில் மூத்த அம்மாளிடம் மெதுவாக, ஆனால் கண்டிப்பாக சொன்னார், எடுத்ததை கொடுத்து விடு. அந்த அம்மாள் மறுத்து ஏதோ பேச, பதிலுக்கு பெரியவர், இது வரை செய்த பாவங்கள் போதாதா என்று கேட்க, அந்த அம்மாள் மடியிலிருந்து தாலிகயிறு, மற்றும் தங்கத்தாலான பாகங்களை உரிமையாளரான பெண்ணிடம் கொடுத்துவிட்டு வேகமாக மடத்தைவிட்டு வெளியேறினாள்.
இண்டர்நெட்டில் பெரியவரைப் பற்றி:
ஒரு அமைப்பு, வருடா வருட.ம் மூன்று பண்டிதர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்குவதும், அவர்களுக்கு மரியாதை செய்வதும் வழக்கம். அதற்கு தேர்ந்து எடுத்த பெயர்களை பெரியவரின் ஒப்புதலுக்கு எடுத்து செல்வதும் அதை அப்படியே அவர் அங்கீகரிப்பதும் பல காலமாக நடந்துவரும் ஒரு செயல். ஒருமுறை. இரண்டு பெயர்களுக்கு ஒப்புதல் அளித்து, மூன்றாவதற்கு, இந்த பெயரும் இருக்கலாம் அல்லது வேறு நான் தேர்ந்தெடுத்த ஒருவராகவும் இருக்கலாம் என்றார்.
விருது வழங்கும் நாள் இன்னமும் ஒருநாள் இருக்க, அந்த மூன்றாவது பண்டிதர் இறைவனடி சேர்ந்து விட்டார். ஒரு அரசு ஆம்பப்பள்ளி ஆசிரியரும், தொழிலதிபரும்.
துறவிகள் பொருள் உலகத்திற்குள் இருக்கும்போது தொடரும் (மற்றவரின்) தொல்லைகளை அளவிட முடியாதுதான். துறவிகள் ஆன்மீக வளர்ச்சி பெற்று, மக்களிடையே ஆன்மீக விழிப்பு ஏற்படுத்த வந்தால், இந்த பணக்காரர்கள் தஙகள் சொந்தமான தொழில் ரீதியான பிரச்சனைகளையும் துறவியின் கழுத்தில் ஏற்றிவிடுவார்கள்.
இதில் ஆன்மீகத்திற்கு துளியேனும் சம்பந்தம் இல்லாமல், காவி உடையுடன், மடத்து தலைவர்களா, அல்லது மடத்தலைவர்களா என்று எண்ணும் வகையில் கமிஷன் அடிப்படையில் இயங்கும் பவர் புரோக்கர்களாக இயங்கும் வகைகளை பற்றியும் நாம் கேட்டதுண்டு.
அரசியல் தலைகள், அவர்களின் ஜால்ராக்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் என்று விதவிதமான செல்வந்தர்கள் காவி உடை மனிதர்களிடம் ஆதாயம் தேடிசுற்றி வருவதும் புதியதல்ல. நல்ல வகை ஞானிகளில் சிலர், இந்த செல்வமும் செல்வாக்கும் உள்ளவர் சிலரின் உதவியோடு ஏழைகள் மற்றும் பொதுமக்களுக்கு பல நன்மைகள் செய்து கொண்டிருப்பவர்களும் உண்டு.
ஏழைகளையும் சாதாரண மக்களையும் ஒரம் கட்டிவிட்டு, செல்வந்தர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியவர்களுக்கு மாத்திரமே நேரம் ஒதுக்கும் போலி ஆன்மீக வாதிகளும் உண்டு.
மகாராஷ்ட்ரா மானிலத்திலிருந்து ஒரு தொழிலதிபர், ஒரு மொழி பெயர்ப்பாளருடன் பெரியவரைக்காண வந்திருந்தார். அவருக்கு மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி சம்பந்தமாக ஒரு பிரச்சனை, அப்போது, பெரியவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தனக்கு தரப்படவேண்டிய ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்று பெரியவரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். பெரியவர் அந்த ஆசிரியரோடு அதிகநேரம் செலவழித்தார். அதன் பிறகு வந்த தொழிலதிபருக்கு, பிரசாதம் மட்டும் தந்து அனுப்பி.விட்டார்.
தொழிலதிபருக்கு ஒரே கோபம். சற்று தொலைவு சென்று, மொழி பெயர்ப்பாளரிடம், ஆசிரியரின் சிறிய ஊதிய உயர்வுக்கு அதிக நேரம் செலவழித்த பெரியவர், என்னுடைய பலகோடி ரூபாய் வரி சம்பந்தமாக என் குறையை கேட்க வெகு குறைவான நேரமே செலவழித்தார் என்று கூறினார்.
மொழி பெயர்ப்பாளாரை அருகில் வரச்செய்து, அந்த ஆளிடம் சொல், அவருடைய சில கோடி வரி பிரச்சினையைவிட இந்த ஏழை ஆசிரியரின் ஒரு ரூபாய் ஊதிய உயர்வு சமாசாரம் மிக மிக தீவிரமானதுதான் என்று அவருக்குச் சொல் என்கிறார்.
மளிகைக் கடை பாக்கி
மடத்தின் தினசரி தேவைக்கு மடத்தை அடுத்துள்ள ஒரு மளிகை கடையில் பத்துவரவு. அதாவது தினம் தினம் வாங்கினாலும் மாதம் ஒரு முறைதான் கடைக்காரருக்கு பணம் கிடைக்கும். காஞ்சிமடம் அதிக வருமானம் இல்லாத ஒன்று. ஒரு ஏழை மடமாகவே வளர்ந்து வந்திருக்கிறது.
ஒரு முறை பெரியவர் வட மானிலங்களுக்கு யாத்திரை செய்கிறார். மடத்தை விட்டு வெளியேறும் தருவாயில் கடைமுதலாளி, பெரியவர் முன்னால் மரியாதையாக நிற்கிறார். நலம் விசாரிக்கிறார் பெரியவர்.
“ஏதோ பரவாயில்லை. ஆனால் சில மாதங்களாகக் கடைக் கட்டிடத்திற்கான வாடகை தரவே பணம் இல்லை” என்று கூறுகிறார் கடை உரிமையாளர், செட்டியார். மெதுவாக மடம் தரவேண்டிய பணம் குறித்தும் சொல்கிறார். பெரியவரோ, வடநாட்டுப் பயணம் முடிந்து வந்ததும் பாக்கியை கொடுத்து விடுவதாக கூறி விடை பெறுகிறார். மூன்று மாதங்கள் கழித்து திரும்பும்பொழுது. கடை பூட்டப்படிருந்தது. முதலாளி இறந்து விட்டதாகத் தகவல் கிடைக்கிறது. குடும்பம் வேறு எங்கோ இடம் பெயர்ந்துவிட்டது. பல வருடங்கள் உருண்டோடுகின்றன.
காஞ்சியில், ஒரு நாள் மாலை. வழக்கமான பக்தர்கள் கூட்டம். வரிசையில் நின்றிருந்த ஒரு இளைஞனை பெரியவர் குறிப்பிட்டு சிப்பந்திகள் மூலம் இந்த பையனுக்கு ஏற்ற விலை உயர்ந்த பாண்ட், சட்டை துணிகளைத் தருவிக்கிறார். மடத்தின் கணக்கரிடமிருந்து ஒரு பெரிய தொகையை வரவழைத்து, அதோடு பூக்கள், பழங்கள் சட்டை பாண்ட் எல்லாமே ஒரு மூங்கில் தட்டில் வைக்கப்படுகிறது.
அந்த பையன் அருகில் வந்ததும் பெரியவர் ஆசிகளோடு தட்டைத் தருகிறார். ஆச்சரியத்தில் விழிக்கிறான் பையன். இந்த ஏற்பாடுகளை செய்ததோடு கடைசிவரை கவனித்து வந்த மடத்தின் ஒரு சிப்பந்திக்கு ஒரே வியப்பு. பெரியவர், ஏன் இந்த இளைஞனுக்கு பணமும் பொருளும் தருகிறார் என்ற கேள்வி அவர் மனத்தில் தோன்றுகிறது.
மளிகைக் கடைக்கு மடம் பட்டிருந்த கடனை வட்டியும் முதலுமாக திருப்பிவிட்ட மகிழ்ச்சியில். பெரியவர் சிப்பந்திக்கு விளக்குகிறார். வயதில் சிறிய சிப்பந்திக்கு முழுவதாக நம்பிக்கை வரவில்லை. மடத்தின் வாயில்வரை சென்ற இளைஞனை வழிமறித்து அவன் யார் எங்கிருந்து வருகிறான் என்று கேட்க, மளிகைக் கடை முதலாளி இந்த பையனின் தாத்தா என்பது உறுதியாகியது.
சிப்பந்திக்கோ ஒரே ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் பெரியவர், தான் இருந்த இடத்தைவிட்டு அகலாமல், சிறிது நேரம் கழித்து சிப்பந்தியை அழைத்து, “நான் சொன்னதில்தான் நம்பிக்கை வரவில்லை. இப்போதாவது சந்தேகம் தீர்ந்ததா” என்று கேட்டார். சிப்பந்தி, பெரியவரின் காலில் விழுந்து தவறு செய்துவிட்டேன் என்று கூறி கதறினார்.
இப்போது சில தமிழில் வெளியாகும் சில ஆன்மீக மாத (வார) பத்திரிக்கைகளில், கடந்த காலத்தில் பெரியவரோடு அருகில் நெருக்கமாக, அல்லது தொடர்பில் இருந்த பலதரப்பட்ட மக்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். படிந்து அறிந்துகொள்ளலாம்.
4 . 11. திருமூலர்
திருமூல நாயனார் ஒரு சைவ சித்தர் என்று (சித்தர்களை பற்றிய குறிப்பை படிக்கவும்).
பெரும்பாலும் சித்தர்களுக்கு ஒரு குரு உண்டு. குரு வழி நடப்பதால், குறைந்த நாட்களிலே தேர்ச்சி பெறமுடியும் இல்லையா? (கரஸ்பாண்டண்டு கோர்சில் எம்.பி.ஏ, படிப்பதற்கும், கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும் உள்ள வித்யாசம் தான்).
இவர் வட இந்தியாவில் பிறந்தவராக எண்ண வாய்ப்புகள் இருக்கின்றன. திருமூல நாயனாருடைய குரு திருநந்தித் தேவர். (இந்த பெயர் தமிழில் திருத்தி அமைக்கபட்டிருக்கிறதோ என்று ஒரு சந்தேகம்) இவருடைய மாணவர்கள் மொத்தம் எட்டு.
இந்த யோகி, பிற்காலத்தில் தன்னுடைய உடலை இழந்து, வேறு ஒருவருடைய உடலில் வாழ்ந்தவர். அந்த கதையைப் பார்க்கலாமா?
இவரை பற்றிய குறிப்பில் வேதங்கள் அறிந்த முனிவராக குறிப்புகள் கூறுவதை கவனிக்க வேண்டும். அஷ்ட சித்திகள் என்று அறியப்படும சித்துகளை அறிந்தவராக இவரை நாம் அறிவோம்.
பொதிகை மலையில் தவமிருக்கும் அகத்தியரைக் காண தென்னகம் வருகிறார். வரும் வழியில் பல கோவில்களை தரிசிக்கிறார். காஞ்சியில் பல யோகிகளைக் கண்டு உறையாடுகிறார்.
சிதம்பரம் சேர்ந்து, நடராஜரை தரிசித்தபின் திருவாடுதுரையை அடைகிறார். அங்கிருந்து பொதிகையை அடைய வேண்டும். இந்த இடத்திலிருந்து நகர மனமில்லாமல் பொதிகையை நோக்கி நடக்கலானார். சிறிய தூரம் தான் கடந்திருப்பார், காவிரிக்கரை அருகிலே ஒரு பசுக்கூட்டம் ஒன்று. பசுக்கள் அழுதவண்ணம் இருக்க, நாயனார், அருகில் சென்று பார்க்கிறார். மாட்டிடையன் இறந்து கிடக்கிறான். மாடுகள் இறந்த இடையனை சுற்றிவந்து அழுதவண்ணம் இருக்கின்றன.
(சாதாரண மனிதர்களின் அன்புக்கு ஒரு எல்லை உண்டு, ஆனால் யோகிகள், ஞானிகளின் அன்பின் எல்லை, அவர்கள் முதிர்ச்சி அடையும் போது, அது வெகுதூரம் பரந்து விரிந்து இருக்கும்.
மாடுகளின் தவிப்பை கண்டு மனம் உருகினாரர். சித்திகளில் தேர்ந்த இந்த துறவி, தனது உடலிருந்து உயிரை விடுவித்து இடையனின் உடலில் புகுந்தார். தனது உடலை பத்திரப்படுத்தினார்.
அந்த மாட்டு இடையர் உயிருடன் எழுந்தால், மாடுகள் மகிழ்ச்சி அடையும். மாடுகளை அதன் அதன் வீடுகளுக்கு சேர்த்து விடலாம் என்று நினைத்தார். மாடுகளின் சோகம் யோகியின் பயணதைத் தடை செய்தது. தன் உயிர், இறந்த இடையர் உடலுக்குள் புகுந்து விட, மறுகணம் மூலன் என்ற பெயர் கொண்ட இடையர் உயிர்த்து எழுந்தார்.
மாடுகள் மகிழ்ந்தன. மீண்டும் புல் மேய விரைந்தன. மாடுகள் திருப்தியாக புல் மேய்ந்து, ஆற்றில் நீரை குடித்து மகிழ்ச்சியாக தமது வீடுகளுள் புகும் வரை காத்திருக்க முடிவு செய்தார். கன்றுகளின் நினைவு வந்த மாடுகள் அருகே இருந்த சாத்தூர் என்ற ஊரில் உள்ள தங்கள் வீடுகளை நோக்கி வழி நடத்தி சென்றன.
கணவன் வருவதற்கு தாமதமாகவே, இடையனின் மனைவி வழியில் காத்திருந்தாள். மாட்டுடன் வந்த கணவனை தொட முயற்சித்தாள். தான் அவள் கணவனல்ல என்று திரும்பத் திரும்ப பலமுறை சொல்லியும் அவள் நம்பவில்லை. வீட்டிற்குச் செல்லாமல், யாத்திரிகர்கள் தங்கும் மடத்தை அடைந்தார் இடையரின் உடலில் புகுந்த யோகி.
மூலனின் மனைவிக்கு நடந்தது ஏதும் புரியவில்லை. அவளுக்குச் சொன்னாலும் புரிந்துகொள்ளும் அறிவோ, மன நிலையோ இருப்பது சந்தேகம்தான். அழுதாள், கணவனின் விபரீத நடத்தையை ஊர் பெரியவர்களிடம் சொல்லி முறையிட்டாள். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு தன்னை ஒதுக்குவதாக நினைத்தாள்.
புத்திமான்கள் சிலர், மூலனுடன் பேசிப் பரிசோதித்து. மூலன் அப்படிப் பட்டவன் இல்லை. அப்படிப்பட்ட சில்லரைச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு மூலன் சென்று விட்டதாகவும், சிவனோடு ஐக்கியம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்கள், சாதாரண மனித நிலையை கடந்து மகா உயர்ந்த நிலையை அவள் கணவன் அடைந்து விட்டதாக தெரிவித்தனர். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அங்கிருந்து விடை பெற்று, தன் உடலை பத்திரப்படுத்தி வைத்த இடத்திற்கு சென்றார். அவர் பத்திரப்படுத்திய உடல் காணவில்லை. இது இறைவனின் விளையாட்டு என்று ஞான திருஷ்டியில் அறிந்ததாக சொல்லப்படுகிறது.
அகஸ்தியரை காண வந்த இவரது தொண்டு தமிழ்மக்களுக்கு பயன் தரும் வகையில் அமைந்ததாக இந்த நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. தொடர்ந்து வந்த அந்த பெண்ணின் உற்றார் உறவினரை ஒரு மாதியாக சமாளித்துவிட்டு, திருவாடுதுறையை அடைந்து திருமந்திரத்தை அருளியதாக வரலாறு தெரிவிக்கிறது.
அவர் திருவாடுதுறையில் சமாதி நிலையில் மூவாயிரம் வருடங்கள் இருந்ததாகவும், ஒவ்வொரு வருடமும் சமாதி நிலையில் இருந்து எழுந்து ஒவ்வொரு பாரா எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. இதை நம்ப நம்மில் பலர் தயாராக இருக்க மாட்டார்கள். அதைப் பற்றி( திரு) மூலன் கவலைப் படமாட்டார்.
சமாதி நிலை பற்றி விவரமாக தந்திருக்கிறேன். அதன் பின்னர் சிலர் நம்பலாம். கம்ப்பூட்டர், மற்றும் விஞ்ஞான அறிவு படைத்தவர்களுக்கு இதை புரிந்து கொள்வது மிக சுலபம்.
மூவாயிரம் பாரா எழுதி முடித்ததும், அவர் கைலாயத்திற்கே திரும்பிவிட்டார் என்கிறது இவரது சரித்திரம். பொதிகை மலை, அகஸ்தியர் இரண்டையும் கைவிட்டிருக்கவேண்டும். திருமூலர், பிறப்பில் வடநாட்டை சேர்ந்தவராக இருக்கவேண்டும.
4.12. ராகவேந்திரர்
இவர் பெற்றோர் கொடுத்த பெயர் – வேங்கடநாத். இன்றைய தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி – ஈரோடு அருகே இருக்கும் புவனகிரியில் பிறந்தவர். திருமணவானவர்.
பிள்ளை குட்டிக்காரர். இவருக்கு ஒரு குரு. ஸுதீந்த்ர தீர்த்தா. குருநாதர்,
சீடர் வேங்கடநாத்தை, துறவறம் மேற்கொண்டு, மடாதிபதியாக பொருப்பேற்கப் பணித்தார். சீடர், மனைவி குழந்தைகளை அனாதைகளாக்கி விட்டு, துறவறம் கொள்ள விரும்பவில்லை. பணிவுடன், குருநாதரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஆனால், மனதில் உதித்த சில காட்சிகள், சில அறிவுரைகள் அவருடைய இந்த முடிவை மாற்றி, சன்யாச வாழ்கையை மேற்கொண்டார். இவர் காலத்தில் பல அதிசய நிகழ்ச்சிகள் நடத்தியதாக சொல்லப் படுகிறது.
மிரகிள்ஸ் அல்லது அமானுஷ்ய சக்திகள்:
யோகிகளைபற்றி படிக்கும்போது, நிச்சயமாக, அமானுஷ்ய சக்திகளும் உடனே வரும் இல்லையா? இதோ ராகவேந்திரர் பற்றி சொல்லப்படும் எத்தனையோ அதிசயங்களில், எவ்வளவோ உண்டு. அதில் இரண்டு மாத்திரம், மாதிரிக்காக.
(1) அப்போது முகாலயர்கள் இந்திய மண்ணில் காலூன்றி ஆண்டுவந்த காலம். மசூத்கான் என்ற சிற்றரசன் இன்றைய மந்திராலயம் அமைந்திருக்கும் பகுதியை ஆண்டு வந்தான். இந்த திமிர்ப் பிடித்தவன், இந்த துறவியை நிந்தை செய்வதாக நினைத்து, இனிப்பு, பழங்களுடன் மாமிசத் துண்டங்களையும் கலந்து அனுப்பினான். அந்த தட்டு முழுவதும் மலரும் முந்திரி போன்ற விலை மிகுந்த தின்பண்டங்களாக மாறியதும் பயந்துபோனான் இந்த குருநில மன்னன். காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதோடு ஒரு வளமான பெரிய நிலத்தை வழங்க முன் வந்தான். ராகவேந்திரர் அதை மறுத்து, தற்போதைய மந்திராலயம் அமைந்த பகுதியை மட்டும் பெற்றுக்கொண்டார்.
(2) இந்த இரண்டாவது சம்பவம் நிகழ்ந்த போது ராகவேந்திரர் ஜீவசமாதி (உயிருடன், தன் விருப்பத்தின் பெயரில் புதைக்கப்படுவதாக சொல்லலாம்) அடைந்துவிட்டார். இந்த சம்பவம் நடந்தபோது மந்திராலயம் பகுதி ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. மடத்தின் அன்றய மடாதிபதி, நஞ்சன்கூடு என்ற இடத்தில் வசித்து வந்தார். ஆங்கில அரசின் சட்டப்படி, இந்த நிலத்தை பெற்றவர் (அல்லது தற்போதைய உரிமையாளர்) வேறு இடத்தில் வசித்தால், மடத்தின் சொத்து ஆங்கிலேயரைத் சேர்ந்துவிடும்.
அன்றைய பெல்லாரி மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் பெயர் தாமஸ் மன்ரோ. மந்திராலயத்தில் அப்போது வசித்து வந்த மக்கள், குறுநில மன்சூர் கான், இந்த இடத்தை துறவிக்கு பரிசாக தந்ததால் ஆங்கில அரசின் சட்டம் செல்லாது என்று வாதாடினார்கள். இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதால், பிரச்சினையை தீர்க்க மன்ரோ தானே, நேரில் வந்தார். மந்திராலயத்தின் உள்ளே நுழைந்த மன்ரோ யாருடனோ ஆங்கிலத்தில் பேசுவதை சுற்றி நின்றவர்கள் பார்த்தார்கள். அவர்கள் கண்களுக்கு அங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லை. இவர்தானா, நீங்கள் பெரிதும் புகழ்ந்த யோகி என்று கூடி நின்றவர்களை கேட்டார் மன்ரோ.
பெல்லாரியை அடைந்த மாவட்ட கலெக்டர் மன்ரோ, இந்த சொத்து, மடத்தை சேர்ந்தது. இது இப்படியே இருக்கட்டும். எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டாம் என்று அன்றய சென்னை மானில கவர்னருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரை கவர்னரை உடனடியாக அடையவில்லை.
எந்த காரணாமாகவோ, இங்கிலாந்து சென்ற மன்ரோ இந்தியா திரும்பியதும், சென்னை மாகாண கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இப்போது, மடம் சம்பந்தமாக அவர் கையால் எழுதிய பரிந்துரையை, அவரே இப்போது கவர்னர் பதவியிலிருந்து அங்கீகரித்து, மந்திராலயத்தில் மடம் இருந்த இடம் மடத்தின் சொத்துதான் என்று அரசாங்க உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
4 . 13. தென் அமெரிக்காவில் சித்தர்கள்
நான் படித்து, கேட்ட வரையில், நமது நாட்டின் தென் பகுதியில், சித்தர்கள் என்று அறியப்படும் ஞானிகள் ஒரு குருவின் கீழ் கற்று, கூட்டாக, ஒரு பல்கலை கழகம் போல செயல்படுவார்கள்.
உலகத்தின் பல பாகங்களில் இது போல கூட்டாக செயல்படும் ஞானிகளின் அமைப்புகள் பல ஆயிரம் வருடங்களாக இருப்பதற்கு பல அத்தாட்சிகள் உள்ளன. உதாரணமாக ஷாமன் என்ற அமைப்பு. மருத்துவம் பௌதிகம் அல்லாது மெய்ஞானம் அறிதலிலும் செயல்படுவதை அறியலாம். இண்டெர் நெட்டிலும், கார்லோஸ் காஸ்டிநேடா எழுதிய ஆறு புத்தகங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
கார்லோஸ் காஸ்டிநேடா எழுதியதில் சம்பவங்கள் து ஒரு கற்பனையாக இருக்க இடமுண்டு. ஆணால் அதன் கருவானது மெக்ஸிகோ ஆதிக் குடிகளை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது என்பது சந்தேகமே இல்லை.
ஒவ்வொரு குழுவிலும், மெய்ஞானம் மட்டுமில்லாது மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றை அறிவதிலும், ஆராய்வது மற்றும் அதன்மூலம் மக்களுக்கு தொண்டு செய்வதும் வழக்கமாக தெரிகிறது. சித்த மருத்துவம், சித்தர்கள் இரும்பை தங்கமாக மாற்ற வழி அறிந்திருப்பதாக (ரஸவாதம்) உள்ள பரவலான நம்பிக்கை இதற்குச் சாட்சி. சித்த, ஆயுர்வேத மருத்துவம் ரிஷிகள் என்று அழைக்கப்படும் துறவிகளால் உருவானது தானே?
சித்தர் பாடல்களை கொண்ட ஒரு தமிழ் புத்தகம் ஒன்று உள்ளது. தமிழகத்தின் ஞானிகள் இன்றய பஞ்சாப் மானிலத்தில் வசித்த துறவி ஒருவர் மூலம் வட மொழியில் இருந்த புத்தகளிலிருந்த அறிவை பெற்றுவந்து, தமிழகத்தில் பரப்பியதாக அறிகிறோம்.
உலகெங்கிலும் மதங்களாலும் மொழிகளாலும் வாழுமிடங்கள் என்று பிரிந்திருந்தாலும் அவ்வப்போது குறிப்பிட்ட இடங்களில் சந்திப்பது, கருத்துத் பரிமாற்றங்கள் செய்துகொள்வது என்ற வழக்கத்தை பல ஞானிகள் கொண்டிருந்தது பல நூல்களின் மூலம் அறியலாம்.