அத்தியாயம் 05.
5 . 1 ஞானிகள் என்ன செய்வார்கள் ?
இதைத்தான் செய்வார்கள் என்று குறிபிட்டு சொல்வது கடினம். இதை செய்யமாட்டார்கள் என்று தீர்மானமாக பெரிய பட்டியல் ஒன்று போடலாம்.
குறிப்பாக ஒரு மனிதருக்கோ, பொதுவாக எந்த உயிருக்கும் எப்போதும் எந்த தீங்கும் விளைவிக்க மாட்டார்கள். மனிதரில் நிறம் ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு செய்வதில்லை, எவரையும் எந்த செயலுக்காகவும் வெறுப்பதில்லை. தங்களுக்கு துன்பம் தருபவரையும் வெறுக்காத அளவு நல்ல உள்ளம் கொண்டவர்கள். தீயவரைத் தண்டிக்காதவர்கள் (தங்கள் தூய உள்ளத்தால் நல்லவராக மனம் மாறச் செய்பவர்கள்). நமது சொத்தை அபகரிப்பது, நம்மை ஏமாற்றி லாபம் அடைவது போன்ற எதையுமே செய்யமாட்டார்கள். போதுமா?
முதிர்ந்த ஞானிகள் அனைவரும், கடவுளோ அல்லது கடவுளின் தூதுவர் இருந்தால், அவர் நமது மத்தியில் வந்தால் என்ன செய்வாரோ அதைத்தான் செய்வார்கள் ! புத்தர், காந்தி, அன்னை தெரசா, ஜீஸஸ், தீர்ககதரசியார், மீண்டும் பிறந்து நமது மத்தியில் வந்தால் என்ன செய்வார்களோ, அதுபோலவே இவர்களும் செயல்படுவார்கள். உயிரை துச்சமாக மதிப்பவர்கள். பயந்தாங்குளிகள் இல்லை. அதே சமயம், தவறான இடத்தில் தலையை கொடுத்து திண்டாடும் ரகமும் இல்லை. நாம் இந்த சூழ்நிலையில் இருந்தால், கீழே வரும் கதைகளில் காணும் ஸுபி ஞானிகளோ, புத்த குருமார்களோ மற்ற கீழைநாட்டு ஞானிகள் செய்ய துணிந்ததை நம்மால் நினைத்து பார்க்ககூட முடியாது.
5 . 2. ஆள்பவனுக்கு அறிவு தந்து மக்களுக்கு நன்மை செய்வது.
அந்த காலத்தில் அரசன் ஆள்வதில் ஒரு நன்மை. நல்லதோ கெடுதலோ ஒரே ஒரு ஆளுடன் போகும். இன்று ஒரு நாட்டு மக்களை ஆள எத்தனை மனிதர்கள்? மன்னன் தனக்குள்ள அதிகாரதை தவறாக பயன் படுத்தாமல், மக்களுக்கு நன்மை செய்வதில் செலவிட்டால் மகிழ்ச்சிதான். மாறாக மன்னன் கொடுங்கோலனாகவும், மக்களுக்கு நன்மை செய்யாமல் துன்பம் விளைவித்து கடமையிலிருந்து தவறினால். மக்கள் அவதிப்படுவதைத் தவிர வழி ஏதும் இல்லை. தட்டிக்கேட்டவரின் தலை தரையில் உருளும் அபாயம் வேறு. இது இன்றும் உண்மைதான் இல்லையா?
அந்த நேரத்தில் தன் தலையையும் தக்க வைத்துக்கொண்டு சரியான சமயத்தில், தட்டவேண்டிய இடத்தில் சரியான அளவு தட்டி சரிசெய்யும் பணியை பல ஞானிகள் செய்து வந்ததை சரித்திரம் சொல்கிறது. உதாரணத்திற்கு ஒரே ஒரு கதை.
கதை 03
சுல்தானுக்குத் தலைவணங்காத துறவி
இந்த கதையின் காலம் சில நூறு வருடங்களுக்கு முந்தியது. இடம் பெர்ஷியா என்று அப்போது அழைக்கப்பட்ட பிரதேசம். நம்ம ஊரிலுள்ள பல மந்திரிகளைப் போல, அந்த காலத்தில் ஒரு ராஜா. இருந்தார். அந்த கால கட்டத்தில் இந்த நாடுகள் இஸ்லாமிய மதத்தை தழுவிய அரசர்களால் ஆளப்பட்டது. அவர்களை ஆப்பிரிக்க தேசத்தில் உருவான சுல்தான் (ஆள்பவர், அரசர்) என்ற பட்டத்தால் அழைப்பார்கள்.
சில மன்னர்கள், அடிக்கடி, தனது நாட்டின் பல பகுதிகளுக்கு மாறு வேடத்தில் செல்வார்கள். தமது, அலுவலர்கள் மக்கள் பிரச்சனைகளை கவனிகிறார்களா என்றும் கண்டு அறிவார்கள். மக்கள் குறைகளை நேரில் கண்டறிய செல்வதும் ஒரு காரணம்.
சில சமயங்களில் மன்னர்கள், தங்கள் வரவை அறிவித்து விட்டு பல ஊர்களுக்கு வருவதும் உண்டு. அப்படி வரும்பொழுதெல்லாம், மக்கள் திரளாக கூடிநின்று வணங்கி நின்று வரவேற்பு அளிப்பது வழக்கம்.
மக்களுக்கு நல்லது செய்யும் அரசனுக்கு அன்பால் மற்றும் நன்றி காரணமாக நல்ல வரவேற்பு கிடைக்கும். மோசமான அரசனுக்கும் இது போன்ற நல்ல வரவேற்பு கிடைக்கும், நன்றி விசுவாசத்தால் இல்லை. தண்டனைக்கு பயந்து வரவேற்பு கிடைக்கும்.
இப்படித்தான் ஒரு சுல்தான், நகர்வலம் வந்தார். சிறியவர் பெரியவர் என்று வேறுபாடு இல்லாமல் அனைவரும் வணங்கி நிற்க ஒரே ஒரு ஆசாமி, அதுவும் ஒரு எளிய தோற்றமுள்ள முதியவர், சுல்தானை வணங்காமல், திமிருடன் நின்று பார்க்கிறார். சுல்த்தானை விட அவரை சுற்றி இருக்கும் அதிகாரிகள் மிகவும் கோபமடைந்தார்கள். வீரர்கள் முதியவரை இழுத்துவந்து சுல்தான் முன் நிறுத்த ஒரு வீரன் தனது வாளை உருவி முதியவரின் தலையை வெட்டத் தயாரானான். காவலனுக்கு அவ்வளவு கோபம் அப்போது வராவிட்டால் சுல்த்தானுக்கு அவர்கள் மேல் கோபம் வரலாமே ! (எல்லாம், ஒரு தற்பாதுகாப்புதான்)
அந்த முதியவரை அருகில் வர உத்தரவிட்டான் சுல்த்தான். பயம் ஏதுமின்றி அருகில் வந்தார் பெரியவர். “மன்னனுக்கு மரியாதை தராதது குற்றம் என்று தெரியாதா” என்று ஒரு அதிகாரி கேட்டார். அது வேறு விஷயம். தலை வணங்கி நிற்பவர்கள் எல்லோருமே மன்னனுக்கு மரியாதை அளிப்பதாக நினைப்பது தவறு. அதிகமான மக்கள், சுல்தானின் செல்வம் அதிகாரம் ஆகியவற்றிற்கும் சுய லாபத்திற்கு தலை வணங்கி நிற்கிறார்கள். அது போன்ற அவசியம் எனக்கில்லை. அதுமட்டுமில்லை என்னை போன்றவர்கள், அடிமைகளுக்கு தலை சாய்ப்பதில்லை. ஏனென்றால் நாங்கள் அடிமைத்தனத்தை வென்றவர்கள்.
பாக்கி எல்லாம் சரி, ஆனால் தன்னை அடிமை என்று குறிப்பிட்டது மாத்திரம் ரொம்ப அதிகமாக பட்டது சுல்தானுக்கு. நான் யாருக்கும் அடிமை இல்லை என்று கத்தினான் சுல்தான்.
கோபம், பயம், ஆசை, தற்புகழ்ச்சி, ஆகியவை சாதாரணமாக எல்லா மனிதர்களையும் எளிதில் அடிமை படுத்திவிடும். அவற்றை நாங்கள் வென்றவர்கள். உங்களைப்போல மனிதர்கள் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடையவில்லை. அவர்கள் முன்னால் தலை வணங்குவது எங்களால் இயலாதது என்று தொடங்கியதை முடித்தார்.
இந்த மனிதரின் சிறிதும் பயம் கொள்ளாத மனநிலை, சுல்தானைச் சிந்திக்க வைத்தது. மனதில் தோன்றியதை தயக்கம் இல்லாமல் சொன்னது (ஆமாம் சாமி என்று கோஷமிடும் கூட்டத்தில்) இவரை ஒரு வித்தியாசமான மனிதராகக் காட்டியது.
சுல்தான், உள்ளூர்ப் பெரியவர்களை விசாரித்தபோது, இவர் ஒரு சுபி முனிவர் என்று தெரிந்து கொண்டார். அவரை தனது ஆலோசகராகக் கொண்டு நாட்டை நன்றாக ஆண்டுவந்தார் என்றும், மக்களுக்கு நன்மைகள் செய்து நல்ல பெயரும் புகழுடன் வாழ்ந்ததாக கதை முடிகிறது.
5 . 3. அறிவைத் தேடி வருபவர்களுக்கு சிறந்த முறையில் அளித்து விடுவார்கள்.
கதை 04 சாமுராய்.
அப்படித்தான், ஜப்பானில், போர் வீரனை அழைப்பார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தனித்தன்மை தேவைப்படுகிறது. போலீஸகாரர்கள், ராணுவ வீரர்கள் ஆகியவர்கள் முரட்டு ஆசாமிகளாகவும் கரார் பேர்வழிகளாக இருக்கவேண்டும்.
அதிகாரிகள் உத்தரவுக்கு கட்டுப்பட்டு உடனடி செயல் படவேண்டும். சொந்த மூளையை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும். (லீவுக்கு) வீட்டுக்குப்போன பிறகு அவசியப்பட்டால் உபயோகபடுத்தலாம்.
அப்படி இல்லாத ராணுவம் நாட்டிற்கும், போலீஸ் ஊருக்கும் உதவாது. சில சமயங்களில் அதிகாரிகள் தங்கள் உத்தரவில் தவறலாம். வீரர்கள் தந்த உத்தரவை நிறைவேற்றுவதில் தவறக்கூடாது. இதன் காரணமாக பொதுவாகவே இந்த இரண்டு தர மக்களும் மனதில் மென்மை குறைந்து இருப்பதையும் ஒரு முரட்டுத்தனத்தை இவர்கள் பேச்சிலும் நடத்தையிலும் காணலாம்.
ஜப்பானில் உள்ள ஒரு புத்த மடாலயத்தில் ஒரு சாமுராய் – போர்வீரன் வந்து சேர்ந்தான்.
அங்குள்ள தலைமை குருவை தேடி சென்றான். தனக்கே உரித்தான முரட்டுத்தனம் குறையாமல், குருவைக் கேட்டான், “நரகம் சொர்க்கம் எங்கே இருக்கிறது, அதைக் காட்ட முடியுமா”? என்றான்.
சில வினாடிகள் அமைதி காத்த குரு, திடீரென்று சரமாரியாக அந்த வீரனை. அதாவது சாமுராயை திட்டத் தொடங்கினார். நீ ஒரு நாத்தம் பிடித்த ஆள், அசிங்கத்தின் மொத்த உருவே நீதான் பட்டியல் நீண்டது. இதை துளியும் எதிர்பார்க்காத சாமுராய், கோபம் மேலிட, தனது வாளை உருவி குருவைக் குறிவைத்தான்.
அப்போது, குரு சொன்னார், “இதுதான், நரகம் என்பது”.
இதைக் கேட்ட வீரன் சற்று நிதானித்தான். பின்னர் உருவிய வாளை அதன் உறையில் வைத்தான். அப்போது அவனது கோபம் படிப்படியாக குறைந்தது. குரு நம்மைத் திட்டவில்லை. கோபம் என்பது நரகம் என்று சூசகமாகச் சொல்லுகிறார் என்று புரிந்து கொண்டு, மனம் முழுவதாக சமாதானமானான் அந்த சாமுராய்.
இப்பொழுது குரு தொடர்ந்தார். “இதுதான் சுவர்க்கம் ”சுவர்கமும் நரகமும் வேறு எங்கோ இருப்பதாக சில மதங்கள் கூறலாம்.பல கீழை நாட்டு மதங்கள் நமது வாழ்நாளிலேயே அதுவும் இதோ, இங்கே, நமது மனத்திலேயே சுவர்க்கமும் நரகமும் இருப்பதாக உணர்த்துகின்றன.
குருவின் கணிப்பில், எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அனுபவ அறிவு தரும் பலனுக்கு ஈடு இணை இல்லை. ஒருவருக்கு கிடைக்கும் அனுபவ அறிவு, செயல்படும் வேகத்திலும், அது தரும் அறிவின் ஆழத்திலும் நிகரற்றது. ஒரு ஜென் குரு ஒரு போர் வீரனுக்கு அறிவு தர ஒரு வகையில்) தனது உயிரை பணயம் வைத்ததாகச் சொல்லலாம்.
தனக்குச் சேதமில்லாமலும் அதே சமயம் தன்னை அறிவு தேடி அடைந்த சாதாரண மனிதனுக்கு ஏமாற்றம் தராமல், அனுபவ அறிவு தந்து, வெற்றியும் அடைந்தார் குரு, இப்படிப்பட்டவர்கள் ஜப்பானில் உள்ள புத்த மடாலயங்களில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள ஞானிகளிடையே காணப்பட்டார்கள்.
5 . 4 துறவிகளின் பரந்த அறிவு,
கொடுமையானவர்களையும் எளிதில் வென்றிட உதவும்.
கதை 05
குரு திமிர் பிடித்த அரசன்.
அதிகாரம் படைத்தவர்கள் ஏன் தவறு செய்கிறார்கள்.? ஏன் இறுமாப்பும் திமிரும் கொண்டவராக இருக்கிறார்கள்.? அறியாமை என்று சொல்லலாம். மாயை என்றும் சொல்லலாம்.
ஒரு நாம் அழிவற்றவர்கள் என்று நமது மனதுக்குள் ஒன்று திரும்பத் திரும்ப பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது. அதுதான் மாயை. நமக்கு சொல்லிவரும் பொய். அழிவற்ற நமக்கு அளவற்ற பணம் பொருள் வேண்டும். அதில் குறைவு வந்தால் நாம் பசித்து துடித்து வாழும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற பயம். மரணத்தை கண்டு அச்சம்.
மாயை ஒரு திரை. போன்றது. நம்மை உண்மையிலிருந்து மறைத்தே வைத்திருக்கிறது. திரை காற்றில் அசைவதைப்போல சில சாவுகள், கோரமான விபத்துக்கள் நாம் கண் முன்னால் காணும்போது, இந்த மாயை என்கிற திரை சற்றே விலகுகிறது. மனிதன் தன் முன் உண்மை நிலையை காண்கிறான். . உலகே மாயம் வாழ்வே மாயம் எனகிறான்.
சில நிமிடங்களில் திரை மறுபடியும் தன் இடத்தில் வர மனிதன் தன் மாயையில் திரும்பவும் மூழ்குகிறான். ஒரு உண்மையான் நல்ல மனிதரை நீங்கள் கண்டால், அவர் மாயையில் சிக்காத மனிதராகத்தான் இருக்கவேண்டும். (நல்லவர் போல வேடமிட்டு நடமாடும் நய வஞ்கரை கண்டு தள்ளியே இருங்கள்) நமது கூட்டத்தில் முகமூடிகளுடன் பலர் அலைகின்றார்கள். எச்சரிக்கையாக இருங்கள் கவனமாக இருந்தால் இவர்களை இனம் கண்டு கொள்ளலாம்.
இப்போது கதைக்கு வருவோம்.
புத்த குரு ஒருவர் அடுத்த நாட்டின் எலைக்குள் நுழைகிறார். காவலர்கள் அடையாளம் தெரிந்து கொண்டதால் வணங்கி தமது நாட்டிற்கு வந்தவரை வரவேற்கிறார்கள். ஞானிகள், அறிஞர்கள் கலைஞர்கள் மற்றும் நல்லவர்களுக்கு வரவேற்பு நாடுகளின் எல்லைகளையும் தாண்டியது.
அவர் அந்த நாட்டை வந்தடைந்தது, முக்கிய செய்தியாக பரந்தது. நடந்து வந்த களைப்பைப் போக்க பயணியருக்காகவே கட்டப்பட்ட விடுதியில் தங்கி ஓய்வு எடுக்கிறார். இந்த நாட்டு மூத்த குடிமக்கள் அறிஞர்கள் என்று பலர் அவரை காண விருப்பம் தெரிவிக்கிறார்கள். இதை குரு எதிர்பார்க்காமல் இல்லை. தமது நாட்டில் மட்டுமில்லாது அந்த பகுதியில் தன மேல் கொண்டுள்ள நம்பிக்கையும் அவருக்கு தெரியும்.
ஞானிகளின் மனதில். நாடுகளின் எல்லைகள் குறுக்கிடுவது இல்லை. அவரால் இயன்ற, எதிர்பார்த்த, உதவிகளை என்றும் அனைவருக்கும் செய்து வருவார். இந்த நாட்டை ஆளும் புதிய அரசன் மீது மக்களுக்கு குறைகள் உண்டு என்று அவருக்கு தெரியும்.
நாட்டை ஆண்ட மன்னன், சில மாதங்கள் முன் போரில் காலமானார். அதன்பின் மன்னனின் மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். சில நாட்களில் மன்னன் தனது கடமைகளிலிருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டான்.
உல்லாசம்கேளிக்கைஅதுதான்அவனுக்குதெரிந்தது. நாட்டியம், மது, மாது இதுதான் அவன்விரும்பியது. தன் உத்தரவுகளை ஏற்காதவர்களுக்கு தண்டனைகள். அறிஞர்களுக்கு அரசனின் சபையில் இடமில்லை. மன்னனின் மனதை குளிரவைத்து நாட்டின் செல்வத்தை சுருட்டும் நண்பர்கள் மட்டுமே அரசனுக்கு அருகில் செல்ல முடியும்.
இந்த புத்த குருவைக் காண இந்த நாட்டு பெரியவர்கள், பயணியர் விடுதியில் கூடினார்கள். ஆலோசனைகள் நடத்தப்பட்டன. கடைசியாக, புத்த குரு, தான் தன்னால் இயன்ற வரை முயற்சி செய்வதாக உறுதி கூறியபின் அனைவரும் கலைந்தனர்.
குரு, அரண்மனையை நோக்கிப் பயணமானார். அரண்மனையின் வாயில் காக்கும் காவல்காரனிடம் பேசலானார். “காவலனே, இந்த பயணியர் விடுதியின் மேலாளரை நான் அவசரமாக காணவேண்டும்”. “பெரியவரே, இது அரண்மனை. வழிப்போக்கர் விடுதி இல்லை”. “அய்யா காவலனே, உனக்கு ஒன்றும் தெரியாது” ! இந்த விடுதியின் அதிகாரியை கூப்பிடு. அவருக்கு மட்டும் உண்மை தெரியும்.பெரியவரே, மன்னன் கோபக்காரர். அரண்மனையை பயணியர் தங்கும் விடுதி என்று சொன்னால் கோபம் கொள்வார்.
இந்த உரையாடல் அரசவையில் இருந்த மன்னனின் செவிகளை ஒற்றர்கள் மூலம் அடைந்தது.
வந்தவர் பேசுவது பைத்தியக்காரனைப் போல இருந்தாலும், அவர் முகத்தில் காணும் பொலிவு அவரை அறிவாளியாகவே காட்டுகிறது என்று செய்தி அனுப்பியவர் அரசனிடம் தெரிவித்தார். எனவே, தானே நேரில் கண்டு வருவதாகக் கூறி மன்னனே அரண்மனையின் வாயிலை அடைந்தான்.
வந்து சேர்ந்த அரசனிடம், “அதிகாரியே, வணக்கம். இந்த வாயில் காவலன் ஒன்றும் அறியாத அப்பாவியாக இருக்கிறானே”! “தங்களின் இந்த வழிப்போக்கர் விடுதியில் ஒருவாரம் தங்கி விட்டு செல்லலாம் என்றால், இது பயணிகள் தங்கும் விடுதியே இல்லை என்கிறானே!.
அரசன், அதில் உங்களுக்கு என்ன சந்தேகம். இது அரண்மனை. அரசர்களின் நிரந்தர குடியிருப்பு. பயணிகள் விடுதியில் மக்கள் இன்று தங்கி நாளை பயணம் செய்வார்கள். இதுவோ, மன்னர்கள் நிரந்தரமாக காலம் காலமாக வாழுமிடம் என்று விளக்கம் தந்தார்.
“அப்படியா? எனக்கு உங்கள் தந்தையின் தந்தையை காட்ட முடியுமா” என்று கேட்டார்.
“அவர் இறந்து பல ஆண்டுகள் கழிந்து விட்டனவே” என்றான் மன்னன்.
“அப்படியானால், உங்கள் தந்தையோ” ? “சமீபத்தில் நடந்த யுத்தத்தில் வீர மரணம் அடைந்துவிட்டார்”, என்று மன்னன் பதில் கூறினார். “ஒருநாள், ஒரு வாரம் என்று இல்லாவிட்டாலும், அரசர்கள் சில வருடங்கள் மட்டுமே இங்கே தங்கிய பின் செல்வதுதானே வழக்கம். நிரந்தரமாக எவருமே தங்கியிருக்கவில்லையே” ?
மன்னன் மண்டையில் ஒரு மின்னல். இந்த உலகில் எவரும் எதுவும் நிரந்தரம் இல்லை. நாம் எல்லோருமே இந்த உலகில் சிலகாலம் தங்கி செல்லும் வழிப்போக்கர்கள்தான்..
நாம் நிரந்தரம் என்ற தவறான எண்ணம் மனதில் உதிக்கக் காரணம், மாயையின் வேலை.
மன்னன் மனம் தெளிந்தான். மாறினான். மக்கள் மகிழ்ந்தார்கள் என்று முடிகிறது இந்த கதை.
5 . 5 ஞானிகளின் வினோதமான செயல்கள்
சில ஞானிகள் சில சமயங்களில் சிறிதும் எதிர்பாராத விதமாக சில செயல்களில் ஈடுபடுவதை நாம் கேட்டிருக்கிறோம். தான் அறிவில் உயர்ந்திருந்தாலும், சாதாரணமான சராசரி மனிதன் தான் என்று பறைசாத்தி. மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தான் முன் உதாரணாமாக நடந்துகொள்ளும் ஞானிகள் ஏராளம். இங்கே உதாரணத்திற்கு, ஒரு உண்மை நிகழ்ச்சி.
கதை 06
ஸுஜுகி ரோஷி
ஸுஜுகி ரோஷி என்ற சமீபகால ஜென் மாஸ்டர், அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜ் பௌத்த சங்கம் என்ற அமைப்பை விஜயம் செய்து சொற்பொழிவு ஆற்றுவதாக இருந்தது. அதற்காக, சங்க அங்கத்தினர்கள் ஒன்று சேர்ந்து அவரை வரவேற்பது சம்பந்தமான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
விழாவுக்கு முன்தினம், சொற்பொழிவு நடக்கும் அந்த ஹாலில் பலர், தரையை தீவிரமாக சுத்தப்படுத்தும் வேலையில் இருந்தபோது அந்த எதிர்பாராதது நடந்தது. அங்கு சுத்தப்படுத்தும் மனிதர்களில் ஒருவர் ஜென் மாஸ்டர், ஸுஜுகி ரோஷி. எதிர்பாராதவிரமாக ஒருநாள் முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தார். தன் அங்கியை மடித்து கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக, அரங்கின் தரையை சுத்தம் செய்யத் தயாரானார். இதை கண்டு சிலர் அவரை தடுக்க முயற்சி செய்ய, அவர் கூறினார், நாளை எனக்கு தரவிருக்கும் பிரம்மாண்ட வரவேற்பிற்கான ஏற்பாடுகளில் நானும் பங்கேற்க விரும்புகிறேன்.
நம்ம ஊரில் மணிக்கணக்காக காக்க வைத்து உயிரை வாங்கும் விழா தலைவர்களை நினைவில் கொண்டு வாருங்கள். செயல்பாட்டிற்கும், மனதை பக்குவபடுத்துவதற்கும் இந்த புத்தர்களின் வாழ்கைப் பாதைகள் முக்கியத்துவம் தருவது அதன் சிறப்பு.
தலைவரும் ஒரு தொண்டரே என்ற தன் செயல்மூலம் உணர்த்தும் இந்த பெரியவரை பின்பற்றிய சமுதாயம் எவ்வளவு நன்றாக இருக்கும்?
5.6 ஞானிகளுக்கு நகைச்சுவை உணர்வு இருக்காதா? யார் சொன்னார்கள்?
கதை 07
கடிமாஸ்டர்
ஒரு இளைஞன். எங்கோ வெளியூர் சென்றுவிட்டு சிலநாள் கழித்து வீடு திரும்புகிறான். வழியில் வெளியூர் செல்லும் முன்னால் வறண்டிருந்த ஆறு இப்போது வெள்ளம் வந்து நிரம்பியிருந்தது. முன்னேற முடியாத நிலை. காத்திருந்தான். சில மணி நேரம் கழிந்தது. ஆற்றின் மறு கரையில் ஒரு ஜென் மாஸ்டர். வந்து சேர்ந்தார். இளைஞனுக்குச் சிறிது நம்பிக்கை பிறந்தது.
இந்த கரையிலிருந்து மறுகரை வரை கேட்கும்பதியாக ஜென் மாஸ்டரை நோக்கி கத்தினான். அறிவு நிறைந்தவரே ! நான் (அந்த) எதிர்கரைக்கு வருவது எப்படி? மாஸ்டர் பதில் தந்தார், “மகனே, நீ இப்போது எதிர் கரையில்தானே இருக்கிறாய்”? இவர் ஜென் மாஸ்டரா அல்லது கடி மாஸ்டரா?
5.7 தேனீர் கோப்பைக்குள் ஒரு பாடம்
ஒரு ஜென் மாணவன், தன் குரு திரு ரோஷி அவர்களை கேட்கிறான். ’ஜப்பானியர்கள் தேனீர் வழங்கும் கோப்பைகளை எதற்காக மிகவும் மெல்லியதாக தயாரிக்கிறார்கள்?’ அவைகள் எளிதில் உடைந்து போகும்படியாக இருக்கிறதே. குரு பதிலளித்தார்,
‘தேனீர் கோப்பைகள் உடைந்து போவது எதனால்‘? கப்-ஐ எப்படி கேயாள்வது என்பதை நாம் அறியாத காரணத்தினால். மாத்திரமே அல்லவா?
நம்மைசுற்றியுள்ளஎதையும், (பொருள்கள், மனிதர்கள்உள்பட) நம்மனதுமற்றும்இயல்புக்குதகுந்தவாறுஇருக்கவேண்டும்என்றுஎதிர்பார்ப்பதைவிட, அதன்தன்மைக்குஏற்றபடி நம்மை
மாற்றிக்கொள்வது என்ற மனப்போக்கு வந்துவிட்டால் நட்பு, உறவு என்று எதுவுமே இனிக்கும், நிலைக்கும். இழப்புகள் குறையும். இந்த மெல்லிய கோப்பைகளை நாம் கையாளும்போது அந்த பயிற்சி நமக்கு தானாகவே வரும்.
5 . 8. நமது சிறிய பிரச்சினைகள்
புத்த துறவி ஒருவர் சொன்ன ஒரு அருமையான கதை
கதை 08
ராஜகுமாரியின் வால்
இதில் புதைந்துள்ள உண்மையை நாம் புரிந்து கொண்டு மனதில் நிறுத்தி விடவேண்டும். அதன் பிறகு நமது வாழ்கையின் மகிழ்ச்சியை குவிக்கிறோமோ இல்லையோ, துயங்களை கணிசமாக குறைக்கலாம்.
ஒரு பெரிய சக்ரவர்த்திக்கு ஓரே ஒரு மகள். அதாவது ராஜகுமாரி. இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது. கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது. போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள். அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார். மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, இந்த சிறுமி ஒத்துழைக்கவில்லை. கண்ணை கசக்கியும் அழுதும் தொடர்ந்ததால் காயம் பெரியதானது. அரசருக்கு தன் மகள் காயம் பெரிய வருத்தம் தந்தாலும் மகள் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்துவதை மன்னர் விரும்பவில்லை.
அரண்மனை மருத்துவர் தனது இயலாமையை தெரிவித்து கழண்டு கொண்டார். சிறுமி அழுவதும் கண்களை கசக்குவதும் தொடர்ந்ததால் காயமும் எளிதாக ஆறுவதாக இல்லை.
இந்த செய்தியை அறிந்த பெரியவர் ஒருவர், மருத்துவரல்லாத ஒரு வைத்தியர். இந்த நோயை மருந்து இல்லாமலேயே குணப்படுத்த முன்வந்தார். அரசரும் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து பெரியவர் சிறுமியை பரிசோதித்தார். உதட்டை பிதுக்கினார். பின், அரசரைக்கண்டு தனியாக பேச வேண்டுமே என்றார். சிறுமி உள்பட அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸ். மன்னர் வந்தார். மன்னரிடம் ஏதேதோ பெரியவர் விளக்கினார்.
பின் சிறுமியும் கேட்கும்படியாக, அரசரிடம் விளக்கம் தந்தார். இந்த கண்ணில் உண்டான காயம் மிக விரைவில் குணமாகிவிடும் இது பெரிய விஷயமில்லை. ஆனால், நான் கவலைப்படுவது அதற்காக இல்லை. இந்த பெண்ணுக்கு வால் ஒன்று முளைக்க இருக்கிறது. அது வளர்ந்தால், சுமார் முப்பது அடிவரை வளரும். அதன் பின் என்னாகுமோ எனக்கு தெரியவில்லை. அதுவும் பெரிய ஆபத்தில்லை. சில நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். சிறிது வால் தோன்றியதும் எனக்கு உடனடியாக அறிவித்து விடவேண்டும். அதற்கு மிக சிறந்த மருந்து ஒன்று உண்டு. அதைக்கொண்டு வால் வளராமல் செய்துவிடலாம், எவ்வளவு விரைவில் எனக்கு தகவல் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகம் வால் பெரிதாகாமல் தடுக்கலாம் என்கிறார்.
வாலுள்ள பெண்ணா? சிறுமி, ராஜகுமாரிக்கு பயம் தோன்றியதில் வியப்பில்லை. படுக்கை அறையிலிருந்த இந்த சிறுமி வெளியே வரவில்லை. வால் முளைத்ததா என்று அறிவதிலேயே கவனமாக இருந்தாள்.
கண் வெகுவிரைவிலேயே குணமானது. மருத்துவரல்லாத வைத்தியர், சிறுமியை பரிசோதித்து, வால் முளைப்பதற்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக கூறினார். எல்லாமே நல்லபடியாக முடிந்தது. அரசரும் பொன்னும் பொருளும் அள்ளித்தந்து வைத்தியரை பாராட்டினார். .
இந்த கதை சொல்லும் மிக முக்கிய வாழ்க்கைப்பாடங்கள் என்ன? மருத்துவர் வெற்றி அடைந்தது எப்படி ? இந்த பெண்ணின் கவனத்தை கண்ணிலிருந்து கழட்டி வால் முளைக்கும் என்று பயமுறுத்தி கதை ஒன்றை கட்டி, இல்லாத ஒன்றில் மாத்தி விட்டார் அல்லது திருப்பினார் இந்த வைத்தியர், கண் தானாக சரியாகியது.
இதை இருகோடுகள் தத்துவம் எனவும் சொல்லலாம். அதாவது சிறிய பிரச்சனைகளை ஒரு பெரிய பிரச்சனை இடம் தெரியாமல் அழித்துவிடும். நாம் தினம்தோரும் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனையும் உண்மையாகவே கடுமையானவை இல்லை. ஆனாலும் அதைமட்டுமே நாம் தீவிரமாக உற்று கவனிக்கும் போது, அது அசுர உரு எடுத்து நம்மை பயமுறுத்துகிறது. அதே சமயம் நம் கவனம் திருப்பப்பட்டாலோ, அதே பிரச்சனைகள் நம்மை துன்புறுத்துவது இல்லை.
மனிதன் தன் பிரச்சனைகளிலிருந்து நிரந்தர விடுதலை பெற, ஞானிகள் கண்டுபிடித்து சொன்ன வழி, மனதை தான், தனது என்பதிலிருந்து கழற்றி கடவுள் சமுதாயம் என்பதில் மாட்டிவிடு. சுய நலத்தை கழட்டி வைத்துவிட்டு பொதுநல சேவை, சமூக சேவை என்று இறங்கிவிட்டால், நமது பிரச்சனைகள் மற்றவர் பிரச்சனைகள் முன்னால் சிறியதாகமாற, ஒளிந்து ஓடிவிடும்.
இதனால் இரண்டு மிகப்பெரிய லாபம், நமது கவலைகளும் பிரச்சனைகளும் இடம் தெரியாமல் ஓடிவிடும். அதோடு, நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நம்மால் நன்மைதானே? இதைத்தவிர வேறு ஒரு முக்கிய தகவல்.
எது எதற்கு அடிமை? மனிதனை இயக்க இரண்டு சக்திகள். ஒன்று நம் அறியும் பொரிகள், மற்றது மனது. சாதாரண மனிதனின் பொரிகள் மனிதனின் மனத்தை அடிமையாக்கி வைப்பதால் மனிதன் மனம் இன்பத்தை நாடியும் துன்பத்தில் மூழ்கியும் இருக்கிறது.
மாறாக, மனதை தயார்செய்து, அறியும் பொரிகளை அடக்கி அவற்றை மனதிற்கு அடிமையாக்குபவர்கள், ஞானிகள், முனிவர்கள், ஆகியோர்., அவர்களை துன்பம் துறத்தாது.
இரண்டாவதாக வந்த மருத்துவரல்லாத வைத்தியர், தனது கற்பனை மற்றும் வாக்கு திறமையால், சிறுமியின் மனதை, அதாவது கவனத்தை கண்ணிலிருந்து முதுகுக்கு மாற்றினார். அதன் பலன் சிறுமியின் கண் தானாகவே குணமானது.
இரு கோடுகள் தத்துவம், அரை கப் ஒயின் என்று ஒரு காலத்தில் வெகுவாக பேசப்பட்டு வந்தது. இல்லாத ஒரு பெரிய பிரச்சனையை காட்டி, இருந்த பிரச்சனையை சுலபமாக தீர்த்து வைத்ததாகவும் நினைத்துக்கொள்ளலாம்.
இதே முறையை கேயாண்டு, அனெஸ்த்தீஷியா முலம் நினைவு இழக்கச் செய்யாமலேயே, அறுவை சிகிக்சைகள் நடத்தப்படுகின்றன என்று நீங்கள் கேட்டிருக்கலாம்.
ஹிப்னாட்டிக் ஸஜஷன் என்னும் குணப்படுத்தும் முறைகூட இந்த அடிப்படையில் இருக்கக்கூடும்.
5 . 9. துறவிகள் எல்லோருமே ஞானிகளில்லை.
கதை 09.
விரலை நறுக்கிய புத்த துறவி
துறவிகள் எல்லோருமே, தான் அறிந்தோ, அறியாமலோ, அறிவுப் பாதையில் ஒரு பயணி அவ்வளவுதான். இவர்கள், விடாது தனது பயணத்தை தொடர்ந்ததால், என்றாவது ஒரு நாள் ஞானியாகலாம், இதை விளக்க ஒரு ஜென்கதை.
நம்ம ஊரில் மாணவனை அடித்துவிட்டால், வாத்தியாரை, போலீஸ் புகாரில் ஆரம்பித்து, டிவி செய்தி சானலில் ஆடவிட்டு, பின் ஓட ஓட விரட்டிடுவோம் இல்லையா? குருகுலத்தில், ஒரு மாணவருக்கு விரல் போன கதையை படிக்கலாம்.
பொதுவாக, கடந்த சில நூற்றாண்டுகள் முன்னால், கல்வி என்றாலே, குரு குலம்தான். ஒரு துறவி இருப்பார். தனது பிள்ளைகளுக்கு கல்வி தர விரும்பும் மக்கள், இந்த துறவியை அணுகி (காக்காய்) பிடித்து, இளம் வயதில் உள்ள தனது பிள்ளையை ஒப்படைப்பார். இந்த சிறுவர்கள், குருவின் வீட்டிலும், நிலத்திலும் வேலை செய்து அவருடனே வாழ்ந்து கல்வி பெறுவார்கள். எல்லா மாணவருக்கும், தினம்தோறும், குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பு நடத்தப்படும்.
வழக்கம் போல, ஒரு மாலை நேரம். குருவுக்கு முன்னால் எல்லா மாணவரும் கூடியிருக்கிறார்கள். மாணவரில் மூத்தவர்கள் மாத்திரம் குருவின் பேச்சை, உன்னிப்பாக கவனிக்கிறார்கள். சிலருக்கு கவனம் வேறு எங்கோ செல்கிறது. ஒரே ஒரு மாணவன் குருவின் கவனத்தை தன்மீது இழுக்கிறான்.
குருவுக்கு, ஒரு மானரிசம். தன்னை அறியாமலேயே, தன்னிச்சையான ஒரு செயல்பாடு. விளக்கங்கள் தரும்போது, தனது வலதுகையை உயர்த்தி, மற்ற நான்கு விரல்கள் மடிந்திருக்க ஆள்காட்டி விரலை மாத்திரம், மேலும் கீழுமாக அசைப்பார்.
இந்த மாணவன், குரு தன் விரலை அசைக்கும் போதேல்லாம், அவனும் தன் விரலை அசைத்தபடி (குருவைக் காப்பியடித்தபடி) இருந்தான். மாணவன், தன் வார்த்தைகளில் கவனம் செலுத்தாது, அங்க அசைவுகளில் லயித்திருப்பது குறித்து குருவுக்குப் பொல்லாத கோபம்.
திடீரென்று, அந்த சிறுவன் அருகில் வந்தார். அவன் வலது கேயை பிடித்து, ஆள் காட்டி விரலை வெட்டி எடுத்தார். (என்ன, இப்படி ஒரு கொடுமையான வாத்தியார்?) பிறகு, மூலிகை மருந்து வைத்துக் காயத்தில் கட்டு போடப்பட்டது.
வழக்கம் போல, தினந்தோரும், மாலை வகுப்பு நடந்தது. கையில் கட்டுடன் சிறுவன் ஒரு மூலையில் அமர்ந்து, குருவை கவனித்து வந்தான்.
காயம் ஆறியது. கட்டு அவிழ்க்கபட்டது. ஆள்காட்டி விரல் இருந்த இடம் வெற்றிடமாக காட்சி அளித்தது.
இப்போது, ஒரு க்ளைமாக்ஸ் சீன்.
மாணவனை தன் அருகில் அழைத்தார். தான் எப்படி விரலை அசைப்பேனோ, அப்படி செய்து காட்டு என்றார். மாணவன் இல்லாத விரலை அசைத்தான் ! எனக்கு விரல் இல்லை எனவே எனது விரலை அசைக்க முடியாது என்று சொல்லவில்லை.
அந்த வினாடியில் குரு-மாணவன் இருவருக்கும் ஞானோதயம் உண்டானதாகக் கதை முடிகிறது.
இந்த கதையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஒன்று இரண்டல்ல.
(1) எந்த குருவும் தன் இலக்கை அடைந்தவரல்ல. இலக்கே நோக்கி பயணம் செய்யும் மாணவரே. பூரணமாக ஞான ஒளிவு பெற்றவரல்ல.
(2) மாணவர்கள், குருவிற்கு ஒரு வழித்துணை. குரு மாணவனைவிட சற்று அதிக பயணம செய்தவராக இருக்கலாம். அவ்வளவுதான். (நமது கல்விக்கூடங்களிலும் அப்படித்தானே?) குரு ஒருவர் தனது மாணவருக்கே மாணவரான சரித்திரமும் உண்டு.
(3) அறிவு விரிவடைவது. அல்லது ஞான ஒளி பெறுவது என்பது ஒரு துறவியின் வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனை அல்லது முக்கிய கட்டம். அதுவும் ஆன்மிகப் பயணத்தின் ஒரு ஆரம்பமே, முடிவு அல்ல.
(4) நம்மை சதாகாலமும் இருள் போல சூழ்ந்திருக்கும் மாயையிலிருந்து (தாற்காலிகமாக இல்லாது) நிரந்தரமாகவும் முற்றிலும் விடுபடும் நிலையே ஞானியின் பயணத்தின் உச்ச கட்டம்.
சரி, இந்த கதையில் குரு மாணவர் இருவரும் அறிவு ஒளி பெற்றது எப்படி?
இந்த ஜென் குருமார்கள் ஒரு வம்பு பிடித்த ஆசாமிகள். பட்டென்று போட்டு உடைக்காமல், பூடகமாக சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இதற்கு விளக்கத்தை நாமாக தேடவேண்டும்.
எனது கணிப்பில். மாணவன் தான் முன்னேற வேண்டுமானால் வாத்தியாரின் கை-கால் அசைவுகளை விட்டு விட்டு வார்த்தைகளிலும், அது உணர்த்தும் பொருள்களிலும் கவனம் கொடுக்க வேண்டும். இல்லையானால், இன்ஸ்டால்மெண்டில் விரல்கள் காலியாகிவிடும் என்பது ஒரு படிப்பினை மாணவனுக்கு.
குருவுக்கு, “அய்யா மாணவனை திருத்த நினைத்த உங்கள் எண்ணம் தவறில்லை (அந்தக்கால நியதிப்படி). பையனைக் கவனித்தீரா? விரல் இல்லாதபோதும் ஆட்டினானே அய்யா? விலக்க வேண்டியது மாணவன் மனதில் பதிந்த விரலை, மாணவன் கையில் உள்ள விரலை அல்ல”.
“விரலை ஆட்டுவதை மானரிஸமாக கொண்டது நீங்கள். உண்மையில் வெட்ட வேண்டியது உங்கள் விரலை!
(புத்த மத கோட்பாடுகள், மனதை மையமாக கொண்டவை. பிற்காலத்தில் சேர்ந்து கொண்ட பூசைகள் ஆராதனைகள் காலத்தின் கட்டாயத்தால் வழி அல்லது தடம் மாறியதாகக் கொள்ளலாம்).
கதை 10. வீண்பழி ஏற்ற புத்த துறவி.
5.10. துறவியின் பொறுமை அன்பின் எல்லைகள் கதை
ஒரு ஊரில் மக்கள் மிகவும் மதித்த புத்த துறவி இருந்தார். அந்த ஊரில் இருந்த ஒரு இளம் பெண் காதலனை தேடிக்கொண்டாள், காதல் கொண்டாள். அதோடு நின்றிருந்தால் பரயில்லை. ஒரு படி முன்னேறி கருவுற்றிருந்தாள். விஷயம் வெளியாகி, காதலனை அடையாளம் காட்ட பயம். அவள் தேர்ந்து எடுத்த காதலனின் பின்னணியை பற்றி அவளுடைய கணிப்பே அப்படிப்பட்டது.
எத்தனை நாள் மறைக்க முடியும்.?
கதை நடந்த அந்த காலத்தில் காதும் காதும் வைத்தால் போல கருவை கலைக்க வசதிகளோ அல்லது தெருவுக்கு தெரு நர்சிங்ஹோம்களும் கிடையாது. பிரச்சனை தன் உச்ச கட்டத்தை அடைந்தது. வளரும் கருவின் தந்தை யார்? இந்த கேள்வியுடன் தாய் – தந்தை பெண்ணுக்கு அடி – உதைகளை வழங்க தயாரானார்கள்.
என்ன செய்வது? அவசரத்தில் ஒரு முடிவு செய்தாள். அந்த புகழ் பெற்ற புத்த பிக்குவை காதலனாக காடடினால் தாம் தப்பிக்கலாம் என்று.
முதலில் பெண்ணின் உறவினர்களும், தாய் தந்தையரும் நம்ப மறுத்தார்கள். பெண் தீர்மானமாக கூற, அந்த புத்த பிக்குவின் வீட்டை முகாமிட்டார்கள். கோபமும், சந்தேகமும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? பிக்குவை நோக்கி, கேள்விகள் ஏவுகணைகளாக பறந்ததன. பிக்குவுக்கு, வந்தவர்கள் பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொள்ளவே சமயம் பிடித்தது. (கோபமாகவந்த மனிதர்கள் இந்த விஷயத்தில் எதிரியை முதலில் அடித்து இருப்பார்கள். அப்படி அடிக்கவில்லை என்றால் பிக்கு எப்படிப்பட்ட நல்ல மதிப்புடன் வாழ்ந்திருக்கவேண்டும்?)
அமைதியை கடை பிடித்தார். மறுத்து பேசவில்லை. (இந்த வழக்கம் நாடு மதம் கடந்து அனைத்து ஞானிகளுக்கும் பொதுவான ஓன்றாக தெரிகிறது. ஸ்வாமி ராமாவின் வாழ்க்கையிலும், இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை காணலாம்). மிகுந்த மரியாதைக்கு உரியவர். என்ன செய்வது. திட்டி விட்டு மக்கள் கலைந்தார்கள். சில காலம் கழிந்தது. பெண் ஒரு மகவை பெற்றாள், சொந்த பந்தங்கள் இந்த சிறிய குழந்தையை பிட்சுவிடம் எடுத்து சென்று உன் குழந்தையை நீயே வளர்த்துக்கொள் என்று விட்டுவிட்டு சென்றனர். மறுத்து ஒரு பேச்சும் இல்லாமல் குழந்தையை வாங்கி நல்ல முறையில் வளர்த்து வந்தார்.
சில வாரங்களே சென்றிருக்கும்.
என்ன நினைத்தாளோ, அந்த பெண். ஒரு நாள், தான் செய்த தவறை பெற்றோர்களிடம் கூறி உண்மையான காதலன் யார் என்று தெரிவித்தாள். உறவினர் அனைவரும், இந்த பெண்ணுடன் சென்று புத்த பிக்குவிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, குழந்தையை திரும்பப் பெற்று திரும்பினார்கள்.
அவரோ, குழந்தையை ஒப்படைத்துவிட்டு தன் வேலையில் மூழ்கினார், எதுவுமே நடக்காதது போல.
வீண் பொல்லாப்பை ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி கடைசி வரையில் முழுவதாக அமைதியுடன் நடந்து கொள்ள எத்தனை மனோதிடம் தேவை.? இந்த பொறுமையின் பின்னணியில் , அறியாத வயதில் பெண் தெரியாமல் செய்துவிட்ட தவறின் பழியை தாங்கியதற்கு சுத்தமான அன்புதானே ஆதாரம்?
நமது வாழ்க்கையில் தினசரி மனைவியை திட்டும் கணவன், மாணவனை திட்டும் ஆசிரியர், சிப்பந்திகளை திட்டும் அதிகாரி என்று சிலர் பலரை திட்டுகள் கொட்ட சிலரும் அதை அலட்சியம் செய்வதை தொழிலாக கொண்ட பலரும் இருக்க, பாதி நேரம், மனிதனின் வாழ்க்கை வசவுகளிலேயே கழிகிறது.
நாம் சிறிதும் சிந்திப்பதில்லை, திட்டுவது பயன் தருமா இல்லையா, என்று. ஒரு நம்பிக்கை. திட்டிய பிறகு எல்லாமே சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை.
5.11 கழுதையில் அறிவை கண்ட ஸுபி துறவி
கதை 11
கழுதை வாத்தியார்.
அப்பாவி கழுதைகளை வாகனமாக அங்கீகாரம் பெற்ற அரபு நாடுகளின் வழங்கிவந்த பழங்கால கதை. பொதியை தாங்கிய ஒரு கழுதை. பின்னால் தொடரும் அதன் எசமானன். அவன் கையில் ஒரு நீண்ட குச்சி ஒன்று. குச்சியினால் அவ்வப்போது சுள்ளென்று விழும் அடிகளையும், இடை வெளி இல்லாமல் எசமானன் கொட்டும் வசைமொழிகளையும் தாங்கி வந்தது அந்த பரிதாபகரமான கழுதை.
இருவரும் சாலையில் சென்று கொண்டிருந்தனர் என்ன கோபமோ இந்த மனிதருக்கு. கழுதை என்ன தப்பு செய்தது என்பதும் புரியவில்லை. இடை இடையே கையிலுள்ள குச்சியால் சுளீர் என்ற எசமானனின் வீச்சில் கழுதை வலி தாளாது துள்ளிக்குதிக்கும். போதாதற்கு, அருகில் சென்று காலால் எட்டி உதைப்பார்.
கழுதை – அதன் எசமான் இந்த இரண்டையும் கவனித்தவாறு ஒரு ஸுபி ஞானி கடந்து சென்றார்.
சற்று நிதானித்து, சுபிஞானி நின்று, கழுதையின் எசமானிட.ம் ரத்தின சுருக்கமாக சில வார்த்தைகள் பேசினார்.
நண்பனே, இந்த உயிர்கள், மனிதனின் பேச்சு மற்றும் அசைவுகளை கொண்டு புரிந்து கொள்ளும் வகையில் படைக்கப்படவில்லை. (உண்மையில் பல மனிதர்கள் உள்பட). அதை அடித்து உதைத்து திட்டி எதுவும் மாறப்போவதில்லை. எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.
ஆனால், இந்த மிருகத்திடமிருந்து நீ கற்பதற்கு ஒன்று இருக்கிறது … என்று தனது பேச்சை சற்று நிறுத்தினார். உடனே, கழுதையின் எசமானுக்கு ஒரே அதிசயம். இந்த உதவாக்கரை கழுதையிடமிருந்து நான் கற்பதா?
ஞானி தொடர்ந்தார்.
ஒரு கழுதையின் முன்னிலையில், மிக கோபம் உண்டாக்கும் சூழ்நிலையில் மௌனமாக இருப்பதும், அமைதியை காப்பதும், என்று கூறி வேகமாக கடந்து சென்றார். (இதில் உள்ள சிலேடையை மிக அமர்க்களாமானது. கழுதை யார், இங்கே?)
5.12. இப்படிப்பட்ட துறவிகள் பலரை சரித்திரத்தில் காணலாம்.
கதை 12.
துறவியிடமிருந்து திருடிய பைபிள்.
இது, எகிப்திய நாட்டில் ஒரு மடாலயத்தில் நடந்ததாக சொல்லப்பட்ட கதை. மடாலயத்திற்கு தலைவர் ஒருவர் இருப்பார் இல்லையா? அவர் தான் அனஸ்டாசியஸ் என்ற பெயர் கொண்ட மத குரு. தனது சக பாதிரியார்களால் ஞானி என்று மரியாதையாக அறியப்பட்டவர் இவர்.
ஜேம்ஸ் என்ற ஒரு நபர் பாபங்கள் செய்தார் என்று அவரை சமூகத்திலிருந்து விலக்கிவைக்க முடிவாகியது. அதை எதிர்த்த அனாஸ்டியஸ் தானும் பாபி என்று கூறி, குடியிருப்பிலிருந்து தானும் வெளியேறினார்.
அப்படியிருந்தும் ஜேம்ஸ் திருந்தவில்லை. ஒருநாள் மாலை வேளையில் அனாஸ்தியஸ் பிரார்த்தனையில் மூழ்கிருந்தார். அப்பொழுது ஜேம்ஸ் வருகைதர, பாதிரியாரின் பிரார்த்தனை தடைப்பட்டது. ஜேம்ஸ் வருத்தம் தெரிவித்தார். அதை மறுத்து ஜேம்ஸ்-ஐ வரவேற்று உபசரித்து, உண்ண உணவு மற்றும் உறங்க வசதிகள் என்று செய்து தந்தார் பாதிரியார்.
மறுநாள் காலை ஜேம்ஸ் பாதிரியாரின் வீட்டிலிருந்து விடைபெற்று வெளியேறுகிறான். போகும் போது, பாதிரியாரின் இல்லத்திலிருந்த விலைமதிக்கமுடியாத பைபிள் புத்தகம் ஒன்றைத் திருடிச் செல்கிறான். பாதிரியாருக்கு இதை கண்டு பிடிக்க வெகுநேரமாகவில்லை . இருந்த போதிலும், ஜேம்சை பின்தொடரவில்லை.
அவரது கவலை நம்மைவிட வித்தியாசமானது. ஏற்கனவே திருட்டு என்கிற பாபம் செய்தவனை, தான் திருடவில்லை எனகிற பொய்யை கூற வைத்து புதிய பாபம் ஒன்றை ஜேம்ஸ் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு தரும் என்று பயந்தார்.
பைபிளை எடுத்து சென்ற ஜேம்ஸ், அந்த ஊரிலுள்ள வியாபாரியிடம் காண்பித்து பெரும் தொகை ஒன்றை கேட்டான். தான் விசாரித்து பின் விலை நிர்ணயம் செய்யலாமென்று வியாபாரி கூறினான்.
பைபிளின் மதிப்பை சரியாக சொல்ல மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பாதிரியார் அனஸ்டாசியஸ் விட தகுதிபெற்ற யாரும் இருக்க முடியாதல்லவா? வியாபாரி, பாதிரியார் அனஸ்டாசியஸ் அவர்களிடம், புத்தகத்தை கொண்டு சென்றார். பாதிரியார் புத்தகத்தை இனம் கண்டாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
வியாபாரியிடம், புத்தகத்தை விற்க வந்தவர் செய்த மதிப்பு குறைவென்றும், அந்த புத்தகம் அதிக விலை பெரும் என்று கூற, வியாபாரி ஜேம்ஸ்க்கு அதிக பணம் தந்தார். அதோடு பாதிரியாரை தாம் கண்டு இந்த புத்தகத்தின் உண்மையான மதிப்பை கேட்டு அறிந்ததாகவும் தெரிவித்தார்.
ஜேம்ஸ் கண்களில் நீர் வழிய, தான் புத்தகத்தை விற்பதற்கில்லை என்று கூறி பாதிரியாரிடம் திரும்பி வந்தான். செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரினான். அன்புடன் அரவணைத்த பாதிரியார், அந்த பைபிளை பரிசாக ஜேம்ஸ்க்கு தந்து அதை படித்து, யேசுவின் பாதையில் நடந்து இவனின் அன்பை பெறுமாறு வாழ்த்தினார்.
ஜேம்ஸ் இந்த நிகழ்ச்சிக்கு பின் மனம் மாறி நல்வாழ்க்கை ஒன்றை மேற்கொண்டதாக கதை முடிகிறது. இந்த கதை, இந்த மதகுருவின் பெயரில் பல வடிவங்களில் காணலாம். அதேபோல சில புத்தமத கதைகளிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள் – அன்புகாட்டும் ஆன்மீகர்களால் மனம் மாறும் தீயவர்கள் – பல காணலாம்.
துறவியின் இயல்புகள்.
கதை 13.
திருட்டு
சீனாவின் ஒருபகுதி திபெத்.
சீனாவை பற்றி என் வாசகர்களுக்கு என்ன தெரியும் என்று எனக்கு தெரியாது. அதனால், ஏதோ, சுருக்கமாக இந்த கதையின் வாசகர்களுக்கு தெரிந்து கொள்வது அவசியம்.
மிக சிறந்த சிந்தனையாளர்கள் (கன்பூஷியஸ் தொடங்கி, ஜென், தோ இயக்கத்தில் இன்றும், என்றும் மிக சீரிய சிந்தனையாளர்கள், தத்துவ மேதைகள் என்று கருதப்படும்) பலர் பிறந்த இந்த சீனாவில், இன்று, பேச்சு சுதந்திரம் மக்களுக்கு கிடையாது. ஜாதி மதம் பற்றி யாரும் பேசக்கூடாது, கலாட்டா செய்யக்கூடாது. உழைப்பு தான் கடவுள், ஜாதி, மதம் எல்லாமே. (நல்லது தானே !). லஞ்சம், ஊழல் – நிறையவே உண்டு.
சமீப காலம் வரை சீன மொழியை தவிர பொது மக்களுக்கு ஒன்றும் தெரியாததால், மக்களை மாங்காய் மடையர்களாக மாற்றி வைத்து ஆட்சியை காப்பாற்ற முடிகிறது. கூட்டமாக ஆட்சியாளாரை எதிர்த்தால், தினாமென் ஸ்கொயர் தான். டிஷ்யும் – டிஷ்யும்.
திபெத்தியர்கள் புத்தமதத்தை பின்பற்றுபவர்கள் என்றால், தவறு. இவர்கள் புத்த மதத்தில் கரைந்து, ஒன்றாக கலந்து வாழும் ஒரு தனிப்பிறவிகள் அடங்கிய ஒரு மக்கள் கூட்டம். இப்பொழுது, திபேத்தை பிடிக்க வந்த ஆங்கிலேய படையை திபெத் புத்த பிட்சுக்கள் எதிர்த்த முறை (இண்டெர் நெட்டில் கூகுள் செய்து பிடியுங்கள், படியுங்கள்) இவர்களின் தியாகம், சாகசத்திற்கும் மற்றும் அணுகு முறைக்கும் ஒரு சாம்பிள்.
படித்தபின், இவர்கள் இப்போதைய சீனாவில் ஏன் கலந்து இருக்க முடியாது என்று முழுவதாக புரியும். மிக அதிக அளவில் இந்தியா முதலான பல நாடுகளில் தஞ்சம் அடைந்து சுதந்திர திபெத்திற்காக போராடி வருகிறார்கள்.
இப்போது கதைக்குள் நுழைவோம்.
இது பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கதை. ஜென் மாஸ்டர் என்று அறியப்படுபவர்கள் புத்த துறவிகள் ஜீஷி பென் என்ற ஒரு ஜென் மாஸ்டர். உண்மை துறவிகளின் தன்மையான தூய்மையான நல்ல உள்ளம், அப்பழுக்கு இல்லாத நேர்மை, போன்ற குணங்களைக் கொண்டவர்.
நம் நாட்டு அரசியல்வாதிகள் நடப்பில் கொண்டுவராத, ஒரு நபர் ஒரு பதவி என்ற திட்டத்தை கடந்த பல ஆயிரம் வருட காலமாக உறுதியாக கடை பிடித்து வரும் சிலரில், இந்த சாது, சன்யாசி, துறவிகள் முக்கியமானவர்கள். கடவுளையும் உண்மையையும் தேடி அலைவதே இவர்களுக்கு வேலை. உணவுக்காக வேறு (இரண்டாவது) வேலை செய்வதில்லை. மக்களிடமிருந்து உணவை பிச்சையாக பெற்று கொள்வது இவர்கள் வழக்கம். பொருள் உலகத்தை துறந்த இவர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதில் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஒரு முறை, உணவைத்தேடி வந்த இந்த பிட்சுவை அவருடைய ஆழ்ந்த பக்தர்களான ஒரு குடும்பம் வரவேற்றது. விருந்தினரை ஒரு அறையில் தங்க வைத்தார்கள். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. உணவு தயாராக இன்னும் சில மணிகளோ அல்லது பல நிமிடங்களோ எடுக்கலாம் என்ற நிலை. வீட்டு மனிதர்கள் உணவு தயாரிப்பதிலும், இதர வேலைகளிலும் மும்முரமாக இருந்தார்கள்.
விருந்தினரான பிட்சுவுக்கு பசியை தாங்க முடியவில்லை. அந்த அறையிலிருந்த உணவு ஜாடி ஒன்று கண்ணில் பட்டது. உடனே, அவரையும் மீறி, ஜாடிக்குள் கையை விட்டார். அவ்வளவுதான்.. உடனே, திருடன், திருடன் என்று கத்தினார். கையும் களவுமாக திருடனை பிடித்ததுவிட்டதாக கூவினார். வீட்டார் அவர் தங்கியிருந்த அறையை அடைந்தனர். விருந்தினரைத் தவிர வேறு எவரையும் அந்த அறையில் காணாததினால் முதலில் விழித்தார்கள்.
பிட்சுவோ எவரையோ திட்டிக்கொண்டிருந்தார். இனிமேல் திருட்டு வேலையில் ஈடுபட்டால், ஒடித்து விடுவேன் இந்த கையை என்று கூச்சலிட்டார். அவர் பிடித்திருந்தது, தனது மற்றொரு கையைத்தான். யாரும் பார்க்காத நேரத்தில் செய்த தனது திருட்டை தானே கண்டுபிடித்து, கூக்குரலிட்டு தண்டனையும் தந்து, எச்சரிக்கையும் விடுத்த ஒரே மனிதர் இவராகத்தான் இருக்க முடியும்.
சில கடைசி வார்த்தைகள் –
இந்த பிட்சு திருட்டை செய்யாமலேயே இருந்திருக்கலாமே, என்று சிலர் சொல்லலாம். நல்லவர்கள் கூட, தங்கள் அறிவை மீறி தவறு செய்யும் சூழ்நிலைகள் உண்டு. அப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
கதை 14 நேர்மை என்பது
எனது நண்பர் ஒருவர், அலுவலக வேலையாக, ஜப்பானுக்கு சென்றார். ஒரு வாரம் தங்கியிருந்த அவருக்கு பல நிறுவனங்களுடன் நேரில் தொடர்பு கொள்ள கார் ஒன்று வாடகைக்கார் கம்பெனி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல் நாள், குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே வந்த டாக்சி டிரைவர் இரண்டாவது நாள் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தார். அழாத குறையாக பயணியிடம் மன்னிப்பு கேட்டார். நண்பரோ, அய்யா, கவலைப்படவேண்டாம், எனக்கு உங்கள் தாமதம் எந்த வகையிலும் இடையூறு விளைவிக்கவில்லை. நான் அரைமணி நேரம் முன்பாகவே வரும்படி கேட்டிருந்தேன். அவ்வளவுதான் என்று விளக்கினார்.
அப்படியானால், இன்னும் ஒரு நிமிடம் எனக்கு தருகிறீர்களா என்று கேட்டார். அதனால் என்ன, 15 நிமிடம் கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பதில் சொன்னார் நண்பர். வழியில், ஒரு அலுவலகம் முன் கார் நின்றது. டிரைவர் பணிவுடன், ஒரே நிமிடத்தில் திரும்புவதாக சொல்லி, அலுவலகத்தினுள் வேகமாக சென்றார். சொன்னபடி ஒரே நிமிடத்தில் திரும்பி நன்றி கூறி காரை கிளப்பினார். அப்போது, டிரைவர் திரும்பவும் நன்றி சொல்லி விட்டு, அவர் சென்றதுதான் அவருடைய அலுவலகம் என்றும். தான் அன்று தாமதமாக வந்ததற்காக, அலுவலக விதிகளின் படி அறைநாள் லீவுக்கு லெட்டர் எழுதித் தந்துவிட்டு வந்ததாகக் கூறினார்.
என் நண்பர் கூறினார், “நண்பரே. உங்கள் தாமதம் எனக்கு எந்த .கஷ்டமும் தரவில்லை. என்னைத் தவிர யாருக்கும் தெரியாது”. என்று சொல்லி, “நீங்கள் அரைநாள் விடுமுறையை வீணாக இழந்திருக்க வேண்டாமே “என்று தொடங்கியவர் முடிக்கவில்லை. டிரைவர் முடித்துவிட்டார். “எனக்குத் தெரியுமே”! என்று.
நம நாட்டின் வறுமைக்கும் ஜப்பான் நாட்டின் வளமைக்கும் காரணம் புரிகிறதல்லவா? பயணிகளிடமிருந்து காசு வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்காத கண்டக்டர்கள். சூடு வைத்த மீட்டருடன் ஒடிக் கொண்டிருக்கும் ஆட்டோக்கள், காந்தி தலைகளை பெறாமல் எந்த காரியத்தையும் செய்ய மறுக்கும் அரசு அலுவலர்கள். மக்கள் பணத்தைச் சுரண்டி வெளிநாட்டு வங்கிகளில் நிரப்பும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள். இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இந்த கார் ஒட்டுனரின் கால் தூசிக்கு சமமாக மாட்டார்கள்.
ஜப்பானிய பெண் ஒருத்தி எங்களுக்கு ஒரு குடும்ப நண்பி. அவரிடம் பேசியபோது, இதில் அதிசயம் என்ன இருக்கிறது என்பதுபோல விழித்தார். இதற்கு மேல் பேசினால், நமது நாடே ஒரு ஊழல் என்பதை சொல்ல வேண்டிவரும். அதனால் அதோடு விவாதத்தை நிறுத்திக்கொண்டோம்.
இந்த உண்மை நிகழ்ச்சியிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவு.
நேர்மை என்பது துறவிகளுக்கு மட்டும்தான் இருக்கும், அல்லது இருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல குணங்கள், நேர்மை என்ற பல அரிய சொத்துகளை ஞானிகள் மட்டுமில்லாமல் நமது நாட்டில் கூட பல ஏழை எளியவர் பலரின் நிரந்தர உடைமையாக என்றும் காண்கிறோம். சுவாசம் விடுவது போல, இடைவிடாமல் பொய் பேசுவதையும், மற்றவரை ஏமாற்றுவதை அனிச்சை செயலாக கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், நமக்கு, இந்த ஒட்டுனரின் செயல் ஒரு அதிசயமாக தெரிகிறது அவ்வளவு தான்.
பல ஞானிகள் நம்மை சுவர்கத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள். ஆனால் …… நடப்பது என்னவோ !………….
கதை 15
நாமெல்லாம் சாணிப்புழுக்களே
சுவர்கங்களையும் நரகங்களையும் யாரும் பார்த்ததில்லை. சுவர்கத்தையும், நரகத்தையும் ஒவ்வொரு மதமும் வெவ்வேறு விதமாகச் சித்தரிக்கின்றன.
இவைகள் உண்மையா? அல்லது, மனிதன் ஒருவரை ஒருவர் காயப்படுத்தி, மற்றவருக்கு துன்பம் தராமலும், அதனால் தானும் அவதிப்படாலும் வாழ வைக்க ஞானிகள் தங்கள் கற்பனையில் உருவாக்கிய ஒன்றா ? இப்போது இதைப் பற்றி நமக்குக் கவலை வேண்டாம்.
இந்த கதையை உருவாக்கியவர் என்ன சொல்ல நினைத்தாரோ, ஆனால் நான் இதில் காண்பது என்ன என்பது தெரிய, கீழே படியுங்கள் :
இரண்டு புத்த பிட்சுக்கள், ஒரே மடாலயத்தில் ஒன்றாகவே சேர்ந்து, கற்று, வாழ்ந்து வளர்ந்தவர்கள். காலாகாலத்தில் கிழவர்களாகி, அடுத்தடுத்து இறந்தார்கள்.
எல்லா மதங்களும் சொல்வதைப்போல, முதலாமவர், நல்ல ஒரு மனிதனாக, யோகியாக, ஞானியாக வாழ்ந்து வந்த காரணத்தால், இறந்த பின் மீண்டும் கண் விழித்தபோது, சுவர்கத்தில் பிறந்திருப்பதை உணர்ந்தார். “என்ன ஒரு ஆனந்த மயமான உலகம், எப்படிப்பட்ட உல்லாச வாழ்கை” என்று அதிசயித்தார். நல்ல மனிதனானதால், தன் நண்பனைத் தேடினார். (இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று, ஞானிகளுக்கு மறுபிறவியில் தன் முன் பிறவி முழுவதும் நினைவில் தொடரும் என்பதும், சாதாரணரான நமக்கு இந்தச் சலுகை இல்லை என்பதும் ஞானிகளைப் பற்றி ஒரு நம்பிக்கை).
சுவர்கத்தின் மூலைகளிலெல்லாம் நண்பரைத் தேடினார். சுவர்கத்தில் உள்ள ஏடுகளைப் புரட்டினார். எங்கேயும் கிடைக்காத காரணத்தினால் மனிதர்கள் உலகிலும் தேடினார். அங்கும் இல்லை. பிறகு பிராணிகள் பறவைகள் உலகிலும் தேடிவிட்டார். அங்கேயும் கிடைக்கவில்லை. கடைசியாக, புழு பூச்சிகள் வாழும் உலகில் தேடும்போது நண்பரைக் கண்டார்.
(இப்படி நாலு இடத்திலும் தேடும் வசதி, ஞானியாக வாழ்ந்து இறந்த பின், சுவர்கத்தில் பிறந்ததனால் கிடைத்த ஒரு சலுகையாக இருக்கவேண்டும்).
தனது நண்பர், மண்ணுலகத்திலேயே ஒரு பெரிய சாணிக் குவியலில்ன்அனை ஒரு புழுவாகப் பிறந்து இருப்பதை உணர்ந்தார்.
தனது சக பிட்சு, தன்னோடு சுவர்கத்தில் இல்லாமல் ஒரு சாணிக் குவியலில் ஒரு புழுவாக பிறந்திருப்பதை நினைத்து துன்புற்றார். எப்படியாவது நண்பனை தன்னோடு விண்ணுலகத்திற்கு அழைத்து செல்லத் துடித்தார். சாணிக்குவியலில் நண்பனை தேடி புகுந்தார்.
சாணியில் பிறந்த புழுவுக்கு நண்பனையோ, முன் ஜென்மத்தை பற்றிய நினைவு சிறிதும் இல்லை. நண்பனுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்றதால், நண்பருக்கு பழய மடாலைய வாழ்கையை நினைவு படுத்தியும். பயன் கிட்டவில்லை. நண்பருக்கு, சுவர்கத்தில் தான் அனுபவிக்கும் சுகங்களைப் பட்டியல் போட்டார். சாணியில் பிறந்த நண்பருக்கு இதில் எதுவும் மனதை தொட்டதாகத் தெரியவில்லை. பதிலுக்கு, போடா, அறிவு கெட்டவனே! நீயும் உன் சுவர்கமும். இந்த சாணிக்குவியலைவிட மேலான இடம் ஒன்று உண்டா என்று உரக்கச் சிரித்துவிட்டு, சாணிக்குவியலில் நெளிந்து உள்ளே மறைந்தார்.
முதல் பிட்சுவுக்கு நண்பனை அப்படியே விட்டுவிட மனமில்லை. கபாலென்று புழுவை கையில் பிடித்து பலமாக இழுத்து தன்னுடன் சுவர்கம் எடுத்துச் செல்ல எத்தனிக்க, புழு அதைவிட வேகமாக தன்னை விடுவித்துக் கொண்டு சாணிக்குவியலில் உள்ளே சென்று மறைந்தது. யார் இந்த மடையன் நம்மை விடாது துரத்துகிறானே, என்று அலுத்துக்கொண்டது இந்த சாணியில் மறைந்த புழு.
நாம் அறிந்தவர்களில் இந்த சாணிப் புழுவைப் போல சாணிக் குவியலில் சிக்கியுள்ளார்கள். சாணிக் குவியலேயே ஒரு சுவர்கம் கண்டு, அதிலிருந்து விடுதலை பெற முயலாதவர் எத்தனை பேர்?
சுவர்கத்திலிருந்து வந்த நண்பர் போல, நம்மைக் கரை சேர்க்க, நற்கதி அடையவைக்க எத்தணிக்கும் பெரிய மனம் கொண்ட பல ஞானிகள் என்னும் அந்த நல்லவர்கள் விடாது முயற்சி செய்கிறார்கள்.
அவர்களை புறக்கணித்து தவறான வழியிலேயே நடக்கும் நாம் எல்லோருமே, நாம் கதையில் கண்ட, சாணிப்புழு போன்றவர்கள் இல்லையா?
5 . 13 . ஸுபி ஞானிகள்
ஸோபி என்ற கிரேக்க சொல்லில் இருந்து மருவியது இந்த ஸுபி என்று நினைப்பவரில் நானும் ஒருவன். ஸோபி என்றால் அறிவு என்பதாகும். ஸோபிஸ்ட்ஸ் என்று இயக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும், அவர்களை ஒரு நடமாடும் பல்கலைகழகமாக அறிவார்கள், மக்கள். ஆங்காங்கே சென்று விரும்பும் மக்களுக்கு கல்வி புகட்டுவது இந்த இயக்கத்தின் குறிக்கோள். கிரேக்க அறிஞர் அரிஸ்ட்டாடில் கூட இந்த இயக்கத்தில் ஒரு சமயம் தலைமைப் பதவி வகித்ததாகச் சரித்திரம் தெரிவிக்கிறது.
தீர்க்கதரசியார் முகம்மதுவும் ஒரு ஸோபி அல்லது ஸுபி என்று கொள்வோர் உண்டு. ஸுபி ஞானிகள் என்று அறியப்பட்டவர்கள், தீர்க்கதரசியார் முகம்மது அவர்கள் வகுத்துத் தந்த இஸ்லாம் என்னும் பக்திப்பாதையில் நடந்து வளர்ந்து, ஆன்மீக உலகவாசிகளாகப் பிரகாசித்த ஞானிகள்.
ஒவ்வொரு ஞானப்பாதையிலும், ஞானிகள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வழி உண்டு. ஜென்பாதை ஞானிகள் கவிதைக்கும், ஸுபி ஞானிகள் இசைக்கும் பெயர் பெற்றவர்கள். ஒரு முறையேனும் ஸுபி சங்கீத், கேட்டுப் பாருங்கள். நான் அறிந்து, பொருள் விளங்காவிட்டாலும் அதன் இசையில் நாம் மயங்குவது தவறாது.
ஸுப் என்றால் கம்பளி என்று அரேபிய மொழியில் ஒரு பொருள் உண்டென்றும் அறிகிறோம். அந்த நாட்களில் பட்டு மற்றும் விலை உயர்ந்த சொகுசான உடைகளைச் சாதாரண மக்கள் அணியும்போது இந்த ஞானிகள், எளிமையைக் கடைபிடிக்க வேண்டி, முரட்டுக் கம்பளி உடை தரித்தவராதலால் ஸுபி என்ற பெயர் பெற்றதாகக் கொள்பவர்களும் உண்டு.
சுபி என்ற பெயருக்கு இன்னும் பல பொருள்களும், காரணங்களும் உண்டு. ஸோபி என்றால் கிரேக்க மொழியில் அறிவு அல்லது ஞானம். தீர்க்கதரசியாரும் ஒரு சுபி முனிவராக காண்பவர்கள் உண்டு.
எல்லா மதப்பெரியவர்கள் போல, இந்த ஞானிகளின் நோக்கம், தங்களை உண்டாக்கியவனுடன் (இறைவனுடன்) ஒன்றாக கலப்பதே ! ஆன்மீகத்தில் அடிவைத்தவர்கள் எந்த மதப்பாதையில் நடந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. அந்த நிலையில் அனைவரும், அறிவது, அனுபவிப்பது, எல்லாமே ஒன்றுதான்.
ஞானிகள் எல்லோருமே அனைத்து உயிர்களையும் அணைத்த கருணை கொண்டவர்கள். மக்களுக்கு அவரவர் வாழ்க்கையில் வலிகள் இல்லாத வழிகளைக் காட்டுவது என்ற குறிக்கோளில் வேறுபட்டவரில்லை.