அத்தியாயம் 6
நாமெல்லாம் ஞானிகளே !
6.1. ஹரித்வாரில் ஒரு சாது
சில வருடங்கள் முன்பு ஹரித்வார் என்ற புண்ணிய தலத்திலிருக்கும் பதாஞ்சலி யோகபீடத்திற்கு செல்லத் தீர்மானித்து மனைவியுடன் பயணமானேன். வந்த வேலை எதிர்பார்த்ததைவிட வேகமாக முடிந்தது.
எனது ஆன்மீக பயணத்தில் நான் வழிகாட்டியாக கொண்டிருந்த (மானசீகர குரு) சுவாமி ராமா வாழ்ந்திருந்த கங்கோத்ரி சென்று வர மனதில் ஒரு உந்துதல்.
இரவு, சுமார் 7 மணி 50 நிமிட அளவில் இந்த எண்ணம் எழ அடுத்தநாள் காலை பஸ்ஸுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்ய அப்போதே புறப்பட்டோம். அந்த முதன்பதிவு அலுவலகம் மாலை 8 மணிக்கு மூடிவிடும். தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஒட்டமும் நடையுமாக விரைந்தோம். நெரிசலான் சாலை, இந்த ஊரின் ஒரே ஒரு சாலையில். இரவு வெகுநேரம் வரை மக்கள் கூட்டம் வழிந்தோடும்.
இங்கே நான் கண்ட ஒரு சிறப்பு என்னவென்றால். கங்கேக் கரையில் குளிக்கும் இடத்தில் (ஹரி கி பௌடி) பெருவாரியான ஏழை மக்கள், யாசகத்திற்காக மிகவும் அமைதியாகக் காத்திருப்பார்கள். அங்கே கூடும் யாத்திரிகர்கள், தங்களின் செலவில் ஏழைகளுக்கு உணவு வழங்க உதவ, அந்த கங்கேக் கரையோரம் சில 20 அல்லது 30 உணவு விடுதிகள் உள்ளன.
கடைக்காரர்கள், ரூ 100க்கு சுமார் 10 அல்லது 15 நபர்களுக்கு உணவு தருவோம் என்று கூவி வருவார்கள்.
நம்மிடமிருந்து பணம் பெற்று, நம் கண் முன்னாலேயே, அடுத்தடுத்து அமைதியாக வரிசையில் வரும் ஆண் பெண் முதியோர் சாதுக்கள் என்று பலவகை மக்கள் உணவு பெறுவதைக் காணலாம்.
ஆனால், நான் கவனித்த வரை ஹரித்வாரில் பல வெளிநாட்டு உள்நாட்டு மனிதர்கள் நடமாடியும், நடுரோட்டில் வழிமறிக்கும் யாசகர்கள் கிடையாது என்பது குறிப்பிட தக்கது.
இன்னமும் ஐந்தே நிமிடங்களில் ரிசர்வேஷன் அலுவலகம் மூடிவிடும் என்ற நிலையில், சுமார், 75 வயதுள்ள பெரியவர் ஒருவர் என்னை வழிமறித்தார். தனக்கு ஒரு ஒரு ரொட்டி (எண்ணையிடாத கோதுமைச் சப்பாத்தி) வேண்டுமென்றார். ஒரு ரூ50/- நோட்டை கேயில் பிடித்து, ஐயா, நான் சிறிது அவசரத்திலிருக்கிறேன். எனவே இந்த பணத்தை கொண்டு எவ்வளவு ரொட்டி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்.
பெரியவர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். தான் பணத்தை தொடுவதில்லை என்றார். எனக்கு அவருக்கு கேட்ட ரொட்டியை வாங்கித்தராமல் அங்கிருந்து செல்ல மனமில்லை.
நான் என் குரு வாழ்ந்த இடத்தை அடைவதைவிட இந்த முதியவரின் பசி தீர்ப்பது மிக முக்கியமாக தோன்றியது.
ஓகே, போகலாம் வாருங்கள் என்றேன். பெரியவர் நான் போகவேண்டிய திசைக்கு நேர் எதிரான திசையில் நடந்தார். சில நிமிடங்கள் கழித்து ஒரு சிறிய ஓட்டலில் நுழைந்தார். (அந்த உணவகத்தில் பெரியவருக்கு ஏக வரவேற்பு. அவர் கேட்காமலேயே உணவு தந்து உபசரிப்பார்கள், என்று புரிந்தது) அங்கே கௌண்டரில் ரூபாய் 50/- ஐ தந்துவிட்டு பஸ் ரிசர்வேஷணுக்கு விரைந்தோம். ஆபீஸ் பூட்டியாகிவிட்டது. இதை இங்கே நிறுத்திவிட்டு முக்கியமான செய்திக்கு வருவோம்.
இந்த பெரியவர் மாத்திரம் இடைபடாமலிருந்தால், பஸ் செல்லும் மலைப்பாதையில் நிலச்சரிவு ஒன்றில் மாட்டிக்கொண்டு, குறைந்தது ஒருநாள் முழுவதும் உணவு உறக்கம் இல்லாமல் மீத (சுமார்) 38 மக்களுடன் சேர்நது அவதிக்கு உள்ளாகி இருப்போம்.
6 . 2. கேட்காத கேள்விக்குக் கிடைத்த பதில்.
இது சில வருடங்கள் முன் நிகழ்ந்தது. ஒரு நாள் என் மாணவர் ஒருவர் ஒரு அச்சகத்திற்கு என்னை அவருடைய மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.
திடீரென்று திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, வேறு ஒரு திசையில் சென்றார்.
அந்த நாட்களில் என் மனதில் ஒரு தீவிரமான கேள்வி. அதாவது, ஆன்மீகத்தில் நுழைய ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருப்பது போலத் தோன்றுகிறது.
மற்ற கல்விகளைப்போல, புத்தகத்தை படித்துவிட்டுத்தான் ஆன்மீகராக மாறவேண்டும் என்பதில்லை. அதுமட்டுமல்லாமல் வேதங்கள், உபனிஷதுக்களைப் படித்த எல்லோரும் ஆன்மீக சாதனையாளர்களாக மாறுவதும் இல்லை.
இதை படிப்பவர் பலர் படிக்க ஒரே ஒரு காரணம், தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் மட்டுமே. இவர்களுக்கு தாங்கள் படித்ததை எதையும் செயல் படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லாதவர்கள். (இண்டெலெக்சுவல் க்யூரியாசிட்டி – மிஸீtமீறீறீமீநீtuணீறீ சிuக்ஷீவீஷீsவீtஹ்- என்பார்கள்).
ஒவ்வொருவரின் ஆன்மிக பயணமும் தனித்தன்மை வாய்ந்தது. அப்படியானால் ஞானிகள் விட்டு செல்லும் கிரந்தங்கள், ஏடுகள், அறிவு விளக்கங்கள் யாருக்காக?
பல நாள் சிந்தனையில் கிடைத்த பதில்கள் எதுவுமே எனக்கு திருப்தி தரவில்லை.
இந்த மாணவர், ஒரு பிள்ளையார் கோவில் முன்னால் தன் வண்டியை நிறுத்தி 86 வயதான ஒரு பெரியவரை அறிமுகம் செய்தார். என்னைத் தனது குருவாக பெரியவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பதிலுக்கு, பெரியவர் நலம் விசாரித்துவிட்டு, ஏதோ நான் கேட்டு பதில் சொல்வது போல, இவ்வாறு கூறினார்.
’கிரந்தங்கள் பலவற்றை சமஸ்கிரதத்திலிருந்து கன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது எனது வழக்கம். யாரோ என்னை எதற்காக யாருக்காக செய்கிறாய் என்று கேட்பது போல தோன்றியது’.
நம்மிடையே. இப்படி சிலர் மனிதர்கள் எப்போதும் உண்டு. அவர்கள் ஆன்மிக சாதனைகளில் தன் மனதை ஈடுபடுத்தாமலேயே, அதைப்பற்றி அறிய நாட்டம் கொள்வார்கள். அவர்களுக்காகத் தான் என் போன்ற பலர் எழுதுகிரார்கள் என்று வைத்துக்கொள்ளலாமே என்று முடித்துவிட்டு. ‘நான் இப்போது அவசரமாக போய்க்கொண்டிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சந்தித்து விளக்கமாகப் பேசுவோம் என்றார்.
நமது எண்ண அலைகள் மற்றவரை எட்ட நமக்கு தாடியும் தவமும் தேவை இல்லை. இது எனக்கு நிகழ்ந்த எண்ணற்ற அனுபவங்களில், சமீபகாலத்தைச் சேர்ந்தது.
6 . 3 ஞானிகள் அறிவதென்ன?
- நாம், மற்றும் நமது விஞ்ஞானிகளும் உணர்ந்து அறியக்கூடிய இந்த உலகத்தை பற்றி அறிவதோ, மிக மிக குறைவு. அதிலும் நாம் சிறிதும் உணர முடியாத அண்டத்தை பற்றிய அறிவு அறவே இல்லை என்று சொல்லலாம்.
- விஞ்ஞானிகள், விரிவடையும் ஒரு அண்டத்தைப் பற்றி பேசுகிறார்கள். மெய்ஞானிகள் கோடான கோடி அண்டங்களை பற்றி சொல்கிறார்கள்.
- நாம் அறியும் உலகம் போல கோடான கோடி உண்டு. அவைகள் ஒரு பேருயிரின் பல பாகங்களாக இருக்கலாம்.
- நாம் அறிந்த அணுவுக்குள்ளே உலகங்கள் உண்டு. அண்டங்கள் உண்டு. அணுவை விட சிறிய உலகங்களும், நாம் அறிந்த அண்டங்களை விட கோடானு கோடி பங்கு பெரியதான உலகங்களும் இருக்கலாம்.
- நமது வாழ்க்கே நமக்காக இல்லை என்பது ஒரு உண்மை. குறுகிய நோக்கில் நாம் நமது திட்டப்படி வாழலாம். விரிந்த நோக்கில், நமது வாழ்வு பேருயிரின் விருப்பத்திற்காக நடைபெறுவது மாத்திரமே உண்மை !
- நாம் நினைத்தும் பார்க்க முடியாத அகில அண்டத்தைப் பற்றிய அறிவும். பிறப்பின் ரகசியங்களையும் அறிந்தவர்கள்.
6 . 4 ஒரு ஜென் கவிதை
ஆன்மீகப் பெரியவர்கள் ஆன்மீகப்பயணத்தில் பிரம்மனைக் கண்டு கேகுலுக்கியதும் என்ன செய்கிறார்கள்?
இதற்கான பதில் கீழே காணும் ஒரு ஜென் கவிதையில் புதைந்திருக்கிறது, .
ஜென் கற்பதற்கு முன்னால் மலைகள் மலைகளாக இருந்தன, ஆறுகள் ஆறுகளாக இருந்தன.
ஜென் கற்கும்போது, மலைகள் மலைகளாக இல்லை, ஆறுகள் ஆறுகளாக இல்லை.
ஜென் கற்பின், மலைகள் மலைகளாக இருந்தன, ஆறுகள் ஆறுகளாக இருந்தன.
இந்தக் கவிதை, ஜென் புத்தமத ஞானிகளால் உருவாக்கப்பட்டது. மற்ற புத்தமதக் கதைகளைப் போலவே, ரத்தினச் சுருக்கமானது. அதனால் தான் என்னவோ படிப்பவருக்கு உடனே இதுதான் பொருள் என்று புரிவதில் தடங்கல் உண்டாகும். கீழே காணும் (நான் தரும்) விளக்கத்தை படித்தபின் மீண்டும் ஒருமுறை, ஜென் கவிதையைப் படியுங்கள்.
நாமெல்லாம் பொருள் உலக வாசிகள். பிறந்து வளரும்போது ஆறு, மலை என்றும் பல பொருள்களை பார்த்தும், கேட்டும் உணர்ந்தும், பலர் சொல்லியும் அறிகிறோம்.
இந்த அறிதலினால், இந்த உலகே, நம்மை, அதோடு, நமது வாழும் வகையை, வாழ்க்கேயை – பொருள்பாதையை – நாம் நன்றாக அறிந்ததாக உணர்கிறோம். அதோடு வாழ்க்கேயில் அடையவேண்டிய பல இலக்குகளை நாம் தீர்மானிக்கிறோம்.
வாழ்க்கேயின் முதல் கட்டத்தில் நாம் காணும் அனைத்தும் உண்மையாகவே தெரிகிறது. அதாவது, மலைகள் எல்லாமே மலைகளாகவே தெரிகிறது, ஆறுகள் அனைத்தும் ஆறுகளாகவே தெரிகிறது.
நம்மில் பலர் பல இலக்குகளை தீர்மானித்தாலும் சில இலக்குகளை அடைகிறோம். இந்த சிறிய வெற்றிகளால் நமக்கு இந்த உலகத்தைப் பற்றி எல்லாமே தெரிந்துவிட்டதாகவே உணர்கிறோம்.
பல இலக்குகளை நாம் அடைவதில்லை. அடையமுடியாத இலக்குகள் சிலரை மட்டும், அதுவும் சில நேரங்களே வாட்டுகின்றன.
பலர் இதை மறந்து மீண்டும் தனது முயற்சிகளை தொடர்கிறார்கள். சிலர் இறை வழிபாடு, தர்ம சிந்தனைகள் சமுதாய நலன் என்ற நல்ல எண்ணங்களோடு பொருள் பாதையில் செல்கேயில், தோல்விகளின் வலிகளை உணர்வதில்லை.
வேறு சிலரோ அவசியமோ இல்லையோ, வயதானவர் கேத்தடியுடன் செல்வதைப்போல பொருளுலகத்தில் முழு நேரமும் கடவுளை, மனதில் இருத்தியே செல்வார்கள். இந்த வகையில் பலருக்கு ஜென்னோ அல்லது எந்தவித ஆன்மீக பாதையோ அவசியம் இல்லை. இவர்கள் பெரும்பான்மையானவர்கள்.
ஆனால் சிலரை சில தோல்விகள் மீள முடியாத துக்கத்தில் தள்ளுகின்றன. இவர்கள், தாங்கள் அறிவதெல்லாம் உண்மையல்ல என்ற எண்ணத்தை அடைகிறார்கள். ( பாரதியார் பாடியபடி இவை எல்லாமே காட்சிப் பிழைகளோ!)
காண்பதெல்லாம், ஒரு மாயையே, ஆறுகள் ஆறுகளல்ல, மலைகள் மலைகளல்ல என்ற முடிவுக்கு வருகிறார்கள். இந்த முடிவு இவர்களை இவைகள் உண்மை இல்லை என்றால், மாயை என்றால், உண்மை என்ன என்ற தேடலில் மாட்டுகிறார்கள்..
அப்போது, ஜென், உபநிஷத், யோகா, தியானம்மனம் ஆகியவற்றில் அந்த மக்களின் மனம் செல்கிறது. இதுவே இரண்டவது கட்டம்.
வெகு சிலர், பயணத்தின் இறுதியை அடைகிறார்கள். இவர்கள் அறிய வேண்டிய உண்மைகளை முழுவதும் அறிந்தவர்கள். படைப்பின் ரகசியத்தை அறிந்துவிட்டார்கள். உலகத்தில் எந்த நிகழ்வும் இவர்களை துன்புறுத்துவது இல்லை.
ஆனால் இதை உணராத உயிர்கள் அனைத்தும் துன்புறுவதையும் கண்டு துயரம் கொள்கிறார்கள். அன்புடனும் அனுதாபத்துடன் இவர்களைக் கண்டு உதவும் சில உயர்ந்த உள்ளங்கள் உண்டு.
வள்ளலாரின், அணையாது அடுப்பு (மூடாத அடுக்களை), ஸ்வாமி ராமாவின் மருத்துவமனை ஆகியவை இன்றும்நாம் கண்டு உணரக்கூடியவை.
(நாம் அவற்றை கண்டுக்காமல், இந்த மகான்களை பொருளுலக பிரச்சனைகளுக்கு உதவி கேட்பதோடு நிறுத்திக்கொள்வது, எவ்வளவு அறிவீனம்?).
ஆன்மீகப் பயணிகளின் மூன்றாவது கட்டம் இது.
இவர்கள் ஆறுகளை ஆறுகளாகவே அறிகிறார்கள். அதேபோல மலைகளும் இவர்களுக்கு மலைகளாகவே தெரிகிறது. அப்படியானால், முதல் கட்ட மக்களுக்கும், மூன்றாவது கட்ட மக்களுக்கும் வித்தியாசம் இல்லையா? உண்டு!
ஞானிகளின் அறிவு, தங்களை மாயையின் பிடியிலிருந்து தப்பி, விரும்பியபடி வாழ அனுமதிக்கிறது. வாழும் காலத்தில் அவர்களை, துன்பங்களும் துயரங்களும் துரத்துவதில்லை.
6.5 ஞானிகளும் அறிவும்.
வட மொழியில் ஞானி என்றாலே அறிவு உள்ளவர் என்ற பொருள். எல்லோருமே ஞானியாகிவிட்டால் இயற்கே தரும் இன்னல்களில், வறுமையில், கடும் நோய்களில் மக்கள் துன்பம் அடைய மாட்டார்கள் இல்லையா? அதனால் மனிதர்கள் அனைவரையும் ஞானிகளாக்கிவிட முடியாதா என்றுசில நல்ல எண்ணங்கள் கொண்ட என் நண்பர்கள் என்னைக் கேட்பதுண்டு.
என் பதில்: செய்ய இயலாதது என்றல்ல. ஆனால் அதன் பின், பொருட் பாதையில் செல்ல மனிதர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அது நம்மைப் படைத்தவனுக்குப் பிடிக்காது. மேலும் விவரம் சிறிது சிக்கலானது. எனவே, இவற்றை ஓட்டங்கள் என்ற அடுத்த புத்தகத்தில் படிக்கலாமே?
இப்போது ஞானியாக அறிவு தேடும் படலத்திற்கு வருவோம்.
ஞானியாக அறிவு வேண்டும். அதுவும் சாதாரண அறிவு இல்லை. இரண்டாம் மூன்றாம் வகை அறிவு.
அது என்ன?
(1) தெரிந்தது (2) தெரிந்து கொள்ள முடியும் என்ற வகை (3) தெரிந்து கொள்ள முடியாதென்ற வகை.
(1) முதல் வகையான தெரிந்தது என்றவகை அறிவின் ஒரு பகுதியை நாம் நமது அறியும் பொரிகளினால் பிறர் உதவியின்றி அடையலாம். மேலும் ஒரு பகுதியை வேறு ஒருவர் சுட்டிக்காட்டி விளக்கினால் நம்மால் அறிந்து கொள்ள முடியும். இது கடினம் இல்லை. இந்த வகை அறிவை, நம்மைப் போன்ற சாதாரண மக்கள், ஞானிகள், விஞ்ஞானிகள் ஆகிய அனைவரும் எளிதாக அடையலாம்.
(2) தெரிந்து கொள்ள முடியும் என்ற வகை அறிவு. இது சாதாரண மக்கள் சம்பந்தப்படாதது. பொரிகளுக்கு அப்பார்ப்பட்ட அறிவுகள் என்ற வகை. உதாரணமாக, மிகச் சிறிய உயிர்களை மைக்ராஸ்கோப் மூலம் காணலாம். கோடிக்கணக்கான மைல் தூரத்தில் உள்ள கிரகங்களைக் காண்பது, அணுவைத் துளைத்து அணு சக்திகளை பயன் படுத்துவது என்று எண்ணற்ற அறிவு பொருந்தியவை அண்டத்தில் உண்டு. இது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய வகை வகையான உபகரணங்களின் உதவியால் மட்டுமே அறிய உதவும். ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் என்ற இருதர மக்களும் பயணம் செய்யும் இடம்.
(3) மூன்றாம் வகை அறிவு. சாதாரண மக்கள் என்றும் அறிந்து கொள்ள முடியாது என்ற வகையிலானது. இது ஞானிகள் மாத்திரம் பயணம் செய்யும் இடம்.
மனிதன் ஞானியாக மாறுவதற்குத் தேவையான அறிவை, அதாவது மூன்றாம் வகை அறிவை எப்படி அடைகிறான்? இதை இரண்டு விதமாக விளக்கலாம். முதல் விதத்தை இப்பொழுது படிக்கலாம்.
(1) ஒரு உடலுக்குள்ளே பல மனிதர்கள்
மனிதன் என்பவன் ஒரு உடலாக தெரிந்தாலும், அவனுள்ளே எண்ணற்ற மனிதர்கள் உண்டு. உதாரணமாக, ஒரு பாடகன் (சிலருக்கு குளியரையில், வெளியே வருவான்) ஒரு திருடன் (பிறர் அறியாமல் நமக்கு சொந்தமில்லாததை கேயகப் படுத்துகிறோம்), ஒரு கொள்ளைக்காரன் (அதிக விலைக்கு விற்கும் வியாபாரி கூட ஒரு கொள்ளைக்காரன் தான்). ஒருகொலைகாரன் (கொசுவை அடித்துக் கொல்லும் போது) தியாகி (பஸ்ஸில் ஒரு முதியவருக்கு தன் இருக்கேயைத் தந்து உதவும்போது), ஒரு வள்ளல் (ஒரு ஏழைக்கு மனம் இரங்கி தானம் செய்யும்போது). ஒரு ஆசிரியர் ( ஒருவருடன் தான் அறிந்ததை பகிர்ந்து கொள்ளும் போது). ஒரு மாணவன் (படிக்கும் பொழுது அல்லது பிறர் விவரிக்க, அப்பொழுது கவனத்துடன் கேட்கும் பொழுது).
இப்படிப்பட்ட மனிதர்கள் அவ்வப்போது தேவைக்கும் சூழ்னிலக்கும் ஏற்றவாறு உடலிலிருந்து வெளிவந்து செயல்பட்டுத் திரும்புவது நாம் அறிந்ததே.
இவற்றின் உள்ளே, பலரையும் கடந்து செல்லும்போது, கடைசியாக ஞானியைக் காணலாம். மேலே குறிப்பிட்ட பலவித மனிதர்கள் புலன்களுக்கு, உணரும் கருவிகளுக்கு அடிமையாக வாழ்கிறார்கள். இந்த அடிமைகள், இடத்தைக் காலி செய்ய வைத்தால் ஞானி மத்திரமே காணப்படுவார்.
இந்த நிலையில் ஒரு மனிதன் ஒரு ஞானியாகப் பிரகாசிப்பான்.
(2) மண்ணில் காலூன்றிய புதிய பிறவியுடன் வருவது, ஒரே ஒரு இயல்பு, அதாவது ஞானியின் இயல்பு. புதிய மனிதனை, பல உறவுகளும், உற்றவரும் மற்றவரும் சூழ்ந்துள்ளார்கள். இவர்கள், இடைவெளியே இல்லாமல் தாங்கள் அறிந்த தவறான அறிவை புகட்டுகிறார்கள். இப்படியாகத் ஒவ்வொரு தவறான அறிவுடனும் ஒரு புதிய மனித இயல்பு மனிதனுடன் சேருகிறது.
ஒரு கட்டத்தில் ஞானியின் இயல்பு இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு பல வித தீய, செய் இயல்புகள் மற்றும் செயலற்றவர்கள் மனிதனுடன் சேருகிறார்கள்.
மனிதன், நல்லறிவை அடைவதன் மூலம் தவறான அறிவு ஒவ்வொன்றும் வெளியேறுகிறது. பிரிந்து செல்லும் தவறான அறிவு, அதோடு இணைந்த இயல்புகளையும் தன்னுடன் கொண்டு செல்கிறது. கடைசியில் எஞ்சுவது, ஞானியின் இயல்பு மட்டுமே.
வாசகர்களே,
இப்பொழுது, உங்கள் ஆன்மிகப் பயணம் தொடங்கட்டும்.
நடராஜன்.