அத்தியாயம் 2
ஆத்திகமும், ஆன்மிகமும்.
வாழ்க்கை என்னும் பயணம் :
பல ஞானிகள் மனிதனின் இயக்கத்தைப் பயணமாகவும், இந்த உலகத்தில் நாம் வாழும் வகையை வாழ்க்கையைப் பாதை என்றும் உவமானமாகச் சொன்னார்கள்.
மேலும் உயிர்கள் எல்லாம், ஒரு முடிவில்லாத, பயணத்தில் உள்ளன. இந்த பயணத்தில் இடைவெளி உண்டு. அந்த இடை வெளியில், நாம் உடைகளை மாற்றிக் கொள்வதைப் போல உயிர்கள் தன்னுடன் கூட்டணி சேரும் உடலை மாற்றிக் கொள்வதாக ஞானிகள் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு இடைவெளியையும் நாம் மரணம் என்று அறிகிறோம். இஸ்லாம் மதப்பாதையில் இந்த மரணத்தை ஒரு நீண்ட உறக்கமாகவே (உறக்கத்தின் அக்கா என்று) கருதுவதாக அறிகிறோம்.
பயணிகளும் வழிகாட்டிகளும்:
உயிருடன் கூட்டணி சேர்ந்து இயங்கும் பலவிதமான உடல்களில் ஒன்று தான் மனிதர்கள்.
மனிதர்களை, பயணிகள் என்றும் வழிகாட்டிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். அறிவில் குறைந்த நாமெல்லாம் பயணிகள் என்றால், நாம் அறிந்த மகான்கள் எல்லோருமே வழி காட்டிகள்.
சுருக்கமாகச் சொன்னால், நமது பயணம் செய்யும் பாதை கரடு முரடான ஒன்று. அது இருட்டான ஒரு பாதையும் ஆகும். இந்த இருட்டான, கரடு முரடான வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்யும் போது விழுவதும், காயங்கள் அடைவதும் தப்பாது.
பயணமோ நில்லாது நடக்கவேண்டும். நடக்கையிலே காயங்கள் தோன்றுகின்றன. காயங்கள் பயணத்திற்கு தடையாகிறது. என்ன செய்யலாம்?
வழிகாட்டிகளான மகான்கள், மக்கள் காயங்களால் துன்பம் அடையாமல் செய்ய – அதாவது, நலமாக வாழ, இரண்டு உபாயங்களைத் தெரிவித்தார்கள்.
முதலாவதாக ஆத்திகம், அடுத்தது ஆன்மிகம்
முதலாவது ஆத்திகம்: ஆஸ்த்தா என்ற வடமொழிச் சொல்லில் இருந்து மருவிய சொல். ஆஸ்தா என்றால் நம்பிக்கை. இதை ஒரு உவமானத்தால் விளக்கலாம்.
ஆத்திகம், (இருட்டில் கரடுமுரடான பாதையில் செல்ல கைத்தடி எப்படி உதவுகிறதோ, அதே போல உதவும் ஒரு உபாயம்.) கடவுள் என்ற ஒரு கண்ணில் புலப்படாத ஒரு பேருயிருடன் அன்பு கொள்வது. அந்த பேருயிரின் வசம் தங்கள் கவனத்தை முழுவதுமாக திருப்பிவிடுவது. அல்லது அந்த கடவுளின் நட்பை அடைய முயற்சி செய்வது.
வேறுவிதமாகச் சென்னால் கடவுளைக் காக்காய் பிடித்து, அவருடைய அருளை அடைந்து, பயன் பெறுவது. இந்த வகை வாழ்க்கை கண் பார்வை இழந்தோரின் உதவிக்கு வைத்திருக்கும் கைத்தடி போன்றது. இந்தக் கைத்தடி முதல் பாகம்.
ஆத்திகத்தில், முக்கியமான இரண்டாவது பாகம் (ஒரு வரை படம் -Mஅக). வாழும் காலத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்ற வழிமுறைகள். இவையே மகன்கள் வகுத்த வாழ்க்கைப்பாதை.
பொய் பேசக்கூடாது. பொறாமை, பேராசை இல்லாமல் வாழ வேண்டும். பிறரை ஏமாற்றக்கூடாது, எளியவர்களுக்கு உதவவேண்டும். தீமை செய்வோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியல் இந்தப் பாதையிலே காணப்படும்.
இதைக் கடைபிடித்தால் போதும். கைத்தடி (கடவும் நம்பிக்கை, ஆராதனைகள் என்று எதுவும் தேவை) இல்லாமலும், கரடு முரடான வாழ்க்கைப் பாதையில் அதிக அளவு காயம் அடையாமல் பயணம் செய்ய முடியும். விழுவதும் வலிகளும் அதிகம் இல்லை !
நம்மில் பலருக்கு இந்த வலி குறைந்த பாதைகள் ஒத்துவராது. ஏன்? காரணம் இல்லாமல் இல்லை. உதாரணமாக:
- அறம் செய விரும்பு. – என்ற ஒரு ஞானியின் அறிவுரை. (பிறருக்குக் கொடுப்பதில் நமக்கு விருப்பம் இல்லை).
- ஐயமிட்டு உண். (ஒத்துவராது)
- ஈவது விலக்கேல். (நமது பொருளை, செல்வத்தை, உழைப்பை பிறருக்குக் கொடுக்கப் பிடிக்காது. நமக்கு என்றுமே வாங்கத்தான் பிடிக்கும்.)
- ஆறுவது சினம். – என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது.
ஓட்டுமோத்தமாக எந்த ஒரு நல்ல அறிவுறையும் நமக்குப் பிடிக்காது.
எனவே, மதங்கள் காட்டிய வழிகள், பாதைகள் பெரும்பாலான மக்களுக்கு பயன் படுவதில்லை. ஆகவே நம்பிக்கை என்ற கைத்தடியை மட்டுமே பற்றிக் கொண்டு, மகான்கள் வகுத்த பாதையைவிட்டு வெகுதூரம் விலகி, கரடுமுரடான பாதையிலே செல்கிறார்கள்.
அப்படி இருந்தபோதும், பொதுவாக, நம்பிக்கை என்கிற கைத்தடியுடன் உதவியுடனே மாத்திரம் வாழும்போது காயங்களும் வலிகளும் சற்று குறைவாகவே இருப்பதை உணர்கிறோம்.
கைத்தடி இல்லாமலும் காயம் சிறிதும் வராமலும் பயணம் செய்ய வேறு ஒரு வித்தியாசமான வழி உண்டு. அது அறிவு என்னும் விளக்கைப் பிடித்தபடி பயணம் செய்வதுதான். அதுதான் ஆன்மிகம்.
அறிவு என்கிற விளக்கு.
இதைப் பற்றி முந்தைய அத்தியாயத்தில் கண்டோம்.
இந்த புத்தகத்தில் இதுவரை பலர் சொல்லி, சிலர் எழுதி நாம் அறிந்த சிலவற்றை திரும்ப ஒருமுறை சொல்லுவோம். அதில் நாம் நம்பிய விஷயங்களும் சில சமயம் நம்பமுடியாத விஷயங்களும் அடக்கம்.
ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் சொல்வதை நாம் நம்பலாம். பல்வேறு காலகட்டத்தில் உலகெங்கிலும் தோன்றிய இந்த வகை மனிதர்கள் தாங்கள் உணர்ந்ததைச் சொல்கிறார்கள். ஓரு சிலர் உணர்ந்ததில் சில சமயங்களில் குறைவு வரலாம். ஒரேயடியாக இவர்களில் எவருக்கும் பொய்களைச் சொல்லக் காரணம் ஏதும் இல்லை.
ஞானிகள், உலகின் பல பாகங்களில் சித்தர்கள், செயிண்ட்கள், மகான்கள், முனிவர்கள், சுபி ஞானிகள், புத்தபிக்குகள், சாதுக்கள் என்று பல பெயர்களில் அறியப்படுகிறார்கள்.
இவர்கள் அறிந்து சொன்ன அறிவிலே முழுகி, நாம் இதுவரை அந்த உலகத்தை, அண்டத்தை சித்தர்கள் சித்தரித்தது போல மெய் ஞானிகள் உணர்ந்தது போல, நாமும் காண்பதற்கு முயற்சி செய்வோம். வேறுவிதமாகச் சொன்னால், அறிவுப் பாதையிலே நடந்திடுவோம்.
நீண்ட பயணம் செய்யும்போது நம்மைப் படைத்த பிரம்மாவைக் கண்டு, அவருடன் நாம் கைகுலுக்குவோம்