அத்தியாயம் 3
ஆன்மா, உயிர்கள், ஓட்டங்கள்
ஆன்மா என்று நாம் சொல்வதை உலகின் பல பாகங்களில் வெவ்வேறு பெயர்களால் அறிகிறார்கள். உயிர், ரூ, ஸ்பிரிட் ஸோல்.
மின்சாரம், காற்று, வாசனை, காந்தம், புவி ஈர்ப்பு ஆகியவற்றைக் காணமுடியாது. ஆனால் ஏதாவது ஒரு புலன் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு மாதிரியாக உணரலாம்.
இந்த ஆன்மா இருக்கிறதே, நமது அனைத்து புலன்களுக்கும் அப்பாற்பட்டது. அதனால் ஆன்மா ஒன்று இல்லை என்று முடிவு செய்துவிட்டால், வாசகப் பெருமக்களே, தயவு செய்து இந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேறு வேலை இருந்தால் செய்யுங்கள்.
இந்த ஆத்மாவை ஒரு மாதிரியாகப் புரிந்து கொள்ளாமல் பிரம்மனைக் காண முடியாது. முதன் முதலாக அதை படித்து உணர்ந்து, உடல்களை ஆராய்ந்து, உயிருக்கு ஆதாரமான ஓட்டங்களை அறிவது அடுத்த கட்டம்.
ஆன்மிகம் = புலன்களில் சிக்காதவற்றை தேடுவது.
புலன்களில் சிக்காத ஆன்மாவை அறிவதே ஆன்மிகம் என்று சொல்லலாம்.
தினசரி வாழ்கையில், வீட்டிலோ அல்லது ஆபீஸிலோ, அவரமாக ஒரு பொருளையோ அல்லது காகிதத்தையோ தேடாத நாள் இல்லை என்பது உண்மைதானே! அப்படி நாம் தேடும் பொழுது, முன்பு ஒருநாள் தேடியும் கிடைக்காத சில பொருட்களும் அன்று கிடைக்கும். உண்மைதானே!
ஆன்மிகத்திற்கு ஒரு புதிய விளக்கம்.
அதேபோல தேடுதலில் ஈடுபட்டிருக்கும் எல்லா ஞானிகளுக்கும், ஆன்மாவைத் தேடும் போது, ஆன்மா மட்டுமின்றி, புலன்களில் சிக்காத பல வேறு அறிவையும் அடைவார்கள். எனவே புலன்களில் சிக்காத அனைத்து அறிவையும் ஆன்மிகதோடு இணைத்தால் அது தப்பில்லை.
விஞ்ஞானிகளுக்கும் தங்கள் தேடலில்போது, என்றுமே தாங்கள் தேடாத பல அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஞானிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வித்தியாசங்கள் காணாமல் போவதைக் கவனிக்கலாம்.
தேடல்கள் – ஆன்மிகத்தின் அடிப்படை
மனிதர்கள் மட்டுமில்லை, உலகில் உள்ள உயிர்களெல்லாமே எதையாவது விடாமல் தேடுகின்றன. அதனால் வாழ்க்கையே ஒரு தேடல்களுடன் இணைந்த பயணமாகக் கொள்ளலாம்.
வாழ்க்கையை ஒரு ரயில் பயணமாக, நாடக மேடையாக, என்று பல விதமாக அலசினார்கள் ஞானிகள். இதை பின் ஒரு அத்தியாயத்தில் அலசுவோம்.
நாம், இந்த புத்தகத்திலே வாழ்க்கையை ஓட்டங்களாகவும் உயிர்களை (இடைவிடாது) ஓடுபவர்களாக சித்தரிப்போம். வாழ்க்கையை இந்தக் கோணத்தில் காணும்போது ஆன்மிகத்தின் அடிப்படை அழகாக வெளிப்படும்.
ஞானிகள், ஒரு வித்தியாசமான தேடுவோர்.
நாமெல்லாம், கண்ணால் கண்டதை கேட்டதை எல்லாமே தேடுவோம். அதிகாரம் அங்கீகாரம் என்றும் உலகிலுள்ள எல்லாவற்றையும் அடைவதற்கு விரும்புகிறோம். பொன்னையும் பொருளையும் தேடியே நமது வாழ்க்கையை நகர்த்துகிறோம்.
நம்மில் சிலர் வினோதமாகவும் வித்தியாமாகவும் உள்ள தேடல்களில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
இவர்களில், கண்ணுக்குத் தெரியாத கடவுளின் அருளைத்தேடிச் சென்றவரும், நான் யார் எனக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு என்று தனக்குளேயே எழுந்த கேள்விக்கு விடைதேடிய சிலரும், தாடி வளர்த்து, உறவுகளை உதறிவிட்டு, காடு, மலை, தனிமை என்று தேடிப் போனவர்களும் உண்டு.
கடவுளை, உண்மையை – என்று கண்ணிற்குப் புலப்படாத பலவற்றைத் தேடும் மக்கள் என்றுமே இருந்தார்கள். சித்தர்களைப் பற்றிய நூல்களில், ஒவ்வொரு யுகத்திலும் பல்லாயிரம் ஞானிகள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.
நாம் நன்றாக அறிந்த தேடுவோர்:
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவாவது கிடைக்குமா? அடுத்த வேளை உணவு எங்கே கிடைக்கும் என்று தேடும் மக்களே உலகில் மிக அதிகமான இருக்கும்போது, ஞானிகளை மட்டுமே, நமது உலகம், தேடுவோராக அங்கீகரிக்கிறது.
உயிர்கள் உள்ள வரை இப்படி பலவிதமான தேடுதல்கள் நடைபெரும்.
இந்த அத்தியாயத்திலிருந்து ஆரம்பித்து, உங்கள். மூளையை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
உங்கள் வசதி எப்படி ?
அதுவும் மிக சுலபம்தான், உங்களின் ஊகிக்கும் திறமையை, உபயோகிக்க வேண்டும். மனக் கண்ணால் காணும் சக்தியை. வளர்க்க வேண்டும். பிறகு, இந்த திறனை முழுவதாகப் பயன் படுத்தலாம்.