சுமார் நூற்று முப்பது பக்கங்களில் சொன்னதை, சுருக்கமாகச் சொன்னால், எப்படி இருக்கும்?
நாம் பிறந்து வாழ்வதும், நமக்காக இல்லை. நமது பிரம்மாவின் நலனுக்காக மாத்திரமே.
கடல் உள்ளவரை அலைகள் இருக்கும். அண்டம் உள்ளவரை கடல்களும், உயிர்களும் பிறவிப் பெருங்கடலில், நீந்திக்கொண்டே இருப்பது தப்பாது.
நான், வாசகர்கள், யானை, கொசு, ஈ, புழு, பூச்சி, பல்லி, மரம், செடி, கொடி, கடல் அலைகள், மலைகள், நட்சத்திரங்கள், சூரியன் சந்திரன் போன்ற கிரகங்கள் எல்லாமே பிரும்மாக்கள்தான். எல்லாமே, நமது பிரம்மாவின் உடல் பாகங்கள் தான். பல கோடி பிரம்மாக்கள் சேர்ந்து ஒரு அண்டமாகிறது. அண்டம் ஒரு பிரம்மா. பல அண்டங்கள் சேர்ந்து ஒர் பிரம்மாண்டமாகிறது.
பிரம்மாண்டம், பிரம்மாவின் பிரம்மா ! பிரம்மாவின் பிரம்மாவிற்கும் பிரம்மாக்கள் உண்டு.
அண்டங்கள் ஒரு அடுக்குத் தொடர்:
அடுக்கு மாடிகள் ஒன்றன்மீது ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால், அண்டங்கள் அடுக்கு அடுக்காக, அதே சமயம் ஒன்றன் உள் ஒன்றாக அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் தட்டில் இருக்கும் பிரம்மா தான் பரப் பிரம்மாவோ ! ஆராய்ச்சிகள் தொடர வேண்டும்.
இதை மக்கள் நம்புவது கடினம். இதை மனதின் கண்களினால் காண முடிந்தவர்கள் ஞானியாகிறார். காண முடியாதவர்கள் மாயையின் ஆளுகைக்கு உட்பட்டு பிறவிப் பெருங்கடலை நீந்தியவாறே இருப்பார்கள். அவர்களும் சில லட்சம் தடவை பிறவி எடுத்து பின்னர் பிறவிக் கடலின் கரையைச் சேருவார்கள்.
இதைப் படிப்பதோடு உங்கள் சிந்தனைகள் நின்றுவிடக்கூடாது. தற்பொழுது, திருமூலரின் கவிதைகளில் ஆய்வைத் தொடர்கிறேன்.
நாம் ஞானியாக மாறினால், நமக்குக் கிடைப்பதென்ன?
அண்டத்தைப்பற்றி ஒரு திட்டவட்டமாக ஒரு ஐடியா கிடைக்கும். அப்படிக் கிடைத்ததால், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல நிகழ்ச்சிகள் – முக்கியமாக, துன்பம் தரும் நிகழ்வுகள், அற்ப சமாசாரங்களாகத் தோன்ற வாய்ப்பு உண்டு.
ஒன்றுமட்டும் நிச்சயம். காசு பணம் பொருள் பதவி ஆசைகள் ஞானியை அண்டுவதில்லை.
அப்படியானால், அமானுஷ்ய சக்திகளைக்கொண்டு என்னதான் செய்யலாம்? இது ஒரு பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இதற்கு ஒரு ஞானி பதில் தருகிறார்.
தொடரும் பிறவிகளிலும் அவர்கள் ஞானிகளாக வளர்ந்து சேமித்த அறிவை இழக்காமல் இருக்க உதவும் என்று நம்பப் படுகிறது. அதோடு, அடுத்தடுத்த பிறவிகளை, தாங்கள் விரும்பியபடி தேர்ந்தெடுக்கவும் இவர்களுக்கு சாத்தியமாகிறது. பல சித்தர்கள், இதே உடலோடு பலநூறு ஆண்டுகள் வாழ்ந்து பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகியவர்களைக் கண்டு கடைசியில் சிவனுடன் ஒன்றாகக் கலந்து தானே சிவனின் பாகமாக மாறிவிடுகிறார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை.
பொருள்களில் பற்று மனதில் மும்மலங்கள் ஆகியவற்றை சிறிதளவேயானாலும் அகற்ற தேவையான்ன மனப் பக்குவத்தை அடைய எனது எழுத்துகள் உதவியிருந்தால் எனது ஆராய்ச்சியின் மற்றும் எழுதியதன் முழுப் பலனை அடைந்துவிட்டதாக மகிழ்வேன்.
ஒரு வேண்டுகோள்:
இப்பவும், எப்பவும் இந்த புத்தகத்தில் கண்ட கருத்துகள் பற்றியும் உங்கள் விமரிசனங்கள், இந்த புத்தகத்தில் கண்ட கருத்துகளை உறுதி செய்யும் ஆதாரங்கள் மட்டுமில்லை, முக்கியமாக, வேறுபட்ட கருத்துகளையும் இணைய தளம் மூலம் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாமே!
நடராஜன் நாகரெத்தினம்