"

அத்தியாயம்  6

saint 005

மனித சமுதாயத்தில் பெரும்பாலான மக்களுக்கு ஒரு பிடித்த தொழில். தங்கள் கைகளுக்கு எட்டியதைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவதும், கிடைத்ததை பிறர் கண்ணில் படாதவாறு ஒளித்து வைப்பதும்தான்.  இது நாம் அறியாததில்லை.

உண்மையான ஞானிகளும் விஞ்ஞானிகளும் மாத்திரம்  இந்த நியதிக்கு  ஒரு விதிவிலக்கு.  மிக சிறியதாக புதியதாக ஒன்றை அவர்கள் அறிந்துவிட்டால் கூட, அதை பிரபலப் படுத்திவிடுவார்கள்.

இதில் மட்டுமில்லை, ஞானி-விஞ்ஞானி இரு கூட்டத்தினரின் தேடல்களிலும்  ஒரு ஒற்றுமை உண்டு.  இருவருமே மற்றவரைப்போல அதிகாரம், செல்வம், அங்காரம் என்று தேடி ஓடுவதில்லை.

ஞானி, கண்ணில் புலப்படாத ஆத்மாவையும் ஆண்டவனையும் தேடி ஓட,  விஞ்ஞானியோ,  கண்ணினால் காணமுடியாத, புலன்களினால் உணர  இயலாத அணுவினுள்ளும்  அணுவின் துகள்களையும் மனிதனின் மேம்பாட்டிற்கான சக்தியைத் தேடுவதும், அண்டத்தை அலசுவது நாம் அறிந்ததே!

இவர்களுள் ஒரே ஒரு சிறிய வித்தியாசம். விஞ்ஞானி நம்மைப் போன்ற மனிதர்களைவிட பல நூறு ஆண்டு அளவுக்கு அறிவில் முன்னேறியிருந்தாலும், ஞானிகளை விட  பல ஆயிரம் வருடங்கள்  அளவில் பின்னடைந்திருப்பதை நாம் அறியலாம்.

ஒருவிதத்தில், விஞ்ஞானிகள் தெரிவித்த அறிவில் சிறிய பாகத்தையும், ஞானிகள் தெரிவித்த  அறிவில் ஒரு பாகத்தையும் ஆதாரமாகக் கொண்டு, வாழ்க்கை என்ற ஓட்டத்தை நடத்திவருகிறோம்.

எந்த காலகட்டத்திலும் மனித சமுதாயத்தின் ஓட்டத்திற்கு இந்த இருவித ஞானிகளும் எப்படி ஆதாரமாக இருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.

ஞானிகள் தேடியது என்ன?

சிலர் கடவுளைத் தேடிப்போனார்கள்.

வேறு சிலரோ தோல்விகளில் துவண்டு, காண்பது எல்லாமே பொய் என்று முடிவு செய்து,  உண்மை என்ன என்று தேடப் போவார்கள்.

நான் யார்? இறைவனுக்கும் எனக்கும் தொடர்பு என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடியவர்கள் வேறு சிலர்.

எதை எப்பொழுது தேடினாலும், ஞானிகளின் தேடல்கள், மனதால் நடந்தேரும், ஒரு தொலை தூரப்பயணம்.

எந்த பயணத்திற்கும், பழகிய பாதைகள் உதவும். வழித் துணைக்கு ஆள் கிடைத்தால் மிகவும் நல்லது. அதைவிட,  வழிகாட்ட  பயண அனுபம் உள்ளவர்கள் கிடைத்தால் பயணம், மேலும், எளிதாகும்,   இல்லையா?

இந்த  நியதிகள்  ஆன்மிகப் பயணத்திற்கு விதிவிலகில்லை. இந்த  வித்தியாசமான  (மனதால் செய்யும்) பயணம்,  ஒரு அருள் பாதை அல்லது ஆன்மிகப் பாதையில்  செல்வதாக அறியப் படுகிறது.

இந்தப் பாதையில் பயணம் செய்பவர்கள் வெவ்வேறு கட்டங்களில்,  ஒரு சாதாரண மனிதர்களின், அசாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவது  அதிசயமில்லை.

பாதிப் பாதையில், அதுவரை கிடைத்த அறிவில், அதன் பயனில் மனம் மகிழ்ந்து, தொடங்கிய பயணத்தைக் கைவிட்டவர்கள் அனேகம்.

தேடியது கிடைக்காததில், மனம் உடைந்து, திரும்பியவரும் அனேகம் உண்டு.

இவர்கள் யாருமே கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே, சிலர் இந்த பிறவியில் (பஸ்ஸை) தவற விட்டாலும், அடுத்தடுத்த பிறவிகளில் இந்த பயணம், விட்ட  இடத்திலிருந்து விடாது தொடரும்.

ஆன்மிகப் பயணம் மாத்திரம், தொடங்கிய அந்தப் பிறவியிலேயே பயணம் முடிவதாக நினைக்க வேண்டாம். தொடங்கிய பிறகு, சில நூறு, அல்லது சில ஆயிரம் பிறவிகள் கூட எடுக்கலாம்.(மறு பிறவியில் நம்பிக்கை இல்லையா? (மிகச் சமீப காலம் வரை எனக்கும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது. காஞ்சி முனிவரைப் பற்றிய அனுபவக் கட்டுரை ஒன்று என்னை மறுபிறவி என்ற தத்துவத்தில்  உண்மை காண வைத்தது.)

இதில் வினோதம்  என்னவென்றால், இந்த வித தேடல்களில் ஈடுபடும்  மக்கள், தாங்கள்  ஓரு  பொழுதும் தேடவே தேடாத அறிவுகள், நினைத்தும் பார்க்காத பல அனுபவங்கள், விரும்பித் தேடாத சக்திகள்  என்று எதை எதையோ அடைகிறார்கள்.

வரும் பக்கங்களில் ஞானிகளின் மனித சமுதாயத்தின் ஓட்டத்திற்கு எப்படி உதவுகிறார்கள் என்று பார்க்கலாமா?

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book