"

அத்தியாயம் 01

வாழும் காலத்தில், நமக்கு ஏற்படக்கூடிய எல்லா துன்பத்திற்கும் காரணம்,  அறிவு இல்லாததே.

சில உண்மைகள்:

முதல்  உண்மை:  நமக்கும்,   நாம் அறிந்த பல நாலுகால்  உயிர் வகைகளுக்கும், வேறுபாடுகள் எதுவுமே சொல்லும் படியாக  இல்லை என்பது முதல் உண்மை. அதை, நம் தன்மானம் ஒப்புக்கொள்ளாத காரணத்தால், போகட்டும் என்று ஒதுக்கிவிடுவோம்.

அடுத்த உண்மை:  உதாரணமாக,  ஒரு தொழில் நடத்தி, பணக்காரராக வளர, உழைப்பு, தொழில் அறிவு இரண்டும் அவசியம்தான். ஆனாலும், அதோடு சிறிதளவாவது பணம், முதலீடாக வேண்டும் இல்லையா? அது போல அதிக அறிவை நாம் பெறுவதற்கு, சிறிதளவாவது, பண முதலீடு போல,  அறிவு அவசியம்.

எந்த ஒரு நாட்டு மக்களை, எந்த ஒரு காலத்திலும் அதில் ஒரு உண்மை தெளிவாகும். ஒரு லட்சம் (100,000) மனிதர்களை எடுத்துக்கொண்டால், 99,900 மக்களுக்கு அந்த அறிவு என்கிற ஐட்டம் கிட்டத்தட்ட கிடையாது என்று தீர்மானமாகச் சொல்லலாம். இரண்டு கால் மிருகங்களைப் போல இயந்திரமாகப் பிறந்து, மேலும் தன்னைப் போல சில இயந்திரங்களை உருவாக்கி,  இயந்திரமாக வாழ்ந்து  பழுதடைந்து மடிவார்கள். பிரம்மனுக்கு பிரச்சனை தராதவர்கள்.

நல்லறிவு கொண்ட மக்கள்.

மீதம் இருக்கும் இந்த 100 மனிதரில் ஒருவர் ஞானி, இரண்டு விஞ்ஞானி. மேலும் 27 மனிதர்கள் இநத ரக மனிதர்கள். அவர்களில் ஒரு சிலர் நல்ல  குருமார்கள் வேறு சிலர் நல்ல  ஆசிரியர்கள், நேர்மையான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள். இவர்களுக்கு நல்ல அறிவுண்டு. மற்றவரோடு  ஒத்து செயல்பட இயலாதவர்கள். சொத்துக் குவிக்கும் ஆசையில்லாதவர்கள். இவர்களால் அறிவில்லாத பலருக்கு தொல்லையில்லாவிட்டலும், பெரியதாக உதவி ஒன்றும் கிடைத்துவிடாது.

அறிபடைத்த தீயவர்கள்

மீதம் 70  மக்களில்ம்  வழி தவறிய அரசியல் பிரமுகர்கள், பேராசை கொண்ட வியாபாரிகள், தன்னலம் கொண்ட தொழில் அதிபர்கள். சொல்லும்படியாக ஒரு காரணமும் இல்லாத (இடைத்தரகர்கள்) செல்வந்தர்கள்.

இவர்கள் அறிவில்லாதவர்களை சுரண்டுவதும், சுரண்டிய பணத்தை நாடு கடத்துவதும் கடைசியாக மூச்சு விடும்வரை  இடைவிடாது செய்யும் தொழில்கள். இவர்களின் வெற்றிக்கு முக்கய காரணம், மற்ற தீயவர்களுடன் இணைந்து செயல்படும் தன்மை.

இவர்கள் பிரமனுக்கு  மிகவும் வேண்டியவர்களோ என்று எண்ண இடமுள்ளது. திகைப்பாக இருக்கிறதா? இதை பிறகு ஆராய்வோம். இவர்களுக்கு அறிவுண்டு, ஆனால் அது நல்லறிவில்லை.

அறிவில்லாத பிறவிகள்.

இந்த பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்களே – அதாவது, 99,900 நபர்கள் = இவர்களுக்கு தானாகவே எதுவும் தெரிந்து கொள்ளும்   சக்தி கிடையாது என்பது மட்டுமில்லை. வேறு  ஒருவர் விளக்கமாக எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ளும் சக்தியும் இவர்களுக்கு கிடையாது என்பதை நிச்சயமாக நம்பலாம்.

இவர்களை தீவட்டி தடியர்கள் என்று பலர் விமரிசனம் செய்தாலும் அறிவென்ற  தீ, அதாவது  அறிவுத்தீ தரும் ஒளி  இவர்கள்  வாழ்வில் துணை வருவதில்லை.

பிள்ளைப் பேறு என்ற பெயரில் கணக்கில்லாமல் பெற்றுத்தள்ளுவார்கள். அடிமையாக வாழ சிறிதும் அஞ்சுவதில்லை. பசிக்கும் வலிக்கும் பயந்து எந்த ஒரு ஆபத்தான வேலையையும் துணிந்து செய்வார்கள்.

இவர்கள் வாழ்க்கை புலன்களின் எல்லைகளுக்குள் அடைந்திருக்கும்.

இவர்கள் வாழ்வு பல விதமான நம்பிக்கைகளைச் சார்ந்தே இருக்கும். எந்த நம்பிக்கை வாழ்வின் ஆதாரமாகிறதோ அதே நம்பிக்கை இவர்களின் அழிவிற்கும் காரணமாகிறது. இவர்கள்  நம்புவதில் சில: கடவுள், ஜாதித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், வழி வழி வந்த  மூடநம்பிக்கைகள்.

மூன்றாவது உண்மை:

மேலோட்டமாக  பார்த்தால், மேலே கண்ட இரண்டு உண்மைகளால் – அறிவில் குறைவு காரணமாக –  அவரவர்கள்  வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் டன் அளவில் துயரங்கள் உண்டு.

அதன் பின் விளைவாக, மனதில் மற்றும் உடல்களில் தோன்றும் காயங்கள் குறைவில்லாமல்  என்றுமே உண்டு.

நமது வாழும் சூழ்நிலைகளோ, கல்விக் கூடங்களோ  அறிவை அடையச் செய்வதில்லை. பள்ளிக்கூடங்களில் மற்றும், கல்லூரிகளில் படித்து பல  பட்டங்கள் பெற்றவர்கள் கூட அடையும் காயங்களில் குறைவில்லையே, எதனால்? இந்தக் கல்விக் கூடங்கள், அறிவை அடைய வழிசொல்லுவதில்லை.

உயிர்களின் அறிவை அடைய முடியாமல்  இருப்பதற்கும்    ஆண்டவனுக்கும் ஏதோ ஒரு பெரும் பங்கு இருப்பதை ஒரு மாதியாகக் காணலாம்.

உயிர்கள் அறிவை அடைவது குறித்து  எந்த  அறிவு படைத்த தீயவர்களுக்கும் மற்றும் கடவுளுக்கும்  உடன்பாடு இல்லை போலிருக்கு.

மக்களுக்கு அறிவு கிடைத்தால் ஆண்டவருக்கும் ஆள்பவருக்கும் மரியாதை போய்விடும். இதனால் தானோ என்னவோ இந்த இருவருக்கும் மனிதர்கள் அறிவை அடைவது பிடிக்காது.

அறிவை அடைந்த எவரையும் ஏமாற்றி ஆளமுடியாது, இல்லையா. ? ஆள்பவர் மக்களுக்கு அறிவை அடையாமல் செய்யும் வழி, பயன் தராத பாடத்திட்டங்கள், முறை இல்லாத ஆசிரியர் நியமனங்கள், லஞ்சத்திலே ஊறிய கண்  காணிப்புக் குழுக்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், ஆண்டவன் செய்யும் சூழ்ச்சி என்னவோ?  காத்திருங்கள், கண்டுபிடிப்போம். அதுமட்டுமில்லை, நமது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்போவது:

உயிர்களுக்கு:

 கேள்வி: இந்தக் காயங்கள் ஏற்படுவது எதனால்?

 பதில்:   ஓட்டங்களால்.

 கேள்வி: மனிதருக்கு (உயிர்களுக்கு)த் தோன்றிய   காயங்கள் பிரம்மனை எப்படி பாதிக்கிறது?

  பதில் : அடுத்து வரும் பக்கங்கள் பதில் சொல்லும்.

  கேள்வி: ஞானிகள் காயங்களுக்கு எப்படி மருந்து   இடுகிறார்கள்?

  பதில்: இதையும் விளக்கமாகப் படிக்கலாம்.

மகான்கள் தோன்றியவாறு இருக்கிறார்கள்

எல்லாக் காலங்களிலும், உலகின் பல பாகங்களில், உங்களைப் போன்ற, என்னைப் போன்ற சாதாரண மக்கள் மத்தியிலே ஒன்று இரண்டு மகான்கள் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கிறார்களே?

ஏன்? புத்தர்,  இயேசுநாதர். தீர்கதரசியார் – ஆகிய மூவர் போதாதா?  இவர்கள் காட்டாத வழியா?

மதங்கள் வகுத்த  பழய வழிகள்   (காண்டிராக்ட்டர்கள்  போட்ட ஹைவே ரோடு போலவே) காலப்போக்கில் சேதம் அடைகிறது, மகான்கள் மிகவும் மனிதநேயம் மிக்கவர்கள். இவர்களால் நம்மைப்போல அறிவில் குறைவுள்ள மக்கள் அவதிப்படுவதைக்  காணச் சகிக்க முடியாமல்   தவிப்பவர்கள். சேதமடைந்த பாதைகளைச்  செப்பனிடுவதும் புதிய வழிகளைத் தோற்றுவிப்பதுமாக வாழ்கிறார்கள்.

மதங்கள் என்கிற வாழ்க்கைப் பாதை:

இதிலே,  உயிர்கள்  ஆசைப்படும் எல்லாவற்றையுமே தரும் கடவுள்கள் உண்டு.

நாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டிக்கும் தெய்வங்கள் உண்டு,

ஆராதனைகள் உண்டு.

கடவுளின் அன்பை, மனிதனுக்கு உணர்த்த உதவும் கதைகளும் கணக்கில்லாமல் உண்டு.

இவர்கள் உருவாக்கிய இதிகாசங்களும் புராணங்களும் மனிதனுக்கு இறைவன் மீது நம்பிக்கையை ஊட்டும்.  பற்றுதலையும் உண்டாக்கும். வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று வகை வகையாக எல்லாமே  உண்டு.

நாமெல்லாம் நலமாக வாழ இவைகளில்  பாதியையாவது  (அதுவும் அதிகம் என்றால், ஆயிரத்தில் ஒரு பங்கையாவது) முறையாகக் கடை பிடித்தாலே போதும். பூமியிலேயே ஒரு சுவர்கம் உருவாகிடும்.  முழுவதும் கடைபிடித்தால் நாமும் ஞானிகளாகிடுவோம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு சூழ்னிலை என்றும் வராது. இது உறுதி.   இது பிரம்மனுக்கு ஒத்துவராது.

ஞானிகள், தங்களால் முடிந்த அளவு உதாரணங்கள் மூலம் வாழ்க்கையின் தன்மையை விவரித்தார்கள்.  அதைப் புரிந்து கொண்டால் மனிதனுக்குத் துன்பமே வராது. ஆனால் புரிந்து கொண்ட மனிதரெல்லாம் ஞானியாகி விடுவார்கள்.   எல்லா   மக்களும் புரிந்து கொண்டால், இந்த   அண்டமே அழிந்துவிடலாம்.

மனிதனுக்கு காயங்கள் உண்டாகாமல் இருக்க ஞானிகள் தெரிவித்த:

மதங்கள் வகுத்த வழியில் மனிதர்கள் செல்லாததால்,  மகான்கள் சில உண்மைகளை மனிதர்கள் முன்னால் வைத்தார்கள். இதை முழுமையாக உள் மனதில் ஏற்றிவிட்ட அனைவரும் ஞானியாகும் அபாயம் முண்டு.  ஆனால் பலர் தலைகள் இவற்றை ஏற்க்காது.அதில் முக்கியமான சில.

(1)  அகங்காரமும் – மமகாரமும்:

இரண்டு காரசாரமான  சமாச்சாரங்கள். வாழும்  உயிர்கள் எல்லாவற்றுக்கே  ஆதாரம்  ஒரு  கூட்டணி. இரண்டு பாகம் கொண்ட ஒரு கூட்டணி. ஒன்று புலன்களில் உணர முடியாத சூக்கும உயிர், மற்றது புலன்கலில் சிக்கும் பரு உடல்.  ஒரு கூட்டணி வைத்திருப்பது என்றுமே, எங்குமே ஒரு தாற்காலிக ஏற்பாடு.  (அரசியலில், ஒரு தேர்தலின் போது உண்டாகும் கூட்டணி கூட, அடுத்த தேர்தல் வரை நீடிக்குமா என்பது தீர்மானமாக சொல்ல முடியாது இல்லையா?)

அதே போலத் தான்  இந்த உயிர்-உடல் கூட்டணியின் தன்மையும். உயிரானது, தான் கொண்ட பரு-உடலையும் சேர்த்து,  தான் என்று நினைக்ககூடாது.  அப்படிப்பட்ட தவறான எண்ணத்தை ஞானிகள்  அகங்கார் – அகங்காரம் என்கிறார்கள். (அகங்காரம்  என்ற ஒரு  சொல்லை – திமிர் என்ற பொருள்பட நாம் தவறாக உபயோகிக்கிறோம்).

ஞானிகளின் கண்டுபிடிப்பில், உயிர் என்னும் கூட்டணியின் ஒரு அங்கம். அழிவற்றது. ஆனால் அதன் கூட்டாளியான பரு உடலோ அழியும் தன்மை உள்ளது. ஆகவே, ஞானிகள் மனிதனுக்கு  அறிவுருத்தியது –  மனிதா, உன்  உடலுக்கு வரும் தீங்குகளை உனக்கு  வந்ததாக நினைக்காதே!

நான் அடுத்து சொல்லப்போவதைப் படித்துவிட்டு, எனக்கு மனக்கோளாறு என்று தீர்மானித்தால்நான் அதிர்சி அடையமாட்டேன்.

கடல் அலைகளும் முயிருள்ளவையே. கடல் அலைகளைக் கவனியுங்கள். அலைகள் மற்ற உயிர்களைப் போலவே பிறந்து, வளர்ந்து, சிறிய அலைகளத் தோற்றுவித்து, ஆற்றல் குறைந்து பிறந்த கடலிலேயே மறைந்து விடுகிறது.

அலைகளின் ஆற்றல்தான்  (பூமி, சந்திரன் இரண்டின் இடயில் தோன்றும் ஒரு ஈர்ப்புச் சக்தி) அலைகளின்   உயிராகிறது. அலைகளின்  உடலோ, கடல் நீர்.

அய்யா,   உடலின் எந்த பாகத்திலும் வலி வந்தால்  இந்த தத்துவங்கள் எடுபடுமா என்று  நீங்கள் கேட்கலாம். போகட்டும். வலிகள் கூடிய உடலைச் சகித்துக்கொள்ள அதிக மனப்பக்குவம் தேவை. அதை ஒதுக்கி வைத்துவிட்டு, மனதை மட்டுமே பாதிக்கும் சமாச்சாரங்களப் பார்க்கலாம்.

நம்மை சிலர் கேலி செய்கிறார்கள். மனதில் வேதனை தோன்றும். என்றாலும், ஒதுக்கி விடலாம்.

நம் மீது சேற்றை பூசுகிறார்கள் அல்லது அசிங்கத்தை வீசுகிறார்கள். பரவாயில்லை, மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு, நமது வழியே செல்லலாம்.

நம்மை, அறிவில்லாதவன், முட்டாள் என்றெல்லாம் ஏசுகிறார்கள். ஏதோ தமது அபிப்பிராயத்தை சொல்கிறார்கள். அது பெரும்பாலும் உண்மையாகக் கூட இருக்க வாய்ப்புகள் உண்டு என்று மனதை சமாதானம் செய்து கொள்ளலாம்.

நமது சொந்தங்களை, நம் தொழிலை, நமது நம்பிக்கைகளை, ஏன்,  நாம் வணங்கும் கடவுளையும் அவமரியாதை செய்தாலும், நமது மனதை பாதிக்கக் கூடாது.

வேறு வழியில் சிந்தித்தால், நமது உடலை, உயிர் அணிந்திருக்கும் முதல் சட்டையாக உருவகம் செய்து கொண்டாலோ ! பல பிரச்சனைகள் நம்மை வாட்டாது.

சட்டையில் அசிங்கம் சேர்ந்தால், துவைத்து சுத்தம் செய்த பிறகு அணியலாம். கிழிந்தாலோ, தைத்து சரி செய்து அணியலாம். அதிக கேடு வந்தால், புதியது அணியலாம். ஆனால் சட்டைக்காக மனதை வருத்து அதன் பின் விளைவாக உடலையும் வறுத்தலாமா?

கிழிந்த சட்டையும், இழி சொல்லும்  மனதைப் பாதித்தால் வீணான கோபம் தோன்றும். அதனால் தேவை இல்லாத தீய பின் விளைவுகள் எல்லாமே தொடரும். இதெல்லாம் அவசியம்தானா?

அடுத்தது நாம் அலசப் போவது, ஞானிகள் தெரிவித்த,  மமகாரம்:

மமகாரம்: இரண்டாவது காரமான சமாச்சாரம்!

எதுவுமே நம்முடையது இல்லை !

இது,  கேட்கவே ஒரு சிக்கலான  விவகாரம்.  ஞானிகளின் இந்தக் கணிப்பின் படி உலகில் சொந்தம் பந்தம் எல்லாமே மாயா கிளப்பிய  ஒரு புரளி. வேறுவிதமாகச் சொன்னால் நமது மண்டையிலே மாயா புகுத்திய மெகா பொய்கள்.

நாம் மற்றவரைச் சார்ந்து மாத்திரமே வாழப் பழகியிருந்தால், இந்த செய்தி அதிர்ச்சி தரும். உண்மை என்னவென்றால், மமகாரம் என்பது நமக்கு அதிகமான துன்பம் தரும் விவகாரம்.

எனது தாய், எனது தந்தை, எனது நண்பர்கள், எனது வீடு, எனது பள்ளிக்கூடம். எனது நாடு, எனது …………. !

கீதாசாரம் சொல்வதைப் போல, அய்யா, பிறக்கும் போது நாம்  நம்முடன் கொண்டு வந்ததுதான்  என்ன? உடன் வந்தவர்கள்தான் யார் யார்? இறந்த பின் நம்முடன் வருவதென்ன?

உயிரானது தனது பரு உடலை விட்டு நீங்கிய  மறு நிமிடமே  – அதை பிணம் என்கிறோம்! அதன் பிறகு, இறந்தவரை  யாருமே, பெயரையோ அல்லது உறவு முறைகளையோ வைத்துக் குறிப்பிடுவதில்லை. உடலை படுக்கை அறைக்கு  கொண்டு செல்வதில்லை. அதற்கு ஒரு மரியாதையாக ஒரு ஆங்கிலப் பெயர்  பாடி – (ஆணிஞீதூ) உண்மைதானே!

நம் உடலே நம்முடையது இல்லை என்ற உண்மையை மறந்து உலகிலே, வாழும் காலத்திலே, எதை எதையோ எனது என்று எண்ணி எண்ணி, எண்ணிக்கை இல்லாத துன்பங்களில் சிக்குகிறோம்.

 நான் யார்?

நாமெல்லாம் ஒரு பயணிகள்.

நம்மை இந்த உலகில் ஒரு பயணியாக மாத்திரமே உணருங்கள். பயணிகள் நிரந்தரமாகத் தங்குவதற்காக இந்த உலகிலே நுழையவில்லை. பயணம் செய்பவர்கள் வந்த இடத்திலெல்லாம்  வங்கிக் கணக்கு தொடங்குவதில்லை, சொத்துகளும் வாங்கி  குவிப்பதில்லை! (ஜென் கதைகளில், நாம், இந்த உலகத்தில் பயணிகள் என்ற கருத்தை வலியுருத்தும் கதைகள் உண்டு)

வாழ்வில் காணும்  உயிர்-உடல்கள்   எல்லாவற்றையுமே (உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்கள், வளர்ப்புப் பிராணிகள் எல்லாவற்றையுமே)  சக பயணிகளாகக் காணுங்கள். அவரவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட (உண்மையில்   அவரவர் தேர்ந்தெடுத்த) பயணத்தைத் தொடர்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவர் பயணமும், நமது பயணத்துடன் தாற்காலிகமாக இணைகிறது – சக ரயில் பயணிகளைப் போல. அவரவர் இறங்கும் ரயில் நிலையம், அல்லது ஊர் வந்ததும் பிரிகிறார்கள். அவ்வளவுதான். இதை மனதில் உணர்ந்தால், மனிதரின் மீதப் பிரச்சனைகள் காணாமலே போய்விடும்.

இந்த புத்தகத்திலே, மனித வாழ்க்கையை ஒரு ஓட்டமாக வாசகர்களை நினைத்துப் பார்க்கச் சொல்கிறேன். அதில்  வெற்றி கண்டால்,   பிரமனைக் காண்பது எளிதாகும்.

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book