"

GHOST

என் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில், அமானுஷ்யம் அல்லது  மனித     சக்திக்கு  அப்பாற்பட்ட  சில நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த அதிசயங்கள் எப்படி நிகழ்ந்தன என்று சாதாரண அறிவைக் கொண்டு தேடி அலைந்தபோது, என்னையும் அறியாமல், நான் ஆன்மிகம் என்ற ஒரு பாதையை  வந்தடைந்தேன்.

சாமியார்களைத் தேடி அலைந்தேன்!

எனக்குத் தெரிந்தே, பல விதமான கோரிக்கைகளை மனதில் தாங்கி சாமியார்களைத் தேடி அலைபவர்கள் உண்டு. அதல்லாமல் ஏதோ ஒரு  உந்துதலால் ஞானிகளைத் தேடி அலைபவர்களும்  உண்டு. அப்படி தேடி அலைந்தவர்களில் நானும் ஒருவன்.

இந்த தேடுதலில், பலருக்கு ஏமாற்றங்களே கிடைத்தாலும்,  விடா முயற்சியுடன்  தேடிய எல்லோருக்குமே ஞானிகள் கிடைத்தார்கள்.  வேறு சிலருக்கு தாங்களே ஞானிகளாகும் வாய்ப்பு கிடைத்தது

இந்த புத்தகத்தைப் படித்த பிறகு, யாருமே ஞானிகளை   அல்லது சாமியார்களைத் தேடி அலைவதற்கு அவசியம் இருக்காது.  அதோடு, போலிச் சாமியார்களால்,  வாசகர்கள்  ஏமாற்றப்படுவது  நிச்சயமாகத் தவிர்க்கப்படும்.

குழப்பலோ குழப்பல்

எல்லா ஊர்களிலும், எல்லாக் காலத்திலும் சில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள், எப்போதுமே உண்டு. இவர்கள் தங்கள் அறைகுறை அறிவையும் அறியாமையையும்   பேரறிவாக நினைத்துக் கொள்வது மட்டுமில்லை, அதைக் கொண்டு  தானும் குழம்பி மற்றவரையும் குழப்பி வருகிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கில்லை.

இதில் மிகவும் முக்கியமாக ஒன்று  ஆன்மிகமும் ஆத்திகமும் ஒன்றுதான் என்பது.

இவர்கள்  ஆன்ம அறிவு, யோகா, தியானம், தாடிகள், காஷாய உடை, வாழைப்பழங்கள் ஆகியவற்றை ஆன்மிகத்துடன் சேர்த்துக் குழப்பி  ஒரு பஞ்சாமிருதமாக  விற்கிறார்கள்.

இந்தக் கலிகாலத்தில் எதுவும் விலை போகும். அதில் ஹை-டெக் ஆன்மிகம் மிகவும் பாப்புலர். அகில உலக அளவில் அதிக   டிமாண்ட். கோடி கோடியாக டாலர்கள் கொட்டுவதைக் காண்கிறோம்.

மதங்கள் – மகான்கள்

நம்மில் பலருக்கு சுயமாக எதுவும் தெரியாது. தெரிந்தவர்  யாரும்    எடுத்துச்    சொன்னாலும் புரியாது.  வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் டன் அளவிலான துயரங்களும்.     குறைவில்லாத குறைகளும் நமக்கு  என்றுமே உண்டு.

உலகின் பல பாகங்களில், இப்படிப்பட்ட மக்கள் மத்தியிலே மகான்கள் அவ்வப்போது தோன்றினார்கள்.   மகான்கள் மிகவும் மனிதநேயம் மிக்கவர்கள். இவர்களால் நம்மைப்போல அறிவின் குறைவுள்ள மக்கள் அவதிப்படுவதைக்  காணச் சகிக்க முடியாது.

இப்படிப்பட்ட  நல்ல உள்ளம் கொண்ட மகான்கள்  நமது  வாழ்க்கையை வலியில்லாமல் நடத்த சில வழிமுறைகளை வகுத்தார்கள். அதுதான் மதம். முக்கியமாக, அது   உங்களைப் போல, என்னைப்போல உள்ள சாதாரண மக்களுக்காக உருவாக்கினார்கள்.

மனித வாழ்க்கை எப்படிப்பட்டது? தொல்லைகள் மிகுந்தது.    மனமோ நம்மை  எங்கெங்கோ இட்டுச் செல்கிறது. போகும் வழியிலே சில சமயம்  மகிழ்ச்சிகள் கிடைத்தாலும் தவறாமல் தொல்லைகள் தொடர்கின்றன. நம்மை தொல்லைகள் ஏன் அழைக்காமலேயே வந்து அடைவது எப்படி என்று விளக்கினார்கள். அவைகள் எதுவுமே நமது மர மண்டையிலே  சேரும் விதமான ஒரு சம்மாச்சாரமாக இல்லை.

சுலபமாக புரிந்து கொள்ள பல உதாரணங்களைச் சொன்னார்கள்.

மனித வாழ்க்கையை ஒரு இருட்டான, குண்டும் குழியுமான  ஒரு  நடைபாதை  என்பதாக  வருணித்தார்கள். இருட்டு என்பது அறியாமையைக் குறிக்கிறது.  விளக்கை அறிவுக்கு உதாரணமாக சொன்னார்கள். நியாயம்தானே! விளக்கின் வெளிச்சம் இருட்டை அழிப்பதைப் போல, அறிவை அடைந்தால் அறியாமையால்  வரும்  கஷ்டங்களை தீர்க்கலாமே!

ஆனால் பல சிக்கல்கள்.  ஞானிகள் தரும் அறிவை முழுவதாக அடைவது அத்தனை சுலபம் இல்லை. அதைத் தடுக்க நமக்கு எக்கையில்லாத் தடைகள் உண்டு. விடாமல் தொடந்து சிந்திக்கும் போது, ஓரளவு பலன் கிடைக்க பல வருடங்கள் ஆகும்.  அறிவை அடைவது எல்லா மனிதருக்கும் கை வராது. அதனால் ஒரு  ஏற்பாடு.   விவசாயி பல தொல்லைகளுக்கிடையே உணவு உற்பத்தி செய்ய நாமெல்லாம் தொல்லையில்லாமல்  சாப்பிடுகிறோம். பலருடைய உழைப்பில் தயாரான வீட்டில்நாம் வாழ்கிறோம்.

சமுதாயத்தில் அறிவை மட்டுமே தேடுவதும் அதை மற்றவர்களுக்கு  பகிர்ந்து தருவதற்காக சிலர் என்று வைத்துக்கொள்ளலாம்.

அவர்கள் தேடிய அறிவைக் கொண்டு மற்றவரை வழி நடத்துவார்கள். அவர்கள்தான், குரு, அறிஞர்கள், பிலாசபர்கள், விஞ்ஞானிகள் எல்லோருமே! தான் அறிந்து நமது வழிகாட்டிகளாக வாழ்கிறார்கள்.

ஞானிகள்?

இவர்கள் மற்றவர்கள் போலவே அறிவதில் தொடங்கி, பல காலம்  உழைத்து, மிகவும்  அதிகமான,   அரியதான அறிவை அடைந்தவர்கள். அறிவை  விளக்கோடு ஒப்பிட்டோம்   இல்லையா?  அதே கணக்கில்,  அறிவைத் தேடும்  விஞ்ஞானிகள் 1000  வாட் பல்பு என்றால், ஞானிகளை சூரியனின் வெளிச்சத்தோடு ஒப்பிடலாம். (நாமெல்லாம் ட்யூப் லைட்கள் தான்  இல்லையா?)

இதற்கிடையே ரிஷிகள் முனிவர்கள் என்று ஒரு கூட்டம். இவர்கள் நம் புலன் ம்களில் சிக்காத அதே சமயம் நம்மை விட உயர்ந்த உயிர்களை ஒரு மாதிரியாக காக்காய் பிடிக்கும்  உத்திகளில் கைதேர்ந்தவர்கள்  என்று நாம் நினைக்க வழியுண்டு. புலன்களில் சிக்கும் பொருள்  உலத்தில் கணக்கில்லாத தேவைகளை அடைய இவர்களால் உதவ முடியும்.

நாம் காணும் உலகத்தின் பதவிகள் தவிர, பல பதவிகளை ஞானிகளும்  ரிஷிகளும் முனிவர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கண் காணா உலகங்கள்  பல  இருப்பதை நம்மால் நம்புவது சுலபம் இல்லைதான்.  ஞானிகளுக்கு நம்மை ஏமாற்றிப் பிழைக்க அவசியம் இல்லை. எனவே அவர்கள் பல உலகங்கள் இருப்பதாகச் சொல்வதை நம்பலாம். அதில் மிக உயர்ந்த பதவியை  ஈஸ்வர பதவி என்று குறிப்பிடுகிறார்கள்.

 நமது கீழை நாடுகளின் கலாசாரத்தில் இந்த எண்ணங்கள் கரைந்து ஒன்றாகி விட்டதால் ஒருவர்  சாதாரணமாக இறந்து விட்டாலே சிவனடியைச்   சேர்ந்துவிட்டார் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ரிஷி முனிவர்கள் இந்தகடைசிக் கட்ட நிலையைத் தேடுவதில்லை.

சித்தர்கள் என்று நாம் அறியும் மக்கள் வேறு விதம்.  இவர்கள்  புலன்களால்  உணரும் உலகத்தைக் கடந்து, பிரம்மனின்  உலகத்தைத் தாண்டி. இன்னமும்  பல இடைப்பட்ட சில  கட்டங்களையும்  தாண்டி,  கடைசிகட்ட ஆண்டவனைத் தேடுவார்கள்.

இவர்கள் மக்களுக்கு இரண்டு  வித அறிவைத் தருவார்கள்.  முதல் வகை – மனிதர்கள் அதிகமான தொல்லையில்லாமல் வாழும் வழிகள்..

அறிவில்  தேர்ந்த எல்லா ஞானிகம்  இந்த அறிவைப் வித விதமாகச்      சொன்னார்கள். சிலர் பாட்டாகவும், வேறு சிலர்  கவிதையாகவும்  சொன்னார்கள். சிலர் கதைகளாகச் சொன்னார்கள்.

நாம் வேடிக்கையான மக்கள். நாம் எல்லோருமே நல்ல விஷயம் எதையுமே கண்டுகொள்ள மாட்டோம்.

தங்கள் வாழும் காலத்தை எப்படியெல்லாம் செலவிட வேண்டும் என்று விளக்கமாகச் சொல்லித்தந்தார்கள்.  என்னென்ன செய்ய வேண்டும், எதை எதைச் செய்யக் கூடாது என்றும்  இந்த  மகான்கள்   சொன்னார்கள். எல்லவற்றையும் கேட்டுவிட்டு இதெல்லாம் நம் வேலைக்கு உதவாது என்று ஒதுக்கி விடுகிறோம்.

ஞானிகள் சொல்லித்தந்தது எதுவும் நமக்குப்  பிடிக்காது.பிடித்துவிட்டாலோ நம்மை யாராலும் பிடிக்க முடியாத அளவு உயர்ந்து விடுவோம்.

உதாரணத்திற்கு  சில:

உதாரணமாக, நமது உழைப்பை, அடைந்த செல்வத்தை நம்மை விட ஏழ்மையில்  உள்ளவர்களுக்கு இலவசமாக தருவது  அதிக மகிழ்ச்சி அடைவதற்க்கான ஒரு எளிய வழி.

நம் அரவணைப்பின், பொருள் பெரும்  ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி எப்படிப்பட்டது? மற்றவரின் மகிழ்ச்சியை நாம் காணும்போது, அந்த மகிழ்ச்சி நமது மனதில் பல மடங்காகப்  பெருகி நாம் பெரு மகிழ்ச்சி அடைவோம் என்றார்கள், அறிவுடைய எல்லோருமே!

அதை சுருக்கமாக, அறம் செயவிரும்பு,

                                       ஈவது விலக்கேல்,

                                       ஐய்யம் இட்டு உண்,

இதில் எதுவுமே நமக்கு ஒத்துவராது. ஏனென்றால், நமக்கு பிறருக்குத்   தருவதில்   நம்மில்  பலருக்கு மகிழ்ச்சி எதுவும் கிடைப்பதில்லை. யாராவது நமக்கு   இலவசமாக   தந்தால்தான் மகிழ்ச்சியே வரும்!

ஐய்யா, நமது  இந்த விதமான தவறான அறிவு, ஓசிகளில் மனம் மகிழச் செய்கிறது. ஓசிகள் தருவதாக விளம்பரம் செய்து வியாபாரம்  செய்பவர்களால் தினம்தோரும் மொட்டையடிக்கப்  படும் மக்கள்  இந்த ரகமான  மக்களே!

திருக்குறளும், ஆத்திச்சூடியும், நாலடியாரும், கீதாச்சாரமும், ஹோலி பைபிளும், திருக்குரானும் காட்டிய வாழ்க்கைப் பாதை எல்லாமே  ஒன்று தான். சொல்லிய இடமும், மொழியும் அதோடு தெரிவித்த விதத்திலும் தான் வேறுபாடு.

இன்று, அதிகமான வருமானம் உள்ளவர்கள்  99% மக்கள் செலவழிக்கப் பயந்து ஏழைகள் எப்படி வாழ முடியுமோ அப்படி வாழ்கிறார்கள். கண்ணிருந்தும் குருடர்களைப் போல, காசிருந்தும் இவர்கள் ஏழைகள்.

இப்படிப் பட்ட மக்களுக்கு மற்றவருக்கு உதவும் மனம் இருப்பதில்லை. மற்றவருக்கு உதவும்  மனம் மாத்திரம்  நமக்கு கிடைத்து விட்டால் நாம்  நம்மை பணக்காரர்களாக உணரலாம்.

பொருளாதார பாதுகாப்பை இல்லாமை, என்றொரு மனேரீதியான, தொல்லை மனிதருக்கு  உண்டு. பிறருக்கு அளிப்பதில் இன்பம் அடையும் மக்களுக்கு இந்த மனக்கோளாறு என்றும்  நெருங்குவதில்லை.

நாம்   நாமெல்லாம்  நலமாக  வாழ்வதற்கு ஞானிகள் சொன்னதில்  ஒரு சில அறிவுறைகளையாவது முறையாகக் கடைபிடித்தாலே போதும். அவற்றை முழுவதும் கடைபிடித்தாலோ. நாமே ஞானிகளாகிடுவோம்.

வாழ்க்கைப் பாதை அல்லது மதங்கள் ஒன்று, இரண்டு இல்லை. ஆனால் சொல்லி வைத்தது போல, எல்லா மதத்திலும் இரண்டு அங்கங்கள் உண்டு.

ஒன்று கடவுள் நம்பிக்கை.  இரண்டாவது வாழ்க்கைப்பாதை. கடவுள்  நம்பிக்கையை  ஒரு கைத்தடிக்கு ஒப்பிடலாம்.  இருட்டில், கைத்தடியின்    உதவியோடு   மோசமான சாலையிலே நடப்பதற்கு உதவும். (பாரதியார் சொன்ன கண் இருந்தும் குருடர்கள் தானே,  நாமெல்லாம்?)

இரண்டாவதான வாழ்க்கைப் பாதை என்பது, வெளிச்சம்  இல்லா விட்டாலும், தடுக்கி விழாமல் இருட்டில் நடப்பதற்கு உருவாக்கப்பட்ட சில உத்திகள்.

கடவுள் நம்பிக்கை என்கிற  கைத்தடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சரியான, ஒரு வாழ்க்கைப் பாதையை   உணர்ந்து,  அதில்படி  நடந்தாலே போதும். வெளிச்சமோ, கைத்தடியோ தேவை இல்லை.  (இவர்கள்தான் நல்ல  வாழ்வு வாழ்ந்திடும் நாத்திகர்கள்).

நாமெல்லாம்  இரண்டும் கெட்டான் ரகம். அவ்வப்போது கையிலே கைத்தடி,  சில நேரங்களில் அரைகுறை விஞ்ஞான அறிவு. இதோடு தைரியமாக இருட்டில் ஆட்டம் போட்டபடி ஒரு ஓட்டம். என்றும் போலவே, விழுவதும் எழுவதும், நம் அனைவரையும்  விடாது தொடரும்.

வெவ்வேறு அளவுகளில் கடவுள் நம்பிக்கை என்கிற கைத்தடியை மாத்திரமே  பிடித்துக் கொண்டு விடுகிறோம். பரவாயில்லை. ஆனால். அதோடு இணைந்த, வாழ்வின் விதி-முறைகளையும் கடைபிடிப்பது  மிகவும் அவசியமானது என்பது நமது, நல்ல மனதிற்குள்  தோன்றுவதில்லை.

பலருக்கு நல்ல விஷயங்கள் என்றாலே கொஞ்சமும் பிடிக்காது. எனவே மதங்களின்  முக்கியமான பாகமான வாழ்க்கைப் பாதையை  ஓரங்கட்டி விடுகிறோம்.

சுருக்கமாகச் சொன்னால், மகான்கள் வகுத்த வாழ்க்கைப் பாதையிலிருந்து வெகுதூரம் விலகிவிடுகிறோம்.

பயணம் செய்யும் பாதையோ ஒரு கரடுமுரடான ஒன்று.  அறியாமை என்கிற  இருட்டினால் பாதையில்  உள்ள குண்டு குழிகள் தெரிவதில்லை.  அடிக்கடி, தடுக்கி விழுகிறோம். காயங்களும் வலிகளும் தொடர்வதை  உணர்கிறோம். விழுவதும் எழுவதும், மனக்காயங்களுமே வாழ்க்கை என்ற முடிவுக்கு வருகிறோம்.

இரண்டாவது, அறிவு என்கிற விளக்கு.

இது கடினமான வழி. ஞானிகளின் வழியில் நடக்கத் துவங்கி   ஒரு கட்டத்தில்  நாமே ஞானிகளாவது.  அப்படி, அறிவு என்கிற விளக்கை அடைவது.

இது அவ்வளவு  சுலபமான விஷயம் இல்லை!  சிலருக்கு எப்படி சுலபமாயிற்று?

அந்த சிலர், நம்பிக்கை என்ற கைத்தடியுடன் வாழ்க்கையைத்  துவங்கி, மதங்கள் வகுத்துத் தந்த வழியிலே சிறிதும் வழி தவறாமல், கவனமாக வாழ்ந்தவர்கள்.  கைத்தடி இல்லாமல் நடந்தவர்களும் இதில் அடக்கம்.

இவர்கள், அறிவு என்கிற விளக்கை அடைவதில் வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டவர்களாக இருப்ப்பதில்லை. பெரும்பாலும் எதையோ தேடிப் போனவர்களுக்கு கடைசியாகக் கிடைத்தது உயர்ந்த அறிவு.   அப்படிப்பட்ட அறிவை அடைந்து, மக்கள் மத்தியிலே மகான்களாக அறிப்பட்டு எந்த ஒரு  செப்பனிடப்படாத பாதையிலும் காயங்கள் இல்லாமல் பயணம் செய்யக்கூடியவர்கள்.

அதோடு, நம்மைப்போல மக்களின் மேல் அனுதாபம் கொண்டு, துக்கங்களை துடைத்து, வலிகளை   நீக்கி, நமது பயணங்களைச் சுலபமாக அமைய உதவுகிறார்கள். இதை ஆன்மிகமாக அறிகிறோம்.

அறிவு என்கிற ஓளி இருக்கும்போது கரடு முரடான பாதைகளில் பயம் இல்லாமல், காயமில்லாமல் செல்வது இயலும். நம்பிக்கை என்கிற கைத்தடியின் அவசியம் இல்லை. உண்மைதானே!

இந்த புத்தகத்தில் இதுவரை பலர் சொல்லி,  சிலர் எழுதி  நாம் அறிந்த  சிலவற்றை திரும்ப ஒருமுறை சொல்லுவோம். அதில்   நாம் நம்பிய விஷயங்களும்   சில சமயம் நம்பமுடியாத விஷயங்களும் அடக்கம்.

ஞானிகளையும் விஞ்ஞானிகள் சொல்வதையும்  நாம் நம்பலாம். பல்வேறு காலகட்டத்தில் உலகெங்கிலும் தோன்றிய இந்த தாங்கள் உணர்ந்ததைச் சொல்கிறார்கள். ஓரு சிலர் உணர்ந்ததில் சில சமயங்களில்  குறைவு வரலாம். ஒரேயடியாக இவர்களில் எவருக்கும் பொய்கள் சொல்லக் காரணம் ஏதும் இல்லை.

ஞானிகள்  உலகின் பல பாகங்களில் சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், சுபி ஞானிகள், புத்தபிக்குகள், என்று பல பெயர்களில் அறியப்படுகிறார்கள்.

இவர்கள் அறிந்து  சொன்ன அறிவிலே முழுகி, நாம் இதுவரை அறிந்த  உலகத்தையும், நமது அண்டத்தையும் சித்தர்கள் சித்தரித்ததுபோலவும்,  மெய் ஞானிகள் கண்டது போலவும் காண்பதற்கு முயற்சி செய்வோம்.

அறிவுப்பாதையிலே நடந்திடுவோம்.

நம்மைப் படைத்த பிரம்மாவைக் கண்டு கைகுலுக்குவோம்.

நடராஜன்  நாகரெத்தினம்

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book