(தில்லையில் அருளியது – அறுசீர் ஆசிரிய விருத்தம்)

முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்
சக்தியும் சோமியும் பார்மகளும்
நாமகளோடுபல்லாண்டிசைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன் ஐயாறன்அம்மானைபாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195

பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறநிலாமே
குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
தேவியுந் தானும்வந்தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196

சுந்தர நீறணந் தும்மெழுகித்
தூயபொன்சிந்தி நிதிநிரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தார் கோன்அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197

காசணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை
நேசமுடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
பாசவினையைப் பறிந்துநின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198

அறுகெடுப்பார் அயனும்அரியும்
அன்றிமற்றிந்திர னோடமரர்
நறுமுது தேவர்கணங்கெளெல்லாம்
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம்
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199

உலக்கை பலஒச்சு வார்பெரியர்
உலகமெலாம்உரல் போதாதென்றே
கலக்க அடியவர் வந்துநின்றார்
காண உலகங்கள் போதாதென்றே
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து
பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200

சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடக மெல்லடி யார்க்கு மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மாமலை அன்னகோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201

வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202

வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதரு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203

முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப்
பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204

மாடு நகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
தேடுமின் எம்பெருமானைத்தேடி
சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி
ஆடுமின் அம்பலத் தாடினானுக்
காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205

மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை
ஐயனை ஐயர்பிரானைநம்மை
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள்
பையர வல்குல் மடந்தைநல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206

மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமுதெங்களப்பன்
எம்பெருமான் இம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாயிதழுந்துடிப்பச்
சேயிழை யீர் சிவலோகம் பாடிக்
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208

ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209

ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ
டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210

தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேன்
வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும்
ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்யஅன்று
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211

அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி
அருக்கன் எயிறு பறித்தல்பாடி
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
காலனைக்காலால் உதைத்தல்பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடியாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212

வட்டமலர்க்கொன்றை மாலைபாடி
மத்தமும்பாடி மதியம்பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214

திருச்சிற்றம்பலம்

License

Icon for the Public Domain license

This work (திருவாசகம் - I (1-10) by மாணிக்க வாசகர்) is free of known copyright restrictions.

Share This Book