3

ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு தனித்திறமைகள் உள்ளன. அதனை அவன் சரியான வழியில், சமூக வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது சிறந்த மனிதனாக மாறி விடுகிறான். மனிதனின் மூளையின் ஆற்றல் திறன் என்பது மாமேதை எனப்படும் அறிஞர்களுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் வேறுபடுவதில்லை. மாமேதை எனப் போற்றப்படும் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையை ஆராய்ந்து பார்த்தே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட தனது மூளைத் திறனில் சுமார் 15 சதவீதம் மட்டுமே பயன்படுத்தி இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு மனிதன் தன்னால் எது முடியும், எது முடியாது என்பதைத் தெளிவாக அறிந்துக் கொள்வதில்லை. தன்னால் இதெல்லாம் முடியாது என நினைக்கிறான். இதற்குக் காரணம் அவனிடம் போதிய தன்னம்பிக்கையும், உலகம் சார்ந்த அறிவும் இல்லாததே. இதற்கு தனி மனிதனை மட்டும் குறை கூறி விட முடியாது. ஒருவனை வழி நடத்துவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் சரியான வழிகாட்டியும் இல்லாததே காரணம்.

நம்மால் என்னென்ன முடியும் என்பதை முயன்று பார்ப்பதில் தவறு ஏதும் கிடையாது என்பதை உணர வேண்டும். அதற்குத் தொடர்ச்சியாக முயற்சி எடுக்க வேண்டும். எடுத்த முயற்சியிலிருந்து கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தொடர்ந்து, முயற்சி செய்தால் வெற்றி அடைவோம் என்பது பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

கண்கள் இரண்டும் தெரியாது; காதுகள் இரண்டும் கேட்காது; வாய் பேச முடியாது. இப்படிப்பட்ட ஊனம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்டவர்களின் நிலை என்பது மிகவும் மோசமானது. இதனை யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் எனத் தெரியும். இப்படிப்பட்ட மூன்று மிகப் பெரிய குறைபாடு கொண்ட ஒருவரால் உலக அளவில் பிரபலம் அடைய முடிந்தது என்றால் அதனை நாம் எப்படி பாராட்டுவது என்றே கூற முடியவில்லை. இதனை சிலர் உலகின் 8 ஆவது அதிசயம் என்கின்றனர்.

செவிட்டுத் தன்மையையும், பார்வையற்ற தன்மையையும் அவரால் மாற்ற முடியவில்லை. ஆனால் ஊமைத் தன்மையைக் கடும் முயற்சியால் மாற்றி வெற்றி கண்டார். பேசும் வல்லமை பெற்றார். பிறகு நான்கு மொழி பேசும் திறன் படைத்தவராக தன்னை வளர்த்துக் கொண்டார்.

கண் தெரியாத, காது கேளாத, ஊமையான அவர், தன்னுடைய விடா முயற்சியால் படிப்பையும் மேற்கொண்டார். அக்காலத்தில் மாற்றுத் திறனாளிகளில் அதிகம் படித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்ல, அவர்தான் உலகில் முதன் முதலாக பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளி ஆவார். அப்படிப்பட்டவரின் பெயரைத் தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கத்தானே செய்யும். அவர்தான் ஹெலன் கெல்லர்.

ஊமையான இவர் பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராக விளங்கினார். பல நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார். 12 புத்தகங்களை எழுதினார். உலகம் போற்றும் சமூக சேவகியாகத் திகழ்ந்தார். பெண்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக போராடியவர். முதலாளித்துவத்தையும், உலக யுத்தத்தையும், அணுகுண்டுகளையும் எதிர்த்தவர். பொதுவுடமைக் கருத்துக்களில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவர்.

பார்வையற்றவர்களுக்காகத் தொண்டு நிறுவனம் ஏற்படுத்தினார். தன் வாழ்நாள் எல்லாம் அதற்காக உழைத்தார். அவரைப்பற்றி உலகம் முழுவதும் பல மொழிகளில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றி திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவர் ஒரு ஊமைப் படத்திலும் நடித்து இருக்கிறார். இவரை நாம் தன்னம்பிக்கையின் மொத்த உருவமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

செவிடு, ஊமை, குருடு ஆகிய மூன்றும், பெரிய குறைகள் என்று அவர் கருதவில்லை. அவர் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினார். மன உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொண்டார். அவரின் ஓயாத உழைப்பு அவரை உலகளவில் பிரபலம் அடையச் செய்தது.

தன்னம்பிக்கையின் மறு உருவம், தீரமிக்க நங்கை, வரலாற்று நாயகி என அவரைப் புகழ்கின்றனர்.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல…

மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை… எனக்

கூறும் பொன்மொழியாக அவரின் வாழ்க்கை சிறப்படைந்து விட்டது. அவரின் வாழ்க்கை மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் அல்ல. ஆரோக்கியமாக வாழும் அனைவருக்குமே ஒரு வழிகாட்டி தான். அவரின் வாழ்க்கை வரலாறை படிக்கும் நாமும், சமூகத்தின் மேம்பாட்டிற்காக நம்மால் முடிந்ததைச் செய்வோம். இனி ஹெலன் கெல்லரை தெரிந்து கொள்வோம்…