6

ஹெலன் கெல்லர் பொருட்களைத் தொட்டு, தடவிப்பார்த்து பலவற்றைத் தானே கறறுக் கொண்டார். கேட்கும் தன்மையை இழந்த அவர் பொருட்களை முகர்ந்து பார்த்து சிலவற்றைத் தெரிந்து கொண்டார்.

சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) என்பவர் எழுதிய அமெரிக்கன் நோட்ஸ் என்னும் புத்தகத்தை ஹெலனின் தாய் 1886ஆம் ஆண்டில் படித்தார். கண் தெரியாத, காது கேட்காத பெண் லாரா பிரிட்ஜ்மென் (Laura Bridgman) என்பவர் எப்படி கல்வி கற்றார் என்பது அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது ஹெலனின் தாய்க்கு நம்பிக்கையை ஊட்டியது. தன்னுடைய மகளையும் படிக்க வைக்க முடியும் என்கிற ஒரு நம்பிக்கை பிறந்தது.

லாரா பிரிட்ஜ்மென் (டிசம்பர் 21, 1829 – மே 24, 1889) என்கிற கண் தெரியாத, காது கேளாத பெண் முதன் முதலாக அமெரிக்காவில் ஆங்கில மொழி பயின்ற பெண் ஆவார். இது ஹெலன் கெல்லர் பிரபலம் அடைவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இவர் பூஸ்டனில் உள்ள பெர்கின்ஸ் பார்வையற்ற பள்ளியில் கல்வி கற்றார். ஜூலை 24, 1839 இல் இவர் தனது பெயரை முதன் முதலில் எழுதினார். இவர் கல்வி கற்றப்பின் இதே பள்ளியின் முதல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

இவரின் கதையை ஹெலனின் தாயார் படிக்காமல் இருந்திருந்தால் ஹெலனின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். ஹெலனின் பெற்றோர்கள் மருத்துவர் ஜுலியன் ஷிஷோம் (Julian Chisolm) என்பவரைச் சந்தித்தனர். இவர் கண், காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர். இவர் கிரகாம் பெல்லை சந்திக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

அலெக்சாண்டர் கிரகாம்பெல் தான் (Alexander Graham Bell) தொலைபேசியைக் கண்டுபிடித்தவர். இவர் காது கேளாதவர்களுக்கு சிறப்புப் பள்ளி நடத்தி வந்தார். இவர் ஒரு ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் விளங்கினார். இவரது தாயாரும், மனைவியும் செவிடர்கள் என்பதால் காது கேளாதவர்களின் மீது அக்கறை காட்டினார். காது கேளாதவர்களுக்காகப் பேசும் பயிற்சியைக் கற்று கொடுத்து வந்தார்.

ஹெலன் கெல்லரின் பெற்றோர்கள் 1887ஆம் ஆண்டு கிரகாம்பெல்லைச் சந்தித்தனர். அவர் அவர்களை பார்வையற்றோருக்கான பெர்சின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். இவரின் வழிகாட்டலால் ஹெலன் தனது 7ஆம் வயதில் பார்வை இழந்தோர் பயிலும் பள்ளியில் 1887ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளி 1829இல் ஆரம்பிக்கப்பட்ட மிகப் பழமையான பார்வையற்றோர் பள்ளியாகும். இங்கு ஆனி சல்லிவன் என்ற ஆசிரியையை ஹெலன் கெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இவர்தான் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மாற்றியவர். கெலனின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்தியவர்.