30

ஹெலன் கெல்லர் இறக்கும் வரை மாற்றுத் திறனாளிகளுக்கும், பெண்கள் உரிமைக்கும், சம உரிமைக்கும், சமத்துவத்திற்காகவும் பாடுபட்டார். ஊனம் தடையில்லை என உறுதியுடன் உழைத்தார். இவரது அறிவுத் திறனையும், சேவையையும் பாராட்டி ஹார்வர்டு பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக் கழகம், டெம்பிள் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து – பெர்லின், ஜெர்மனி போன்ற நாட்டின் பல்கலைக் கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின. நம் நாட்டின் டெல்லி பல்கலைக் கழகமும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

ஹெலன் கெல்லரின் சேவையைப் பாராட்டி ஜப்பான் நாட்டின் புனிதப் புதையல் (Japan’s Sacred Treasure) என்ற பட்டத்தையும், பிலிப்பைன்ஸ் மக்கள், பிலிப்பைன்ஸ் நாட்டின் தங்க இதயம் (The Philippines Golden Heart) என்ற சிறப்பையும், லெபனான் நாட்டினர் நல்லெண்ணத்திற்காக லெபனானின் தங்கப் பதக்கத்தையும் (Lebanon’s Gold Medal of Merit) வழங்கியது.

லூயிஸ் பிரெய்லியின் நூற்றாண்டு விழா 1952ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. ஹெலன் கெல்லர் எழுதப்படிக்க கற்றுக் கொண்டது பிரெய்லியின் எழுத்துக்களால்தான். ஹெலன் கெல்லரின் முன்னேற்றத்திற்கு இவரின் எழுத்து முறையும் ஒரு காரணமாகும். பிரெய்லியின் நூற்றாண்டின் போது பிரான்சு நாட்டின் பிரசித்திப் பெற்ற செவாலியர் விருது ஹெலன் கெல்லருக்கு வழங்கப்பட்டது.

ஹெலன் கெல்லர் ராட் கிளிஃப் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவர் பட்டம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு சாதனை புரிந்த முன்னாள் மாணவி (Alumnae Achievement Award) என்ற விருதினை கல்லூரி வழங்கி பெருமை சேர்த்தது. அத்துடன் அவர் படித்த பள்ளியில் ஹெலன் கெல்லரின் பெயரில் பூங்கா ஒன்று அமைத்தனர். அங்கு நீருற்று ஒன்றினை ஆனி சல்லிவன் பெயரில் அமைத்தனர். இது ஆசிரியர் – மாணவி அர்பணிப்புத் தன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிக உயரிய விருதனை அதிபரின் சுதந்திர பதக்கம் (Presidential Medal of Freedom) ஹெலனுக்கு 1964ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சாதனையாளர்கள், உலகை மாற்றியவர்கள் போன்றோரை அங்கீகரிக்கும் அமைப்பான தேசிய மகளிர் ஹால் ஆப்ஃபேம் (National Women’s Hall of Fame) மூலம் சிறந்த பெண்மணியாக 1965ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த விருதுகளை விட தன் வாழ்நாளில் சந்தித்த பெரிய மனிதர்கள் மற்றும் அவர்களின் நட்பை மிக உயர்வாக ஹெலன் கெல்லர் மதித்தார். தன் வாழ்நாளில் 12 அமெரிக்க ஜனாதிபதிகளை நேரில் சந்தித்துப் பேசினார். சார்லி சாப்ளின், நேரு, ஜான் எஃப் கென்னடி போன்றவர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். கேத்தரின் கார்னல், அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஜோ டேவிட்ஸன், மார்க் ட்வைன், வில்லியம் ஜேம்ஸ் போன்றவர்களுடன் தோழமையுடன் பழகி வந்தார்.