25

ஹெலன் கெல்லர் மூன்று முறை ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டார். அவர் ஜப்பானியர்களின் விருப்பத்திற்குரிய நண்பராக மாறினார். ஹெலனுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். ஹெலன் ஜப்பானுக்கு 1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதன் முறையாகச் சென்றார். அப்போது அகிடா என்னும் எல்லைப்பகுதிக்குச் சென்றார். இது வடக்கு ஜப்பானின் மலைப்பிரதேசம். இப்பகுதியில் அகிடா (Akita) எனப்படும் பெரிய வேட்டை நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இவை இந்த மலைப்பகுதியில் மட்டுமே வளரும் விசேஷ நாயாகும். ஹெலனுக்கு அகிடா நாயின் மீது ஆசை ஏற்பட்டது.

ஹெலனுக்கு நண்பர் ஒருவர் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்தார். நாய் கொடுத்த நண்பர் விபத்தில் இறந்துவிட்டார். அவரின் சகோதரர் ஒரு நாய்க்குட்டியை அன்பளிப்பாக ஹெலனுக்கு வழங்கினார். இது ஜப்பான் அரசு மூலம் ஜூலை 1938இல் அதிகாரப்பூர்வமாக ஹெலனுக்கு வழங்கப்பட்டது. நாய்க்குட்டியை வழங்கியவரின் பெயர் ஹென்சான் – கோ (Kenzan – go). அந்த நாய்க்குட்டிக்கு கோ கோ (go – go) எனப் புனைப்பெயர் வைத்து ஹெலன் அழைத்தார்.

அகிடா நாய் இனத்தை அமெரிக்காவில் முதன் முதலில் வளர்த்தவர் ஹெலன் கெல்லர்தான். ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிடா நாய் இனத்தை ஹெலன் அமெரிக்காவில் அறிமுகம் செய்தார். அதன் மூலம் அவரை ஜப்பானியர்கள் பாராட்டினர்.

ஹெலன் இந்த நாயை பற்றி அகிடா என்னும் இதழில் எழுதினார். எப்போதும் இதன் ரோமம் ஒரு தேவதைக்கு இருப்பது போலவே இருந்தது. இது போல் வேறு எந்த செல்லப் பிராணியிடமும் இவ்வளவு மென்மையைக் உணர முடியாது. இது அனைத்து நல்ல குணங்களும் கொண்டுள்ளது. என்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறது. அது எனக்கு தோழனாகவும், நம்பகமான பாதுகாவலனாகவும் இருக்கிறது.

ஹெலன் கெல்லரின் செல்ல நாயான அகிடா இறந்த போது ஹெலன் மிகவும் வேதனை அடைந்தார். இதனை அறிந்த நண்பர்கள் ஹெலனுக்கு ஆறுதல் கூறியதோடு, அதற்குப் பதிலாக வேறு ஒரு நாய்க்குட்டியை வாங்கிக் கொள்ள பண உதவி செய்தனர். ஆனால் அந்தப் பணத்தைக் கொண்டு அவர் நாய்க்குட்டி வாங்காமல், கண் பார்வை இழந்த ஒரு சிறுவனுக்கு பண உதவி செய்தார்.