29

ஹெலன் கெல்லர் உலகமெங்கும் பார்வையற்றோருக்காக பள்ளிகள் திறக்கவும் அதற்கு உதவவும் நாடகங்கள் நடத்தியும், திரைப்படம் எடுத்தும் நிதி திரட்டினார். ஹெலன் தன் வாழ்க்கையை ‘மீட்சி’ (Deliverance) என்னும் படமாக எடுத்தார். அதில் தன் பாத்திரத்தில் தானே நடித்தும் தொண்டு செய்தார். இது ஒரு ஊமைப்படமாகும். இதில் எந்த உரையாடலும் கிடையாது.

இது பொழுதுபோக்கான படம். வசனம் சைகைகள் மூலமும், அட்டையில் எழுதியும் காட்டினர். சில உரையாடல் காட்சிகளை ஒலி பெருக்கிக் குழாய் மூலம் ஒலிபரப்பு செய்தனர். இது போன்றுதான் 1920ஆம் ஆண்டுகளில் திரைப்படங்கள் வெளிவந்தன. அந்த முறைப்படி ‘மீட்சி’ படம் 1919இல் வெளிவந்தது. 1920ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன.

‘மீட்சி’ படத்தை ஹெலன் கெல்லர் திரைப்படக் கழகம் தயாரித்தது. இது ஹெலன் கெல்லர் மற்றும் அவரது ஆசிரியர் ஆனி சல்லிவன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் கதையாகும். இந்த திரைக்கதையை பிரான்சிஸ் த்ரவேல்லியன் மில்லர் என்பவர் எழுதினார். இந்தப் படத்தில் ஹெலன் கெல்லர், ஆனி சல்லிவன், ஹெல்லரின் தாய், தந்தை, பாலி தாம்சன் ஆகியோரும் நடித்தனர். துரதிருஷ்டவசமாக இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.

‘ஹெலன் கெல்லர் அவரது வாழ்க்கை’ (Helen Keller in Her Story) என்கிற ஆவணப்படம் ஜுன் 15, 1954ஆம் ஆண்டில் வெளி வந்தது. இதனை நான்சி ஹாமில்டன் எழுதி இயக்கினார். இதில் ஹெலனும் நடித்துள்ளார். இந்தப்படம் 1955ஆம் ஆண்டில் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதினை வென்றது. ஹெலன் கெல்லர் பார்வையற்ற, காது கேளாத பெண் அவரின் வாழ்க்கைப் போராட்டங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. இது ஆங்கில மொழியில் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாகும்.

ஹெலன் கெல்லரின் என் கதை என்கிற வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தனர். அது ‘அற்புதமான உழைப்பாளி’ (The Miracle Worker) என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. அற்புதமான உழைப்பாளி என்று இவரது வாழ்க்கை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. இதன் பின்னர் இவரது வாழ்க்கையை ஆர்தர் பென் (Arthur Penn) திரைப்படமாக எடுத்தார்.

ஹெலன் கெல்லர் மற்றும் ஆசிரியர் ஆனி சல்லிவன் ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த உறவு பற்றி விளக்கும் கதையாக இது உள்ளது. ஒரு பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத குழந்தை எப்படி கல்வி கற்றுக் கொள்கிறது. அதன் பின்னர் அரசியல், இயக்கங்கள், மக்கள் சேவை மூலம் உலகப் புகழ் பெறுகிறார் என்பதை எடுத்துக்காட்டும் படம். ஹெலன் கெல்லர் ஒரு அதிசய பெண். உடலில் எந்தவித குறைபாடும் இல்லாதவர்களே, இது என்ன வாழ்க்கை என தங்களை சலித்துக் கொள்கின்றனர். ஆனால் பெரும் குறைபாடுகளைக் கொண்ட ஹெலன் கெல்லர், ஆசிரியரின் உதவியுடன் மிகவும் மனம் தளராமல் சாதனைகள் பல புரிந்தார். அவரை உலக நாட்டுத் தலைவர்களே புகழ்ந்து பாராட்டினர்.

இந்தப் படம் எடுப்பதில் பல சுவராசியமான தகவல்களும் உள்ளன. “பராசக்தி” படத்தில் முதன் முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தார். அதன் மூலம் தமிழ் திரை உலகத்தில் சிவாஜி கணேசன் காலடி வைத்தார். இந்தப் படத்தில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க பெருமாள் முதலியார் தீர்மானமாக இருந்தார். அதே போல் அற்புதமான ‘உழைப்பாளி’ என்ற படத்தில் ஆனி பேன்குரோப்ட் (Anne Boncroft) என்பவரை நடிக்க வைக்க அதன் இயக்குநர் ஆர்தர் பென் மிகவும் தீவிரம் காட்டினார். ஆனால் தயாரிப்பாளர்கள் எலிசபெத் டைலரை நடிக்கச் சொன்னார்கள். எலிசபெத் டைலரை படத்தில் நடிக்கச் செய்தால் 5 மில்லியன் டாலர் தருவதாகக் கூறினார். ஆனியை நடிக்கச் செய்தால் 5,00,000 டாலர் மட்டுமே தருவதாகக் கூறினர். இயக்குநர் பிடிவாதமாக ஆனியை நடிக்க வைத்தார்.

இந்தப் படத்தின் கதாநாயகி பார்வையற்ற, காது கேளாதவராக நடித்தார். இத்திரைப்படம் ஹெலன் கெல்லர் அவர்களின் சுய சரிதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த, திரைப்படம் 20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை படமாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்திற்கு 1962ஆம் ஆண்டில் 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இந்தப் படத்தில் ஹெலனாக நடித்த நடிகைக்கும், ஆசிரியர் ஆனி சல்லிவனாக நடித்த நடிகைக்கும் சிறந்த நடிகைக்கான விருதுகள் கிடைத்தன. ஹெலன் கெல்லராக பாட்டி டியூக்கும் (Patty Duke) ஆனி சல்லிவனாக ஆனி பேன்குரோப்ட்டும் நடித்தனர். ஆசிரியர் மற்றும் மாணவி இருவரின் தேர்ந்த நடிப்பிற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அத்தனை நேர்த்தியான நடிப்பும், இயக்கமும் கொண்ட இத்திரைப்படம் முழு வெற்றி பெற்றது.

இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு அற்புதமான படைப்பாளி என்கிற பெயரில் இது தொலைக்காட்சிப் படமாக 1957ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை வில்லியம் கிப்சன் (William Gibson) என்பவர் வெளியிட்டார். இவர் ஒரு அமெரிக்க நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். தொலைக்காட்சி படமான (Tele film) இது ஹெலன் கெல்லரின் குழந்தைப் பருவக்கல்வியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது சிறந்த தொலைக்காட்சி படமாக தேர்வு செய்யப்பட்டு டோனி விருது 1959ஆம் ஆண்டில் பெற்றது. இதுவே பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதினைப் பெற்றது.

ஹெலன் கெல்லரின் வாழ்க்கைக் கதையை 1984ஆம் ஆண்டில் ‘அற்புதம் தொடர்கிறது’ (The Miracle Continnes) என்ற தொலைக்காட்சி படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ஹெலன் கெல்லரின் கல்லூரி வாழ்க்கை, இளம் பருவ சம்பவங்கள், காதல், ஆனி சல்லிவனின் திருமணம் என இடம் பெற்றுள்ளன. அது தவிர ஹெலன் கெல்லர் கலந்து கொண்ட போராட்டங்கள், சமத்துவத்திற்கான பங்களிப்பு, சமூக ஆர்வலராக அவர் ஆற்றிய பங்களிப்பும் படத்தில் இடம் பெற்றுள்ளன. பல நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றி அதன் மூலம் பணம் திரட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இப்படம் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவுகிறது.

‘பிளாக்’ (Black) என்கிற பாலிவுட் படம் 2005இல் எடுக்கப்பட்டது. இது ஹெலன் கெல்லரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இது இந்தியப்படம். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியது. இப்படத்தில் ராணி முகர்ஜி மற்றும் அமிதாபச்சன் ஆகியோர் நடித்தனர். இந்தப்படம் காது கேளாத, பார்வையற்ற பெண்ணை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையில் உறவை மையமாகக் கொண்டு கதை இயங்குகிறது. அது தவிர ஹெலனின் குழந்தை பருவம் முதல் கல்லூரி பருவம் வாழ்க்கை வரை எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் காஸாபிளான்கா திரைப்பட விழா மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது சிறந்த இந்தித் திரைப்படம். இது தேசிய திரைப்பட விருது மற்றும் 16 பிலிம் பேர் விருதுகளையும் வென்றது. 2005ஆம் ஆண்டில் உலகளவில் வெளியிடப்பட்ட 10 சிறந்தபடங்களில் ஒன்றாக ‘பிளாக்’ படத்தை டைம் பத்திரிக்கை (ஐரோப்பா) தேர்வு செய்தது. பத்து சிறந்த படங்களில் இது ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

உலகில் வேறு சில நாடுகளிலும் ஹெலன் கெல்லரைப் பற்றி ஆவணப் படங்கள் எடுத்துள்ளனர். 2005ஆம் ஆண்டில் சுவீடன்போர்க் அறக்கட்டளை சார்பாக ஹெலன் கெல்லரின் ஆன்மீக வாழ்க்கையை மையப்படுத்தி ‘ஆன்மா ஒளிர்கிறது’ (Shining Soul) என்கிற ஆவணப்படம் எடுத்தனர். மூன்று குறைபாடுகளுடைய ஹெலன் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை கதை விளக்குகிறது.

நியூ இங்கிலாந்து வரலாற்று மரபினக் கழகம் மார்ச் 6, 2008இல் ஒரு அரிய புகைப்படத்தைக் கண்டுபிடித்தது. அந்தப் புகைப்படத்தில் ஹெலன் கெல்லரும், ஆனி சல்லிவனும் உள்ளனர். இந்தப் புகைப்படம் பலரின் கண்களுக்குத் தெரியாமல் இருந்தது. ஹெலன் கெல்லர் பல பொம்மைகளை வைத்திருக்கும் காட்சி. ஹெலனுடன் ஆனி இருக்கும் மிகப் பழமையான புகைப்படம் அது.