2
“எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் கண்ணே…”
சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூற்றில், மருதத் திணையின் ஞாழல் பத்தில் 142வது பாடலாக இடம் பெற்றிருக்கிறது மேற்கண்ட பாடல். ’ஞாழல்’ என்பது புலிநகக் கொன்றை மரத்தைக் குறிக்கும். ’தோழி கேள். எவனுடைய நாட்டின் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்து கொண்டிருக்கின்றனவோ அவனை இனி நான் நினைக்க மாட்டேன். என் கண்களுக்குச் சிறிதாவது தூக்கம் கிடைக்கட்டும்’ என்பது பாட்டின் பொருள்.
பி.ஏ.கிருஷ்ணன் அவர்களால் ‘Tiger claw tree’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியான நூல், தமிழில் ’புலிநகக் கொன்றை’ என்ற பெயரில் வெளியாகி சிறப்பான கவனத்தைப் பெற்றது. அசோகமித்திரனால், ‘ஆங்கிலத்தில் எழுதப் பெற்ற தமிழ்நாவல்’ என்று பாராட்டையும் பெற்ற இந்நூலை, தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான இலக்கியப் படைப்புகளுள் ஒன்று எனக் கூறலாம்.
1970ல் ஆரம்பித்து முன்னோக்கியும் பின்னோக்கியுமாக நகர்கிறது நாவல். தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை கதைக் களமாகக் கொண்டு நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொன்னா-ராமன் தம்பதியினரின் குடும்ப வாழ்க்கையில் ஆரம்பித்து, அப்படியே சிப்பாய் கலகம், கட்டபொம்மு கிளார்க்கைக் கொன்றது, பாஞ்சாலக் குறிச்சி வீழ்ந்தது, கட்டபொம்மு தூக்கிலிடப்பட்டது, மருதுபாண்டியரின் அதிரடி அறிவிப்புகள், ஆஷ் கொலை, வாஞ்சிநாதன் தற்கொலை என்ற வரலாற்றுத் தகவல்கள் எல்லாம் கதையினூடே சம்பவங்களாக, வாழ்க்கை நிகழ்ச்சிகளாகக் கண்முன் விரிகின்றன. சுதந்திரப் போராட்டம், அதற்குப்பின் நடந்த இந்திய அரசியல் சமூக மாற்றங்கள், அதன் பின்னணிகள் என விரிகிறது கதை.
நான்கு தலைமுறைகளைப் பற்றிய கதை என்பதால் நாவலில் ஏகப்பட்ட விவரணைகள் கொட்டிக் கிடக்கின்றன. மேம்போக்காகப் படிக்காமல் ஆழ்ந்து படிப்பதன் மூலம் நாவல் காட்டும் பல்வேறு காலகட்டத்து மக்களின் வாழ்க்கை முறை, சமூகப் பின்னணிகள், நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என பலவற்றை அறிந்து கொள்ள இயலுகிறது. நூல் உருவாக்கத்திற்காக ஆசிரியர் செய்திருக்கும் கடுமையான உழைப்பும் கண்முன் தெரிகிறது.
நாங்குநேரி ஜீயரின் மடப்பள்ளியில் புளியோதரைப் புலியாக விளங்கும் ஐயங்காரின் மகள் பொன்னா என்கிற பொன்னம்மாள். அவளுக்கும் பிரபல உண்டியல்காரக் குடும்பத்து லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் செல்ல மகன் ராமன் என்கிற ராமன் ஐயங்காருக்கும் வானாமாமலை பதினெட்டாம் பட்ட ஜீயரின் ஆசிர்வாதத்தோடு திருமணம் நடக்கிறது. நம்மாழ்வார், பட்சி என இரு ஆண் மகவுகளுக்கும், ஆண்டாளுக்கும் தாயாகிறாள் பொன்னா. சாப்பாட்டுப் பிரியனான ராமனுக்கு மதுப் பழக்கமும் விரும்பத்தக்கதாயிருக்கிறது. ஆண்டாளுக்குத் திருமணமான கையோடு அவள் கணவன் குளத்தில் மூழ்கி இறந்து விட அவள் விதவையாகிறாள். ராமன் ஐயங்கார் அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க, ஜீயர் அதை ’குல ஆச்சாரத்துக்கு விரோதம்’ என்று சொல்லித் தடுக்க, அந்தச் சோகத்திலேயே ராமனும் இறந்து விடுகிறார். பொன்னா தனியளாகிறாள்.
நம்மாழ்வாரையும் பட்சியையும் அவள் வளர்த்து ஆளாக்க, நம்மாழ்வாருக்கு காங்கிரஸ் கட்சியின் மீதான அபிமானம் அதிகமாகிறது. ஆனால் காந்தியத்தை விட, புரட்சியே உயர்ந்தது என நினைக்கிறான். திலகரின் கொள்கைகள் அவனை ஈர்க்கிறது. திலகரை மாதிரி நான்கைந்து தலைவர்கள் இருந்தால் போதும். மூட்டை முடிச்சுக்களோடு வெள்ளைகாரன் கப்பல் ஏறி விடுவான் என்பது அவன் எண்ணமாக இருக்கிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி வ.வே.சு அய்யர், வாஞ்சி என எல்லோரையும் சந்திக்கிறான். பாரதமாதா சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்கிறான். பொன்னாவின் தூண்டுதலால் லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள, அவளோ, மது என்ற மதுரகவியைப் பெற்றுக் கொடுத்து விட்டுக் காலமாகி விடுகிறாள். தனியனாகிறான் நம்மாழ்வார். இந்தியா புரட்சியால் விடுதலை பெறும் என்கிற அவன் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கிறது.
ஏற்கனவே தளர்ந்திருக்கும் அவனை பொன்னா மறுமணத்திற்குத் தூண்ட, மறுத்து விட்டு, விரக்தியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். வடநாட்டுக்குச் சென்று ஜோஷி மடத்தில் சேர்ந்து அவன் சாமியாராகி விட, அது தெரியாமல் அவன் வருவான் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்துகிறாள் பொன்னா.
நம்மாழ்வாரது மகன் மதுரகவியை அத்தை ஆண்டாள் வளர்க்கிறாள். பின் வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தில் சேர்க்கப்படுகிறான் மது. கதையினூடாக குருகுலத்தில் நடந்த ’பந்தி வஞ்சனை’ சம்பவங்கள் விளக்கப்படுகின்றன. அடுத்து பாபாநாசம் மலை அருவியில் மதுவின் கண்முன்னே அய்யர் இறந்து படுகிறார். நாளடைவில் காந்தியின் சித்தாந்தங்கள் பிடிக்காமல் போகிறது மதுவுக்கு. கம்யூனிஸம் ஈர்க்கிறது. கமலாவுடன் கல்யாணமும் நடக்கிறது. ஒரு பொதுவுடைமைப் போராட்ட ஊர்வலத்தில் இறந்துபடுகிறான் மது.
நாட்கள் நகர்கின்றன. பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பிரபலவழக்கறிஞர், ராஜாஜியின் அபிமானியும் கூட. ஆண்டாளோ சித்தம் தடுமாறி மனநோய் விடுதியில் சேர்க்கப்பட்டு இறந்து போய் விடுகிறாள். பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி விரிவுரையாளன். திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் கலெக்டருக்கு எதிராகப் பேசி வேலையை இழக்கிறான். அவனுக்கு பம்பாய்க்காரி உமாவின் மீது காதல். உமா அவனை ஐ.ஏ.எஸ். படிக்கச் சொல்கிறாள். கண்ணன் வழக்கம் போல சோம்பேறியாக இருக்கிறான்.
மதுவிற்கு பிறந்த நம்பி, ரோசா என்னும் மாற்றுத் திறனாளியான வேற்று ஜாதிப் பெண்ணை மணந்து கொள்கிறான். டாக்டராக இருக்கும் இருவரும் மக்கள் சேவையாற்றுகின்றனர். நம்பி கம்யூனிஸ்ட் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவனாக இருக்கிறான்.
இறந்துபோய் விட்டதாக அனைவராலும் கருதப்பட்ட நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைக்க, நம்பி அவரைச் சந்திக்க அங்கே செல்கிறான் – நாவலில் இந்தச் சந்திப்பு மிக முக்கிய இடம் பெறுகிறது – அவனிடம் பின்னர் தான் ஊருக்கு வந்து சேர்வதாகக் கூறுகிறார் நம்மாழ்வார்.
குற்றாலம் செல்லும் நம்பி, பூர்வீக ஊரான புனலூருக்குச் செல்கிறான். நக்சலைட் என்ற உளவுத்துறையின் சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைப் செய்யப்படுகிறான் – அப்போது வெளிப்படுத்தப்படும் நம்பியின் சிந்தனைகளும், உரையாடல்களும் நாவலை வேறொரு தளத்தை நோக்கி நகர்த்துகின்றன என்றால் அது மிகையில்லை – பின்னர் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்படும் நம்பி, மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான். செய்தி கேட்டுக் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. ஒரு கள்ளி படர்ந்த திருவனந்தபுரம் சுடுகாட்டில் நம்பி புகைந்து போகிறான், அவன் லட்சியங்களைப் போலவே!
ஜோஷி மடத்திலிருந்து புறப்பட்டு, தல யாத்திரை செய்து கொண்டே ஊருக்குத் திரும்பி வரும் நம்மாழ்வார், தன் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். நம்பி இறந்து போன சம்பவங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போகிறார். படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னாவோ பிள்ளை நம்மாழ்வாரை அடையாளமே கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்.
கண்ணன், ரோசாவை மணம் செய்து கொள்ள வேண்டுகிறான் அவள் மறுத்து விடுகிறாள். இறுதியில் நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையுடனும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார். உமாவின் நினைவுடன் கண்ணன் ஐ.ஏ.எஸ்.தேர்வு முடித்து டெல்லி செல்கிறான்.
இதுதான் 300 பக்கங்களுக்கு மேற்பட்ட புலிநகக் கொன்றையின் கதைச் சுருக்கம்.
இந்த நாவலின் மூலம் கிருஷ்ணன் வைக்கும் வாதங்கள் மிக முக்கியமானவை. சமூகம், மதம், அரசியல், கல்வி, சினிமா, ஆன்மீகம் என்பது பற்றி இந்த நாவல் முன் வைக்கும் கருத்துகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. அரசியல் குறித்து நம்பியும் கண்ணனும் பகிர்ந்துக் கொள்ளும் தகவல்கள் மிக நுட்பமானவை. காந்தியின் அரசியல், கம்யூனிஸ்ட்களின் அரசியல் வாழ்க்கை, தி.முக.வின் வெற்றி என எல்லாமே சற்று அதிகமாகவே இந்நாவலில் விமர்சனத்துள்ளாகின்றன. குறிப்பாக கம்யூனிச சித்தாங்களை, தத்துவங்களை இந்நாவல் சற்றுக் கடுமையாகவே விமர்சனம் செய்கிறது எனலாம்.
நாவலில் கம்யூனிஸ்ட் நம்பி கூறுவதாக வரும் கீழ்கண்ட உரையாடல் மிக முக்கியமானது.
”முகுந்தன், மதம் நமது நாட்டில் மிகப் பெரிய உண்மை. அது நாம கண்ணை மூடிகிட்டா மறைஞ்சி போயிடாது. நாம் அநியாயத்தை எதிர்த்துப் போராடறதுக்கு மதம் உதவியா இருக்கும்னு நினைச்சா அதோடு கை குலுக்க நாம தயங்கக் கூடாது. காந்தி இதைத்தான் அவர் பாணில, கொஞ்சம் குழப்பமான முறைல செய்ய நினைச்சாரு.”
“மதத்தை அணைச்சிகிட்டா மதம் நம்மையே மாத்திடும். முதல்ல நல்லா இருக்கும். ஆனா நம்மோட சொந்த ஆத்மாவைக் கரையேத்தற முயற்சில நாம மக்களை மறந்திடுவோம். அவங்க பிரச்சனைகளை மறந்திடுவோம்” என்ற முகுந்தனின் எதிர்வினை தற்போதைய அரசியல்வாதிகளின் போலித்தனத்தை, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு தான் தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையை, அப்பட்டமான சுயநலப்போக்கை, தங்கள் சுயலாபத்துக்காக மட்டுமே மதத்தைக் கையாள்வதைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.
அது போன்று வீட்டை விட்டு வெளியேறிய நம்மாழ்வார், சகோதரன் பட்சிராஜனுக்கு எழுதும் கடிதமும் மிக முக்கியமானது.
“சுயராஜ்யம் புளித்து போன ஒரு கனவாக எனக்குப் படுகிறது. கடவுள் அவர்கள் பக்கம். எதிர்க்க எனக்கு விருப்பமில்லை. வரப்போகும் தலைமுறைகள் வரையும் தியாகிகளின் பட்டியலில் என் பெயர் வரும் என்பதற்காக நாயைப் போலச் சாக நான் தயாராக இல்லை” என்ற வரிகளில் அக்கால இளைஞர்கள் சிலரது மாறுபட்ட மனநிலை வெளியாகிறது.
மற்றுமொரு முக்கியமான கடிதம் நம்பி, இறப்பதற்கு முன் கண்ணனுக்கு எழுதும் கடிதம்.
”தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் இந்த வாழ்க்கையால் என்ன பயன்? ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பதால் என்ன லாபம்? நிறைவேறவே முடியாத கொள்கைகளைக் கட்டிக் காப்பதில் என்ன கிடைக்கப் போகிறது?” – சமூகத்தின் சுயநலப் போக்கையும், அதன் சகிக்க முடியாத இன்னொரு முகத்தையும் ஆழ்ந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்டப்படும் இந்த வரிகள், நம்பிக்கையில் தோற்றுப்போனவனின் உண்மையான வாதமாகக் கருதத்தக்கது.
கம்யூனிஸ்ட்கள் குறித்த கீழ்கண்ட வரிகள் வாசக அதிர்ச்சியை ஏற்படுத்துபவை.
”அட்டையை எடுத்துட்டா புஸ்தகமெல்லாம் காத்தால்ல இருக்கு”
”இந்த கம்யூனிஸ்ட் போர்வையை என்னிக்கு நீ தூக்கிப் போடறியோ அன்னிக்கு தான் உருப்படுவே”,
“கம்யூனிஸ்டா, உள்ளத்திலேயே அழுகி வீச்சம் அடிக்கற பயலுங்க அவங்க தான்”.
”இருங்க. தலகாணி இல்லையா. இடுப்புக்கு அண்டக் கொடுக்கணும்ல… தென்பட்டது லெனின்…. புஸ்தகங்களை தன்னுடைய ரவிக்கையால் மூடினாள். படுத்துக் கொண்டு அவனை அழைத்தாள்…”
”லெனினுக்குச் சேதமில்லை. இரண்டாம் பாகத்தின் நீல அட்டைதான் சிறிது கசங்கிய மாதிரி இருந்தது”
– மேற்கண்ட வரிகளினூடே இந்நாவல் கூறும் நுண்ணரசியல் புரிந்து கொள்ள எளிதானது.
எல்லோருக்கும் நல்லவனாக வரும் நம்பியின் மறைவு அதிர்ச்சியை அளிப்பது மட்டுமல்ல; அதற்கு எந்த எதிர்ப்பலைகளும் எழாமல் இருப்பதே புரையோடிப் போன சமூகத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக உள்ளது.
கையாலாகாத, பொருந்தாத வெற்றுக் கூச்சல் எழுப்பும் நபராக வரும் நரசிம்மனின் பாத்திரமும் இங்கு முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகும். ’பிராமணர்களுக்கு தனிதேசம் வேண்டும்’ என்ற அவனது அபத்தப் பேச்சு, குறியீடாக வேறு ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்துகிறது.
பெரியார், நரசிம்மன் வசிக்கும் சன்னதித் தெருவில் பேச வந்தபோது முன்வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்படுத்துதல்கள் மிக முக்கியமானவை. அதுவும் ‘யகாஸகௌ சகுந்தகா…’ எனத் தொடங்கி சுக்ல பக்ஷ யஜூர்வேதத்தில் வருவதாகச் சொல்லப்படும் ஸ்லோகத்தை பேச்சாளர் கூறக் கேட்டதும் அதை உடனடியாகப் படிக்க ஆவல் கொள்ளும் நரசிம்மனின் போக்கு அவனது குணாதிசயத்தைத் தெளிவுறக்காட்டி விடுகிறது.
கடைசியில் மலம் சுத்தம் செய்யும் பெண்ணை உறவுக்கு அழைக்க, அவளால் முகத்தில் மலம் அப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான் அவன். ஆனால் அவன் இறுதி ஊர்வலத்தில் அதே பெண், சுடுகாடு வரை ஒப்பாரி வைத்துக் கொண்டே செல்வதாக வருவது ஏன் என்பது நுணுகி ஆராயத்தக்கது.
ரோசாவின் பாத்திரப் படைப்பும் கவனத்தில் கொள்ளத் தக்கது என்றாலும் அது பிறப்பு முதல் உடன் வளர்ந்த இயல்பான ஒன்றாகவே இருப்பதால் வியப்படைய ஏதுமில்லை.
நாவலின் ஊடாக வந்து போகும் சர்வாங்க சவர ஜெர்மன் ஐயங்கார், விக்டோரியா ராணியின் மரணத்துக்காகக் குளித்த, பொன்னாவை எப்படியாவது வளைத்துப் போட முயற்சித்த வக்கீல் ஐயங்கார், ஆண்டாளைக் கட்டிப்பிடித்த அவர் பையன், நள்ளிரவில் தூரம் ஒதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட ஆண்டாளை அரவணைத்த அய்யராத்து குடுமிப் பையன், எப்போதும் கற்றாழை நாற்றம் அடிக்கும் தினமொட்டு நிருபர் சங்கரராமன், வாய் ஓயாமல் ஆங்கிலம் பேசிக் கொண்டும், அவ்வப்போது திருமலையிடம் வந்து நாசிகா சூரணம் யாசித்தும், சமயங்களில் நிர்வாணமாகத் தெருக்களில் சுற்றிக் கொண்டும் இருக்கும் மனநிலை பிறழ்ந்த வக்கீல் ராமசாமி அய்யர், வயதிற்கு மீறிய தெளிவுடன் இருக்கும் கண்ணனின் தங்கை ராதா என்று கிருஷ்ணன் நம் முன்னால் காட்சிப்படுத்தும் மனிதர்கள் நாவலில் எந்தவித மிகைப்படுத்துதலும் இல்லாமல் மிக இயல்பாகவே வந்து போகிறார்கள்.
காந்தீயம், கம்யூனிஸம், மத நம்பிக்கை, குரு விசுவாசம், சமூக சேவை, திராவிட இயக்கங்கள், வரலாற்று விமர்சனம் என்று பல தடங்களை இந்நாவல் தொட்டுச் செல்கிறது. இது உணர்வு சார்ந்த நாவலா, அரசியல் சார்ந்த நாவலா என்று பார்த்தால் உணர்வு சார்ந்த அரசியல் நாவல் என்று சொல்லலாம். புரட்சி என்பது இன்று ஒரு நகைப்புக்குரிய சொல்லாக மாறி விட்டதற்கு யார் காரணம் என்பதை இந்த நாவல் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. பிரச்சனைகளுக்கான தீர்வு இதுதான் என்று கூறாமல் செல்வதே ஒருவிதத்தில் நாவலின் பலம் என்றும் சொல்லலாம்.
நாவல் கூறும் மையக் கருத்தாக இதைக் கொள்ளலாம் – ஒருவன் கொள்கை வீரனாக வாழ்கிறான். ஆனால் கடைசியில் அந்தக் கொள்கைக்காகவே உயிரை விடுகிறான், எந்தப் பயனுமில்லாமல். மற்றொருவனோ, வாழ்க்கையை யதார்த்தமான அதன் போக்கில் எதிர் கொள்கிறான். வளைந்து கொடுத்துப் போகப் பழகிக் கொள்ளும் அவன், இறுதியில் எந்த விதக் கொள்கைப் பிடிப்புமில்லாது, முடிவு எடுக்கக் கூடத் தயங்கும் சராசரி மனிதனாக வாழ்க்கையை தயக்கத்துடன் எதிர் கொள்கிறான். யதார்த்தத்தில் இப்படிப்பட்ட மனிதர்களே எங்கும் காணக் கிடைக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களே தங்கள் வாழ்வனுபவத்தால் தங்களை உருமாற்றிக் கொண்டு வெற்றியடைகிறார்கள் என்பதே உண்மை. அது அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், ஆன்மீகமாகட்டும் எங்கும் நாம் இப்படிப்பட்ட கண்ணன்களை அதிகம் பார்க்கலாம்.
ஆனால், கண்ணன்களே நாளடைவில் கம்சர்களாக மாறுவது தான் வாழ்க்கையின் குரூரம் அல்லது யதார்த்தம்.
மொத்தம் பதினெட்டு அத்தியாயங்களில், கொஞ்சம் கூடத் தொய்வு இல்லாமல் மிக விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறார் பி.ஏ.கிருஷ்ணன். தடை நடையே இல்லாமல் செல்வது நாவலின் வெற்றிக்குச் சான்றாகிறது. உணர்வுரீதியாக சொற் சித்திரம் தீட்டியிருக்கிறார் எனக் கூறின் அது மிகையில்லை. தாமிரபரணி ஆறு, சுலோசன முதலியார் பாலம், நாங்குநேரிக் குளம், வண்ணார் பேட்டை பங்களா, குற்றால அருவி என காட்சிப்படுத்துதல்களும் விவரணைகளும் வெகு இயல்பாக இருக்கிறது.
ஆரம்பம், நடு, முடிவு என்று நாவலின் முழுமையான அம்சங்கள் கொண்டிருந்தாலும், ஒருவிதத்தில் நம்பியின் மரணத்தோடு, நம்மாழ்வார் திரும்ப வந்து குடும்பத்துடன் இணைவதோடு நாவல் முற்றுப் பெற்று விடுகிறது எனலாம். மற்றொரு விதத்தில் பார்த்தால் நாவல் முடியவில்லை, கண்ணனின் டில்லி பயணத்தோடு தற்காலிகமாக முடிந்திருக்கிறது அவ்வளவே! கண்ணனின் டில்லி வாழ்க்கை, சீக்கியர் பிரச்சனை, சாகித்ய அகாதமி விவகாரம், டில்லி அரசியல், காந்திகளின் எழுச்சி-வீழ்ச்சிகள், கழகங்களின் வீழ்ச்சி என்று சமகாலச் செய்திகளை கண்ணன் மூலமாகப் பதிவு செய்ய கிருஷ்ணனுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. புலிநகக் கொன்றையின் இரண்டாம் பாகம் என்றாலும் ஒருநாள் வரக்கூடும்.
பறவைகள் கிளைகளில் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கலாம். பூக்களை அழிக்கலாம். சில நேரங்களில் அமைதியாகவும் இருக்கலாம். ஆனால் மரம் அதனால் எல்லாம் பாதிக்கப்படுவதில்லை. அது அமைதியாய் அனைத்திற்கும் சாட்சியாய் இருந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களும் அப்படித்தான். வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் இது எதனாலும் பாதிக்கப்படாத காலம், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருக்கிறது, புலிநகக் கொன்றையைப் போலவே!
நூலை வாங்க :
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை
நாகர்கோவில் – 629001
ஆன்லைனில் வாங்க : http://www.dialforbooks.in/
***