1

http://www.panuval.com/image/catalog/natrinai/iruttilirundhu-velicham-1.jpg

என் வாழ்க்கையில் சினிமா பெரும்பங்கு பெற்றது. நானே ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்தால், இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது. இவற்றிலுள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அதிகம் அறியப்படாதவை பற்றித்தான் என்கிறார் அசோகமித்திரன் இந்த நூலின் முன்னுரையில்.

அவர் முன்னுரையில் சொல்லியிருப்பது உண்மைதான் என்பதை பக்கங்களைப் புரட்டப் புரட்ட தெரிந்து கொள்ள முடிகிறது. மொத்தம் ஆறுபகுதிகளாக அமைந்துள்ளது இந்நூல். அந்தக் கால சினிமா படங்களின் வரலாறு, நடிகர்களின் ராஜ்ஜியம், நடிகர், நடிகைகளிக்கிருந்த செல்வாக்குகள், ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் பெருமைகள், அவர் நிர்வாகத் திறன், படம் எடுத்த விதம், தோல்வியை எதிர்கொண்ட முறை, அவரது வியாபார உத்திகள் ஆகியவற்றோடு ’பராசக்தி’யின் “அருமை, பெருமைகள்”, இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு, தேவிகாராணியுடனான தனது இரு சந்திப்புக்கள், ஜெமினியில் தான் பார்த்த வேலை மற்றும் அனுபவங்கள், அங்கே சந்தித்த மனிதர்கள், அவர்களது குணாதிசியங்கள், ரஞ்சன், கே.டி.ருக்மிணி, நாகேஷ், ஸ்ரீதர், வசுந்தரா தேவி என பலரது குணச்சித்திரங்கள் என்று பலவாறாக விரிகிறது இந்நூல். ஆங்காங்கே வழக்கமான அசோகமித்திரனின் எள்ளல்கள் படிக்கும் போதே சிரிப்பை வரவழைக்கின்றன.

குறிப்பாக வாசனின் ”ஔவையார்” சினிமாவைப் பார்த்த ராஜாஜியின் டைரிக் குறிப்பு, சிடுமூஞ்சியையும் சிரிக்க வைத்து விடும். எப்போதும் தனது படங்களைக் குறை கூறி விமர்சனம் செய்து கொண்டிருந்த கல்கியை ஔவையாரின் விசேஷ காட்சிக்கு வரவழைத்து அவரை ஸ்பெஷல் விமர்சனம் எழுதச் செய்த எஸ்.எஸ்.வாசனின் திறமை, எஸ்.எஸ். வாசனை எல்லோரும் ‘பாஸ்’ என்று அழைத்த மரியாதை மற்றும் அன்பு; அந்தக் காலத்திலேயே அசோகமித்திரனின் கதை இல்லஸ்ட்ரேட் வீக்லியில் வெளியானது; திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த ஒரு நடிகர், அவரோடு ஒப்பிட்டுப் பேசிய சினிமா வரைபட உதவியாளர்; சந்திரபாபுவைப் பற்றிய தனது அவதானம், ’நாய்’ கோபு என்பவரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம், சமாதிக் கதவைத் தட்டிய வாலண்டினோவின் ஆவி என நகைச்சுவை, சோகம், மகிழ்ச்சி, சிந்தனை என பல உணர்வுத் தளங்களில் இந்நூலில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள் ஏராளம்.

“எஸ்.எஸ்.வாசன் குதிரையைப் பந்தயத்தில் அதிர்ஷ்டத்தினால் ஜெயிக்கவில்லை. அது பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டு தனது பட்டறிவினாலேயே ஜெயித்தார்.”

அசோகமித்திரனும் சில வேடங்களில் நடித்திருக்கிறார் (என்ன ஆச்சரியம்!!) – என்பது போன்ற தகவல்கள் சுவாரஸ்யத்தைத் தருகின்றன.

வெறும் தகவல்கள் மட்டுமல்ல; இந்தக் கட்டுரைகள் மூலம் அசோகமித்திரன் முன் வைக்கும் கேள்விகள் ஏராளம். அவற்றைச் சிந்தித்து விடை காண வேண்டியதும், மாற்றத்திற்கு முயற்சிப்பதும் திரைத்துறையினரின் கையில் தான்இருக்கிறது. குறிப்பாக ’பராசக்தி’ திரைப்படம் பற்றிய அசோகமித்திரனின் கருத்து சிந்திக்கத்தகுந்தது. அதுபோல “இலக்கியம் கற்பனைக்குத் தரும் வாய்ப்பும் சுதந்திரமும் திரைப்படம் தருவதில்லை. இதுவே இலக்கியம் நீடித்த பாதிப்பு ஏற்படுத்துவதற்குக் காரணமாய் இருக்க வேண்டும்” என்று அவர் கூறும் கூற்று, முற்றிலும் ஏற்கத் தக்க ஒன்று. அந்தக் காலத்தில் நடிகைகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் – அப்படிக் கொடுக்கப்பட்டாவிட்டாலும் அவர்கள் தங்கள் முத்திரைகளைப் பகித்த விதம் (வசுந்தரா, கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி… பின்னால் சாவித்ரி, பானுமதி, பத்மினி…)பற்றி ஒரு கட்டுரையில் (தளைகளுக்கப்பால்…) சொல்கிறார் அ.மி. அந்த நிலை மாறியது ஏன், மாறியது யாரால் என்பதெல்லாம் அந்த, இந்தக் கால திரைக்கலைஞர்கள் சிந்திக்க வேண்டியது. (ஆனால், இதே கட்டுரையில் அவர், “ராதிகாவோ, ரேவதியோ உலகின் எப்பகுதியின் சிறந்த நடிகைகளோடும் ஒப்பிடக் கூடியவர்கள் “ என்று குறிப்பிட்டிருப்பது ரொம்பவே இடிக்கிறது. கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 1992 என்பதால் அதை அமியின் அப்போதைய கருத்தாகக் கொள்ளலாம்)

சந்திரலேகா பற்றிய கட்டுரையில் அசோகமித்திரன் குறிப்பிடும் ஒரு தகவல் வில்லன் கதாபாத்திரத்தின் இன்னொரு பரிணாமத்தைக் காட்டுகிறது. அக்கட்டுரையில் அவர் சொல்கிறார், “சந்திரலேகா படத்தில் வில்லன் கூட ஒரு தோரணையோடுதான் கதாநாயகியைத் துரத்திப் போகிறான். அவன் பிடியிலிருந்து தப்பிப் போன கதாநாயகியை வில்லனின் அடியாள் சற்றும் எதிர்பாராத ஒரு வகையில் மடக்கி விடுவான். “பாத்து ரொம்ப நாளாச்சு”என்பான். இந்த வரி இந்தியிலும் கொட்டகையை அதிரச் செய்தது. இதே அடியாளின் திறமையின்மையை ஒருமுறை வில்லன் சாடுவான். “இப்படி மீண்டும் நடந்தால்”என்று திரும்புவான். அங்கே பூதாகரமான ஒருவன் சவுக்கை வைத்துக்கொண்டு வில்லனுக்கு வணக்கம் தெரிவிப்பான். மீண்டும் கொட்டகை அதிரும். அடியாள் நடுநடுங்கி மண்டியிட, ”எங்கிருந்தாலும் ஒரு வாரத்துக்குள் அவளைப் பிடித்து இழுத்து வரவேண்டும்”என்று எச்சரித்து விட்டு “போ”என்பான். சொல்லி வைத்தது போல வில்லனின் நாயும் “லொள்”என்னும். மீண்டும் கொட்டகை அதிரும். உண்மையில் மகத்தான படங்களின் சிறப்பு பெருமளவுக்கு அவற்றின் சிறு நடிகர்களிடமிருந்தும், சிறு நிகழ்ச்சிகளிடமிருந்தும் தான் கிடைக்கிறது” – இந்த வரிகள் தான் எவ்வளவு உண்மை. இந்த நடைமுறை உண்மையை பல படங்களில் (ஸ்ரீதர், பாலுமகேந்திரா, வசந்த பாலன் எனப் பலரது படங்களில்) பார்க்கிறோம். அந்த வில்லனின் பரிணாம வளர்ச்சியை, ”இதோ இந்த மணியை அடிச்சா அவா ஊதுவா; அவா ஊதினா இவா வருவா” என்று மங்கம்மா சபதத்திலும் பின்னர் “தகடு தகடு” உட்பட சமீபத்திய படங்கள் வரையிலும் பார்த்திருக்கிறோம்.

அசோகமித்திரன், பத்ம விருதுகளைப் பற்றிச் சொல்லும் போது (நாகேஷ் கட்டுரை), “இந்த பத்ம விருதுகளைப் பெரிதாக நினைக்கக் கூடாது. தமிழ் மொழி என்றில்லை. இதர மொழிகளிலும் பல பெயர்கள் வியப்பையே தரும். இந்த பத்ம விருதுகளைக் கேலி செய்வது போல யாரோ காஷ்மீர் எழுத்தாளர் என்று சிபாரிசு செய்து அவருக்கு விருதும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசியில் அப்படி ஒரு எழுத்தாளரே இல்லை என்பது தெரிய வந்தது“ (இது எப்படி இருக்கு?)

உலக மற்றும் சர்வதேச அளவில் பரந்துபட்டு இருக்கும் சினிமா பற்றிய அசோகமித்திரனின் பார்வையை, கருத்துக்களை, அனுபவங்களை அறிந்து கொள்ள இந்த நூல் ஒரு வாய்ப்பு என்றாலும் அந்தக் காலப் படங்களைப் பற்றிய சில விஷயங்கள் (குறிப்பாக பிற மொழிப் படங்கள்) அடங்கிய கட்டுரைகள் வாசகர்களுக்கு எவ்வளவு தூரம் ஈர்ப்பைத் தரும் என்ற வினாவும் எழாமலில்லை. 1970ம் வருடக் கட்டுரை முதல், 2007ம் வருடக் கட்டுரைகள் வரை இந்நூலில் இருக்கின்றன.

நூலின் சில சுவாரஸ்யங்கள் இங்கே

ராஜி என் கண்மணி படத்திற்கு வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் யார்?

 சினிமாத்துறை பற்றி முதன்முதலில் நூல் எழுதிய இலக்கியவாதி யார்?

சினிமா நடிகராய் இருந்ததுடன் விமானம் ஓட்டும் லைசென்ஸ் வைத்திருந்த நடிகர் யார்?

 பிரபல இந்திப்படத் தயாரிப்பாளருக்கு கதை ஆலோசகராக இருந்த எழுத்தாளர்/முதல் தமிழர் யார்?

 திரைப்பட உருவாக்கத்திற்காக லண்டன் சென்ற அக்காலக் கதாசிரியர் யார்?

 – இப்படி சுவாரஸ்யமான, நாம் அறிந்திராத, ஊகித்தும் அறிந்து கொள்ள முடியாத பல முக்கியமான தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன. இலக்கிய, திரைத்துறை ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூலின் பெயர்  : இருட்டிலிருந்து வெளிச்சம்

ஆசிரியர்  : அசோகமித்திரன்

பக்கங்கள்  : 320

விலை   : ரூபாய் 240/-

பதிப்பகம்  : நற்றிணை பதிப்பகம்

நூலின் பொருள் : சினிமா வரலாறு

 கிடைக்குமிடம் :
நற்றிணை பதிப்பகம்,

பழைய எண் 123 ஏ, புதிய எண் 243 ஏ,

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி, சென்னை – 5.

தொலைபேசி : 044-43587070

***

License

Share This Book