6
சுஜாதாவின் மறைவிற்குப் பின் அவரது நினைவைப் “போற்றி” பல நூல்கள்/கட்டுரைகள் வெளிவந்தன. ஒரு இதழில் அவர் வாழ்க்கை பற்றிய தொடர் வெளியானது. சில எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்புகள் நூலாக வந்தன. விகடன் ’சுஜாதா மலர்’ என்ற ஒன்றினை வெளியிட்டது. என்றாலும் அவற்றிலெல்லாம் ஏனோ ஒரு நிறைவு வரவில்லை. சமீபத்தில் அப்படி ஒரு நிறைவான நூலைத் தந்திருக்கிறார் எழுத்தாளர் அமுதவன். அமுதவனின் “என்றென்றும் சுஜாதா” ஒரு நல்ல நினைவுத் தொகுப்பு.
சுஜாதாவின் குழந்தைத் தனமான இயல்புகள், அவரது மென்மையான சுபாவம், கூட்டங்களில் பேசக் கூச்சம், நாவல்கள் எழுதுவதற்காக விஷயங்களைத் தேடிச் சேகரித்து, பல நபர்களைச் சந்தித்து, அந்தத் தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு பின் எழுத முற்பட்டது, எழுத்துலகிலும், திரையுலகிலும் அவரைப் பலர் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியபோதுகூட அதை பகிரங்கமாக வெளிப்படுத்தாத அவரது பெருந்தன்மை, சுஜாதா ஆதரித்த ஒரு எழுத்தாளரே சுஜாதாவைப் பற்றி தவறாக பிரசாரம் செய்தது என நாம் அறிந்த மற்றும் அறியாத புதிய பல தகவல்களை விரிவாகச் சொல்கிறது இந்த நூல். ”கறுப்பு வெள்ளை சிவப்பு “ (பின்னால் ரத்தம் ஒரே நிறம் என்ற தலைப்பில் வெளியானது) எழுதிய போது அவருக்கு நேர்ந்த சங்கடங்கள், சுஜாதாவுக்கு நெருக்கமாக இருந்து கொண்டே கலவரத்தைத் தூண்டி விட்ட சிலர், சுஜாதாவுக்கு சினிமாவை இயக்க வந்த வாய்ப்பு, சாவிக்கும் சுஜாதாவுக்குமான மனக்கசப்பு, அதை அமுதவன் தீர்த்து இருவரையும் ஒன்றிணைத்தது என்று நிறையவே சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.
சுஜாதாவுக்கு ஒரு நூல் எழுதியதற்குக் கிடைத்த ராயல்டி ஒரு சில்வர் குடம் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? மற்றொரு நூலுக்குக் கிடைத்தது பேண்ட் பிட். அதுவும் கூட சுஜாதாவின் உயரத்துக்குப் பொருந்தவில்லை என்பதால் அவர் அதை அப்படியே வைத்து விட்டாராம். ஆனால் தனக்குப் பணம் வராதது, பதிப்பாளர்கள் ஏமாற்றியது குறித்து எந்தப் புகாரும் அவரிடம் இல்லை. அதுதான் சுஜாதா.
”நம்மாள நாலுபேரு பிழைச்சிட்டுப் போறாங்க. போகட்டும்” என்று பெருந்தன்மையுடன் அவர் விட்டுக் கொடுத்தது அவரது மாண்பைக் காட்டுகிறது. சுஜாதாவை படம் இயக்கச் சொன்ன ஒரு மர்ம மனிதர் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சுஜாதாவுக்கு திருஷ்டிப் பொட்டாக அமைந்த ’பாய்ஸ்’ பட வசனம் பற்றி அவர் பேசத் தயங்கியது, அதற்காக மனம் வருந்தியது பற்றியும் அமுதவன் நூலில் கூறியிருக்கிறார். சுஜாதாவின் கடைசி கால கட்ட விவரணைகள் வருத்தத்தைத் தருகின்றன.
இந்த நூலில் நிறைய புதிய புதிய விஷயங்கள் உள்ளன. சுஜாதா பலாப்பழம் சுமந்து வந்த கதை சுவாரஸ்யமானது; கூடவே சோகமானது. ஆனால், சரஸ்வதி கடாக்ஷம் பெற்ற ஒரு எழுத்தாளரின் வயிற்றில் அடித்து சில பதிப்பாளர்கள் பிழைக்க நினைத்தது [இன்றும் பலர் அப்படி உள்ளனர்] ரொம்பவே கொடுமையானது.
“அமுதவன்” எழுதிய நூல் இது. அவரது நினைவுத் தொகுப்பு. ஆனால் கூடுமானவரை எந்த இடத்திலும் ‘தான்’ வராமல் சுஜாதாவையே எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்தி எழுதியிருக்கிறார். ஒரு நினைவுத் தொகுப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல உதாரணம். சபாஷ் அமுதவன்.
சுஜாதா ப்ரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
நூல் வெளியீடு :
விகடன் பிரசுரம்
வாசன் பப்ளிகேஷன்ஸ்
751, அண்ணாசாலை
சென்னை – 600 002
தொடர்புக்கு : http://vikatan.com/
http://www.dialforbooks.in/ மூலம் ஆன்லைனிலும் புத்தகத்தை வாங்கலாம்.
***