"

10

எழுத்தாளர் பூரம் சத்திய மூர்த்தி ’நலம் தரும் சொல்’ என்ற சிறுகதைக் குறுந்தகடைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ”கருவளை” என்ற பெயரில் ஒரு குறுந்தகட்டை வெளியிட்டிருக்கிறார். இது, கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஒலிக்கக் கூடியது. கலைமகள், கல்கி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் வெளியான ஆறு சிறுகதைகளை குறுந்தகடாக்கி அளித்திருக்கிறார். ”பிரியவாதினி” என்ற கதை உண்மையிலேயே சிறப்பாக உள்ளது. (அந்தக் கதையைப் படிக்க http://aravindsham.blogspot.com/2009/08/blog-post_22.html செல்லவும்)

இக்கதை வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் கற்பனையாகப் புனையப்பட்டது. நந்திமலை எனப்படும் குடுமியான் மலைக் கல்வெட்டுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டது. மகேந்திரவர்ம பல்லவன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இச்சிறுகதையை எழுதியிருக்கிறார் சத்தியமூர்த்தி. மகேந்திரவர்மன் ஏன் சைவத்துக்கு மாறினான், புத்த, சமண சமயங்களை அவன் வெறுத்தற்குக் காரணம் என்ன என்பதையெல்லாம் தனது கற்பனை கலந்து கதையாக்கியிருக்கிறார். பாத்திரத்தை உணர்ந்து பின்னணிக் குரல் கொடுத்திருக்ககிறார் பாம்பே கண்ணன். கதையின் முடிவு தரும் சோகம் கேட்பவர்களையும் பாதிக்குமாறு கதையை அமைத்திருப்பது ஆசிரியரின் வெற்றி.

அடுத்து வரும் சிறுகதை கருவளை. கருமை வர்ணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கதை 1958-59ல் கலைமகள் நடத்திய வண்ணச் சிறுகதைப் போட்டி வரிசையில் பரிசு பெற்ற ஒன்று. இக்கதையில் குழந்தைகள் உலகம் மிகச் சிறப்பாகப் புனையப்பட்டிருக்கிறது. கணவன் – மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் ஊடலையும், காதலையும் சற்று விரிவாகவே சொல்கிறது இக்கதை. சுருக்கமாகச் சொன்னால் வெட்கப்படத் தெரியாத ஒரு பெண்ணிற்கு வெட்கப்படத் தெரிந்தது. ஆனால் அது பின்னர் மறைந்தது. அது ஏன் என்பதைச் சொல்கிறார் ஆசிரியர். (கதை சுமார்தான்)

1973ல் கலைமகளில் இரண்டாம் பரிசு பெற்ற கதை அடுத்து வரும் கோபுர தரிசனம். வாடகைக்கு குடியிருப்பவர்களின் பிரச்சனை பற்றிப் பேசுகிறது இது. ஆசிரியரின் அனுபவம் இதில் தெரிகிறது. ஒருகாலத்தில் சத்திரமாக இருந்த வீட்டை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு குடித்தனக்காரர்களைத் தொந்தரவு செய்யும் பேராசைக்கார செட்டியாருக்கு, தனியாக தனக்கென்று ஒரு புதிய அறை கட்டிக் கொண்டு வசிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. அந்த ஆசை நிறைவேறியதா, அதன் பின் என்ன நேர்ந்தது, என்பதைச் சொல்கிறது கோபுர தரிசனம். வர்ணனைகளில் கிண்டல் தொனிக்கிறது. தெளிவான, உச்சரிப்புச் சுத்தத்துடன் கூடிய பின்னணிக்குரல்கள் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

அடுத்த கதை ’நன்றி எதற்கு?’ பண்ணையில் வேலை செய்யும் ஒரு ஏழை படும் பாட்டை இந்தச் சிறுகதை வெளிப்படுத்துகிறது. சாதாரண கிராமத்துக் கதைதான். பின்னணிக் குரல்கள் இச்சிறுகதைக்கு பக்கபலம். 1965ல் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் வெளியான கதை ”கனவுகள்”. ஒரு வயதான தம்பதிகள். அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அந்தப் பின்னணியில் அவர்களது வாழ்க்கை நகர்வுகளை, அவர்களது மன வோட்டங்களை மிக இயல்பாகச் சித்திரிக்கிறது இந்தக் கதை. ஒரு இளைஞனை மகனைப் போலக் கருதிப் பாசம் காட்டுகிறாள் ஒரு மூதாட்டி. அந்த இளைஞனிடம் அவள் கண்ட கனவுகள் என்ன ஆகிறது என்பதை இக்கதை சொல்கிறது.

தங்கள் இறப்பிற்குப் பின் அந்த இளைஞன் தான் தங்களுக்கு இறுதிக் காரியம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் இருவரும். மூதாட்டிக்கோ அந்த இளைஞனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து பார்க்க வேண்டும், தன் கையால் சமைத்துப் போட்டு எல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசை. அடிக்கடி அது பற்றிக் கனவு காண்கிறாள். அதை அவனிடமும் சொல்கிறாள். அதுவரை திருமணத்தைத் தள்ளிப் போட்டு வந்த அவனும் அந்தக் கனவை நிறைவேற்ற விரும்புகிறான். தன் தாய்க்கு அதுபற்றிக் கடிதம் எழுதுகிறான். கடைசியில் யார் கண்ட கனவு நிறைவேறியது என்பதைச் சொல்கிறது இக்கதை. இந்தக் குறுந்தகட்டின் சிறப்பான சிறுகதை இது என்று சொல்லலாம்.

இறுதிக் கதையாக அமைந்திருப்பது ’இரண்டாம் மனைவி’. இது மஞ்சரி தீபாவளி மலரில் வெளியான கதை. இச்சிறுகதையை நயமான உரையாடல்கள் மூலமே நகர்த்திச் செல்கிறார் சத்தியமூர்த்தி. மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறான் கணவன். அவனுக்கு அதிகாரியாக இருக்கும் அந்தப் பெண்ணிடமே சென்று நியாயம் கேட்கிறாள் மனைவி. அதன் பிறகு என்ன ஆனது, கணவன் திருந்தினானா, அவள் பிரச்சனை சரியானதா என்பதைச் சொல்கிறது, திடுக்கிடும் முடிவைக் கொண்ட நெகிழ்ச்சியான இச் சிறுகதை. பின்னணிக் குரல் கொடுத்த பெண்கள் பாத்திரத்தை உணர்ந்து பேசியிருக்கின்றனர்.

ஆறு கதைகளுமே மிக நன்றாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல குரல் வளத்துடன் கூடிய பின்னணிக் கலைஞர்கள் பங்களித்திருக்கிறார்கள். பின்னணி இசையின் ஒலி அளவு மிக அதிகம். அதன் அளவைக் குறைத்து அமைத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இச்சிறுகதைகளைக் கேட்பது உண்மையிலேயே ஒரு நல்ல நாடகம் பார்க்கும்/ கேட்கும் அனுபவத்தைத் தருகிறது. இதுபோன்ற தேந்தெடுத்த சிறுகதைகள் ஒலிவடிவில் வெளியாகும் போது அது, அந்தச் சிறுகதைகளையே வேறு ஒரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்தக் குறுந்தகட்டின் விலை ரூ. 100. பாம்பே கண்ணன் அவர்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். தொடர்புக்கு : bombaykannan@hotmail.com.

பூரம் சத்திய மூர்த்தி – 9444452202

ஒருங்கிணைப்பாளர் – பி.வெங்கட்ராமன் – 9841076838

***