"

3

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-132/veliyetram.jpg

வாழ்க்கை எனும் சுழலில் சிலரால் மிக எளிதாக நீந்தி அக்கறை செல்ல முடிகிறது. சிலரால் சுழலில் சிக்கி தவித்து, இளைத்து, எப்படியாவது மீண்டு விட மாட்டோமா என மூச்சுக்குமுட்டி, மோதி மீள முடிகிறது. சிலர் நீந்தவும் தெரியாமல், மூழ்கவும் விருப்பமில்லாமல் தத்தளித்து சுழலுக்குள்ளேயே சிக்கிச் சின்னாபின்னமாகின்றனர். அந்த விதத்தில் பார்த்தால் வாழ்க்கை என்பது ”இப்படித்தான்” என்று வரையறை செய்ய இயலாததாக உள்ளது. அப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலிலிருந்து வெளியேறும் சிலரது வாழ்க்கை பற்றிப் பேசுகிறது யுவன் சந்திரசேகர் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள “வெளியேற்றம்” புதினம்.

”வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன.” என்னும் கருத்து உண்மைதான் என்றாலும் அது விடுதலையா அல்லது தண்டனையா என்பதை வெளியேறுபவரால் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடிவதில்லை. காரணம், சமயங்களில் அந்த விடுதலைகளே தண்டனைகளாகவும் ஆகிவிடக் கூடும் என்பதினால் தான்.

வெளியேற்றத்தின் கதை என்ன?

சிலர், சில பிரச்சனைகளால் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் யார், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன, ஏன் வெளியேறுகிறார்கள், அவர்கள் யாரைச் சந்திக்கிறார்கள், அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதை வாழ்வின் பல்வேறு தரிசனங்களோடும் தத்துவச் சிக்கல்களோடும், வித்தியாசமான வாழ்வியல் அனுபவங்களோடும் கலந்து சொல்வதுதான் வெளியேற்றத்தின் கதை. ஆனால்… கிட்டத்தட்ட 500 பக்கங்கள் உடைய இப்புதினத்தை இவ்வாறு ஓரிரு வரிகளில் குறிப்பிடுவது முறையில்லை. இப்புதினத்தின் கதையைச் சற்றே விரிவாகப் பார்த்தால்தான் இது கூறும் பல செய்திகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

சந்தானம் – சித்ரா மனமொத்த தம்பதியர். சந்தானம் ஒரு எல்.ஐ.சி. முகவர். இனிமையான இல்லற வாழ்க்கை. இரு குழந்தைகள். வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும் நாற்பது வயதைக் கடந்தவர் சந்தானம். இல்லற வாழ்க்கையின் அலுப்பு அவருக்கும் இருக்கிறது. ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சந்தானம் திருவண்ணாமலை செல்கிறார். லாட்ஜில் தங்குகிறார். அங்கு மற்றோர் அறையில் இருக்கும் ஒரு நபர் தமது வித்தியாசமான செயல்பாட்டால் சந்தானத்தைக் கவர்கிறார். மெல்ல அவருடன் பரிச்சயம் ஏற்படுகிறது. கணபதி என்னும் பெயர் கொண்ட அவர் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறார். கேட்க கேட்க சந்தானத்துக்கு அதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

கணபதி யாரைச் சந்திக்கக் காத்திருக்கிறாரோ அவரை தானும் சந்திக்க விரும்புகிறார். இருவரும் சேர்ந்து அண்ணாமலை ஆலயத்துக்குச் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் புதினத்தின் முதல் திருப்புமுனை. ஆர்வத்தால் உந்தப்பட்ட சந்தானம், கணபதியின் மனைவியைச் சந்திக்கிறார். அவர் சொல்லும் அனுபவங்களும், நபர்களும் மேலும் பிரமிப்பைத் தூண்டுகின்றனர். அவர்களைச் சந்திக்க விழைகிறார். தேடல் தொடர்கிறது. ஹரிஹர சுப்ரமணியத்தில் தொடங்கி மன்னாதி, சிவராமன், ராமலிங்கம், பால்பாண்டி, குற்றாலிங்கம், வைரவன், கோவர்த்தனம், ஜய்ராம், ஆனாருனா என்று பல தரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறார் சந்தானம்.

அமைப்பிலிருந்து வெளியேறிய அவர்களின் வாழ்க்கை கதைகளாகவும் சம்பவங்களாகவும், அனுபவங்களாகவும் விரிகிறது. இந்தத் தொடர்ச் சங்கிலியில் தானும் ஒரு கண்ணியாக அல்லாமலேயே அந்தச் சங்கிலியின் மூலத்தை அறிய விழைகிறார் சந்தானம். அதன் முழுமையை அறிய அவர் காசிக்குச் செல்ல நேர்கிறது. அங்கு அவருக்குக் கிடைக்கும் அனுபவம், தரிசனம் என்ன, அதுவரையான பயணத்தில் சந்தானம் அறிந்து கொண்டது, தெரிந்து கொண்டது என்ன, புரிந்து கொண்டது எது என்பதை மிக விரிவாகச் சொல்கிறது ”வெளியேற்றம்”

இது கதைச் சுருக்கம் மட்டுமே. இந்நாவல் முன்னும் பின்னுமாக ஊற்று, புனல், இடைமுகம், யாத்திரை, சங்கமம் என பல்வேறு பாகமாக விரிகிறது.

முதலில் நாம் சந்திக்கும் வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்க இயலாது தோற்று, பின்தங்கி, அஞ்சி வெளியேறும் நபர்களையே பின்னால் வேறொரு பரிணாமம் பெற்றுச் சந்திக்க நேரும் போது ஒரு வாசகனாக அடையும் அந்த பிரமிப்பும், அனுபவமும் வாசித்தே அறிய வேண்டிய ஒன்று. பாத்திரங்களோடு நாமும் பயணிக்கும் உணர்வை, நாவலோடு நாமும் வாழும் உணர்வை ஏற்படுத்துகின்றது யுவனின் எழுத்து.

’வெளியேற்றம்’ மிக ஆழமாக, சுவாரஸ்யமாக பல மானுடர்களின் வாழ்க்கையை கண்முன் விரிக்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால் இது தத்துவம் பேசுகிறது. மறுபுறத்தில் இது வாழ்க்கையை, அதன் வலியை, வேதனையை, இன்பத்தை, ஒரு நொடியில் மலரும் அதன் ஆனந்தத்தை, ஏன் வாழ வேண்டும், என்பதற்கான மனிதனின் விழைவை, நோக்கத்தை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறது.

பல்வேறு பிரச்சனைகளால் சிக்குண்டு, மீளும் வழி அறியாது, திகைத்து, வெறுத்து, விடுதலை விரும்பி, மாற்றத்தைத் தேடி வீட்டை விட்டு வெளியேறும் சிலரது வாழ்வைப் பற்றிக் கூறுவதால் இந்நூலுக்கு ”வெளியேற்றம்” என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கிறதுதான். ஆனால் உண்மையில் “வெளியேற்றம்” என்ற இந்நாவலின் தலைப்பு வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் சிலரது வாழ்வையோ அல்லது அவர்களது செயல்பாடுகளையோ குறிக்கவில்லை. பின் அது எதைக் குறிக்கிறது?

அதை, பின்னால் பார்ப்போம்.

நூல்களை வாசிப்பதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. சில நூல்களை அப்படியே வாசிக்க ஆரம்பித்து முடித்து மடித்து வைத்து விடலாம். சில நூல்களை வாசித்து அசை போட்டு திரும்ப வாசித்துத் தொடரலாம். சில நூல்களை என்னதான் முயற்சி செய்தாலும் சில பக்கங்களுக்கு மேல் வாசிப்பது இயலாது. சில நூல்கள் நம்முடனே பயணிப்பவை. கூர்ந்த கவனம் வேண்டுபவை. திரும்பத் திரும்ப நம் வாசிப்பைக் கோருபவை. நம் அகத்தில் அமர்ந்து, சிந்தனையில் வியாபிப்பவை. “வெளியேற்றம்” அப்படிப்பட்ட நூல்களுள் ஒன்று.

யுவன் சந்திரசேகரின் கதை சொல்லும் பாணி சராசரி கதை சொல்லும் பாணிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாசகனைப் புனைவுலகின் ஆழத்துக்குள் அமிழ்த்திவிடக் கூடியது. கதை, கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என்று செல்லும் யுவனின் கதைகள், வாசகனுக்கு நுட்பமான வாசிப்பின்பத்தை அளிப்பதுடன், படைப்பின் நிர்ப்பந்தங்களற்ற இனியதொரு புத்துலகுக்கு அவனை அழைத்துச் செல்வன. வெளியேற்றமும் அப்படித்தான். அது மதுரைக்கும், திருநெல்வேலிக்கும், குற்றாலத்துக்கும், திருத்தணிக்கும், வட இந்தியாவிற்கும், திருவண்ணாமலைக்கும், காசிக்கும் என பல இடங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்கிறது.

கதையில் வரும் ’ராமலிங்கம்’ பாத்திரம் உயிரின் வேட்கையை, வாழ்தலின் விழைவைப் புரிந்து கொள்ளும் விதம் சிறப்பு. பெண் சகவாசத்தால் தீராத நோய் வந்த ராமலிங்கம் மரணம் ஒன்றே தனக்கு முடிவு தரும் என்று நம்புகிறான். ஒருநாள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள விழைகிறான். அவன் பாய முடிவு செய்த அதே கணத்தில், அதே தண்டவாளத்தில் எதிரே ஓர் ஆட்டுக்குட்டி. வேகமாக ரயில் வருவதை உணர்ந்து துள்ளி விலகுகிறது அது. அதன் வாழும் வேட்கை, அதன் கண்களின் இருக்கும் உயிரின் தவிப்பு ராமலிங்கத்தின் முடிவை மாற்றுகிறது. மீண்டும் வாழ முடிவு செய்கிறான். அந்த மாறுதலை யுவனின் வரிகள் மிக அழகாகக் காட்சிப்படுத்துகின்றன.

ரயில் மறைந்து நீங்கிய வெட்ட வெளியில் எதிர்ப்புறம் நின்றிருந்த ஆடும் இவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். தாங்கள் பகிர்ந்து கொள்வது சாவை அல்ல; வாழ்வை. இந்தக் கட்டாந்தரை, மேற்புறம் மட்டும் பளபளவென்று வெண்மை பூத்திருக்கும் தண்டவாளங்கள், அவற்றுக்கிடையில் குவிந்து கிடக்கின்ற கருங்கல் ஜல்லி, முற்றிய பகல் வேளையின் வெக்கை, தார்ச்சாலையில் குளம் மாதிரி அலையடித்துக் கிளம்பும் ஆவி, வெற்றுக் கண்களுக்கு அநியாயமாய்க் கூசும் ஆகாயம், கையை மறுபடி இறக்கி விட்ட கைகாட்டி மரம் எல்லாம் இன்னும் இருக்கிறது….” (இதே காட்சி எனக்கு ஜெயமோகனின் ஒரு சுய அனுபவக் கதையில் புழு ஒன்றைக் கண்டு, அதன் உயிர்த் துடிப்பைக் கண்டு தற்கொலை முடிவிலிருந்து அவர் மனம் மாறுவதை ஞாபகப்படுத்துகிறது)

அந்தக் கணம் ராமலிங்கத்தின் வாழ்க்கையில் திருப்பு முனையாகிறது. அதன் பின் ராமலிங்கத்திற்கு ஒருபோதும் தற்கொலை எண்ணம் வரவில்லை. ஆனாலும் அவன் வீட்டை விட்டு, இல்லை… இல்லை அந்த ஊரை விட்டே வெளியேறுகிறான், தான் மட்டுமல்ல; தன் துணையுடன். அதன் பின்னர் ராமலிங்கம் வாழ்க்கை என்ன ஆனது என்பதை ’ராமலிங்கம்’ சொல்லும் விதமும், சந்தானம் அதைக் கேட்டு பிரமிப்பதும் ……. அப்போதைய ராமலிங்கம் மற்றும் சந்தானத்தின் எண்ண ஓட்டங்களும் அருமை.

கதைகளை பல கதைகளின் தொகுப்பாகவும் சுய அனுபவங்களாகவும் சொல்வது, தன்னையே பல ஆளுமைகளாக உருவாக்கிச் சித்திரிப்பது என பின் நவீனத்துவத்தின் அனைத்துக் கூறுகளும் கொண்டவை யுவனின் படைப்புகள். இதற்கு “வெளியேற்றமும்” விலக்கில்லை. நான் லீனியராக, முன்னும் பின்னுமாக இறந்த காலம், கடந்த காலம், (கவனிக்க கடந்த காலம்: இறந்து போன காலமல்ல) நிகழ்காலம் என மாறி மாறிப் பயணிக்கிறது. நாம் காணும் இந்த உலக யதார்த்தம் இதன் ஒரு முகமே. இன்னும் நாம் அறியாத பல யதார்த்த முகங்கள் உள்ளன. அதையே “மாற்று மெய்மை” என்று யுவன் குறிப்பிடுகிறார். அப்படி நாம் அறியாத, நம்மால் பல முடியாத பல ஆளுமைகள், சம்பவங்கள் இப்படைப்பில் உள்ளன.

இப்புதினத்தில் வரும் ஒவ்வொருவரின் கதைகளும் ஒவ்வொரு விதம். ஐயர், செட்டியார், தலித், நாடார் என்று பலரது வட்டார வழக்குகள், பழக்க வழக்கங்கள், பேச்சு மொழிகள், வாழ்விடங்கள். மிகத் தெளிவான மொழி நடை. சிறப்பான சொல்லாடல்கள். படிக்கப் படிக்க பிரமிப்பைத் தருகிறது இந்நாவல்.

போகிற போக்கில் பாத்திரங்களின் ஊடாக யுவன் எழுப்பும் கேள்விகளும், தத்துவங்களும், செய்திகளும் நம்மை சிந்திக்கத் தூண்டுவன. உதாரணத்திற்கு சில…

தான் இன்னும் பிறக்கவில்லை என்று நம்புகிறவனுக்குத்தான் இறப்பைப் பற்றிய யோசனை இருக்காது” (பக்.21)

 இறந்தவர்கள் உலகம் ஒன்று இருக்கிறது என்றால் இன்னும் பிறக்காதவர்களும் அங்கே இருக்கத்தானே செய்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் எவ்விதம் அடையாளம் காண்பார்கள்?” (பக்.38)

 சதா சர்வ காலமும் சேற்றில் நின்று இரைதேடும் அவை (கொக்குகள்), இறக்கைகளின் வெண்மையை எப்படி இவ்வளவு கறாராகப் பேணுகின்றன?” (பக். 72)

 பிறப்பதற்கு முன்னாலேயே இதுவெல்லாம் (உயர்வு, தாழ்வு) தீர்மானமாகி விடுகிறதா? யார் தீர்மானிப்பது? என்ன அடிப்படையில்? எதற்காக? குறைந்த பட்சம் மனிதக் கருவாக ஒரு பெண் வயிற்றில் உதிப்பதற்கு முன்னால் நானும் இவனும் ஒரே உலகத்தின் பிரஜைகளாகத் தானே இருந்திருப்போம். இப்போது இருக்கிற மாதிரி இன்னார் வயிற்றில் பிறக்க வேண்டும், இன்ன ஜாதியில் பிறக்க வேண்டும் என்பதெல்லாம் அங்கேயே தீர்மானமாகி விடுகிறதோ?” (பக். 81)

 இப்ப பூமியை ஒர்த்தன் கொடைச்ஞ்சிக்கிட்டே போறான்னு வையி மறுபக்கம் வெளியேறும்போதும் தரைதான் இருக்குமாம். சொல்லிக்கிறாக. ஆனா, ஆகாசத்துக்கு மறுபக்கம்னு ஒண்ணே கெடையாது. தெரியுமில்லே… ?” (பக். 95)

 இப்படி இன்னும் பற்பல சிந்திக்கத் தூண்டும் வினாக்களும், விடைகளும் கொண்டிருக்கிறது இப்புதினம்.

நாவலின் மிக முக்கியமான, தீர்க்கமான கதாபாத்திரம் ஜய்ராம். கழிவுகளைச் சுத்தம் செய்பவரின் மகன், ஒரு ஞானியாக மலர்கிறார். எப்படி என்று படிக்கும்போது உண்டாகும் பிரமிப்பு, அவர் குருவின் செயலையே கேள்விக்குரியதாக்கும்போது மேலும் பல மடங்கு அதிகரிக்கிறது. மிக மிகத் தெளிவான ஒரு விதத்தில் சொல்லப்போனால் குருவையே மிஞ்சிய, தன்னிறைவு பெற்ற, மிக முழுமையான கதாபாத்திரம் ஜய்ராம். ”குருவின் வழியில் தொடர்ந்து செல்வதல்ல சீடனின் பயணம் என்பது; அது குருவின் வழியை அறிவது மட்டுமே” என்ற உண்மையை ஜய்ராம் பாத்திரத்தின் மூலம் வலுவாகச் சொல்கிறார், யுவன். மன்னாதி மற்றும் சந்தானத்துடனான ஜய்ராமின் உரையாடல் நாவலின் மிக முக்கியமான பகுதி.

எதிர்பாராத பல்வேறு நிகழ்வுகளால் ஆனதுதான் வாழ்க்கை என்பது. எதிர்பார்ப்புப்படி எல்லாம் நடந்தால் சுவாரஸ்யம் போய் விடும் என்பதால் அப்படி அமைந்திருக்கிறதா அல்லது அமைகிறதா என்பது கேள்விக்குறி. அதற்கான விடையை வெளியேற்றம் தருகிறது என்றும் சொல்லலாம் அல்லது அந்த அனுபவத்தைக் காட்சிப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். ஆனால், இது இப்படித்தான் என்று தீர்ப்புக் கூற முடியாது. ஏனென்றால் இது காட்சிப்படுத்துவது ஒரு மிகப் பெரிய ஜன சமூகத்தை. அதன் பயணத்தை, அனுபவங்களை, வாழ்க்கையை. பலாப்பழத்தின் மேல் தோல் போல் இந்தப் புதினத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான மாந்தர்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். ஆகவே, படிக்கும் போது மிக ஆழமான கவனம் கோருகிறது இந்நாவல்.

புதினத்தின் சிந்திக்கத் தூண்டும் வரிகள் சில…

எங்களை மாதிரி ஏழைங்க பணத்தைப் பத்திச் சவடாலாப் பேசுறதும் ஆத்தாமையாலதாண்டா மன்னாதி. ஈர்க்குச்சி மாதிரி இருக்கிறவன், ‘நானெல்லாம் யாரையும் அடிச்சிக் கிடிச்சு வய்க்க மாட்டேன்னுகவுரமாச் சொல்லிர்ற மாதிரிதான். (பக். 113)

 ஒரு முள் செடியை இறுக்கிக் கட்டிக்கோ. வலி தாங்காம ரெண்டு சொட்டுக் கண்ணீர் ஊறாதா. அதெ வச்சிண்டு பிதுர் லோகத்துக்குப் போயிடலாங்கறது ஐதீகம்” (. 180)

 குடும்பம்ண்றது லேசுப்பட்ட விசயம் இல்லேங்க. ஆயிர ஆயிரம் வருசமா சனங்க வாள்ந்து பளகின விசயம் இல்லேங்களா? தனியா இருந்து ஒருத்தனும் ஒண்ணுத்தெயும் களட்டிற முடியாது.” (பக. 363)

 பாமரன் அறிஞன் என்றெல்லாம் பேதம் கிடையாது நண்பரே. இதெல்லாம் அளவுகோல்களால் உண்டாகிற வித்தியாசங்கள். இன்னொரு அளவுகோலில் எல்லாரும் மனிதப்பிறவுகள் தாம். வேறொரு அளவுகோலில் கொசுவும் ஒட்டகச்சிவிங்கியும் விட்டில் பூச்சியும் மஹாத்மா காந்திஜியும் எல்லாருமே உயிர்ப்பிறவிகள் தாம்” (பக். 450)

 குருசிஷ்யன் என்று ஆகும்போதே, இவரில் ஒரு பகுதி குருவாகிறது. அவரில் ஒரு பகுதி சிஷ்யனாகி விடுகிறதே” (பக். 450)

 இதுவரைக்கும் மனித குலம் அனுபவித்து வந்திருக்கும் தற்செயல்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கோக்கும் பட்சத்தில் வரலாறு என்று நாம் தொகுத்து வைத்திருக்கும் சங்கதி இப்போது இருக்கிற மாதிரியே இருக்குமா?” (பக். 458)

 இறந்தவர்கள் உலகம் ஒன்று இருக்கிறது என்றால், இன்னும் பிறக்காதவர்களும் அதே உலகத்தில் தானே இருந்தாக வேண்டும். பிறப்பதற்குத் தன்முறை வருவதற்காகக் காத்துக் கொண்டு இருக்கத்தானே செய்வார்கள். இரண்டு தரப்பும் ஒருவரையொருவர் எவ்விதம் அடையாளம் காண்பார்கள்?” (பக். 460)

 தற்செயல்களின் வரலாற்றில் இதெல்லாம் முன் கூட்டித் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே இருக்கும். திட்டகர்த்தா யார் என்று கண்டடைவதுதான் சிக்கலே…” (பக். 465)

 இவுகளையெல்லாம் ஒரு பார்வையெ வச்சி அள்ந்துற முடியாதுங்க. சந்யாசி மாதிரி இருப்பாககாவி கட்ட மாட்டாக. குடும்பஸ்தரு மாதிரி இருப்பாககுடும்பம் இருக்காது. சித்து வேலையெல்லாம் காமிப்பாக. சித்தரு கெடையாது. இது ஒரு தனீ வகெ. நாம தடுக்கிலே பாஞ்சா, கோலத்திலே பாஞ்சு வளுக்கிட்டு ஓடீர்றவுக..” (பக். 482)

மேற்கண்டவை ஒரு துளிதான். இம்மாதிரி நம் அகத்தே கேள்வி எழுப்பி நாம் விடை தேட வேண்டிய பல சிந்தனைகள் போகிற போக்கில் நாவலில் சொல்லப்பட்டிருப்பது நாவலின் மிகப் பெரிய பலம். கூடு விட்டுக் கூடு பாய்தல், அற்புதங்கள், அதிசயங்கள், நிர்வாண சந்யாசிகள், ஜீவசமாதிகள், தத்துவங்கள் என பற்பல களங்களைக் கொண்ட இந்நாவல் எம்.பில், பிஹெச்.டி ஆய்வு செய்பவர்களுக்கு மிகப் பெரிய திறப்பாக இருக்கும். மேலும் பல பல களங்களுக்கு, மேல்நிலை ஆய்வுகளுக்கு இடமளிக்கும்.

யுவன் சந்திரசேகர் தான் ஒரு அற்புதமான கதை சொல்லி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

உண்மையில் இந்தப் புதினத்தை முழுமையாக விமர்சனம் செய்வது என்பது ‘ கடலை, பானைக்குள் அடைப்பது போல’. எப்படி முயற்சி செய்தாலும் அது குறையாகவே முடியும். ஏனென்றால், இதில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள் அப்படிப்பட்டவை. பல கோணங்களில் பலரது பார்வைகளில் அலசப்பட வேண்டியவை. ”வெளியேற்றம்” போன்ற புதினத்தை பிற நூல்களுக்கு விமர்சனம் எழுதுவது போல எழுதி விட முடியாது. இது கங்கை போன்ற பிரவாகம். கொஞ்சமே சொம்பில் அடைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

இனி வெளியேற்றத்துக்குள் நுழைவோம்.

யுவன் எழுதிய முக்கியமான ஒரு நாவல் குள்ளச் சித்தன் சரித்திரம். அதுவும் அதிசயங்கள், ஆன்மீகம், அற்புதம், மறுபிறவி என கதைக்குள் கதையாக விரிவது. கிட்டத்தட்ட இந்த நூலை அதன் இரண்டாவது பாகம் போல என்று சொல்லலாம். ஆனால் இந்நூல் அதையும் தாண்டி விரிந்து, பல கேள்விகளுக்கு தத்துவ நோக்கில் விடைகளைச் சொல்கிறது. கூடவே நம்மையும் வினா எழுப்பிச் சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக குருவுக்கும் சீடனுக்கு நடக்கும் சில உரையாடல்கள்…

வேதமூர்த்தியின் குருவின் குரு சொல்கிறார் : நம் கையில் என்ன இருக்கிறது. ஜனங்களுக்கு எது நடக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அது நம் மூலமாக நடக்கிறது. அவ்வளவுதான்

மற்றோரிடத்தில் : கனவைக் கண்டுகொண்டிருக்கும்போதே கண் விழித்து அடுத்தவரிடம் சொல்ல முடியுமா?”

உயிர்ப்பொருள் ஒவ்வொன்றையும் பார்வைக்குத் தெரியாத வலைப்பின்னல் உறை மாதிரி மூடியிருக்கிறது. வலுவான காந்த சக்தி கொண்டது அது. ஒவ்வொரு உறைக்கு ஒவ்வொரு குணாம்சம். இரண்டு உயிரினம் நெருங்குகிறதா, காந்த மண்டலங்கள் இரண்டு நெருங்குகின்றன என்றுதான் அர்த்தம்

– இப்படி குருவுக்கும் சீடனுக்கு உரையாடல்கள் ஒருபுறமென்றால் மறுபுறம் சந்தானம் தான் சந்திக்கும் நபர்களுடன் உரையாடுவது. ஒருவிதத்தில் உரையாடல்கள்தான் இந்த நாவலை முன்னெடுத்துச் செல்கின்றன என்று கூடச் சொல்லலாம். அப்பாவிப் பெண் தங்கம், ஹரிஹர சுப்ரமண்யன், வைரவன், மன்னாதி, சிவராமன், கோவர்த்தனம், ஜய்ராம் என ஒவ்வொருவருடான உரையாடல்களும், சிந்தனைகளும், க்ளாஸிக். தொடர்ந்து யோசிக்க வைக்கும் பல சிந்தனைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன.

யுவனின் பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். குறிப்பாக ஜய்ராமுடனான உரையாடல்கள், குருவின் செயலையே விமர்சிக்கும் அவரது மனப்பாங்கு, “குரு – சிஷ்யன் என்று ஆகும்போதே, இவரில் ஒரு பகுதி குருவாகிறது. அவரில் ஒரு பகுதி சிஷ்யனாகி விடுகிறதே” என்ற அவரது கருத்தும், பிறவிகள் பற்றிய அவரது சிந்தனையும் எத்தனையோ உள்ளர்த்தங்களைக் கொண்டது. (எனக்கு ஜய்ராம் பாத்திரம் ஏனோ யோகிராம் சுரத்குமாரை நினைவுபடுத்துகிறது.). கண் தெரியாமல் எதையும் நுண்ணுணர்வால் அறியும் ஹரிஹர சுப்ரமண்யத்தின் திறன், அவரை, அவரது சிறுபருவத்தில் அணுகும் வேதமூர்த்தி, வேதமூர்த்திக்கும், ஹரிஹரனின் தாய்க்கும் நடக்கும் உரையாடல்கள் போன்ற பகுதிகள் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளன.

அதுசரி, யார் இந்த வேதமூர்த்தி?

சந்தானம் சந்திக்கத் தேடி அலையும் கண்ணியின் மையப் புள்ளிதான் வேதமூர்த்தி. எங்கெங்கோ தேடி இறுதியில் காசியில் அவரைச் சந்திக்கிறார் சந்தானம். ஆனால், அவரை முன்னமேயே சந்தானம் சந்தித்திருக்கிறார் என்பதுதான் புதினத்தில் சுவாரஸ்யமானது.

தன்னைப் போல் அல்லாமல், விரும்பும் தறுவாயில் மரணத்தை வரவழைத்துக் கொள்ளும் கலையில் தன் சீடன் வெற்றிபெற வேண்டும் என்று இறக்கும் தருவாயில் வேண்டுகோள் வைத்து ஆசிர்வதிக்கிறார் வேதமூர்த்தியின் குரு. வாழ்வின் ஒரு கட்டத்தில் அதற்காக காசிக்கு வருகிறார் வேதமூர்த்தி. ஜீவ சமாதி ஆகும் முயற்சியில் ஈடுபடுகிறார். – தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ள முயல்வது தற்கொலையா? குருவின், ஆசையை வேண்டுகோளை நிறைவேற்ற அவர் அவ்வாறு செய்கிறாரா? அல்லது அது ஒரு சித்தியா? தன் பிறப்பை நிர்ணயிக்கும் உரிமை கொண்டவர்களுக்கு, இறப்பை நிர்ணயிக்கவும் உரிமை உண்டு என்பதை சொல்லாமல் சொல்லத்தானா? அல்லது வாழ்ந்தது போதும், நாம் விட்டுச் செல்லும் பணிகளைச் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். போதும் இந்த மானுடப் பிறவி என்று நினைத்து எடுக்கப்படும் முடிவா? ’வெளியேற்றம்’ என்பது உண்மையில் இதுதானா? உடலை விட்டு, உயிர் துறப்பதுதான் வெளியேற்றமா? – இப்படி சில சிந்தனைகள் எழுகின்றன, நூலின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது.

ஆனால், ”வெளியேற்றம்” என்பது இதுவல்ல.

”வெளியேற்றம்”, உடலைத் துறப்பதையோ, வீட்டை அல்லது குடும்பத்தைத் துறப்பதையோ குறியீடாகக் கொள்ளவில்லை. .”வெளியேற்றம்” உண்மையில் மனிதர்களின் ”வெளியேற்றத்தை”க் குறிக்கவில்லை. அது, மனிதனின் அகத்திலிருந்து வெளியேறும் ஒன்றைக் குறிக்கிறது. வெளியேறும் அது என்ன, எப்படி வெளியேறுகிறது, அதனால் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் எந்தெந்த விதத்தில் அக மாறுதல்கள் நிகழ்கின்றன, அதன் விளைவுகள் என்ன என்பதை ஒரு மாபெரும் கதைப் பின்னல்கள் வழியாகச் சொல்கிறது. எல்லோரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்த வேதமூர்த்தியிடமிருந்து “தான்” வெளியேறியதா, இல்லையா? என்பதை “வெளியேற்றம்” சொல்கிறது, மிகவும் சூட்சுமமாக.

அமைப்புகளிலிருந்து வெளியேறுவதோ, நிறுவனங்கள், பீடங்களிலிருந்து வெளியேறுவதோ வெளியேற்றமல்ல; தன்னுள்ளிலிருந்து தான் வெளியேறுவதுதான் வெளியேற்றம் என்பதை மிகவும் பூடமாகச் சொல்கிறது ”வெளியேற்றம்”

பின்னுரையில் யுவன் சொல்கிறார், நாவலில் வரும் பெரியவர் நிஜமாகவே தாமே குறித்த அதே நாளில், அதே நேரத்தில், நாவலில் வருகிற மாதிரியே சிங்கூர் காட்டிலேயே சமாதி அடைந்ததாக. மேலும் சொல்கிறார், “ இந்த நாவலின் முதலாவது பகுதியான ஊற்று என்ற அத்தியாயத்தில் திருவண்ணாமலையில் உள்ள ஒரு விடுதி இடம் பெறுகிறது. ஊரும் விடுதியும் நிஜமானவை. அவை மட்டுமல்ல. அங்கு காத்திருந்தவரும் உடன் துணைக்கு இருந்தவரும் கூட நிஜமான மனிதர்கள் தான்” என்கிறார். வியப்பாகத்தான் உள்ளது. மேலும் வியப்பைத் தருவது “இந்த நாவலில் வருகிற மாய நிகழ்வுகள் – நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டவையாகத் தென்படுகிறவை – அனைத்துமே நிஜமாக நிகழ்ந்தவை. வலுவான சாட்சியங்களும் சான்றுகளும் உள்ளவை.” என்று அவர் சொல்லியிருப்பது தான்.

வெளியேற்றம் ஏன் என்னைக் கவர்ந்தது? எனக்கும் இதுபோன்ற சில நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதால், என் வாழ்க்கைத் தேடலிலும் இது போன்ற சுவாரஸ்யமான சில அதிசய மனிதர்களைச் சந்தித்திருப்பதால்தான் என்று சொல்லலாமா? ஆம். சொல்லலாம். ஆனால் அதுமட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. யுவன் சந்திரசேகரின் பிற படைப்புகளும் என்னைக் கவர்ந்தவையே. அவற்றில் மணிமகுடம் ”வெளியேற்றம்”. என்றால் அது மிகையில்லை.

வாழ்க்கையில் தேடலும், எதிர்பாராமல் ஒவ்வொருவரது வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகளின் மீதுமான கேள்விகளும் கொண்டவருக்கு வெளியேற்றத்தின் நூல் எளிதில் பிடிபட்டுவிடும். இப்படைப்பை உருவாக்க யுவன் எவ்வளவு உழைத்தாரோ தெரியாது. வழக்கமான, அழகான, மயக்கக் கூடிய நடை. யுவனுக்கும், இதை வெளியிட்டகிழக்கு பதிப்பகத்திற்கும் (முதல் பதிப்பு : உயிர்மை வெளியீடாக வந்தது) நல்லதொரு படைப்பை அளித்தமைக்காக என் நன்றிகள். தமிழில் வெளியான மிகச் சிறந்த படைப்புகளில் வெளியேற்றத்துக்கும் நிச்சயம் இடமுண்டு.

இந்த நூலை வாங்க

New Horizon Media Pvt. Ltd

177/103, First Floor,

Ambal’s Building, Lloyds Road,

Royapettah. Chennai – 600014

இணைய தளம் : https://www.nhm.in/shop/Kizhakku/

http://www.dialforbooks.in/ மூலமும் புத்தகத்தை வாங்கலாம்.

***