"

11

https://2e86ta2n5u6g4fc8ua2jglkq-wpengine.netdna-ssl.com/wp-content/uploads/2014/01/apprentice.jpg

நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் பரமஹம்ச யோகானந்தரின் சுயசரித நூல் என்று நினைத்து விட வேண்டாம். இது அதுவல்ல. இதுவரை நான் வாசித்த ஆன்மீக நூல்களுள் முதல் பத்து இடங்களுக்குள்.. இல்லை.. இல்லை.. முதல் ஐந்து இடங்களுக்குள் வைத்து மதிக்கத் தகுந்த நூல் இது என்று தாராளமாகச் சொல்வேன்

கேரளாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கிறான் அந்தச் சிறுவன். வழக்கம்போல்தான் அவன் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒன்பதாம் வயதில் ஏற்படுகிறது ஒரு முக்கியமான திருப்பம். அவன் வீட்டின் கொல்லைப் புறத்துக்கு வந்து நிற்கிறார் சாது ஒருவர். அவனுக்குப் புரியாத மொழி பேசி தீட்சை அளிக்கிறார். நேரம் வரும்போது தன்னைக் காண்பாய் என்று சொல்லிச் செல்கிறார். அதுமுதல் ஒருவித பரவச உணர்வில் திளைக்கிறான் அந்தச் சிறுவன். வளர வளர தொடர்ந்து பல தேடல்கள்… பயணங்கள்… ஆன்மீக அனுபவங்கள்.. பல சாதுக்களின் சந்திப்புக்கள்… தரிசனங்கள்..

உண்மையைத் தேடும் வேகம் அவனை இமயத்தை நோக்கிச் செலுத்துகிறது. தன்னந்தனியனாக இமயம் நோக்கிச் செல்கிறான். வழியில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அதிசயங்கள், அவன் பார்த்த காட்சிகள் அவனை பிரமிக்க வைக்கிறது. தன்னை இமயம் நோக்கி ஈர்க்கும் சக்தி எது என அறிய ஆவல் கொள்கிறான். அவன் அதை அறிந்த பின் ஏற்படும் பிரமிப்பு இருக்கிறதே, அதை நமக்கும் ஏற்படுத்துவதில்தான் இந்த நூலின் வெற்றி இருக்கிறது. அதன் பிறகு அவன் பெறும் பயிற்சிகள், அவனுக்குக் கிடைக்கும் உபதேசங்கள் நமது சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அற்புதமான நடை. நூலாசிரியரின் கூடவே பயணிக்கும் உணர்வு. படிக்கும் நமக்கு ஒருவித பரவச உணர்வு ஏற்படும்படி மிக எளிமையாக அழகு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் டாக்டர் உமேஷ் சந்தர்பால்.

இந்த நூலில் வரும் அற்புதச் சம்பவங்கள் நிச்சயம் வாசகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். நம்புவதா, வேண்டாமா என்ற சிந்தனைக் குழப்பத்தையும் சிலருக்குத் தோற்றுவிக்கும் என்பது உண்மைதான். (எல்லாம் கற்பிதம் தான். நாம் கற்றது கை மண் அளவு. கல்லாததும் அறியாததும், நமக்குப் புரியாததும் இவ்வுலகில் எவ்வளவோ உள்ளன. அதை உணர்ந்து ஏற்கும் திறந்த மனது இருக்க வேண்டும். அவ்வளவுதான்)

இதைக் குறிப்பிட்டு நூலின் முன்னுரையில் எழுதுகிறார், இதன் ஆசிரியர், “இதைப் படிக்கும் பகுத்தறிவாளர்கள், இதில் எழுதப்பட்டு இருக்கும் சில சம்பவங்களை நம்பவே முடியாத விசித்திரங்களாகவும், அதனால் இந்தப் புத்தகதையே வெறும் கட்டுகதை என ஒதுக்கிவிடுவார்கள் என்பதாலும்தான் நான் இதை எழுதத் தயங்கினேன். ஆனாலும், கீழ்க்கண்ட விஷயங்கள்தான் இதை எழுதுவதற்கு எனக்கு தைரியம் கொடுத்தது.

முதலாவதாக, நான் அடைந்த அனுபவங்களை எழுதுவது எனது கடமையாகும், இதைப் படிக்கும் கடவுள் நம்பிக்கையில்லாத சிறுபான்மையினர்களிடமே இந்தப் புத்தகத்தை ஏற்பதையும் ஒதுக்குவதையும் விட்டுவிடுகின்றேன். இதைப் படிக்கும் பெரும்பான்மையினருக்கு, இதை நம்பாத சிறுபான்மையினருக்காக, நான் எழுதத் தயக்கம்காட்டுவது சரி அல்ல என்று நான் உணர்ந்தேன்.

இரண்டாவதாக, ஸ்ரீபரமஹம்ச யோகானந்தா எழுதிய ”ஒரு யோகியின் சுய சரிதம்” தோன்றிய பிறகு, போலி இல்லாத அசல் ஆன்மீக சுய சரித்திரங்கள் மிக மிகச் சில தான் வந்து இருக்கின்றன, அந்தப் புத்தகங்களை எழுதியவர்களும்கூட, இப்போது உயிருடன் இல்லை, அதனால் அவர்களுடன் அதுபற்றி விவாதிக்கவும் முடியாது. அதேபோல, ஸ்வாமி யோகானதாவின் யோகியின் சுய சரித்திரம் எவ்வளவு அசலாக இருந்தாலும், அவர், இமயமலையில் தனிப்பட்ட முறையில் தனது நேரத்தை அதிகமாகக் கழித்ததே இல்லை. அதனால்தான், நான் எனது அனுபவங்களை, குறிப்பாக இமாலயத்தில் நான் அடைந்த அனுபவங்களை இங்கே சொல்லவேண்டுமென நினைத்தேன். அதனால், இதைப் படிப்பவர்களுக்கு என்னோடு ‘ஒருவருக்கு ஒருவராக’ பேசுவதற்கு நானும் இங்கே இருக்கின்றேன்.

மூன்றாவதாக, பெருமைமிக்க ஆசான்களான “பாபாஜியும்” “ஸ்ரீ குருவும்”, ஆன்மீக பரிணாம முன்னேற்றத்தின் அலைகளை, பின்னால் அமைதியாக இருந்து கொண்டு, – மிக சிலரே அவர்கள் இருப்பதை அறிந்து இருக்கின்றார்கள் – தங்களது செல்வாக்கினைச் செலுத்தி, அதை நடத்தவும் செய்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தவும் இதை எழுதினேன்.” என்கிறார்.

இந்த நூலை மட்டுமல்ல ”ஸ்ரீ வித்யா உபாசனை”, ”கடோபநிஷத்”, ”சாம வேதம்”, ”ஹிந்து மதத் தத்துவங்கள்” பற்றியும், உபநிஷத்துகள் சொல்லும் விஷயங்கள், அதன் உண்மைகள், தசமகா வித்யா, காயத்ரி மந்திரம், பகவத்கீதை பற்றியெல்லாம் மிக ஆழமான கருத்துக்கள் கொண்ட பல நூல்களை எழுதியிருக்கிறார் ஸ்ரீ எம். அவர் எழுதியிருக்கும் ”Jewel in the Lotus: Deeper Aspects of Hinduism” என்ற நூல் மிகவும் குறிப்பிடத்தகுந்தது.

பாபாஜியை நேரில் தரிசனம் செய்தவர், குரு உபதேசம் பெற்றவர் ஸ்ரீ எம் என்பது குறிப்பிடத்தக்கது.

நூலின் முன்னுரை இறுதியில் ஸ்ரீ எம் இப்படிச் சொல்கிறார், “இதைப் படிப்பவர்களுக்கு எந்தெந்தப் பகுதி, அவர்களுக்கு நம்ப முடியாததாக, வினோதமாகத் தெரிகின்றதோ, அதை எல்லாம் தேவைப்பட்டால், ஒதுக்கிவிட்டு, இதர பகுதிகளைப் படிக்குமாறும், அதனால், ’ஸ்ரீ குரு’, மற்றும் ’பாபாஜியின்’ பெருமைமிக்க போதனைகளை தவறவிட்டுவிட வேண்டாமென்றும் உங்களை வணங்கி வேண்டிக் கொள்கின்றேன். எனது குருவைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், ஸ்ரீ விவேகானந்தா அவர்கள் தனது குருவைப்பற்றி சொன்னதைத்தான் என்னால் சொல்லமுடியும் , ’ஸ்ரீ ராமாகிருஷ்ண பரமஹம்சரின் பாதங்களில் இருந்து விழும் ஒரு சிறு புழுதியின் சிறு துளிகூட ஆயிரம் விவேகானந்தர்களை உருவாக்க முடியும்’.”

முன் முடிவுகள் ஏதும் இல்லாமல் இந்த நூலை வாசிப்பவர்கள் மனதில் நிச்சயம் இது மகத்தான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். படித்துத்தான் பாருங்களேன்!

நூலின் பெயர் : இமய குருவின் இதய சீடன்

ஆசிரியர் : ஸ்ரீ எம்.

வெளீயீடு : மஜந்தா பதிப்பகம்

”Apprenticed to a Himalayan Master: A Yogi’s Autobiography” by Sri M
Magenta Press and Publication Pvt Ltd.
Cauvery Towers
College Road-Madikeri, Coorg
Karnataka 571201.
Tel: +91 98458 31683.
www.magentapress.in

சென்னை ஹிக்கின்பாதம்ஸில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.

***

அடடா.. ஸ்ரீ எம்.. ஸ்ரீ எம் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர அவரது உண்மையான பெயரைக் குறிப்பிடவில்லையே!

அவரது முழுப் பெயர் மும்தாஜ் அலிகான். ஆம். பிறப்பால் அவர் ஒரு முஸ்லிம்.

***