புத்தக வாசிப்பு என்பது என் சிறுவயதிலேயே துவங்கி விட்டது. ஆனால் முதன் முதலில் படித்த புத்தகம் அம்புலிமாமாவோ, ரத்னபாலாவோ அல்ல. “குமுதம்”தான். முதன் முதலில் எனக்குப் படிக்கக் கிடைத்ததும், நான் எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்ததும் குமுதம் தான். அப்போது இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்த காலம். ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல் லீவு விட்டால் போதும், நேரடியாக நீலி வீராச்சாமி தெருவில் இருக்கும் மாமா வீட்டிற்குச் சென்று விடுவேன். காரணம், ’குமுதம்’.மாமா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உயர்பதவியில் இருந்தார். அவர்கள் வீட்டில் தவறாமல் வாங்கும் இதழ் “குமுதம்.” விடுமுறை நாளில் காலை உணவு (10 மணிச் சாப்பாடு என்று சொல்வார்கள்) உண்டதும் அடுத்த வேலை ஓட்டமாக ஓடி அங்கே சென்று விடுவதுதான். அவர் வீட்டின் படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழே பழைய குமுதம் இதழ்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி வைத்திருப்பார்கள். அதை ஒவ்வொன்றாக எடுத்து படங்கள் பார்ப்பதும், எழுத்துக் கூட்டி வாசிப்பதும், ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பதும் அப்போது வெகு சுவாரஸ்யமாய் இருந்தது.

”டிராகுலா”, ”புரொபசர் மித்ரா”, ’மியாவ் மீனா’, ’டிராக் குள்ளன்’, ’ஆறு வித்தியாசங்கள்’ (கோயான் கோபுவோ அல்லது கோபனோ படம் வரைந்தவர் பெயர் சரியாக நினைவிலில்லை. ஆனால் அவை மிக அருமையாக இருக்கும். இப்படி அந்த இதழ்களிலிருந்து எதையாவது வாசித்துக் கொண்டிருப்பேன். நடுவில் வரும் சினிமா படங்களும், அதை ஒட்டி கீழே வந்திருக்கும் துணுக்குகளையும் படித்த ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அக்காலகட்டத்தில் மேற்கண்ட பெயர்களைத் தவிர வேறு எதுவும் என் நினைவில் இல்லை.

முதன்முதலில் படித்த சிறுவர் நூல் “அம்புலிமாமா.” அதில் “திருடி” என்ற கதையை எழுத்துக் கூட்டி வாசித்தது நன்கு நினைவில் இருக்கிறது. பெரிய கொண்டையோடு கூடிய ஒரு பெண்ணின் பென்சில் ஸ்கெட்ச் ஓவியன் இன்னமும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு ”பாலமித்ரா”, ”ரத்னபாலா”, ”கோகுலம்”, ”பி.கே. மூர்த்தி”, வாண்டுமாமாவின் மர்ம, மாயாஜாலக் கதைகள், ”இரும்புக்கை மாயாவி”, ”தலைவாங்கிக் குரங்கு”, ”லயன்” காமிக்ஸ், ”முத்து” காமிக்ஸ், ”விஜய்” காமிக்ஸ் என வாசிப்புத் தொடர்ந்தது. அப்புறம் வளர வளர எனது வாசிப்பார்வங்கள் மாறிப் போயின. மலிவு விலையில் பாக்கெட் நாவல் வந்தது. முதல் இதழ் ”ஒரு தேவி என்னைத் தேடுகிறாள்” ராஜேந்திரகுமார் எழுதியது. தலைப்புச் சூட்டியது ராஜேஷ்குமார். தொடர்ந்து “இறப்பதற்கு நேரமில்லை”, ”நந்தினி 440 வோல்ட்ஸ்” (ராஜேஷ் குமார்) போன்ற க்ரைம் நாவல்களையும் “தேவை ஒரு பாவை”, ”ஒரு பெண்ணின் அனாடமி”, ”ஒரு கார், ஒரு ஸ்ட்ரா, ஒரு ப்ரா” (எல்லாமே புஷ்பா தங்கதுரை) போன்ற நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். (அப்போது எனக்கு பதின்ம வயது)

அதே சமயம் எனது அப்பா, தாத்தாவின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களையும் – ”குறிஞ்சி மலர்”, ”பொன் விலங்கு”, ”பாவம் அவள் ஒரு பாப்பாத்தி”, ”பாரிசுக்குப் போ”, ”விசிறி வாழை”, ”கிளிஞ்சல் கோபுரம்”, ”வீரபாண்டியன் மனைவி”, ”ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம்”, ”ஜய ஜய சங்கர”, ”வருணகுலாதித்தன் மடல்”, ”கனகாங்கி”, “கருங்குயில் குன்றத்துக் கொலை” “மதனபுரி ரகசியம்”, “திகம்பர சாமியார் கதைகள்”, ”நுழையக் கூடாத அறை”, ”மதன மோகினி”, ”உன் கண்ணில் நீர் வழிந்தால்..”, ”இதய வீணை”, ”ரங்கராட்டினம்”, ”பெற்றமனம்”, ”கரித்துண்டு”, ”டாக்டர் அல்லி” என (நா.பா., மு.வ. அகிலன், ஜெயகாந்தன், சாவி, கல்கி, சேவற்கொடியோன், மணியன், அரு.ராமநாதன், ஜெகசிற்பியன் என பல எழுத்தாளர்களது நூல்களை ஒவ்வொன்றாகத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன்.

அப்படி ஆரம்பித்தது தான் இந்த வாசிப்புப் பயணம். ஆனால் வாசித்தவற்றை எழுத்தில் குறித்து வைக்கும் காலம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது. நான் தீவிர இலக்கியம், வெகு ஜன இலக்கியம் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொள்ளாது கலந்து கட்டி வாசிப்பவன். இலக்கியம் மட்டுமல்லாமல் ஆன்மீகம், அமானுஷ்யம், வரலாற்றாய்வுகள், ஜோதிடம், கலை என்று பல தலைப்பு நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. அப்படி சமீப ஆண்டுகளில் வாசித்த சில நூல்களின் விமர்சனங்களைத் தான் இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். சில விரிவான கட்டுரை போன்றிருக்கலாம்; சில சுருக்கமாக இருக்கலாம். நான் வாசித்து என்ன உணர்ந்து கொண்டேனோ அதைத்தான் இங்கு பகிர்ந்து கொண்டிருக்கின்றேனே தவிர, இந்தக் கட்டுரைகளை நூலின் தர அளவுகோலை நிறுத்தும் தராசாகக் கருதக் கூடாது என்பது என் வேண்டுகோள்.

ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”, “புறப்பாடு”, யுவன் சந்திரசேகரின் ”பயணக் கதை,” ஆர்.வெங்கடேஷின் ”இடைவேளை”, சுவாமி ராமாவின் இமயத்து ஆசான்கள்”, “இயேசு வந்திருந்தார்”, ”கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம்”, ”காதுகள்”, சுதாகரின் ”6174”, ”7.83hz” என்று இன்னமும் படித்த பல நூல்களைப் பற்றி எழுத ஆவல்தான். நேரமும், தகுந்த மனநிலையும் வாய்க்க வேண்டும்.

இதை வாசிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
அரவிந்த்
aravindsham@gmail.com

***

License

Share This Book