1
“இந்தியாவின் கல்வி அமைப்பு கூர்ந்த பிரமிடுபோல் அதீத ஏற்றத் தாழ்வுகள் கொண்டது. இது கொடிய அநீதி மட்டுமல்ல; வேகமாக வளரும் பொருளாதாரத்தின் அடித்தளத்தைக் கட்டுவதற்கு முற்றிலும் பொருத்தமற்றதும் திறனற்றதுமாகும்’’ – அமர்த்திய சென்.
இந்த உலகத்திலேயே சிறந்த ஆட்சி எங்கு நடக்கிறது? உலகத்திலேயே சிறந்த கல்வி எந்த நாட்டில் தரப்படுகிறது?
கொஞ்சம் பொறுங்கள். கேள்வியில் ஒரு சின்ன திருத்தம். கேள்வியை இப்படி வாசியுங்கள்.
இந்தப் பிரபஞ்சத்திலேயே சிறந்த ஆட்சி எங்கு நடக்கிறது?
என்னங்க கேள்வி இது என்றுதானே குழம்புகிறீர்கள். பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதனே கிடையாதே, அப்புறம் எப்படிங்க அங்கெல்லாம் ஆட்சி இருக்கும் என்றும் நீங்கள் நினைக்கலாம்.
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா கிண்டலா வேணா பதில் சொல்லலாம். ஆனா உண்மையான பதிலெல்லாம் சொல்ல முடியாதுங்க என்றும் நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், பாருங்கள். தமிழகத்தின் ஒரு தொலைக்காட்சி விளம்பரம் இப்படிப் பதில் சொல்கிறது.
வேற்றுக் கிரகவாசிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள். இருவரும் மாபெரும் அறிவியலாளர்கள் (சைன்டிஸ்ட்னு சொன்னா புரியுமே).
பூமிக் கிரகத்தில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்றும், அதைப் பார்த்து வர அக்கிரகவாசி ஒருவரை அனுப்புவது என்றும் முடிவெடுக்கிறார்கள்.
அதன் படி, அக்கிரகவாசி ஒருவரை பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். வேற்றுக்கிரக உடையிலிருந்து மாயஜாலம் மூலம் நம் உடைக்கு மாறும் அவரை ஒரு மாணவி பார்த்துவிடுகிறார். அவரைத் தன் வீட்டினுள் அழைத்துப்போய், தற்போதைய ஆட்சியைப் பற்றிப் புகழ்வதோடு, தனக்கு என்னவெல்லாம் விலையில்லாமல் தரப்பட்டிருக்கிறது என்றும் பட்டியலிடுகிறார்.
இதுக்கு மேலே இதைப் பேசினால் அரசியலாகிவிடும். எனவே, நாம் இத்தோடு நிறுத்திக் கொள்வோமாக.
உண்மைதான். அம்மாணவி சொல்வதுபோல அவ்வளவு இலவசங்களும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் தரப்படுவது உண்மைதான். அப்படியெனில், அரசுப் பள்ளிகளில் என்ன நடந்திருக்க வேண்டும்?
தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பெற்றோர்களிடையே அதிக விருப்பம் இருக்க வேண்டும். பள்ளிகளில் கடும் போட்டா போட்டி இருக்க வேண்டும். அம்மா நான் அரசுப் பள்ளியில்தான் படிப்பேன் என்று ஒவ்வொரு மாணவ, மாணவியரும் ஒத்தைக்காலில் நின்று பிடிவாதம் பிடிக்க வேண்டும். ஆனால், அப்படி எங்கேனும் நடந்திருப்பதாய் ஏதும் கேள்விப்பட்டதுண்டா நீங்கள்?
அமைச்சர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முதல் அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சாதனைகளைப் பட்டியலிடும் கட்சிக்காரர்கள் வரை எவரும் தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்புவதில்லையே, அது ஏன்? அத விடுங்க. ஒரு தினக்கூலி தொழிலாளி கூட தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்புவதில்லையே, ஏன்? தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்தாலும் பரவாயில்லை, கடன உடன வாங்கியாது, தனியார் பள்ளியில் நன்கொடை கொடுத்தேனும் இடம் வாங்க அலைகிறாரே, அது ஏன்?
இத்தனைக்கும், தனியார் பள்ளிகளில் எடுத்ததுக்கெல்லாம் காசு பிடுங்குவார்கள் என்று தமிழகத்தின் எந்த வயதில் உள்ள ஆண்கள், பெண்களைக் கேட்டாலும் தெரிந்திருப்பார்கள். கல்வி பெரும் வியாபாரமாய் மாற்றப்பட்டிருப்பதையும் ஒட்டுமொத்த தமிழகமே அறியும். குழந்தைகளை கசக்கிப்பிழிவார்கள் என்றும் எல்லாப் பெற்றோர்களுக்கும் தெரியும். ஆக, தனியார் பள்ளியில் இவ்வளவு கொடுமைகள் இருந்தும், அரசுப் பள்ளியில் அவ்வளவு இலவசங்கள் இருந்தும் ஏன் அரசுப் பள்ளிகளை பெற்றோர்களும் விரும்பவில்லை, மாணவ –மாணவியர்களும் விரும்பவில்லை?
கலைஞர் ஆட்சியில் கல்வித்துறையின் சாதனைகள் என ஒருவர் பட்டியலிடுகிறார். மற்றொருவரோ, எனது ஆட்சியில் நானே செய்த கல்வித்துறையின் சாதனைகள் என பட்டியலிடுகிறார். நமது சந்தேகம் என்னவென்றால்..?