8

குழந்தைகளின் தனித்திறமைகளை மேடையேற்றுவது, பரிசளிப்பது எனக்கொண்டாட்டங்கள் மிகுந்த இந்நிகழ்ச்சிகளில் ஊரின் பல பிரபலங்களும் பங்கேற்பதால், அவ்விழாக்கள் சிறப்பான விழாக்களாக மாற்றப்பட்டு பெற்றோர்கள் ஈர்க்கப்படுகின்றனர். தனியார் பள்ளியின் கல்லாவும் நிரம்புது.

அமைச்சர் தொடங்கி மாவட்ட ஆட்சித்தலைவர், கல்வியதிகாரிகள் முதல் காவல்துறை துணை ஆய்வாளர் வரை அதில் அதிகம் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பெரும்பாலும் அரசு அதிகாரிகள் தான். ஆனால், அரசுப்பள்ளிகளில் ஏன் இத்தகைய விழாக்களை இவர்கள் நடத்துவதில்லை? அங்கிருக்கும் மாணவர்களுக்கு எனத் திறமைகளே இல்லையா என்ன? அவர்கள் மட்டும் மேடையேறக்கூடாதா என்ன? சில பள்ளிகளில் ஆசிரியர்களின் ஆர்வம் மற்றும் தனி முயற்சியின் அடிப்படையில் இதெல்லாம் நடைபெறுகின்றன எனினும், அரசு இதற்கென நிதி ஒதுக்கி, திட்டங்களை வகுத்து முயற்சித்தால் அரசுப்பள்ளிகளில் மக்கள் விழாக்களை நடத்திட இயலும் அல்லவா!

நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. 2002 ல் வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்த இப்பள்ளியில் இன்று 217. மெட்ரிக் பள்ளியில் இருந்து மட்டும் 25 மாணவர்கள் திரும்பி வந்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். காரணம் என்ன தெரியுமா?

ஆண்டு தோறும் பெற்றோர் பங்கெடுக்கும் விழாக்கள், மாணவர்களின் படைப்புத்திறனை மேம்படுத்தும் அறிவியல் கண்காட்சிகள், விளையாட்டு விழாக்கள், 1000 புத்தகங்கள் உள்ள நூலகம் என்பதோடு வகுப்பறையில் வட்ட வடிவிலான மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறிகள் என்பதும் உள்ளதுதான். உங்களுக்கே புரிந்திருக்குமே, இத்தனையும் அரசு கொடுத்தது இல்லையென்று! ஆம். இது எதையும் அரசு செய்யவில்லை. அரசு செய்ததெல்லாம் இது ஒராசிரியர் பள்ளி என்று அறிவித்த அறிவிப்பு மட்டுமே. அப்போது இங்கு வந்த திருமிகு. விஜயலலிதாவின் சொந்தப் பணத்தில் இருந்து துவங்கிய முயற்சியில் இணைந்த ஊர்மக்களின் பங்கெடுப்பே இத்தனை சிறப்புக்கும் அடிப்படையாகும். கட்டிடம் கட்ட தலைமை ஆசிரியை விஜயலலிதா, இவரது கணவர் சுதிர்குமார் ஆகியோரும் தலா ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இப்படியான பள்ளியில் படிக்கும் மாணவியரும் உயர்ந்த குணத்துடன் தான் நிச்சயம் வெளிவருவர். உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்த கலையரசி என்றொரு மாணவி வாரணாசி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கு பெற்று சிறப்பு பெறுகிறார். பள்ளியில் நடக்கும் பாராட்டு விழாவில் நிதி குவிகிறது. ஆனால், அந்த ஏழை மாணவி என்ன செய்தார் தெரியுமா? அத்தனை நிதியையும் பள்ளிக்கே நிதியாய் வழங்கினார். 142 மாணவர்கள் உள்ள இப்பள்ளியில் 5 கணினிகள் உள்ளது. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிக்கு இவர்களே ஒரு கையேடும் தயாரித்துள்ளனர். ஆனால், இந்த செலவுக்கெல்லாம் இவர்களே வெளியில் இருந்து வசூலித்துக் கொள்கின்றனர்.

இப்படியான முயற்சிகளை எடுக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அரசின் உதவியும், கவனிப்பும் இல்லாமல் ஆசிரியர்கள் மட்டும் முயற்சித்தால் முழுப்பலனும் கிடைக்காதல்லவா. அந்த ஆசிரியர் இருக்கும் வரை அதைச்செய்வார், அவர் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டால்..?

ஆம். ஒரு ஜனநாயக தேசத்தில், குறிப்பாக இந்த நவயுகத்தில், பெற்றோர்களின் இத்தகைய பங்களிப்பு கல்விநிலையங்களில் மிக அவசியம் ஆகும். ஆனால், என்ன நடக்கிறது அரசுப்பள்ளிகளில்?

ஓவியம், கிராப்ட் போன்ற பயிற்சிகளுக்குக் கூட முறையான ஆசிரியர்கள் கிடையாது. இதற்கென தகுதி படைத்த ஆசிரியர்களை பகுதிநேர ஊழியர்களாக நியமித்து இதிலும் சிக்கன தரித்திரம் பிடிக்கிறது தமிழக அரசு. அவர்களை முழுநேர ஆசிரியர்களாய் நியமித்திட வேண்டும். ஓவியம், நடனம், பாடல், நீச்சல், யோகா, சிலம்பம், கராத்தே, கைவினைக் கலைகள் ஆகியவற்றையும் அரசுப்பள்ளியில் அளித்து, அங்கு பயிலும் ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையையும் மேம்படுத்துவதும் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாய் நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க! Copyright © 2015 by இல. சண்முகசுந்தரம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book