7

அரசுப்பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களைக் கவர்ந்துள்ளது. ஆனால், அரசுப்பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாய் இருந்தாலும் மாணவர் எண்ணிக்கையில் அதன் பிரதிபலிப்பு இல்லை, மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது எனினும், இன்று வரை மாணவர்கள் எண்ணிக்கையும் அரசுப்பள்ளியில் தான் அதிகம். ஆனால், ஆசிரியர்கள் எண்ணிக்கை?

மேலே உள்ள விபரத்தில் இருந்து ஒரு உதாரணம். 23928 அரசு ஆரம்பப்பள்ளிகளில் 1487031 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்களோ வெறும் 64855 மட்டுமே. ஆனால், 6196 தனியார் பள்ளிகளில் 54866 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதாவது தனியார் பள்ளிகளை விட சுமார் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் குறைவாக உள்ளனர். ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் ஒரு எண்பதாயிரம் ஆசிரியர்கள் அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் எடுக்கலாம்.

அதே போன்று, மேல்நிலை வகுப்புகளில் பாருங்கள். 2727 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 73616 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். ஆனால், 2407 தனியார் பள்ளிகளிலோ 102773 ஆசிரியர்கள் என அரசுப்பள்ளிகளை விட இரண்டு மடங்கு அதிகம். ஆக, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் சுமார் ஐம்பதாயிரம் ஆசிரியர் புதியதாக எடுக்கலாம்.

ஆக, இந்த விபரங்களை மட்டும் ஒப்பிட்டால் அரசுப்பள்ளிகளில் சுமார் ஒரு இலட்சத்து, முப்பதாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒரு கணக்குக்கு வைத்துக்கொள்ளலாம். மாணவர்கள் குறைவாகத்தானே உள்ளனர் என்ற காரணம் பொறுத்தமற்ற வாதம் ஆகும். ஆசிரியர்களே இல்லாத பள்ளிக்கு மாணவர்கள் எங்கிருந்து வருவார்கள்? மாணவர்கள் வரட்டும், அப்புறம் ஆசிரியர்களை நியமிக்கலாம் என்றால், அது புத்திசாலித்தனமான காரியமாய் இருக்குமா?

மேலும், 300 பேர் கொண்ட ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் , மாணவர் எண்ணிக்கை 40 கூடினால் மட்டும் தான் ஒரு ஆசிரியர் புதிதாக வருவார். மாணவர் எண்ணிக்கை குறைந்தால் அவர் வேறு பள்ளிக்குச் சென்று விடுவார் என கணக்கு சொல்லிக்கொண்டிருந்தால், அந்தப் பள்ளியைத்தேடி பெற்றோர்கள் எப்படி வருவார்கள்? ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இருந்தால் தானே அப்பள்ளி பெற்றோர்களால் விரும்பப்படும் பள்ளியாக மாறும்.

மேலும், தற்போது 1;40 என்ற ஆசிரியர்;மாணவர் விகிதாச்சாரம் பின்பற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. அதாவது, அதன் அர்த்தம் என்னவென்றால், 79 மாணவர்கள் இருந்தாலும் ஒரு ஆசிரியர் தான் என்பதாகும். எண்பதைத் தாண்டினால் தான் இரண்டு ஆசிரியர் தேவை என்பதாகக் கணக்கிடப்படுமாம். என்னே அக்கறை அரசுப்பள்ளிகள் மீது! ஆக, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் என்ற நடைமுறையும் அரசுப்பள்ளிகளில் இல்லையெனில், இது அநீதியா இல்லையா?

ஆனால், தனியார் பள்ளிகள் என்ன செய்கின்றன? தகுதியான ஆசிரியர்களை எடுப்பதில்லை எனினும், ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் என நியமித்து விடுகின்றனர். ஆசிரியர் தினம் என ஒரு விழாவும் கொண்டாடி அதில் ஆசிரியர்களை ஆடவும், பாடவும் வேறு வைத்துவிடுகின்றனர். சில பள்ளிகளிலோ பெற்றோர்களையும் அழைத்து, ஆசிரியர் தின விழாவை அமர்க்களப் படுத்திவிடுகின்றனர்.

அதோடு மட்டும் விடுவதில்லை. ஓவியம், நடனம், பாடல், நீச்சல், யோகா, சிலம்பம், கராத்தே, கைவினைக் கலைகள் என ஏகத்துக்கும் ஆசிரியர்களை நியமித்துவிடுகின்றனர். கூடுதல் கல்விசார் இணை நடவடிக்கைகள்( எக்டிரா கோ கரிகுலர் ஆக்விடிஸ்) எனப்படும் தனித்திறமைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாய் சொல்லி, அதை வைத்தே பெற்றோர்களையும் கவர்ந்து, அதற்கென அதிகப்பணமும் பிடுங்கிவிடுகின்றனர். இன்றைய சூழலில், இதெல்லாம் மிக அத்தியாவசியம் என்றாகிவிட்ட நிலையில் தன்னுடைய குழந்தைகளுக்கு இதெல்லாம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் தனியார் பள்ளியின் இந்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் ஈர்க்கப்படுகின்றனர்.

இங்குதான் தனியார் பள்ளியின் கவர்ச்சித்திட்டங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன. அதாவது, பெற்றோர்களை பள்ளியின் செயல்பாடுகளுக்குள் ஈர்த்துக் கவர்வது என்பதாகும். ஒவ்வொரு தனியார் பள்ளியும் ஒவ்வொரு வருடமும் நான்கைந்து விழாக்களாவது வைத்து பெற்றோர்களை அழைத்துவிடுகிறார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க! Copyright © 2015 by இல. சண்முகசுந்தரம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book