2
தமிழகத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் அரசுப் பள்ளிகளை விட்டு விரட்டியது யாருடைய சாதனை என்பதுதான். அரசுப் பள்ளிகளை பொதுமக்கள் வெறுக்கும் நிலை இவர் ஆட்சியில் ஏற்பட்டதா இல்லையெனில், அவர் ஆட்சியில் ஏற்பட்டதா?
ஆம். பென்சில் கொடுத்ததும், அழிரப்பர் கொடுத்ததும் கூட அரசின் சாதனையெனில், இலட்சக்கணக்கான பெற்றோர்களுக்கும், மாணவ–மாணவியர்களுக்கும் அரசுப் பள்ளியின் மீது வெறுப்பை உருவாக்கியதும் அரசின் சாதனைதானே!
அரசு நல்லாதாங்க பள்ளிக்கூடங்களை நடத்துது, விபரம் தெரியாத பெற்றோர்கள்தான் மோகத்தில் தனியார் பள்ளிக்கூடங்களை தேடி ஓடுகிறார்கள் என்று சிலர் பதில் சொல்லக்கூடும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசுல பாதிய படிப்புக்கே செலவழிக்கிற அளவுக்கு பாழாய்ப்போன மோகம் அனைத்துப் பெற்றோர்களுக்கும் இருக்கும் என்பது முழுவதும் நம்புவதற்குரியது அல்ல. அப்படியெனில், வேறு என்ன காரணம்?
அரசுப் பள்ளிகள் தரமற்றதா இருக்கிறதா, அங்கு படிக்கும் மாணவரில் பெரும்பாலோர் தேர்ச்சி அடைவதில்லையா? தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமானதா? தனியார் பள்ளியில் அனைவரும் 90 சத மதிப்பெண் பெற்றுவிடுகிறார்களா? தனியார் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடுகிறதா? ஆங்கிலத்தில் பொளந்துகட்டும் அறிவு தனியார் பள்ளியில் அள்ளி வழங்கப்படுகிறதா?
அரசுப்பள்ளிகளில் இல்லாத எது தனியார் பள்ளிகளில் கிடைக்கிறது? ஏன் இந்த மோகம்? ஏதாவது ஒரு காரணம் கூட இல்லாமலா, இலட்சக்கணக்கான பெற்றோர்களுக்கு மோகம் வரும்? எனவே, காரணத்தைக் கட்டாயம் கண்டறியவேண்டும்.
சரி, அரசு– தனியார் பள்ளிகளுக்கிடையில் அப்படி என்னதான் வித்தியாசம் இருக்கிறது என்று பார்த்துவிடலாம் வாருங்கள்.
முதலில், ஒரு தனியார் பள்ளிக்குச் சென்று பார்ப்போம். அங்கே பாருங்கள் அரசுப்பள்ளிகளை அதிகளவில் திறந்த காமாரஜர் பெயரிலேயே ஒரு தனியார் பள்ளி. அங்கு செல்வோம். சுற்றிலும் வண்ணமயமான காம்பவுண்ட் சுவர். சுவற்றில், நிறைய ஓவியங்கள், வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. வாசலில் இரண்டு காவலாளிகள். அத்தோடு, நம்மை வரவேற்கும் பிரம்மாண்டமான பெயர்ப்பலகை மற்றும் பள்ளியின் பெருமை சொல்லும் விளம்பரப் பலகைகள். பாருங்கள், சுற்றுச்சுவர் எத்தனை உயரமாய், வர்ணமிக்கதாய் இருக்கிறதென்று!
சரி, உள்ளே செல்லலாம்.
சுத்தமான வராண்டாக்கள். அடுக்குமாடிக் கட்டிடங்கள். வண்ணமயமான, பளிச்சென்ற சுவர்கள். என்னென்ன வகுப்பறை என்று ஒவ்வொரு வகுப்பறையிலும் எழுத்துகள். தனித்தனி கழிப்பறைகள், கேண்டீன் என ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு வாருங்கள்.
அடுத்ததாய் வகுப்பறைக்கும் சென்று பார்ப்போம்.
பளிச்சென்று கரும்பலகை. நல்ல இருக்கைகள். மேஜைகள். குறைந்தது ஒரு வகுப்புக்கு ஒரு காற்றாடி வேறு. மழலையர் வகுப்புகள் எனில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்பு இருக்கை –ஒரு மேஜை. சுவரெங்கும் வண்ணமயமான எழுத்துகள் மற்றும் பாடம் தொடர்பான சுவரொட்டிகள்.
சரி. இப்போது ஒரு அரசுப்பள்ளிக்குப் போவோமா!
சுற்றுச்சுவர் பக்கமா நடந்து வராதீங்க. ஒரே அசிங்கம். இந்தப் பள்ளிக்கு என்னங்க பெயர், எங்க இருக்கிறதென்றே தெரியவில்லையே? ஓ! சுவத்துல எழுதி வைச்சிருக்காங்களே, அதான் பெயரா! பாதி எழுத்துகள் காணவில்லையே, ஒருவேளை இதுதான் இப்போதைய டிசைனா இருக்குமோ!
வாங்க உள்ளே போகலாம்.
கவனமா காலை வையுங்க என எச்சரிக்கும் வராண்டாக்கள். பல பத்தாண்டுகளுக்கு முன்பு வெள்ளையாய் இருந்திருக்கலாம் என நம்ப வைக்கும் சுவர்கள். கரும்பலகையா, குழிப்பலகையா எனக்குழம்ப வைக்கும் வகுப்பறைக்