5

அனைத்துக் கணக்கெடுப்பிற்கும், அனைத்துத் திட்டங்களுக்கும் அலைக்கழிக்கப்படுவது யாரென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான். ஏதாவது ஒரு திட்டத்தைச் சொல்லி ஒவ்வொரு மாதமும் ஏதாவது பயிற்சி என்றும், கட்டாயப் பணி என்றும் அவர்கள் படும் பாடு இருக்கிறதே, அதை முதலில் ஒழிக்கவேண்டும். சமூகத்தின் மிகுந்த கௌரவத்துக்குரியவர்கள் ஆசிரியர்கள்தான் என்ற நிலையை அரசு உருவாக்கவேண்டும். எனவே, அவர்களை அரசுப்பணியாளர்களாய் மட்டுமே கருதும் அரசின் மனநிலையில் முதலில் மாற்றம் வரவேண்டும்.

தனியார் பள்ளிகளை பெற்றோர் தேடிச்செல்வதற்கு அடிப்படைக் காரணமே இரண்டு தான். ஒன்று. தனியார் பள்ளியின் கவர்ச்சித்தன்மை. மற்றொன்று, அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத அவலநிலை தான்.

அதென்னங்க, கவர்ச்சித்தன்மை என்று தானே கேட்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள் ஒவ்வொன்றாய் பார்ப்போம். முதலில் ஆசிரியர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாய் பார்த்துவிடுவோம்.

எந்த தனியார் பள்ளியாவது ஓராசிரியர் பள்ளி அல்லது ஈராசிரியர் பள்ளி என்று அறிவிக்கப்பட்டு இயங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? என்னங்க கிறுக்குத்தனமாய் கேட்கிறீர்கள் என்று தானே தோன்றுகிறது. ஆனால், அரசுப்பள்ளியில் அப்படி நிறைய இருக்கிறது. அதுவும் அதிகாரப்பூர்வமாய் அரசாலேயே ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளி என்று அறிவிக்கப்பட்ட பள்ளிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்றால் நீங்களே சொல்லுங்கள் அரசின் இந்த அறிவிப்பை கிறுக்குத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல என?

உதாரணத்துக்கு, 2012-13 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசு ஆய்வின்படி, தமிழகத்தின் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருக்கிறார். அப்பள்ளிகளில் மட்டும் 83641 மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும், 16421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான் உள்ளனர். அது மட்டுமல்ல 16 அரசுப்பள்ளிகளில் ஆசிரியரே இல்லை எனில், இதை அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு என்று தானே சொல்லமுடியும்!

ஆம், ஐந்தாம் வகுப்பு வரை அல்லது எட்டாம் வகுப்பு வரை இருக்கும் ஒரு பள்ளியின் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஒருவர் தான் ஆசிரியர் என்றால் அம்மாணவர்களை இந்த அரசு எப்படிப் புறக்கணிக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இதைத் தீண்டாமை என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்ல?

ஆசிரியர்களே போதுமான அளவில் இல்லாத அப்பள்ளிகளில் கட்டிடமும், கழிப்பறை வசதிகளும், கரும்பலகையும் எப்படியிருக்கும்? அதைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு தங்கள் அருமைச்செல்வங்களை அங்கே விட மனம் வருமா? நாங்கள் பென்சில் தருகிறோம், பாக்ஸ் தருகிறோம், அழிரப்பர் தருகிறோம் என்று ஆட்சியில் உள்ளவர்கள் சாதனைப்பட்டியல் வாசித்துக்கொள்ளலாம். ஆனால், அரசுப்பள்ளிகள் இலவசங்களால் முன்னேறுமா?

ஆனால், அரசு இதற்கு என்ன காரணம் சொல்லுகிறது தெரியுமா? அதாவது, மாணவர் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் தான் அங்கு ஆசிரியர் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறதாம். ஆகா, என்ன சிக்கன நடவடிக்கை பாருங்கள்! மாணவர் எண்ணிக்கை குறைந்தால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து, கூடுதல் ஆசிரியர்களை நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தரத்தை அதிகப்படுத்தி மாணவர்கள்பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க முனைந்தால் அந்த அரசை அரசுப்பள்ளியில் அக்கறையுள்ள அரசு எனச்சொல்லமுடியும். ஆனால், இதுதான் சாக்கென ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைப்போம் என்றும், பள்ளியையே இழுத்து மூடு என்றும் சொன்னால் அந்த அரசை அரசுப்பள்ளிக்கு எதிரான அரசு என்றுதானே சொல்லமுடியும்!

ஆம். கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. அங்குள்ள பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் போவதைத் தவிர வேறென்ன வழி இப்போது?

ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளி என 18674 பள்ளிகளை மேலே பார்த்தோமே, அந்தப்பள்ளிகள் எல்லாமே மரணத்தின் வாசலில் உள்ளவைதான். அங்கிருக்கும் ஆசிரியர்கள் முயற்சியால் மட்டுமே அப்பள்ளிகள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும். தங்களது சொந்தப்பணத்தைப்போட்டு ஆக்கப்பூர்வமாய் உழைக்கும் அவ்வாசிரியர்களும் இல்லையெனில், இன்னும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் இப்போது மூடப்பட்டிருக்கும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க! Copyright © 2015 by இல. சண்முகசுந்தரம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book