9
வசூலிப்பதற்கு மட்டுமே இப்பெயர் அரசுப்பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் நோக்கம் குறித்து ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வியமைச்சர் சட்டமன்றத்தில் என்ன சொல்கிறார் தெரியுமா?
பள்ளி வயதில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது முதல் கற்றல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல் வரை இக்கழகங்களின் பணி தானாம். ஆனால், நடைமுறையில் என்ன செய்கிறார்கள்? ஆளும் கட்சிக்காரர்களின் கரங்களில் இருக்கிறது இந்தக் கழகம். சமீபத்திய கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச்சட்டம் கூட பள்ளிகளில் பெற்றோர்களுக்கான உரிய பங்களிப்பும், மரியாதையும் தரப்பட வேண்டும் என்கிறது.
அச்சட்டத்தின் அடிப்படையில் 08.11.2011 அன்று G.O.(Ms) No.173 என்ற அரசாணையை தமிழக அரசும் வெளியிட்டுள்ளது. அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா?
பகுதி.5. பள்ளி நிர்வாகக்குழு எனும் தலைப்பில் 14 மற்றும் 15 என்ற விதிகளில் கீழ்கண்டவாறு உள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கவேண்டுமாம். அதில் 75 சதம் பெற்றோர்கள் தான் இருக்கவேண்டும் என்பதோடு, அதில் 50 சதம் பெண் பெற்றோர்கள் இருக்கவேண்டும் எனவும் தெளிவாகக் கூறுகிறது அந்த விதி. மேலும், பள்ளியின் நிர்வாகக்குழுவுக்கு தலைவராகவும், துணைத்தலைவராகவும் பெற்றோர்களே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது, பள்ளிக்கு தலைமை தாங்கி வழி நடத்திச்செல்லும் பொறுப்பு மக்கள் சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் இது தானே சரியாக இருக்க முடியும்!
இது அமலானால் அரசுப்பள்ளிகள் அனைத்தும் தங்கள் பள்ளிகள் என்ற மனநிலைக்கு பெற்றோர்களையும், சமூகத்தையும் கொண்டு வர இயலுமே! அரசு ஏன் இந்த விதிகளை அமலாக்கவில்லை என்று தானே நினைக்கிறீர்கள்!
ஆனால், அரசு என்ன சொல்கிறது என்றால், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்றத்தில் கல்விக்கொள்கையில் எழுத்துப்பூர்வமாகவே கூறுகிறது. அது மட்டுமல்ல அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறதாம். அதாவது, 2013 ஆம் ஆண்டில் 1,33,605 பெற்றோர்களுக்கு 4.08 கோடி ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்பட்டதாம். இந்தாண்டு 2,21,700 உறுப்பினர்களுக்கு 6.65 கோடி ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்படுகிறதாம். பயிற்சி யாருக்கு அளித்தார்கள் என்பதும் பணத்தை எப்படி அழித்தார்கள் என்பதும் அவருக்குத்தான் தெரியும். யாருக்கு என்கிறீர்களா? சட்டமன்றத்தில் அறிவித்த கல்வியமைச்சருக்குத்தான் தெரியும்.
பள்ளி நிர்வாகக் குழுவிற்கான கடமைகளையும் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இக்குழு கூடி, பள்ளியின் சேர்க்கை முதலான அனைத்து நிர்வாகச்செயல்கள் குறித்தும் திட்டமிட வேண்டுமாம். அதோடு, பள்ளி வளர்ச்சித் திட்டம் எனும் ஒரு திட்டத்தை மூன்றாண்டுகாலத்திட்டமாக தயாரித்து பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமாம். ஆசிரியர் தேவை, நிதித் தேவை, மாணவர் உரிமைகள், குழந்தைகள் உரிமைகள் என்பதோடு உள்ளாட்சி நிர்வாகத்தோடு பேசி தேவையான உதவிகள் பெறுவது வரை பள்ளி குறித்த அனைத்து விசயங்களிலும் தலையிடும் உரிமையும், அதிகாரமும் பெற்றோர்களுக்கு இருக்கிறது என்று அரசின் சட்டமே கூறுகிறது. அத்தோடு உள்ளூர் பிரபலம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இது போன்ற பள்ளி நிர்வாகக் குழுக்களை ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் உருவாக்கி, அதில் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும், கல்வியதிகாரிகளும், உள்ளூர் பிரபலங்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப்பிரதிநிதிகளும் உட்கார்ந்து விவாதித்தால், அரசுப்பள்ளிகளின் வளர்ச்சி அபரிதமாய் இருக்குமா, இல்லையா? பள்ளியின் ஒவ்வொரு தேவையும் உள்ளூர் சமூகத்தின் தேவையாக கருத்தில் கொள்ளப்படுமா இல்லையா? ஆனால், மூன்று வருடங்கள் முடிந்த பின்னும் இன்று வரை ஒரு அரசுப்பள்ளியில் கூட பெற்றோர்களைக்கொண்ட பள்ளி நிர்வாக்குழுவாக அமலாக்கப்படவில்லையே ஏன்? காரணம் என்ன?