12
எதிர்புறத்தில் இருக்கிறது. விளையாட வேண்டுமெனில், அதாவது விளையாட வேண்டுமெனில், கவனமாக வாசியுங்கள், விளையாடித்தான் ஆகவேண்டுமெனில், அந்த நெடுஞ்சாலையைத் தாண்டித்தான் செல்லவேண்டும்.
ஆனால், பாருங்கள் இப்படியான தனியார் பள்ளிகள் எல்லாம், விளையாட்டுவிழாக்களை மட்டும் சீரும், சிறப்புமாய் நடத்திவிடுவார்கள். ஏதாவது, தனியார் நிலத்தில் விழாழை நிச்சயித்து, பெற்றோர்களுக்கு வண்ண அழைப்பிதழ் வழங்கி, செண்ட் தெளித்து வரவேற்று அமர்க்களப்படுத்திவிடுகிறார்கள். பயிற்சியே கொடுக்காமல் போட்டிகள் நடத்தி, விழா மட்டும் எப்படித்தான் நடத்த முடிகிறதோ? அப்புறம் குழந்தைங்க என்ன செய்யும்? டிவியிலே விளையாடும். செல்போனில விளையாடும். கம்யூட்டரிலே விளையாடும். லீவு போட்டுட்டு டிவியிலே கிரிக்கெட் பார்க்கும். ஆமாங்க, மைதானங்களில் விளையாடவும், ஓடியாடியும் விளையாடி பழக்கப்படாத குழந்தைகள் என்ன தான் செய்யமுடியும்? அப்பா, அம்மா செல்போனில் தானே விளையாட முடியும்?
என்னங்க இது தனியார் பள்ளிகளைப் பற்றி அள்ளிவிடுறீங்க, தரமா இல்லேன்னா அப்புறம் எப்படிங்க இப்படி கூட்டம் சேருது அப்படின்னும் சிலர் கேட்கலாம்.
இதுக்குப் பதில் தேடுமுன் தன் குழந்தையின் மீது அன்பும், கனவும் கொண்டிருக்கும் ஒரு பெற்றோரின் ஆசைகள் எப்படியிருக்கும் எனப்பார்ப்போம்.
குறிப்பாக, 1990ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர். ஆம். கடந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய பெற்றோரின் ஆசைகளுடன் ஒப்பிடுகையில் இன்றைய பெற்றோரின் மனநிலை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. என் குழந்தைக்கு எல்லாம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தான் இன்று அதிகம். அப்போனா, அன்னைக்கிருந்த பெற்றோறெல்லாம் அப்படி இல்லையா என்று குண்டக்க மண்டக்க கேட்டிராதீங்க, அப்போயிருந்த பெற்றோர்களைப் பொறுத்தவரையில், என்னால் இயன்றதை என் குழந்தைக்குத் தருவேன் என்று தான் நினைத்தார்கள். ஆனால், இன்று அப்படியல்ல, எல்.கே.ஜி படிப்பதற்கே கடன் வாங்கி செலவழிக்கும் பெற்றோர் வரை இன்று நாம் பார்க்கமுடிகிறதே. இந்த மனநிலை புதிதல்லவா?
ஆம். உங்கள் குழந்தைக்கு கூந்தல் சரியாக வளரவில்லையெனில், நீங்கள் உங்கள் குழந்தையின் மீது அன்புகொள்ளவில்லை என அர்த்தம். ஆக, உங்கள் குழந்தையின் கூந்தலுக்கு நீங்கள் போஷாக்களிக்கவேண்டுமெனில், அந்த எண்ணெயையை வாங்கிக்கொடுத்தே ஆகவேண்டும். ஆம். நீங்கள் காம்பிளான் வாங்கித்தரவில்லையெனில் உங்கள் குழந்தையை நீங்கள் நேசிக்கவில்லையென்றே அர்த்தம். தேர்வுக்காக கண் முழித்துப் படிக்கும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஹார்லிக்ஸ் கலக்கிக் கொடுக்கவில்லையெனில், அவன் அதிக மதிப்பெண் வாங்க நீங்கள் ஆசை கொள்ளவில்லையென்று அர்த்தம்.
இப்படியாக தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒவ்வொரு பெற்றோருக்குள்ளும் குற்ற உணர்வை ஏற்படுத்தி, ஏற்படுத்தியே வியாபார யூகத்தின் நுகர்வோராக மட்டுமே மாற்றி வைத்திருக்கும் நிலையில், கல்வியையும் ஒரு நுகர்வுப்பொருளாய் தனியார் பள்ளிகள் சொல்லுகையில் பெற்றோர்கள் கவரப்படுவது இயல்பாகிவிடுகிறது. அரசுப்பள்ளியில் படித்து இன்று அரசு வேலையில் இருக்கும் அந்தப்பெற்றோர், நான் தான் சம்பாதிக்கிறேனே என்று நினைத்து, என் பையனாவது தனியார் பள்ளியில் படிக்கட்டும் என்று பாசக்கடமையுணர்வோடு முடிவெடுத்துவிடுகிறார்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், அரசுப்பள்ளியில் படித்த காரணத்தினால் வாழ்வை இழந்தோர் என தனிப்பட்டியல் ஏதும் இருக்கிறதா என்ன தமிழ்நாட்டில்? அரசுப்பள்ளியில் படித்தால் எங்கள் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று ஏதாவது பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்திருக்கிறதா என்ன? அரசுப்பள்ளி மாணவர்களை வளாக நேர்முகத்தேர்விலும், வேலை வாய்ப்பிலும் பொருட்படுத்தமாட்டோம் என ஏதாவது பன்னாட்டு நிறுவனம் அறிவித்திருக்கிறதா என்ன? இன்றைக்கிருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, அரசுப்பள்ளிகளில் படித்தோர் தான். அப்புறம், அரசுப்பள்ளிகள் மீது ஏனிந்த வெறுப்பு? இவ்விடத்தில் பெற்றோர்கள் தங்கள் மனநிலையை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.