14
இரண்டுமே அரசின் அறிக்கைதான். எனில், எது பொய்? ஏன் பொய் சொல்கிறார்கள்? இன்னுமோர் தமிழக அரசு விபரம் தெரிவிப்பதன்படி பார்த்தால், மூன்றாண்டுக்கு முன்பு வரை ஐம்பது சதவீத அரசுப்பள்ளிகளில் கழிப்பறையே கிடையாதாம். அம்மாவின் மற்றுமோர் சாதனையாகத்தான் கழிப்பறை கட்டினார்களாம். அப்படியெனில், இத்தனை ஆண்டுகாலம் ஏன் கட்டாமல் விட்டார்கள், அது யாருக்கு சாதனை, யாருக்கு வேதனை என்றெல்லாம் கேள்வி கேட்காமல் வாசித்து முடியுங்கள். ஆக, இன்றைய தேதி வரையும் நீங்கள் வாசிக்கும் இக்கணம் வரை 15 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இல்லையெனில், என்ன தான் செய்கிறது பள்ளிக்கல்வித்துறை? இத்தனைக்கும் தமிழக அரசின் விதிகளிலேயே மிகத்தெளிவாக கழிப்பறை வசதிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளபோதும், ஏன் அரசுப்பள்ளிகள் மீது இத்தனைப் புறக்கணிப்பு?
இப்போதுதான் ஸ்வாச் பாரத் வந்துவிட்டதே இனி பள்ளிகள் சுத்தமாகிவிடும் என்றும் சிலர் நினைக்கலாம். மாணவர்களே வகுப்பறையையும், கழிப்பறையையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லாத எந்தத் திட்டமானலும் சரி வரட்டும் தவறில்லை. ஆனால், துப்புறவுத்தொழிலாளர்களை போதிய அளவு நியமிக்காமல், சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்பது பம்மாத்துதானே.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணை நிலை எண்: 270 யை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் இருக்கவேண்டிய குறைந்தபட்ச உட்கட்டமைப்பு வசதிகள் என 22.10.2012 அன்றே வெளியிடப்பட்டதுதான் இது. எட்டுத்தலைப்புகளில் சில முக்கியமானவற்றை இங்கு தருகிறோம்.
கட்டிடங்கள் என்ற முதல் தலைப்பில், பள்ளிக்குள் எந்தவிதமான திறந்த கிணறுகளும், குழிகளும் இருக்கக்கூடாது என்று கூறுகிறது. மாடிப்படிகளில் பாதுகாப்பான தடுப்புச்சுவர் உயரமாக இருக்கவேண்டும் எனக்கூறுகிறது.
இரண்டாவதாக குடிநீர் என்ற தலைப்பில் கீழ்வருமாறு மூன்று விதிகள் உள்ளது.
I. குடிநீர்; பாதுகாப்பான குடிநீர் தரப்பட வேண்டும், குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் தூய்மையான முறையில் இருத்தல் வேண்டும். எப்போது யாரால் எப்படி சுத்தம் செய்யப்பட்டது என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். குடிநீர் உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்.
II. மேலும் 20 மணவர்களுக்கு 1 குழாய் என்ற வீதத்தில் குடிநீர்க்குழாய்கள் ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்
III. பாத்திரங்கள் கழுவ, கை, கால்கள் கழுவ 20 மாணவர்களுக்கு 1 குழாய் என்ற அளவில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். தரை வழுக்கல் இன்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மூன்றாவதாக, கழிப்பறைகள் எனும் தலைப்பிலும் மூன்று விதிகள் உள்ளன.
I. 20 மாணவர்களுக்கு 1 சிறு நீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில், புதிய அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம் / போதிய வெளிச்சத்துடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்பட வேண்டும். தனியே மைதானத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டிட உறுதி / உரிமச் சான்றுகள் கழிப்பறைகளுக்கும் அவசியம்.
II. கழிப்பறைகள் தண்ணீர் குழாய் வசதியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்
III. தண்ணீர்த்தொட்டிகள் மாணாக்கர்களால் திறக்க முடியாதபடி மூடப்பட்டு இருக்க வேண்டும். மழலையர் மற்றும் தொடக்க நிலை வகுப்பு குழந்தைகள், நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.