15
ஆக, 200 மாணவர்களே இருந்தாலும் 10 சிறுநீர் கழிப்பறைகள் வேண்டும் என்று அரசாணை சொல்லுகிறது. எந்தப்பள்ளியில் இத்தனை வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அட,20 மாணவிகளுக்கு ஒன்னு வேண்டாம். 200 மாணவிகளுக்கு ஒன்றாவது இருக்கிறதா எனில், பெயருக்கு கூட ஒரு கழிப்பறை கூட இல்லாத அரசுப்பள்ளிகள் அநேகம் இருக்கிறதே. அரசு தானே இதற்குக் காரணம்? அப்பட்டமான மனித உரிமை–குழந்தை உரிமை மீறல் இல்லையா இது? அது மட்டுமல்ல, ஆசிரியர்களுக்குக் கூட கழிப்பறை இல்லாத பள்ளிகளும் தமிழகத்தில் அநேகம் இருக்கத்தான் செய்கின்றன. ஏன், சென்னையில் கூட இக்கொடுமையான சூழல் இருக்கையில், அரசாணை என்பதன் அர்த்தம் என்ன?
மேலும், நான்காவதாக, மின்சாரம் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டதையும் வாசியுங்கள்.
(4) மின்சாரம்;
I. அனைத்து இடங்களிலும் மின்சார இணைப்புகள், மின் சாவி( ஸ்விட்சஸ்) போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
II. பள்ளிகளில் உள்ள மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுது நீக்கி, அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின்( licensed electrical inspectors) சான்று பெற்றிருக்க வேண்டும்.
III. உடைந்த/ சிதிலமடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறுந்த/துண்டித்த நிலையில் மின்சார ஒயர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும். அதுகாறும் மாணவர்கள்/ பணியாளர்கள் அவ்விடம் செல்லாமல் இருக்க பாதுகாப்பான முறையில் உரிய தடுப்பு அமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
(5) இருக்கைகள்
I. மாணவர்கள் அமரும் பெஞ்சுகள் பின்புறம் முதுகு சாய்வகம் உள்ள முறையில் அமைக்கப்பட வேண்டும்.
II. பெஞ்சுகள், டெஸ்குகள் ஆகியவற்றில் கூரிய முனைகள் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். எக்காரணங்கொண்டும் அமர்ந்தால் ஆடக்கூடிய மற்றும் உடைந்த நிலையிலான இருக்கைகள் பயன்படுத்தக்கூடாது. அவை உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும்.
(6) முதலுதவி
I.
பள்ளிகளில் ஆபத்துக்காலங்களில் முதலுதவி செய்ய ஏதுவாக முதலுதவி பெட்டிகள் அனைத்து மருத்துவ பொருட்களுடன் அமைக்கப்படல் வேண்டும். மேலும், காலாவதியான மருந்துகள் ஏதும் சேமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
II. பள்ளி மாணவர்களின் இரத்த வகை, நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்புகள், மருந்து ஒவ்வாமை மற்றும் குடும்ப மருத்துவர் போன்ற உடல்நலம் சார்ந்த பதிவுகள் பேணப்பட வேண்டும்.
III. ஓட்டுனர்/ உதவியாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளித்திட வேண்டும்.
யப்பா, கண்ணை சுத்துதே என்கிறீர்களா! முதுகு சாய்வகம் உள்ள பெஞ்சுகள் அமைக்கப்பட வேண்டுமாம். ஆனால், பல பள்ளிகளில் வகுப்பறையே இல்லையே என்ன செய்ய? மரத்தடி வகுப்புகளுக்கு பெஞ்சாவது, டெஸ்காவது, போர்டாவது! வகுப்பறையிருப்பின் பல பள்ளிகளில் குண்டும், குழியுமான தரையில் உட்கார்ந்துதான் படித்துக்கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.
அதிலும், இந்த முதலுதவி விதிகள் இருக்கிறதே, அதிகாரிகளுக்கு கூச்சமே இல்லை போலிருக்கிறதே, இப்படியெல்லாம் எழுதுவதற்கு! காலாவதியான மருந்துகள் இல்லை என்பது வேறு உறுதி செய்யப்படவேண்டுமாம்.
இது மட்டுமல்ல, இன்னும் பல விதிகளும் அதில் உள்ளன. அதையும் பார்த்துவிட்டு, அதைப்பற்றிப் பேசுவோம்.
வளாகம்/வகுப்பறை: