16
இந்த அரசாணை போடப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. சொல்லுங்கள். எத்தனைப்பள்ளிகளில் அமலாக்கப்படுகின்றன இவைகள் எல்லாம். அமலாக்கப்பட்டிருந்தால் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதியே இல்லாமல் இருந்திருக்குமா?
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இந்த அரசாணையில் பல வரிகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், அரசுப்பள்ளிகளில் ஏன் வாயிற்காவலாளிகள் கூட நியமிக்கப்படுவதில்லை? பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தான் நூலகங்களும் இயங்குகின்றன. பள்ளிக்கல்விக்கும், நூலகங்களுக்கும் உள்ள இணைப்பின் அவசியம் இது. ஆனால், அரசுப்பள்ளிகளுக்கும், உள்ளூர் நூலகங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஏன் ஏற்படுத்த இயலாதா? அப்படி ஏற்படுத்தினால் மாணவர்களுக்கு மிக்க பயன் தருமே!
இந்தத்தொடர்பெல்லாம் இருக்கட்டும் அய்யா, அரசுப்பள்ளிக்கூடங்களில் நூலகங்களே இல்லையே, அதை முதலில் சொல்லுங்கள். அப்புறம் நூலகங்களை, அரசுப்பள்ளியோடு இணைக்கும் திட்டத்தைப் பேசலாம் என்று தானே சொல்கிறீர்கள். அதுவும் சரிதான். முதல்ல, அரசுப்பள்ளிகளில் இருக்கும் நூலகங்களை அரசு செப்பனிடட்டும். இன்றைய நவீன கல்வித்துறையின் வளர்ச்சியில் பள்ளியின் ஒரு அங்கமாக நூலகங்கள் இருக்கவேண்டியது அவசியமாகும். பாடப்புத்தகங்களோடு தொடர்புடைய ஏராளமான புத்தகங்கள் மாணவர்களுக்காக அங்கு வைக்கப்பட வேண்டும். ஏன் அரசு இதை சிந்திக்கவில்லை?
மடிக்கணினிகள் கொடுக்கிறார்கள். இருக்கட்டும் நல்லதுதான். ஆனால், எத்தனைப்பள்ளிகளில் கணினி ஆய்வகம் இருக்கிறது?
எத்தனைப் பள்ளிகளில் பிளம்பரும், எலக்டீரிசியனும் நியமிக்கப் பட்டுள்ளனர்? எத்தனைப் பள்ளிகளில் நடத்தாட்டிகள்(ஆயாக்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்? தலைமை ஆசிரியரே இல்லாமல் பள்ளிகள் இருக்கையில், யாருயா இது பிளம்பரு, ஆயான்னுக்கிட்டு என்கிறீர்களா. பொறுங்கள்.
இன்னுமோர் முக்கியமான விசயத்தையும் கேட்டுக்கொள்ளுங்கள். இந்த அரசாணையையும் அரசு சும்மா போடவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் போடப்பட்டதுதான். அதாவது, இந்த அரசாணைக்குப் பின்னர் தான் ஓரளவு சில பள்ளிகளிலாவது இவ்வசதிகள் செய்யப்பட்டன என்பதே உண்மையாகும். மேலும் கட்டாய மற்றும் இலவசக் கல்வியுரிமைச்சட்டமும் இது போன்ற அடிப்படை வசதிகளை வரையறுத்துள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் பள்ளியில் இல்லையெனில் கல்வியுரிமையை அளித்ததாக பொருள் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் இருக்கிறது. இவ்வளவு சட்டம் இருந்தும் விதிகள் இருந்தும், ஏன் அரசுப்பள்ளிகளை அரசே புறக்கணிக்கவேண்டும்?
அதாவது, என் ஆட்சியில் இதைச்செய்தேன், என் ஆட்சியில் இப்படி சாதித்தேன், நான் வழங்கினேன், நான் தானம் செய்தேன், இலவசமாக் கொடுத்தேன், விலையில்லாமல் கொடுத்தேன், நான் கொடுத்தேன், நான்..நான்.. நான்… என்பதற்காகத்தான் இங்கு ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும். இந்த திட்டங்களால் அரசுப்பள்ளிகளில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதே உண்மை.
உதாரணத்துக்கு, இந்த மூன்றாண்டில் 54 அரசு தொடக்கப்பள்ளிகள் மட்டுமே புதிதாய் துவங்கப்பட்டவை. ஆனால், ஈராண்டில் மட்டும் 279 சுயநிதி மேனிலைப் பள்ளிகளும், 175 சுயநிதி உயர்நிலைப் பள்ளிகளும், 224 சுயநிதி நடுநிலைப்பள்ளிகளும் பெருகியிருக்கிறது என அரசின் புள்ளிவிபரமே கூறுகிறது. ஆனால், அரசு மேனிலைப்பள்ளிகளையோ, அரசு உயர்நிலைப்பள்ளிகளையோ எங்கு இல்லை எனக்கண்டறிந்து அங்கு புதிதாய் துவங்குவதில்லை. இருக்கும் பள்ளிகளை மேம்படுத்துவதோடு சரி. இதன் விளைவென்ன?
197268 மாணவர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளியில் மட்டும் இந்த ஈராண்டில் குறைந்திருக்கிறது. இதே காலத்தில் தனியார் பள்ளிகளில் 245855 மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. (ஒப்பீடு; செயல்முறைத்திட்டம் மற்றும் புள்ளிவிபரக்கையேடு 2012-13 மற்றும் 2014-15 ஆகியவை; வெளியீடு; தமிழக அரசு)