19
இந்தப் பாதையிலிருந்து இந்தியா விலகுவதன் நாசகர விளைவுகள், மனித வள வளர்ச்சியில் 174 நாடுகளில் இந்தியா 136-வது இடம்; சமூக முன்னேற்றத்தில் 132 நாடுகளில் 102-வது இடம்; உழைக்கும் மக்களில் நவீனத் திறன் கொண்டோர் இந்தியாவில் 6.7%, சீனாவில் 50%, ஐரோப்பிய யூனியனில் 75%.
முன்னாள் துணைவேந்தர் கல்வியாளர். முனைவர்.வசந்திதேவியின் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்?
ஆம். அருகமைப்பள்ளியில் அனைவருக்கும் சமமான, சீரான பொதுக்கல்வி என்ற நடைமுறை நம் நாட்டிலும் வந்தால் எப்படியிருக்கும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவர் குழந்தை அங்கே படிக்கிறது, இவர் குழந்தை இங்கே படிக்கிறது, எனவே என் குழந்தையை அங்கே சேர்க்கிறேன் என்று தானே ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு விதமான பள்ளியைத்தேடி ஓடுகின்றனர். ஒரே விதமான பொதுக்கல்விதான் என்றால் யாரும் ஓடப்போவதில்லை. பதட்டப்படப்போவதில்லை. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டிலும் பள்ளிக்கல்விக்காக என இன்று செலவிடப்படும் பல இலட்சங்கள் மிச்சம். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரங்கள் மிச்சம். மூன்று வயதிலேயே பத்துப்பதினைந்து கிலோமீட்டர் தூரம் பயணம் சென்று படிக்கும் கொடுமைக்கும் நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
ஆம். உலகத்திலேயே பள்ளிக்கல்வியில் வியாபாரம் செழித்தோங்குவது இங்குதான். கல்விக்கு அதிபதி சரஸ்வதி என நம்பி பெரும்பான்மை மக்கள் வணங்கும் ஒரு நாட்டில் தான் காசுக்கேற்ற கல்வி என கல்வி ஒரு பெரும் வியாபாரப்பொருளாய் விற்கப்படுகிறது. கல்வியை கடவுளின் அருள் என்று நம்புவது ஒருபுறம், காசுக்கேற்ப கிடைக்கும் என்ற நடைமுறை ஒரு புறம் என என்னவிதமான முரண்பாடு இது? எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது?
தனியாரே வேண்டாம் என்று சொல்லி அரசு மட்டுமே விற்கும் என்று சொல்லி, இலக்கு தீர்மானித்து டாஸ்மாக் திறக்கும் அரசு, குடிகாரர்களுக்காக முதலில் பார் திறந்தது. இப்போது எலைட் பார் வரை திறந்து போதை வளர்க்கும் அரசு, ஏன் கல்வியை வளர்க்க மட்டும் திட்டமிடவில்லை? அரசுப்பள்ளிகளை வளர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இப்படியான திட்டமிடல்களை ஏன் செய்யவில்லை? ஆக, டாஸ்மாக்கில் இருக்கும் ஆர்வம் அரசுப்பள்ளி வளர்ச்சியில் இல்லை என்பது தெளிவு. அரசிடம் இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு பெற்றோர்களை மட்டும் குறை சொல்வது எப்படி சரியாக இருக்கும்?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என பெருமை பேசுகிறோம். வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் சம்மாய் அளிக்கப்பட்டிருப்பதாய் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அடிப்படை வாழ் உரிமையான கல்வியை அனைவருக்கும் சமமாய் அளிக்காமல், அதைக் காசுக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம் எனில், இத்தேசத்தில் ஜனநாயகம் என்பதன் அர்த்தம்தான் என்ன? வாக்களிப்பதை விட வேறென்ன உரிமைகள் சமமாய் வழங்கப்பட்டிருக்கின்றன இத்தேசத்தில்?
நவோதயா பள்ளிகள் என மத்திய அரசால் நடத்தப்படும் அறிவுசார் மையப்பள்ளிகளும் (செண்டர் ஆப் எக்சலன்ஸ்), கேந்திரிய வித்யாலாயா என மத்திய அரசால் சிறப்பாய் நடத்தப்படும் பள்ளிகளும் கூட அரசுப்பள்ளிகள் தானே. அப்பள்ளிகளை சிறப்பாய் நடத்த முடியும் எனில், மாநில அரசின் பள்ளிகளை மட்டும் ஏன் சிறப்பாய் நடத்த இயலாது?
முடியும். நிச்சயமாய் முடியும். அமைச்சர் வீட்டுப்பிள்ளையும், அரசு அதிகாரிகள் வீட்டுப்பிள்ளையும் படிக்கும் பள்ளிகளாய் அரசுப்பள்ளிகள் மாறினால், நிச்சயம் முடியும். இந்நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
கல்வியின் மீதான பொதுமக்களின் கவனம் அதிகமாகிவரும் காலமிது. எவ்வளவு செலவழித்தாலும் பரவாயில்லை, நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மக்களுக்கு கல்வியின் மீது கவனம் இருக்கிறது. தனியாரை நாடும் இம்மக்கள், நிச்சயம் ஒருநாள் உணர்வார்கள். தனியார் பள்ளியின் இலாபவெறிக்கு தீனிபோட்டு முடியாது என்று உணரும் அந்த நாளில், அரசுப் பள்ளிகள் நமது பள்ளிகள் என பெரும்குரல் எழுப்புவார்கள்.
அப்போது, அருகமைப் பள்ளிகள் எனும் பொதுப் பள்ளிக்கான குரல் போர்க்குரலாய் ஒலிக்கும். அதன் இன்றைய தொடக்கம் தான் அரசுப் பள்ளிகளை பாதுகாப்பதற்கான இக்குரல்.
கல்வி முக்கோணத்தின் மூன்று பக்கங்கள்: அனைவரும் கல்வி பெறுதல், அதன் தரம், சமத்துவம். இதன் ஒரு பக்கம் சரிந்தாலும், முக்கோணமே உடைந்துவிடும்.’’ கல்வியாளர்
ஜே.பி. நாயக்