17
இப்போது சொல்லுங்கள் இலவசங்களால் பயன் உண்டா? இலவசங்கள் தருவதால் கல்வித்தரத்தை அதிகப்படுத்த இயலுமா? இலவசங்களால் மட்டும் அரசுப்பள்ளிகள் முன்னேறுமா?
உதாரணத்துக்கு, மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். திட்டம் பொதுவான நோக்கில் நல்லதிட்டம் என்றாலும், கணினியைப் பெற்ற மாணவர்களில் எத்தனை பேருக்கு கல்விநோக்கத்திற்காக பயன்பட்டுள்ளது என்ற விபரத்தை யோசித்தால் உங்கள் பதில் என்ன? பதினொன்றாம் வகுப்பு நுழைகையில் மடிக்கணினியை அளித்து, ஒரு பகுதி மேல்நிலைகல்வியை கணினிக்கல்வியாக மேம்பட்ட முறையில் அளித்திருந்தால் அத்திட்டம் பயனுள்ள திட்டம்.
நான்காண்டில் மட்டும் ரூபாய் 3642.79 கோடி செலவில் 21.56 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கமுடியும் எனில், ஏன் அத்தனை வகுப்பறைகளையும் கணினி மயமாய் மாற்றிட இயலாது? இப்பணத்தினைக்கொண்டு அனைத்து வகுப்பறைகளையும் மேம்படுத்தியிருக்கலாமே, அதை ஏன் செய்யவில்லை அரசு? அரசுப்பணத்தை எடுத்து தன்னை புண்ணியவானாகவும், இரக்க குணம் கொண்டோராகவும் காட்டிக்கொள்ள நினைக்கும் ஆட்சியாளர்கள் அந்தப்பணத்தை வைத்து கல்விக்கான வளர்ச்சித்திட்டங்களை ஏன் முறையாய் திட்டமிடுவதில்லை?
இன்னும் சொல்லப்போனால், அரசே மடிக்கணினியை உற்பத்தி செய்தால், அனைத்து மாணவர்களுக்கும் இதைவிடத் தரமான மடிக்கணினியை வழங்க முடியும். அதே நேரத்தில் திட்டமும் நிரந்தரமான ஒன்றாக கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். வேலைவாய்ப்பும் பெருகியிருக்கும். ஆனால், அப்படிச்செய்யாமல், என் ஆட்சியில் என்னால் தரப்படும் இலவசத் திட்டம் என்ற பெயரில் ஏன் இதைச்செய்ய வேண்டும்?
ஆக, கல்வி வளர்ச்சி எனும் நோக்கில், அரசுப்பள்ளிகளை மேம்படுத்துதல் எனும் அணுகுமுறையில் செய்யப்படும் திட்டங்கள் அல்ல என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். வாக்குவங்கியை மட்டுமே குறிவைத்து உருவாக்கப்படும் இத்திட்டங்களால் கல்வித்துறையில் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த இயலாது என்பதே உண்மையாகும்.
குறிப்பாக, அதிமுகவின் இந்த நான்காண்டு ஆட்சிக்காலத்தில் மட்டும் இலவசங்களுக்காக சுமார் 1.80 இலட்சம் கோடிகள் செலவிடப்பட்டுள்ளன. ஆனால், அதே நேரத்தில் கல்விக்காக செலவிடப்பட்ட தொகை என்பது இதே நான்காண்டு காலத்தில் மொத்தம் சுமார் 58000 கோடிகள் மட்டுமே (கல்விக்கான அனைத்து இலவசங்களும் இதில் அடக்கம்). அப்படியெனில், கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.
இலவசங்கள் என்ற மாய அரசியலை ஒழித்தால், கவர்ச்சி அரசியலை கைவிட்டால், கல்விக்கு நிதி கிடைக்குமா கிடைக்காதா என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். மிக்ஸி, கிரைண்டர், டிவி ஆகியவை இலவசம் என மக்களுக்கு ஒரு மாயையைக் காட்டுகின்றனர். ஆனால், இதெல்லாம் சேர்ந்தாலும் ஒரு குடும்பத்திற்கு ஆகும் செலவு ஐந்து வருடத்தில் மொத்தம் ரூ. பத்தாயிரம் தான். ஆனால், கல்விக்கு ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு குடும்பமும் செலவழிக்கும் தொகை குறைந்த பட்சம் சுமார்.20 ஆயிரம் அல்லவா.
ஆக, தமிழகத்தின் அனைத்துப்பள்ளிகளும் அரசுப்பள்ளிகள் தான் என்ற நிலையை ஏற்படுத்தினால், ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் சுமார்.20 ஆயிரம் மிச்சப்படுமே. இதை ஏன் பெற்றோர்கள் யோசிப்பதில்லை?
ஆனா, அரசு மழலைகளுக்கான வகுப்புகளை துவங்கும்னு சொல்லுறாங்க, இப்ப கூட பாருங்க, ஆங்கில வழிக்கல்வியை அரசுப்பள்ளிகளில் வழங்கும் திட்டத்தை அரசு துவங்கியிருக்கு. இதெல்லாம் அரசுக்கு இருக்கும் அக்கறையால் தானே என்றும் சிலர் கேட்கலாம்.
உங்க கேள்வி நியாயமான கேள்விதான். ஆனா, அரசின் அக்கறை நியாயமானதல்ல. உதாரணத்துக்கு, ஆங்கில வழிக்கல்வி துவங்கிவிட்டால் கல்வியின் மீது அக்கறை இருப்பதாய் அர்த்தமா? ஏற்கனவே, தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே ஆங்கிலம் பேசவும், எழுதவும் தெரியவில்லை என்பதுதானே பிரச்னையே! பொறியியல் கல்லூரிக்கு சென்ற பின்னும், அவர்களுக்கு ஆங்கிலம் பேசத்தெரியாததால் தானே தற்கொலைகளே அதிகரிக்குது? காரணம், நம் நாட்டில் ஆங்கிலம் சொல்லித்தரும் முறைதான். அதை ஒரு மொழி