3
கரும்பலகைகள். இத்துப் பிடித்த இருக்கைகள். வெடித்துக்கிடக்கும் மேஜைகள். வெயிலோ, மழையோ பாரபட்சமில்லாமல் ஒழுகும் மேற்கூரைகள். கதவில்லா கழிப்பறைகள். தண்ணீர் தேங்கி பாசியும், பாசமும் பிடித்து நிற்கும் குழாயடிகள்.
வாருங்கள், அங்கே நிற்கும் மாணவனிடம் சில சந்தேகங்களைக் கேட்போம்.
ஏனுங்க தம்பி, சுற்றுச்சுவர் ஏன் இப்படி அசிங்கமா கிடக்குது?
பல பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவரே இல்லாத நிலையில, இங்க அப்படி அந்தப் பெயருல ஒரு சுவரு, பள்ளிக்கூடத்தைச் சுத்தி இருக்கிறதேன்னு ஆச்சரியப்படுங்க சார். சந்தோசப்படுங்க.
குடிதண்ணீர் உண்டாப்பா?
பாட்டில்ல சில பேர் கொண்டாந்துருவாங்க சார். நாங்களே காசு போட்டு. பானை வாங்கி வைச்சு, பைப்ல தண்ணீர் வர்றப்போ கொண்டாந்து ஊத்தி வைச்சுக்குவோம் சார்.
அப்போ, குடிதண்ணீர் ஏற்பாடோ, கேண்டீனோ கிடையாதாப்பா?
சார், பள்ளிக்கு பக்கத்துலே அவ்வளவு பெரிய டாஸ்மாக்கும், பாரும் இருக்கும்போது தனியா பள்ளிக்கூடத்துக்கு எதுக்குன்னு யோசிச்சிருப்பாங்க சார். அரசு வருமானத்தை பெருக்கணும்னா நாங்களும் குடிச்சுத்தான் ஆகணும்னு அவங்க நினைக்கிறாங்க சார்.
சரிப்பா, அத விடுப்பா. கழிப்பறை தனியா இருக்கா?
சார், ஆம்பளப் பசங்களுக்கு தனியா கழிப்பறை எதுக்கு சார்? அதுக்குதான் சுற்றுச்சுவரும், மைதானமும் இருக்குதுல்லே, அங்கபோய் அடிச்சுக்குவோம். இந்தப் பொம்பளப்பசங்களுக்குதான் சார், ரொம்பக் கஷ்டம், கழிப்பறை இருக்கு. ஆனா, சுத்தமா இருக்காது சார். பல நாள் தண்ணியே வராது சார். அவங்க அடக்கிக் கிடுவாங்க சார்.
ஏம்மா, சானிட்டரி நாப்கின்னெல்லாம் அரசே தருதுன்னு சொல்லுறாங்களே, அப்ப சுத்தமான கழிப்பறை இல்லேன்னா எப்படிம்மா? என்று ஒரு மாணவியுடமே கேட்டிருவோம். வாங்க.
விலையில்லாத நாப்கின் கொடுத்தது என் அரசுதான்னு சொன்னா அதை அவங்களோட சாதனையுன்னு நினைக்கிறாங்க சார். ஆனா, சுகாதாரமான கழிப்பறையை முக்கியமா யாருமே நினைக்கிறதில்லியே சார். நாப்கின் அழிப்பான் கொண்ட சிறப்பான கழிப்பறை வசதின்னு சொன்னாங்க சார். ஆனா, எப்போ வருமுன்னு சொல்லலை சார்.
தலைகுனிந்து கொண்டே பதில் சொன்ன மாணவியின் வேதனை நிறைந்த அந்த முகம், உங்கள் பக்கத்து வீட்டின் சிறுமியைக்கூட நினைவுபடுத்தலாம். நன்கு பாருங்கள். அந்த முகத்தில் எத்தனை அவமானம் என்று! ஆம். இப்படியான அரசுப்பள்ளியில் படித்தால் அத்தனை அவமானம் என்ற நினைப்பு பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு இன்றிருக்கிறது.
அரசுப்பள்ளியில் வேலை என்றால் ஓடி வருகிறார்கள். ஆனால், அரசுப்பள்ளியில் குழந்தையை சேர்க்க வேண்டும் என்றால் ஓடிவிடுகிறார்கள். அரசின் பள்ளியில் படிப்பது அத்தனை அவமானமாய் எப்போது மாறியது?
அப்போ, அரசுப்பள்ளியை விட தனியார் பள்ளிதான் சிறப்பானதுன்னும் உடனே முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இரண்டையும் கொஞ்சம் அலசி, ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வரலாம். வாருங்கள். பொறுமையாய் ஒவ்வொன்றாய் பேசலாம்.
முதல்ல, தனியார் பள்ளியில சீட் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. அப்பா, அம்மா படிச்சிருக்கணும், நல்லா சம்பாதிக்கணும், கேட்டப்போவெல்லாம் பணம் கட்டத் தயார்னு சேருதப்பவே கெத்து காட்டணும். எந்தக் கேள்வியும் கேக்காம, எந்த விபரமும் கேக்காம, எந்த இரசீதும் கேக்காம, கேட்ட தொகையை சொன்ன தேதிக்குள்ளே கட்டணும்.
ப்ரீ.கே.ஜி.யில் இருந்து எட்டாது வரை சட்டப்படி பாஸ். யாரும் பெயில் ஆக்க முடியாது. ஆனால், ஒன்பதாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்தாலும். ஒன்பதாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்தால் என்ன செய்கிறார்கள்?