4
உங்க பையன்/பொண்ணு எங்க பள்ளியில படிச்சா எங்களுக்கு செண்டம் ரிசல்ட் கிடைக்காது, பள்ளி பெயர் கெட்டுரும். எனவே, இந்தாங்க மாற்றுச் சான்றிதழ் என்று கையில் திணித்து வேறு பள்ளிக்குச் செல்லுங்கள் என்று விலையில்லா ஆலோசனை அளித்து வெளியேற்றிவிடுகிறார்கள். அதாவது, தனியார் பள்ளியைப் பொறுத்த வரை சாதாரண மாணவர்களையோ அல்லது குறை மதிப்பெண் பெறும் மாணவர்களையோ பள்ளிக்குள் அனுமதிப்பதேயில்லை.
ஆனால், அரசுப்பள்ளியில் அப்படி இல்லை. முட்டை வாங்கும் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு, நூறு சத தேர்ச்சி நோக்கி முன்னேறுகிறார்களே, அதன் பெயர்தானே கல்வித்தரம்! இதன் பெயர்தானே கல்விச்சேவை. கறக்கும் வரை பணம் கறந்துவிட்டு, உங்க பையன் சரியா படிக்கமாட்டிக்கான் என அப்பா, அம்மாவை குத்தம் சொல்லுறதை கல்விச்சேவைன்னு ஏற்றுக் கொள்ள முடியுமா உங்களால்?
ஆம். அரசுப்பள்ளிகள் சராசரியாய் தொடர்ந்து 84 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியைப் பெற்று, தற்போது 90 சதவிகிதம் என முன்னேறியுள்ளனர் என்பது பத்திரிக்கைச் செய்தியாகும். குறிப்பாய், சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 90 சதவிகித தேர்ச்சியும், அவற்றில் நான்கு மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியும் காட்டியுள்ளன எனில், அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அரசுப்பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் தரம் குறைந்தவர்களாய் நினைத்துவிடவும் முடியாது.
ஆனால், தனியார் பள்ளிகளில் என்ன நிலைமை? அங்கே படிக்கும் எல்லா மாணவர்களும் தேர்ச்சி அடைந்துவிடுகிறார்களா? தனியார் பள்ளியின் எல்லா மாணவர்களும் 90 சதவிகித மதிப்பெண் பெற்றுவிடுகிறார்களா? அங்கிருந்து வரும் எல்லா மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கும் போய்விடுகிறார்களா? ஒழுக்கத்திலும், திறமையிலும் உயர்ந்துவிடுகிறார்களா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
தனியார் பள்ளிகள் சிறந்தவை எனில், அங்கிருந்து எத்தனை மாணவர்கள் ஐ.ஐ.டிக்கும், என்.ஐ.டிக்கும் சென்றிருக்கிறார்கள்? ஒரு மாணவர் 900 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் போதும், தமிழகம் எங்கும் தினசரிகளில் புகைப்படத்துடன் விளம்பரமும், மாவட்டம் முழுவதும் ஊரெங்கும் விளம்பரப் பேனரும் வைக்கும் தனியார் பள்ளிகள் இந்த விபரங்களை என்றாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால்தானே சொல்லுவதற்கு! மேலும், மாநிலத்தின் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளி மாணவர்களும் அல்ல. அதில் அதிகம் அரசுப்பள்ளி மாணவர்களும் உண்டு. ஆனால், அரசுப்பள்ளிகள் அதை விளம்பரப்படுத்துவதும் இல்லை. பேனர் வைத்துக் கொண்டாடுவதும் இல்லை.
உதாரணத்துக்கு, 887 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 113 அரசு மேனிலைப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர் மாணவர்கள். அதுமட்டுமல்ல, இயற்பியலில் 2710 மாணவர்கள், கணிதத்தில் 3882 மாணவர்கள், வேதியியலில் 1693 மாணவர்கள், உயிரியலில் 652 மாணவர்கள், வணிகவியலில் 2587 மாணவர்கள், கணக்குப்பதிவியலில் 2403 மாணவர்கள், வணிகக் கணிதத்தில் 605 மாணவர்கள் என நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளன அரசுப்பள்ளிகள்.
இன்னொன்னு தெரியுமாங்க உங்களுக்கு? 2013– _ 14 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழகத்தின் முதல் மூன்று இடங்களை அரசுப்பள்ளி மாணவர்கள்தான் பெற்றுள்ளனர். இதிலும் குறிப்பாக சொல்ல வேண்டிய ஒரு தகவல் உண்டு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களும் பலர் நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளனர் என்பதேயாகும். 27 பேர் ஆங்கிலத்திலேயே செண்டம் வாங்கி அசத்தியுள்ளனர். 6712 பேர் அறிவியலிலும், 2129 பேர் சமூக அறிவியலிலும், 1056 பேர் கணிதத்திலும் வாங்கியுள்ளனர் என்றால் அரசுப் பள்ளிகளில் தரம் என்னவென்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆச்சரியமா இருக்கே! இதையெல்லாம் ஏங்க அரசுப்பள்ளிகள் விளம்பரம் செய்யல என்றுதானே கேட்கிறீர்கள். உண்மைதான். ஆனால், சாக்பீஸ் வாங்குறதுக்கே பசங்களுக்கு அபராதம் போட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கு பல பள்ளிக் கூடங்களில். இந்த நிலையில் விளம்பரம் செய்யுறதுக்கு வேற காசுக்கு எங்க போக?
ஆனால், தனியார் பள்ளிகளில் விளம்பரம் தாங்க மூலதனமே. எந்தப் பள்ளிக்கூட விளம்பரத்தப் பார்த்தாலும் ஏதோ தமிழ்நாட்டுலேயே அதுதான் நம்பர் ஒன்னு மாதிரிதான் விளம்பரம் செய்வார்கள். நூத்துக்கு எண்பது மார்க் வாங்கின மாணவன்/மாணவி புகைப்படம் வரை போட்டு ஊரையே ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள்.
புள்ளிவிபரமெல்லாம் சரிதாங்க, ஆனா, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தானே அதிகம் பேர் நல்ல மார்க் வாங்குறாங்க, அதனாலதானே எல்லாரும் அங்க ஓடுறாங்க என்றும் சிலர் கேட்கலாம்.
அப்படி சிலர் நினைப்பது உண்மைதான். ஆனால், ஒப்பீட்டுப்பார்த்தால் அரசுப்பள்ளிகளே அதிலும் சிறப்பானவை. ஏனெனில், தனியார் பள்ளியில் படிக்கும் இத்தகைய மாணவ, மாணவியர்களில் பெரும்பாலோர் நல்ல கல்விப் பின்னணியில் இருந்து வருவோர் ஆவர். பல தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு காலத்திலேயே பத்தாம் வகுப்பையும், பதினோறாம் வகுப்பு காலத்திலேயே பன்னிரெண்டாம் வகுப்பையும் துவங்கி விடுகிறார்கள். இரண்டு வருடத்துக்கு பொதுத்தேர்வுக்கு தயார் செய்யப்படும் இவர்களுக்கு தனியார் பள்ளியில் கூடுதல் பயிற்சியோடு, டியூசன் ஏற்பாடுகளும் பெற்றோர்களால் கிடைக்கின்றன. ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களில் பெரும்பாலோர் சாதாரண மதிப்பெண்ணில் இருந்து உயர்ந்த மதிப்பெண்ணுக்கு முன்னேறியவர்கள் ஆவர். அத்தோடு சிறப்பு வகுப்புகளும், சிறப்புப் பயிற்சிகளும், டியூசன் ஏற்பாடுகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.
ஒரு சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் கூடுதல் முயற்சியால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்தப்பள்ளிகளைப் பார்த்தால் அதன் பிரதிபலிப்பு நிச்சயம் தெரியும்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அனைத்து அரசுப்பள்ளியிலும் சிறப்பு வகுப்புகளும், சிறப்புப் பயிற்சிகளும் கொடுப்பதற்கான ஏற்பாடு இருந்தால்..? அரசுப்பள்ளியில் இன்றைக்கு உள்ள ஆசிரியர்களின் திறமையோடு ஒப்பிடும் போது, இவ்வாய்ப்புகள் அனைத்து அரசுப்பள்ளியிலும் அளிக்கப்பட்டால் மாநிலத்தின் உயர்ந்த இடங்களை அரசுப்பள்ளிகள் மட்டுமே பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
அரசிடம் அதற்கான திட்டங்கள் இல்லை என்பது ஒருபுறம். மறுபுறம் ஆசிரியர்களும் அதற்காக முன்வர வேண்டும். அரசுப்பள்ளியில் பணிக்கு சேர்ந்துவிட்டோம் என்றாலே ஓய்வு பெறும் வரை சம்பளமும், பதவி உயர்வும் உறுதி என்ற மனநிலையில் இருந்தால் ஆசிரியர்களால் அது சாத்தியமல்ல. பள்ளியை கோவிலாகக் கருதி உழைக்கும் ஆசிரியர்கள் அநேகம் என்றாலும், கடமைக்காக வேலை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால், உண்மை என்னவென்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை விடவும், அரசுப்பள்ளி ஆசிரியர்களால் தான் அதிகம் சாதிக்க முடியும். நல்ல மாணவர்களை அவர்களால் தான் உருவாக்கவும் இயலும்.
ஏனெனில், அரசுப்பள்ளியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் முறையான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். திறமையுள்ளவர்கள். ஆனால், தனியார் பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்கள் முறையான ஆசிரியப்பயிற்சி முடித்தவர்கள் அல்ல. பட்டப்படிப்போ, பட்டமேற்படிப்போ மட்டுமே படித்தவர்கள் தான் அதிகம். திறமையுள்ளவர்கள் உண்டெனினும், அவர்கள் யாரும் ஒரு பள்ளியில் நிரந்தரமாய் பணியாற்றுவதில்லை. அத்தோடு வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றினால் மாதச்சம்பளம் கிடைக்கும் என அவர்களில் பலர் அப்பணியை ஒரு சம்பளமாக மட்டுமே பார்க்கிறார்கள்.
மேலும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தவித புத்தாக்கப் பயிற்சியும் தரப்படுவதில்லை. புதுப்புது கற்றல் முறைகளும் சொல்லித் தரப்படுவதில்லை. ஆனால், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்துவிதமான பயிற்சிகளும் அரசால் தரப்படுகின்றன. மேலும், தனியார் பள்ளியில் ஒரு ஆண்டு முடியுமுன்னே ஆசிரியர்கள் வேறு வேலை தேடிப் போய் விடுகின்றனர். ஒரே பாடத்தை பல ஆசிரியர்கள் எடுக்கும் அவலநிலை. ஆனால், அரசுப்பள்ளியில் கல்வியாண்டின் இடையில் அப்படியாக ஆசிரியர் மாறுதல் நிகழ்வதில்லை. எப்போதேனும் மட்டுமே ஆசிரியர் இடமாறுதல். அதுவும் கல்வியாண்டின் துவக்கத்தில் தான்.
ஆக, ”ஆசிரியரின் தரமே சிறந்த கல்விக்கு அடிப்படைத்தேவை’’ என்ற அளவுகோலில் பார்த்தால், அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் எந்த வகையிலும் உயர்ந்ததல்ல என்பது நன்கு புரியும். ஆனால், அரசோ ஆசிரியர் பணியை அடிப்படை விதையாய் கருதுவதேயில்லை. முக்கியப் பிரச்னை என்னவென்றால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசால் கௌரவமாய் நடத்தப்படுவதில்லை என்பதேயாகும்.