10
ஆதார் அட்டை எனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அரசின் நலத்திட்டங்கள் பெற அதைக் கட்டாயம் என்று அறிவித்தார்கள். ஆனால், அது கட்டாயமல்ல என உச்சநீதிமன்றம் கூறியபின்னர், ஆமாமாம் கட்டாயமில்லை என மத்திய அரசும் அறிவித்தது, மாநில அரசும் அறிவித்தது. நடைமுறையிலோ, பள்ளி மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வாங்குவதற்குக் கூட அதைக் கட்டாயம் என மிரட்டிக்கேட்கிறார்கள். ஆனால், அரசுப்பள்ளிகளை பொறுத்தவரையில் அரசு இயற்றிய அனைத்து சட்டங்களும் அனாதையாய் கிடக்கிறது. ஏனிந்த நிலை?
வேறொன்றுமில்லை. அரசுப்பள்ளிகள் வளர்ச்சியடைந்தால் யாருக்கு பாதிப்பு வரும்? நாம் நினைப்போம் தனியார் பள்ளிகளுக்கு என்று. சரியான பதில் தான். ஆனால், அந்த தனியார் பள்ளிகளை நடத்துவது யார்? மகாத்மா காந்தி, காமராஜர் பெயர் முதல் கலைமகள் பெயர் வரை தாங்கி நிற்கும் அப்பள்ளிகளை அரசியல் அதிகாரத்தின் துணை இல்லாமல் யாரேனும் நடத்த இயலுமா?
ஆளும் கட்சிக்காரர்களாய் இருப்போர் மற்றும் இருந்தோர் தான் சொந்தப்பெயரிலும், பினாமி பெயரிலும் கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தனியார் பள்ளியாய் இருந்தாலும், கல்லூரியாய் இருந்தாலும் இவர்கள் தானே நடத்துகிறார்கள்.
அதுவும் சாதாரணக்கொள்ளையா நடக்கிறது? ஒவ்வொரு தனியார் பள்ளியும் ஒரு வணிகவளாகம் போன்றல்லவா இயங்குகிறது. பாடப்புத்தகங்கள், ஸ்டேசனரிஸ், ஷு கடை, துணிக்கடை, டெய்லர் கடை, போக்குவரத்து ஏற்பாடு என அனைத்தும் கிடைக்கும் வணிகவளாகமாக மட்டுமல்ல. காலை உணவும், மதிய உணவும் பள்ளியில் தான் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கான வியாபாரங்கள் அல்லவா களை கட்டியிருக்கிறது இப்போது தமிழகத்தில்.
நன்கொடை தடுப்புச்சட்டம் என்றோர் சட்டம் கூட தமிழ்நாட்டில் 1992ல் போட்டார்கள். சுயநிதிப்பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டமும் கூட 2011 முதல் அமலில் உள்ளதாக கூறுகிறார்கள். தனியார் பள்ளிகளில் அரசு தீர்மானித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை என்றும், நன்கொடை வசூலித்தால் நடவடிக்கை பாயும் என்றும் வருடந்தோறும் அறிவிக்கத்தான் செய்கிறார்கள்.
சொல்லுங்கள். ஏதேனும் ஒரு பள்ளி மீதாவது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? அப்படியெனில் ஒரு பள்ளியில் கூட நன்கொடை வாங்குவதில்லையா? அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு தீர்மானித்த கட்டணத்தையா வசூலிக்கிறார்கள்? இல்லை. இந்த இரண்டு சட்டங்களும் மட்டுமல்ல, தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை எல்லாச்சட்டங்களும் காற்றில்தான் பறக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஏன் நடவடிக்கை இல்லை?
ஆட்சியாளர்களாய் அவர்களே இருக்கையில் யார் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது? ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதெல்லாம் இதிலே கிடையாது. இன்னைக்கு நீ, நாளைக்கு நான் என்ற கணக்கில் இவர்களுக்குள் என்றுமே ஒத்தாசை உண்டு. இவர்கள் தானே மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையும் இப்போது வரை தமிழகத்தில் உள்ளது. அப்படியெனில், அரசுப்பள்ளிகளை வளரவிட்டுவிடுவார்களா என்ன?
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, அரசுப்பள்ளியில படிக்கிற குழந்தைக்கு சோத்துல இருந்து செருப்பு வரைக்கும் எல்லாமே இலவசமாக் கொடுக்குது அரசு. அப்புறமும் அரசுக்கு அக்கறையே இல்லேங்கிறீங்களே என்றும் சிலர் வருத்தப்படக்கூடும்.
உண்மைதான். அநேக இலவசங்கள் அரசுப்பள்ளியில் தரப்படுவது உண்மைதான். ஆனால், அவ்வளவு இலவசம் தருவதும் உண்மையான உணர்வின் அடிப்படையில் என்றால், அரசு என்ன செய்திருக்கவேண்டும்?
தமிழகத்தின் அனைத்துக்குழந்தைகளுக்கும் இலவசமான, தரமான, சமமான கல்வியை வழங்கியிருக்கவேண்டும். அமைச்சர் வீட்டுப்பிள்ளைக்கும், ஆட்டோ தொழிலாளி வீட்டுப்பிள்ளைக்கும் சமமான பள்ளிக்கல்வியை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், இங்கென்ன நடக்கிறது?
ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் ஒரு பள்ளி. காசுள்ளவனுக்கு காசுக்கேற்ற பள்ளி. அதிலும் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் பாருங்கள். சர்வதேசப் பள்ளியில் இருந்து பல விதமான பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன.