சிவபெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை நட்சத்திரமாகும். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் தோன்றும் திருவாதிரை நட்சத்திர நிகழ்வை ‘ஆருத்ரா தரிசனம்’ என்று நாம் கொண்டாடுகிறோம். இந்த தினத்தை அன்றைய இந்தியர்கள் ஏன் சிறப்பான தினமாக கருதினர்?

நமது அன்றாட வாழ்வில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளன. இதை இந்தியர்கள் ‘கர்மா’ என அழைத்தனர். இந்த கர்மாவை செம்மையாக செய்து முடிக்கவே அநேக நபர்களுக்கு ஒரு வாழ்நாள் போதவில்லை. அன்றைய இந்தியர்களின் கருத்துப்படி ஒருவர், வாழ்வில் சீரிய நிலையை அடைய வேண்டுமென்றால் தமது மனது மற்றும் அறிவு ஆகிய இரண்டையும் ஒருங்கே செயல்படுத்தி, ஐம்புலன்களை கட்டுப்படுத்தி, என்றும் அழியா ஞானத்தை பெற முயற்சிக்க வேண்டும். ஆனால் நமது கர்மாவை ஒதுக்கி எப்படி இந்த நிலையை அடைய முடியும்? இதற்காக தான் அன்றைய இந்தியர்கள் வருடத்தில் சில முக்கிய நாட்களில் நிகழும் சிறப்பான அம்சங்களின் துணையுடன் மனிதர்களை மேம்படுத்த கருதி அதற்கென சில வழிமுறைகளை அமைத்தனர். அப்படி பின்பற்றுபவர்கள் நிச்சயமாக பயன் பெறுவார்கள் என்று இந்திய ஞானிகள் நம்பினர்.

அப்படிப்பட்ட முக்கிய நாட்களில் ஒன்று தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ‘ஆருத்ரா தரிசனம்’ என்ற தினமாகும். இந்து ஜோதிடவியல் கருத்துப்படி பிரபஞ்சத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் கொண்ட விண்மீன் குழுக்கள் உள்ளன என்றும் அந்த நட்சத்திரங்களின் இயக்கத்தை பொறுத்து தான் ஒவ்வொருவரின் வாழ்வு அமையும் என நம்பினர். அந்த நட்சத்திரங்களில் மிகப் பெரியதாகவும், மிகுந்த ஒளியுடனும் காட்சியளிக்கும் நட்சத்திரமாக விளங்குவது தான் சிவ பெருமானின் நட்சத்திரமான ‘திருவாதிரை’ நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் நமது விண்மீன் மண்டலத்தின் தென்மேற்கு திசையில் அமையும். ஆருத்ரா தரிசன நாளன்று சந்திரன், நம் பூமி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமையும். இந்த நேர்கோட்டு அமைப்பு ஏற்படும் சமயத்தில் பூமியில் அதிக ஆற்றல் உடைய காந்த கதிரியக்கம் பூமியின் காற்று மண்டலத்தில் தென்மேற்கு திசையில் உருவாகும்.

அதிக ஆற்றல் வாய்ந்த இந்த காந்த கதிரியக்கம் நிலவும் தருணத்தில் மக்கள் பூஜை செய்தல், வழிப்பாட்டு மந்திரங்களை ஓதுதல் போன்ற செய்கைகளில் ஈடுபட்டால் காந்த கதிரியக்கத்தின் ஆற்றல் கிடைக்கப் பெற்று அறிவு, உடல் நிலை ஆகியவை மேம்பட்டு மேன்மேலும் தம்மை சிறப்படைய செய்யும். ஆருத்ரா தரிசனம் நாளில், நேர்கோட்டில் அமையும் வானியல் பண்பை நாம் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்துடன் ஒப்பிட்டால் இரண்டும் ஒரே தோற்றப்பாங்கு பெற்று விளங்கும் கண்கொள்ளா காட்சியை கீழே வழங்கப்பட்டுள்ள படம் மூலம் காணலாம்.

சிவனின் பிரபஞ்ச நடனம்

சிவபெருமானின் ஒரே தோற்றப்பாங்கு கொண்ட இந்த தாண்டவ நடனத்தை ‘சிவனின் பிரபஞ்ச நடனம்’ என்று அறிஞர்கள் கருதுவர். சிவ பெருமானின் நடனம் எப்படி வானியல் அமைப்புடன் ஒன்றியுள்ளது? என முடிவாக கண்டறிய முடியவில்லை. எனினும் சிவபெருமானின் தாண்டவம் அவர் நட்சத்திரம் ஏற்படுத்தும் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துகிறது என்பதை காணும் பொழுது நிச்சயம் பிரமிப்பு ஏற்படும்.

விஞ்ஞான ரீதியாக பார்த்தால் ‘திருவாதிரை’ நட்சத்திரம் தோன்றும் விண்மீன் மண்டலத்தில் வெடியம் (Sodium), வெளிமம் (Magnesium) மற்றும் இரும்பு (Iron) ஆகிய வேதிப் பொருட்கள் அதிகளவில் உருவாகும். வெளிமமும் இரும்பும் நம் குருதிக் கலத்தின் இயக்கத்திற்கு பெருந்துனையாக அமையும். மேலும் சரியான அளவில் அமைந்த வெடியம் நம் நரம்பு மண்டலத்திற்கும், மூளைக்கும் மிக உகந்ததாகும். எனவே திருவாதிரை நட்சத்திரம், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் தருணத்தில் காற்று மண்டலத்தில் உருவாகும் வெடியம், வெளிமம், இரும்பு போன்ற வேதிப் பொருட்கள் மறைமுகமாக நம் உடல் நலத்திற்கு பல பயன்களை வழங்குகிறது. இதே பண்பை நாம் கிரகண நிகழ்வு தோன்றும் போதும் காண்கிறோம். எனவே நம் முன்னோர்களான பண்டைய இந்தியர்கள் இந்த அறிவியல் பயன்களை கருதியே மறைமுகமாக சில விதிகளை அமைத்து மக்கள் நலன் பேணிக்காக்க வழிவகுத்தனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book