பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிவியல் சிந்தனைகள் தோன்றியிருப்பதற்கு ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. அன்றைய இந்தியர்களின் காலத்தை இன்று நாம் ‘வேதக்காலம்’ என்று அழைக்கிறோம். இக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 1500 விலிருந்து கி.மு. 500 வரையிலான காலமாகும். இக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அநேகமாக தங்கள் அறிவியல் கருத்துக்களை இலை மறை காய் மறைவாகவே கூறியுள்ளார்கள். மேலும் தங்கள் சிந்தனைகளை பெரும்பாலும் ‘தேவமொழி’ என்று அந்நாளில் அழைக்கப்பட்ட சமஸ்கிருத மொழியிலேயே வழங்கியிருந்தார்கள். தங்களது அறிவியல் சிந்தனையை ஒரு பாட்டு வடிவிலோ, கதை வடிவிலோ, கடவுளுக்கு பிராத்தனை புரியும் சுலோக வடிவிலோ, விடுகதை புதிர் வடிவிலோ, குறியீட்டு வடிவிலோ மறைமுகமாக அமைத்து வழங்கினர்.

அக்கால இந்தியர்கள் மனிதர்களை நெறிப்படுத்த சில ஆகம முறைகளை ஏற்படுத்தி அதில் கூறியிருக்கும் சட்டத் திட்டங்களை சற்றும் பிறழாமல் கடைப்பிடித்தனர். ஆனால் இந்த சட்ட திட்டங்களுக்கு பின் பொதிந்திருக்கும் அற்புதமான அறிவியல் கருத்துக்களை ஒரு சில அறிஞர்கள் தவிர நேரடியாக மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றும் இந்த நூல்களில் பல புதிய அறிவியல் கருத்துக்களை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுவதே அந்நாளின் அறிவியல் சிந்தனையின் ஆழத்திற்கு சான்றாகும். மேலும் அக்கால அறிஞர்கள் தங்களது கண்டுப்பிடிப்புகளை மக்கள் பயன்படுத்த ஏதுவாகவே அமைத்தனர். தங்களது பெருமையை உரைக்கும் வண்ணம் படைப்புகளை வழங்காமல் மக்கள் நலன் கருதியே அவர்களுக்கு பயன்படுமாறு கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தினர். இதனாலேயே பல அறிவியல் கருத்துக்களை வழங்கியிருக்கும் அறிஞர்களின் அடையாளங்கள் இன்றும் மிகச் சரியாக தெரியவில்லை. எனினும் சில அறிஞர்கள் தங்களின் படைப்புகளை குறிப்புடன் வழங்கியுள்ளனர். இந்த குறிப்புகளின் வெளிப்பாடே அக்கால இந்தியாவின் அறிவியல் சிந்தனைகளின் பாரம்பரியமாக அமைகிறது.

அந்நாளில் இந்தியர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு பிரிவுகளை கொண்ட வேத கருத்துக்களை உருவாக்கினர். மேற்கண்ட நான்கு பிரிவிலும் சம்ஹிதா, பிராம்மணா, அரண்யாகாஸ், உபநிஷதங்கள் என்ற நான்கு பிரிவுகள் அமைத்து மொத்தம் பதிணாறு வகையில் வேத குறிப்புகளை அமைத்திருந்தனர். இந்த குறிப்புகள் சமஸ்கிருத மொழிலேயே பெரும்பாலும் இயற்றப்பட்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட குடியினர் மட்டுமே பயன்படுத்தும் மந்திர சக்தி வாய்ந்த குறிப்புகளாக இந்த வேத குறிப்புகளை பலர் கருதினாரே தவிர அதில் கூறியிருக்கும் வாழ்க்கை முறைகளையும், அறிவியல் சிந்தனைகளையும் காலாப்போக்கில் பேணிக்காக்க தவறிவிட்டனர். மனித வாழ்வின் தன்மையை விளக்குவதற்காக ஏற்படுத்திய நான்கு வேத குறிப்புகளின் மகத்துவத்தை பின்னாளில் தோன்றிய இந்தியர்கள் அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை என்றே கூறலாம்.

அந்நாளில் வழங்கிய வேத குறிப்புகள் அடங்கிய நூல்களை இன்றைய தொழில்நுட்பம் கொண்டு தீவிரமாக ஆராய்ந்ததில் நம் பண்டைய இந்தியர்கள் அன்று ரகசியமாக கூறிய செய்திகள் இன்றளவும் சரியாக விளங்குவதை காணமுடிகிறது. இதன் மூலம் நம் இந்திய அறிவியல் ஒரு அற்புத சிந்தனையுடைய அறிவுப் பெட்டகமாக விளங்குகிறது என நாம் இன்று அறிகிறோம். அப்படிப்பட்ட அறிவு பெட்டகத்தின் ஒரு சில பக்கங்களை புரட்டி பார்த்து அதன் சிறப்புத் தன்மையை இன்றைய இளைய சமுதாயத்திற்கு எடுத்த்துரைப்பதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். பண்டைய இந்திய அறிவியல் சிந்தனையின் ஆழத்தை புரிய வைக்கும் வண்ணம் சில உதாரணங்களை வெவ்வேறு அறிவியல் துறை சார்ந்து ஒவ்வொன்றாக வெவ்வேறு அத்யாயங்களில் விளக்க முயற்சி செய்துள்ளோம். இந்தியாவின் அறிவியல் பெருமையை விளக்க பல உதாரணங்கள் இருப்பினும், இப்புத்தகத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த அறிவியல் பங்களிப்பை வெளிப்படுத்தும் உதாரணங்களையே பெரும்பாலும் வழங்கியிருக்கிறோம். இந்தியாவின் அறிவியல் பெருமைகளை போற்றும் வகையில் ஏராளமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருப்பினும் தமிழில் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. அக்குறையை சிறிதளவேனும் போக்க நினைத்தே இப்புத்தகத்தை வெளியிடுகிறோம்.

இப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் உதாரணங்கள் ஒரு பொழுதும் இந்திய அறிவியலின் முழுத் தன்மையை வெளிப்படுத்தாது. ஆனால் இந்த உதராணங்கள் மூலம் இந்திய அறிவியல் எவ்வாறு தனிச் சிறப்புடன் விளங்கியது என்பதை ஓரளவிற்கு அறிந்து கொள்ளலாம். ‘ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்’ என்பதை போல இந்த உதாரணங்களை அடிப்படையாக வைத்து இந்திய அறிவியல் ஆழத்தை, தன்மையை இக்கால இளைஞர்கள் புரிந்து கொண்டு தாமாகவே புது உதாரணங்கள் மூலம் வெவ்வேறு நூல்களை இந்திய அறிவியல் புகழ் சார்ந்து விரும்பி எழுதுவதையே இப்புத்தகத்தின் நோக்கமாக கருதுகிறோம்.

இப்புத்தகத்தில் வழங்கியிருக்கும் இந்திய மேதைகளின் உருவப்படங்கள் பெரும்பாலும் அதனை வரைந்த ஓவியர்களின் கற்பனையிலேயே அமைந்திருக்கின்றன. பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தியர்களின் உருவப்படத்தை இன்று நம் புகைப்படம் போல காண்பது சாத்தியமாகாது. எனவே அக்கால அறிஞர்களின் வாழ்க்கை குறிப்புகளையும், அவர்களது சாதனைகளையும் மனதில் கருதியே இந்த உருவ படங்களை ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். முடிந்த வரையில் சரிபார்த்தே நாங்கள் இந்திய அறிஞர்களின் படங்களை வழங்கிருக்கிறோம். இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்து அக்குறிப்பை எங்களிடம் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book