"

7

  1. மனிதனின் ஆன்மீக தன்னாட்சி

 

 

தன்   மனதையும்  தன்  வாழ்வையும்  ஆள்வதற்கு  முழு  சுதந்திரமும்  உரிமையும்  மனிதனுக்கு  வழங்கப்பட்டிருக்கிறது. அவனது  ஆளுகைக்குட்பட்ட  அவனது  அரசாங்கம்  இம்முழு  பிரபஞ்சத்தோடும்  தொடர்புடையது. அந்த  அரசாங்கத்தால்  தனித்து  இயங்க  முடியாது. எல்லா  மனிதர்களோடும்  இயற்கையோடும்  தற்போது  நிகழும்  நிகழ்ச்சிகளோடும்  ஆழமான நெருங்கிய  தொடர்புடையது .எனவே தன்  ராஜ்ஜியத்தைத்  திறம்பட  ஆள  விரும்பினால்  வாழ்வின்  ஞானத்தையும்  அவன்  பெற்றிருக்க  வேண்டும். அந்த  ஞானமானது  உயர்ந்த  அறிவை, உள்ளுணர்வை,  நன்மையையும்  தீமையையும்  பகுத்துணரும்  ஆற்றலை , நன்மை  தீமை  ஆகிய இரண்டிற்கும்   அப்பாற்பட்டவைகளை, செயல்களின்  விளைவுகளை  உணரும்  தன்மையை என பல உயர்ந்த பரிசுகளை  வழங்குகின்றது.

 

 

தற்போது  மனிதன்  கலக்கமான   எண்ணங்களின்  பிடியில்  சிக்கியுள்ளான். தன்னுடைய இந்த இறுக்கமான  எண்ணங்களை  அவன்  ஆள்வதே  அவன்  வாழ்வினை  அவன்  வெற்றிகரமாக ஆள்வதற்கு  ஒப்பாகும். இந்த  உலகத்தில்   வெளிப்பொருட்களை  ஆளமுடியும், தங்களை  தாங்கள்  ஆள முடியாது என்று  ஞானமற்றவர்கள்  நினைக்கிறார்கள். எனவே, அவர்கள்  தங்களுக்கும்  பிறருக்கும்  மகிழ்ச்சியை வெளியே  புற பொருட்களில்  தேடுகிறார்கள். புறப்பொருட்களை மாற்றியமைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். புறப்பொருட்களால்  நிலையான  மகிழ்ச்சியையோ  ஞானத்தையோ  வழங்க முடியாது.  பாவ மூட்டைகளைச்  சுமந்த  உடம்பிற்கு  ஒரு  களிம்பினைப்  பூசி  நல்வாழ்வை  வழங்க  முடியாது. ஞானம்  உடையவர்கள்       தன்  மனது தன் கட்டளைக்கு கீழ்  படிவதே உண்மையான வெற்றி ,அதன் பின்பே    வெளிப்  பொருட்களின்  மீது  தங்கள்  ஆளுகை உறுதியாகும் என்று உணர்ந்தவர்கள்.ஆன்மீக  அருளில்  அமைதியான  வலிமையில்  தங்கள்  உள்ளிருந்து  எழும்  மகிழ்ச்சியை  உணருவார்கள்; அவர்கள்  பாவங்களை  கைவிடுவார்கள். உள்ளத்தைத்  தூய்மையாக்கி  உடலினை  உறுதியாக்கி  உடம்பின்  தேவையற்ற   ஆசைகளை  நீக்குவார்கள்.

 

மனிதனால்  தன்  மனதை  ஆள    முடியும். அவனே அதன் தலைவன்.  அவன்  அங்கே  ஆட்சி  செலுத்தும்  வரை , அதன்  தலைவனாகும்  வரை , அவனுடைய  வாழ்வு  ஒரு  நிறைவின்றி  அரைகுறையாகவே  காணப்படும். மனிதனது  இயல்புகள்  எல்லாம்  அவனது  மனதின்  ஆற்றல்களே. அந்த  மன  ஆற்றல்களைச்   செம்மைப்படுத்திக்  கட்டளையிடும்  அரியாசனமே  அவனது  உள்ளம். காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் உடம்பு பொறுப்பாக முடியாது.. அந்த  உடம்பை ஆள்வது என்பது பசி , மற்ற தீவிர உணர்வுகள் என்று  மன  உணர்வுகளை  ஒழுங்குபடுத்துவதாகும்.தங்கள்  மனதின் தாழ்ந்த எண்ணங்களுக்கு அடிபணியாமல் நல்  எண்ணங்களுக்கு கீழ்படிந்து , சீரைமைத்து அவற்றை  நல்திசையில்  செலுத்துவதே    மனிதர்கள்  அனைவரும்  விரைவாகவோ  அல்லது காலம் கடந்த பின்பும் தப்ப முடியாமல்  ஏற்றுக் கொண்டு    செயல்படுத்தியே  தீரவேண்டிய  இன்றியமையாத மாபெரும் பணியாகும். பன்னெடுங்காலமாக  மனிதன்  வெளிப்பொருட்களின்  அடிமையாகத்  தன்னை  பாவித்துக் கொள்கிறான் . ஒருநாள்  அவன்  வாழ்வில்  வரும்.  அவன் அகக்கண்  திறக்கின்றது. அப்பொழுது  அவன்  இத்தனை  காலமும்  தன்னுடைய  கட்டுப்படாத,  களங்கமான  தன்  உணர்வுகளுக்கும் ஆசைகளுக்குமே அடிமையாக  இருந்ததை  உணர்ந்து  கொள்கிறான்.அந்த  நாளில்  அவனது  ஆன்மீக சக்தியால் உள்ளத்தின் அரியாசனத்தில்  அமர்கிறான். ஐம்புலன்களின்  ஆசைகளுக்கும்  மனதின்  மாயைக்கும்  அடிமையாகாமல்  அவைகளை  அடக்கி  ஆள்கிறான். அவன்   ஆட்சி  செலுத்த  வேண்டிய  அவனுடைய  அரசாங்கத்தில்  இத்தனை  காலமும்  ஒரு  பிச்சைக்காரனைப்  போல சுற்றித்  திரிந்தான். இப்போது  உணர்ந்து  கொள்கிறான். அதன்  தலைவன்  அவன் தான்   என்று , அந்த ராஜ்ஜியத்தைச்  சீரமைத்து, ஒழுங்குபடுத்தி, ஒழிக்க  வேண்டியவைகளை  ஒழித்து, கட்டளை  பிறப்பித்து  அமைதியை  நிலை  நாட்டுகிறான்.

 

ஒரு  தலைவனுக்கு  உரிய  கடமைகளை, பொறுப்புகளை  அவன்  தன்  ஆன்மீக தன்னாட்சியில்  நிறைவேற்றும்போது , பல  யுகங்களிலும்  தங்கள்  மனதை   ஆண்ட  புனிதர்களின் ஆன்ம வழிகாட்டுதலை  அவன்  பெறுகிறான்.  அறியாமை,  துயரம்,  மன  உறுத்தல்  என  அனைத்தையும்  கடந்து  மெய்யறிவை  அடைகிறான்.