நாட்டுக்குப் பத்து, நமக்குப் பத்து என்ற கொள்கையோடு, 2010-க்குள் அனைவருக்கும் சட்டக்கல்வி, என்ற சட்ட விழிப்பறிவுணர்வு திட்டத்திற்காக 2000 ஆம் ஆண்டில், எனது சட்ட ஆராய்ச்சியைத் தொடங்கி, வெற்றிகரமாக முடித்துள்ள நான், திருவாரூர் மாவட்டம், பேரளம் என்ற ஊரில் பிறந்து, அரசின் தமிழ் வழிக்கல்வியில் மேல்நிலைக் கல்வி வரை மட்டுமே கற்றவன்.
படிப்புக்கு பயந்து, அதற்கு முழுக்கு போட்டு, தனியார் நிறுவனங்களில் உலகத்தர வெல்டராகவும், இயந்திரங்களை இயக்கும் சாதாரண தொழிலாளியாக வேலைப் பார்த்த போது, அங்கு நடந்த கொத்தடிமைச் செயல்கள், தொழிலாளர்களுக்கு சாதி, மத, இன, பேத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மற்றும் நியாயத்துக்கு புறம்பான செயல்பாடுகள் எல்லாம் நிச்சயம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல மற்றும் இந்தியாவைப் பொருத்தவரை யாருக்குமே சட்டம் சரியாகத் தெரியாது என்கிற தெளிவான உள்ளுணர்வோடும் சட்ட ஆராய்ச்சியை தொடங்கினேன்.
இச்சட்ட ஆராய்ச்சியின் மூன்றாவது வருடமே நீதிபதிகளின் சட்ட அறிவின்மையால், என் மீது சட்டத்துக்கு புறம்பாக பிரப்பிக்கப்பட்ட வாரண்ட்டின்படி, என்னைக் கைது செய்ய வேண்டுமென சுமார் ஒன்றரை வருடம் சட்ட வழியில் போராடி, வெற்றி பெற்று, சென்னை மத்திய சிறைக்குச் சென்று கைதிகளுக்கு சட்ட விழிப்பறிவுணர்வூட்டி, பொய் வழக்குகளில் சிக்குண்டு, வெகுண்டெழுந்த கைதிகளை, அவரவர்களது தனித்திறனால் வாதாடி விடுதலையாக வித்திட்டேன்.
பனிரெண்டாம் வகுப்போடு நிறுத்திக் கொண்ட என்னால், சட்டப் பட்டப் படிப்பை முடித்து, பல்லாண்டுகளாக வக்கீல் தொழில் செய்து, உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நீதிபதிகளாக இருப்பவர்கள் உட்பட, பலருக்கும் புரியாத புதிராக இருக்கும் சட்டம், எனக்கு மட்டும் எப்படி, சர்வ சாதாரணமாக புரிந்தது என்பது, சாதாரண விடயம் அல்லவே!
இதனால்தானே, தமிழ்நாடு முழுவதும் சட்டப்பயிற்சி வகுப்புகளை நடத்தி பாமரர்கள் முதல் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் என பலரையும் தனக்குத்தானே வாதாட வழிகாட்ட முடிந்தது.
வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளின் (வி)(அ)பச்சார அவலங்கள் குறித்து தாத்தா மகாத்மா காந்தியின் கூற்றுகள் எனது சட்ட ஆராய்ச்சியின் எட்டாவது வருடத்தில், 2008 ஆம் ஆண்டிலேயே, தெரிய வந்தது. ஆனாலும், நீதியைப் பெறுவதற்கான மாற்றுத் தீர்வு என்ன என்பதை, தாத்தா மகாத்மா சொல்லாதது, எனக்காக வைக்கப்பட்ட கடமையே என்பதையும், அதனாலேயே பத்து வருட சட்ட ஆராய்ச்சியை நான் எடுக்க நேர்ந்துள்ளது என்பதையும் உணர்ந்தேன்.
- No law, no life. Know law, know life!
- நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவது போல்தான்.
- நீதிமன்றத்தில் வாதாடி, பிணையில் வருவது மட்டுமல்ல, சிறைக்குள் செல்வதும் சாதனைதான்!
- நியாயம்தான் சட்டம்! அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்!!
- வாதாடுவது உங்களின் கடமை. நீங்கள் வாதாடினால் மட்டுமே கிடைக்கும் உங்களின் உரிமை.
- வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!
என்கிற எதார்த்த தத்துவங்களை முன்மொழிந்துள்ளேன்.
எனது கொள்கைத் திட்டத்தின்படி, பத்து வருடச் சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! என்ற பொதுத்தலைப்பின் கீழ்,குற்ற விசாரணைகள், பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? சட்ட அறிவுக் களஞ்சியம், சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் மற்றும் சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி? என்ற ஐந்து சட்ட விழிப்பறிவுணர்வு நூல்கள் வாயிலாக எனக்கு தெரிந்த சட்ட விபரங்களை உங்களுக்கு தந்துள்ளேன்.
சட்டம் தனிப்பட்ட எவரின் பாட்டன், முப்பாட்டன் சொத்தன்று. மாறாக சமுதாயத்தின் பொதுச்சொத்தே என்பதை பறைச்சாற்றும் விதமாக, இவ்வைந்து நூல்களையும் வெளியிடும் போதே, யார் வேண்டுமானாலும், என்ன மொழியில் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற வகையில் பதிப்புரிமையை பொதுவுடைமை என அறிவித்துள்ளேன்.
இப்பொதுவுடைமை நூல்கள் ஐந்தும் மத்திய சட்ட அமைச்சகம், தனக்குத்தானே வாதாடி நியாயத்தைப் பெற்ற மற்றும் உங்களைப் போன்ற சட்ட ஆர்வலர்களின் நிதியுதவியோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள சுமார் நான்காயிரம் பொது நூலகங்களுக்கும், ஆயிரத்து ஐநூறு காவல் நிலையங்களுக்கும், நூற்று இருபது சிறைச்சாலைகளுக்கும் மற்றும் எழுநூறு நீதிமன்றங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.
உரிமையின் பிறப்பிடம் கடமையே! கடமையைச் செய்யாமல், யாரும் உரிமையைப் பெற முடியாது என்பதை உணர்த்தும் வகையில், ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ என்ற இருதிங்கள் இதழையும் ஆசிரியராக இருந்து எழுதியுள்ளேன்.
இதனை 2011 ஆம் ஆண்டிலேயே நூலாக தொகுத்து வெளியிட, கேர் சொசைட்டி திட்டமிட்ட பணி, இந்தி, கன்னட மொழிகளில் வெளியிட்ட முதல் நீதியைத்தேடி… நூலில் முடங்கிய முதலால், நின்று போய் உள்ளது. எப்படியாவது விரைவில், வெளி வரும் என நம்புகிறேன்.
எங்களது இச்சட்ட விழிப்பறிவுணர்வு கடமைப்பணி அகிலம் முழுவதும்உள்ள மக்களைச் சென்றடைய, உங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்குவீர்கள், நல்க வேண்டும் என கடமையாக கோருகிறேன்.