சட்டத்தில் நீதிபதிகள் என்று குறிப்பிடப்படுபவர்கள் எப்பொழுதுமே நிதிபதிகள்தான்!

ஆமாம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 19 இல், ‘‘நீதிபதி பதிவியில் இருப்போர், அதாவது பதவியில் இருப்பது மட்டுமல்லாமல், உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளில் தெளிவான தீர்ப்பை உரைக்கும் அதிகாரம் பெற்றவர்களே, அதாவது தெளிவான தீர்ப்பை உரைக்கும் தகுதியுள்ளவர்களே நீதிபதிகள் ஆவர்’’.

எனது நியாயந்தான் சட்டம் என்கிற சட்ட ஆராய்ச்சியில், நீதிபதிகள் எவரும் சட்டம் மற்றும் நியாயத்திற்கு உட்பட்டு தெளிவானதொரு தீர்ப்பை வழங்குவதில்லை. ஆகையால்தான், சட்டம் (ஒ, ந)ன்றாகவே இருந்தாலும், பெ(ரு, று)ம் நி(நீதிப)திக்கு தக்கவாறு, நியாயத் தீர்ப்புகள் முன்னுக்குப்பின் முரணாக, அநியாயத் தீர்ப்புகளாக மாற்றிமாற்றி எழுதப்படுகின்றன.

இதன் உச்சகட்ட கொடுமையாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளே தாங்களெழுதிய தீர்ப்புகளை மாற்றியெழுதுகிறார்கள். ஆகையால்தான், ஒட்டு மொத்த நீதிபதிகளையும், நிதிபதிகள் எனத் தெளிவாச் சொல்லுகிறேன். மேலும், இவர்கள் அடிப்படையில் மக்களின் வரிப்பணத்தில் பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் நிதிபதிகளாகவே இருக்கிறார்கள்.

இதனால்தான், ‘‘நிதிபதிகள் எழுதும் தீர்ப்புகளில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று தெரிந்தால், கழுதைக்கூட அக்காகிதத்தை திண்ணாது’’ என்றும் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறேன்.

மேலும், காசுக்காக எத்தொழிலைச் செய்வோருக்கும் கள்ளத்தனஞ் செய்யுங்குணம் இருக்கத்தான் செய்யும். இதிலும் அதிக கூலியும், அதிக அதிகாரமும் உள்ளதாக நினைக்கும் நிதிபதிகளுக்கு அதிகமாக இருக்கத்தானே செய்யும்.

இதனை மகாத்மா காந்தியும், ‘‘எது நியாயம் என்பது, தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியுமென்றும், இதில் மூன்றாம் ஆள் (யாரு, நிதிபதிகள்) கூறும் தீர்ப்பு எப்பொழுதுமே நியாயமாக இருந்துவிடப் போவதில்லையென்றும் ஆனால், நம் அறியாமையாலும், எதையும் நம்புந்தன்மையாலும், முன் பின் தெரியாத ஒருவர் (யாரு, நம் வரிப்பண கூலிக்கு மாரடிக்கும் நிதிபதிகள்) பணத்தை வாங்கிக்கொண்டு நமக்கு நீதியை வழங்குகிறார் என்று நாம் எண்ணுகிறோம்’’ என்று, தனதுஇந்தியத்தன்னாட்சி நூலில் குறிப்பிடுகிறார்.

பகுத்தறிவு பெரியார் கூட, இதற்கான தீர்வு எனச் சொல்லும் பொழுது, ‘‘வக்கீல்களும், நீதிபதிகளும் ஒரே கூட்டத்தினராய் இருப்பது. அதாவது, வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும். வேறுபல நீதிபதிகளின் தீர்ப்புரைகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைப்பது இரண்டாவது குற்றம். நியாய உலகம் சீர்பட வேண்டுமானால், அதில் ஒழுக்கத்திற்கும், நியாயத்திற்கும் சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால், முக்கியமாக இவ்விரண்டு முறைகளையும் ஒழித்து விட வேண்டும்’’ என்று சட்டங்குறித்த போதிய விழிப்பறிவுணர் வின்மையால் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கூற்றான வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை என்பது ஓரளவு உண்மையே என்றாலுங்கூட, வக்கீலென்கிற பொய்தொழிலே ஒழிக்கப்பட வேண்டும். இரண்டாவது கருத்து சட்டப்படியே முற்றிலுந்தவறு.

உண்மையில், சட்டத்தின் உண்மை நிலையென்ன என்பதுபற்றி இப்பொழுது சற்றே விரிவாகச் சொல்கிறேன்.

இந்திய சாசன கோட்பாடு 141-இன்படி, உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்ற ஆணித்தரமான, அசைக்க முடியாத கருத்து அனைத்துப் பொய்யர்களிடமும், நிதிபதிகளிடமும், இதனால் உங்களிடமும் இருக்கிறது. இது முற்றிலும் தவறான கருத்து.

அதன் உண்மையான கருத்து என்ன என்றால், ‘‘ஒரு வழக்கானது கீழ்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றை கடந்து உச்சநீதிமன்ற விசாரணைக்கு வரும் போது, அவ்வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு அதே வழக்கை விசாரணை செய்து தீர்வு கண்ட மற்ற கீழ்நிலை நீதிமன்றங்களை மட்டுமே கட்டுப்படுத்தும் என்பதாகும்’’.

உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பானது இந்தியாவில் உள்ள தொடர்புடைய அந்த குறிப்பிட்ட வழக்கை விசாரணை செய்யாத மற்ற நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ‘‘இந்திய சாசன கோட்பாடு 142-இன்படி, ஒன்று, இந்திய நாடாளுமன்றம் அந்த தீர்ப்பை முன்னிருத்தி, சட்டமாக அறிவிக்கும் விதமாக சட்டத்தை இயற்ற வேண்டும். இல்லையென்றால், இந்திய நாடாளுமன்றம் சட்டமாக இயற்றும் வரை சட்டமாக கருத வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிட்டால் மட்டுமே செல்லத்தக்கது ஆகும்’’.

ஆனால், இதை உணராத அன்றன்று, தங்களின் நிதி வசதிக்காக உணர மறுக்கும் கீழ் நீதிமன்ற நிதிபதிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்ற நிதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் கீழ்நிலை நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும் என இந்திய சாசனத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லையே! ஏன்?

ஒரு பேச்சுக்கு மேற்கோள் காட்டலாம் என எடுத்துக்கொண்டால், உண்மையில் இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அதற்கு கீழான நீதிமன்றங்களை கட்டுப்படுத்துமா அல்லது இந்திய சாசனத்தின் கோட்பாடு 141-இல் சொல்லப்பட்டுள்ளதாக தவறாக கருதப்படும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உயர்நீதிமன்றத்துக்கு கீழான நீதிமன்றங்களை கட்டுபடுத்துமா? என்பது உட்பட தீர்க்க முடியாத பல்வேறு குழப்ப விளைவுகள்தான் ஏற்படும்.

இதேபோல, உயர்நீதிமன்ற நிதிபதிகள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி தீர்ப்புரைப்பதையே நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.

இதை விடக்கொடுமை என்னவென்றால், இந்நாள் உச்சநீதிமன்ற நிதிபதிகள் கூட இந்த நடை முறைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முன்னால் உச்சநீதிமன்ற நிதிபதிகள் உரைத்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டித் தான் தீர்ப்புரை செய்கிறார்கள்.

இப்படி நாட்டில் உள்ள ஒவ்வொரு நிதிபதியும் மற்ற நிதிபதிகள் சொன்ன தீர்ப்புகளை முன்னிருத்தி தான் தீர்ப்புரை செய்கிறார்கள் என்பதன் மூலம் எந்தவொரு நிதிபதிக்கும் சட்டத்தில் போதிய தெளிவில்லை என்பது தெள்ளத்தெளிவு.

இதனை அவர்கள் மறுத்தால், யாருக்கு சாதகமாக தீர்ப்பை எழுதவேண்டுமென நினைக்கிறார்களோ அதற்காகவும், இத்தவறான நிலைப்பாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளவுமே, மற்ற நிதிபதிகளின் தீர்ப்புகளை தங்களின் தீர்ப்பில் மேற்கோள் காட்டுகிறார்கள் என்று அர்த்தம்.

மேலும், அவன் அப்படிச் செய்தான். அதனால்தான், நானும் அப்படிச் செய்தேன் என குழந்தைகள் சாக்குபோக்கு சொல்வார்கள் தெரியுமா… அதுபோலத்தான், இவர்களும் சுய அறிவில்லாமல் இப்படிச் சொல்கிறார்கள் என்று அர்த்தம். இதில் அவர்கள் எதை ஒப்புக்கொள்ளப் போகிறார்கள்?

எதை ஒப்புக்கொண்டாலும் அவர்கள் நிதிபதிகள்தான்!

சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு எழுதப்பட வேண்டுமா? அல்லது தீர்ப்பின் அடிப்படையில் சட்டம் எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்து, வழக்குகள் சட்டத்தின் அடிப்படையில்தான் பதிவு செய்யப்படுகின்றன என்பதால், சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு எழுத முடியுமே தவிர, தீர்ப்பின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை என்பதால், வழக்குகளுக்கு தீர்ப்பின் அடிப்படையில் தீர்வு காண்பது முற்றிலும் தவறே.

நமது பரவலாக்கப்பட்ட அதிகார கட்டமைப்பு முறையில், நியாயம்தான் சட்டம் என்பதை நிலைநிறுத்தும் அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ள, இந்நாள் உச்சநீதிமன்ற நிதிபதிகள், முன்னால் உச்சநீதிமன்ற நிதிபதிகளின் தீர்ப்புகளை மேற்கோள்காட்டியோ அல்லது மேற்கோள்காட்டாமலோ அறிவித்த தீர்ப்புகள் தவறானால் கூட, அதுவும் திருத்தத்திற்கு உரியதே என்ற ஒரே காரணத்தால்தான், இந்திய சாசன கோட்பாடு 137-இன்படி, உச்ச நீதிமன்றத்துக்கு தான் பிறப்பித்த உத்தரவை தானே மறு ஆய்வு செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இந்த மறு ஆய்வு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்ற நிதிபதிகள்கூட பல்வேறு வழக்குகளில், தாங்கள் தவறாக உரைத்த தீர்ப்புகளைக்கூட, மாற்றியுள்ளனர்.

தீர்ப்பை உரைப்பதில், உச்சபட்ச அறி(விலி, வாளி)களாக கருதப்படும் உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கே, தான் எழுதிய தீர்ப்பை மாற்றியெழுத உரிமையுள்ளபோது, அதற்கு கீழான நிதிபதிகளுக்கு மட்டும் உரிமையில்லாமல் இருப்பது எப்படி நியாயமாகும்?

இதிலும், உரிமையியல் விசாரணைகளில், அந்தந்த நிதிபதிகளுக்கே தீர்ப்புகளை திருத்தும் உரிமையுள்ளபோது, குற்றவியல் நிதிபதிகளுக்கு மட்டும் ஏன் வழங்க முடியாது. உரிமையியலுக்கு ஒரு நியாயம்? குற்றவியலுக்கு ஒரு நியாயமா?

இறதியாக, எந்தவொரு வழக்கிலும், எந்தவொரு நிதிபதி வழங்கிய தீர்ப்பையும் மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்க இயலாது என்று நான் மட்டுஞ்சொல்லவில்லை. உச்சநீதிமன்ற நிதிபதிகளே ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து நாளிதழில் வந்த செய்திதான் இது!

SCJஇதனை நான் எழுதிய ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ மார்ச் – ஏப்ரல் – 2008 இதழில் எழுதினேன்.

நிதிபதிகளுக்கு என்ன பிரச்சினையோ… அவர்களுக்கு, பொய்யர்களின் மூலமாக வரவேண்டிய வழக்காளியின் நிதி வராமல் போயிருக்கலாம். அந்தக் கடுப்பில், இப்படியொரு சரியான கருத்தை தீர்ப்பில் சொல்லியிருக்கலாம்! யார் கண்டது?

எனவே, உங்கள் வழக்குகளில் தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டால், மேற்சொன்ன இவைகளையே காரணங்களாக கூறியும், சட்டப் பிரச்சினையை எழுப்பியும் மேல்முறையீடு செய்யலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book