- No law, no life. Know law, know life!
- நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான்.
- நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்!
- வாதாடுவது உங்களின் கடமை; அப்போதே, கிடைக்கும் உங்களின் உரிமை.
- நியாயம்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்!
- வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!
தத்துவ விளக்கங்கள்.
1. No law, no life. Know law, know life!
ஆங்கிலேயர்களே நமக்கு சட்டத்தை தந்தார்கள். No law, no life. Know law, know life! என சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தை எளிதாகவும், எதுகை, மொகனையோடு புரியும் படியும், ஆங்கிலத்திலேயே விளக்க முடிகிறது. இதனாலேயே இது, நமது முதல் தத்துவம் என்கிற மதிப்பை பெறுகிறது.
2. நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான்.
மற்ற உயிரினங்களில் இருந்து, மனிதன் மாறுபட்டவன் என்பதற்கு அடிப்படைக் காரணமே, எவ்வுயிரினத்திற்கும் இல்லாத அவனது பேச்சு, எழுத்து, கருத்து, சிந்தனை ஆகிய திறன்களே! இதனால், இதனை சட்டப்படி அடிப்படை உரிமை என்றுதாம் சொல்ல வேண்டும். அதாவது, நமக்கு தேவையானதை யாருடைய அனுமதியும் இல்லாமல் நாமே எடுத்துக் கொள்வதற்கு அல்லது அனுபவிப்பதற்கு பெயரே அடிப்படை உரிமை.
இந்த அடிப்படை உரிமையையும் கூட, நமக்குக்காக நாமே எடுத்துக் கொள்ளும் உரிமை மற்றும் நமக்காக அடுத்தவரிடம் கேட்டுப் பெறும் உரிமை என்று இரண்டு வகையாக பிரித்து, இவைகள் குறித்ததொரு சட்ட விளக்கத்தை தரவேண்டி உள்ளது.
அதாவது, உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சட்டப்பிரச்சினைக்கு தீர்வு என்னவென்று தெளிவதற்காக சட்டம் குறித்த தகவல் ஏதுவும் கிடைக்காதா என்று உங்களுக்கு சொந்தமான கணினியில், இணையத்தில் தேடுகிறீர்கள்.
அப்போது இந்நீதியைத்தேடி… தளம் உங்களின் பார்வைக்கு கிடைக்கிறது. எனவே, இப்போது நீங்கள் இதை படித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இப்படி படிப்பதற்கு முன்பாக நீங்கள், என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ அனுமதி கேட்கவில்லைதானே? இதுவே நமக்காக நாமே எடுத்துக் கொள்ளும் அடிப்படை உரிமையாகும்.
இதையே நூலகத்திற்குச் சென்று தேடி கண்டு பிடிக்கிறீர்கள். மகிழ்ச்சியில், அங்கேயே அமர்ந்து படிக்கிறீர்கள். ஆனாலும், முடிக்க முடியவில்லை. சரி, வீட்டுக்கு கொண்டு வந்து படிக்கலாம் என நினைக்கிறீர்கள். இதற்காக நீங்கள் சட்டப்படி உறுப்பினராய் இருக்க வேண்டும் என்பதோடு, நூலகரின் அனுமதியைப் பெற்றே, நூலை வீட்டிற்கு கொண்டு வந்து படிக்க முடியும். இதுவே, நமக்காக அடுத்தவரிடம் கேட்டுப் பெறும் உரிமையாகும்.
இங்கு நாம், விளங்கிக் கொள்ள வேண்டியது இவ்விரண்டுமே சட்டப்படியான உரிமைகள்தாம். ஆனாலும், எதை கேட்காமலே எடுத்துக் கொள்வது, எதை கேட்டுப் பெறுவது, கேட்டுப் பெற வேண்டியதை கேட்டும் கொடுக்கவில்லை என்றால், அதனை சட்டப்படி எப்படி எடுத்துக் கொள்வது என்பதேயாகும்.
சரி, இதில் உள்ள தத்துவ விடயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆதலால், வக்கீல் வைத்து வாதாடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, நாமே வாதாடுவது என்று முடிவெடுத்து விட்டீர்கள். இந்நிலையில், நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான் என்கிற அசைக்க முடியாத கருத்தில் மனுதாரராக அல்லது எதிர்மனுதாரராக அல்லது சாட்சியாக நமக்காக நாமே வாதாடும் போது, நீதிமன்றத்தில் ஏதாவது தவறாக பேசி விட்டால், நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லி தண்டித்து விடுவார்களோ என்கிற ஒரு சிறிய சந்தேகம் வருகிறது. இது குறித்து நீங்கள்தாம் சிந்திக்க வேண்டும்.
ஏனெனில், நாமே நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற ஒரு விடயத்தையும், இப்படி வாதாடுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை என்கிற விடயத்தையும் ஆராய்ந்து சொல்வதே பெரிய காரியம். இப்படி சொல்வது கூட, உங்களில் ஒரு சிலருக்கு புரியாமல் போகலாம் என்பதற்காகவே, இதையும் எளிதாக்கி நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான் என்று சொல்லியுள்ளேன். இதற்கு மேலும் சிந்திக்காமல் இருந்தால், நீங்கள் உங்களை மனிதன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்றவர்கள் என்கிற சூழ்நிலையில் உங்களுக்கு எதற்கு உரிமைகள் என்பதுதாம் எனது கேள்வி?
ஆம்! கடந்த காலங்களில் இப்படியும் என்னை கேள்வி கேட்டு பலரும் தங்களின் அறிவின்மையை பறைச்சாற்றி இருக்கிறார்கள். நீங்கள் இப்படி இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இப்படிப்பட்வராக இருந்து, இது குறித்த விளக்கத்தை நீங்கள் என்னிடமே கேட்டுப் பெறுவதுதான் சரியானது எனவும் நினைக்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்.
இங்கு நான் உங்களுக்காக, உங்களது வரிப்பணத்தை கூலியாக பெற்று பணியாற்றக் கூடிய அரசின் அடிமை ஊழியனாக இருந்தால், நான் உங்களது வரிப்பணத்தில் வாங்கும் கூலிக்காக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது எனக்கான சட்டக் கடமை. ஆனால், நானோ இங்கு உங்களைப் போன்று ஒரு சாதாரண குடிமகனே!
ஆனாலும், உங்களை (நாட்டை) முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும், கூட்டாகவும் இணைந்து கடமையாற்ற வேண்டும் என்கிற இந்திய அரசமைப்பு கோட்பாடு 51அ&இன்படி, நானும், கேர் சொசைட்டி உறுப்பினர்களும் இணைந்து, எங்களுக்கு தெரிந்த இந்த சட்ட ரகசியத்தை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, நாங்களே சொந்த செலவு செய்து இத்தளத்தை நடத்துகிறோம் என்பதால், உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எதுவுமே சட்டப்படி இல்லை என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், எனக்கு தெரிந்தவரை சொல்லியுள்ளேன். இதிலிருந்து நீங்கள் எப்படியெல்லாம் யோசிக்க முடியும் என நீங்கள்தாம் யோசிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில்தாம் இருக்கிறோம். இப்படி சொல்வதற்கு அடிப்படை காரணம், உங்களது சிந்தனையாற்றல் வளர வேண்டும்; அப்போதுதான் நீங்கள் உங்களது காரியத்தில் வெற்றி பெற முடியும்.
உண்மையாக, நாம் குழந்தைப் பருவத்தில் பற்பல தவறுகளை செய்திருக்கிறோம். அதற்காக நமது அம்மா, அப்பா நம்மை எடுத்த எடுப்பிலேயே அடித்து தண்டித்து விடவில்லை. இப்படி பேசக் கூடாது; அப்படி செய்யக் கூடாது என சொல்லிக் கொடுத்தார்கள். நாமும் நமது குழந்தைகளுக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறோம்.
இதேதான் சட்டத்தின் நிலையும், சட்டப்படி செயல்பட வேண்டிய நீதிமன்றத்தின் நிலையும் என்பதை எளிதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தாம், நீதிமன்றத்தில் வாதாடுவது அடிப்படை உரிமை என்று கூறி, இதற்கு விளக்கம் சொல்லுவதை விட, அம்மா அப்பாவிடம் பேசுவதுபோல்தான் சொல்லியுள்ளேன்.
3. நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதாம்!
சமுதாயத்தில் குற்றம் புரிவோர் அனைவருமே, சிறைக்கு செல்லாமல் எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்து, முன்பிணை (முன்ஜாமீன்) கோருகிறார்கள். எனது ஆராய்ச்சியில் முன்பிணை கோருபவர்கள் எல்லாம், தான் செய்ய குற்றத்தை முறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
இது குறித்த பற்பல ஆராய்ச்சி விபரங்களை ஐந்து நூல்களில், இரண்டாவது நூலான பிணை எடுப்பது எப்படி நூலில் சொல்லியுள்ளேன். தேவைப்பட்டால் படித்துக் கொள்ளுங்கள்.
உண்மையில், குற்றம் புரியாதவர்கள் முன்பிணை கேட்கமாட்டார்கள். இதனை மிகவும் அழகாக மௌனம் சம்மதம் என்கிற தமிழ் திரைப்படத்தில் காண்பித்து இருக்கிறார்கள் என்பதைதாம் மேலே கண்ட கானொலி காட்சியில் பார்த்தீர்கள்.
நியாயத்துக்காக போராடுவோர் கூட, சிறையைப் பார்த்து பயப்படுகிறார்கள். இதனாலேயே அவர்களது நியாயம் தடைப்படுகிறது. எனவே, நியாயம் வேண்டுமா… சிறை செல்லவும் தயாராய் இருங்கள்!
நீங்கள் நினைத்தால், உங்களின் வசதிக்கு தக்கபடி உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். ஆனால், நீங்கள் நினைத்தாலும் சென்று வர முடியாத ஒரே இடம் சிறைச்சாலைதாம். உண்மையில், இது சிறைச்சாலையே அல்ல; தவச்சாலை. ஆதலால்தாம், அங்கு போவதற்கு பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. குற்றம் புரியாது, தனது நியாயத்திற்காக சிறை சென்று வருவோர், நிச்சயம் ஞானத்தைப் பெறலாம். ஞானம் என்றால், இறையுணர்வில் முக்தி என்று மட்டுமே பொருளல்ல.
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி உட்பட பலரும், தங்களின் நியாயமான சுதந்திரத்திற்காக, அவ்வப்போதும், ஆண்டுக்கணக்கிலும் சிறைக்கு சென்று வந்ததால்தாம் மன ரீதியாக வலிமைப் பெற்றார்கள். ஆதலால், சிறைக்கு செல்வதற்கும், ‘‘ஓர் அதிர்ஷ்டம்’’ வேண்டும். ஆதலால், வாய்ப்பு கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.
ஏனெனில், எனக்கு கிடைத்த அவ்(வ,வுய)ரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல், உடனே பிணையில் வந்தப்பின், அதற்காக பதினைத்து மாதங்கள் போராடிய, அவலச் சூழ்நிலைகளின் கொடுமைகளை, அனுபவித்தவன் என்பதால், சொல்கிறேன். அல்ல அல்ல; நல்லெண்ணத்தோடு எச்சரிக்கிறேன்!
4. வாதாடுவது உங்களின் கடமை. அப்போதே கிடைக்கும், உங்களின் உரிமை!
நான் ஏன் இச்சட்ட விழிப்பறிவுணர் செயலைச் செய்கிறேன், நீங்கள் ஏன் இச்சட்ட விழிப்பறிவுணர்வை பெற ஆவலோடு முயற்சிக்கிறீர்கள் என்றால், இரண்டுக்கும் ஒரே காரணம், நமது வரிப்பணத்தில் அல்லது சொந்தப்பணத்தில் கூலி பெறுபவர்கள் அதற்கான கடமையைச் செய்யாமல் நம்மை ஏமாற்றி நமது உரிமைகளைச் சுரண்டி, உயிர்களைப் பறிப்பதால்தாம் என்பதைத் தவிர வேறு காரணம் எதையுமே சொல்ல முடியாது. இதற்குள்ளேயே அத்துனை, அத்துனை அர்த்தங்களும் அடங்கி விட்டன.
சரி, சட்டத்தை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்றால், ‘‘சட்டப்படி நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றப் போகிறோம்’’ என்று பளீரென்று பதில் சொல்லப் பலருக்கும் தெரிவதில்லை.
நாம் உழைக்காமல் நமக்கு கூலி கிடையாது என்பது போல, நமது உரிமைக்காக, நாமே வாதாடுவதை கடமையாக கொள்ளாமல், நமக்கான உரிமையைப் பெற முடியாது.
5. நியாயம்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்!
சாதாரணமாக ஒரு பிரச்சினை நடக்கிறது என்றும், அப்பிரச்சினை குறித்த முழு விபரங்களும் உங்களுக்குத் தெரியும் என்றால், அதில் எது நியாயம் என்பதை நீங்கள் எளிதாக சொல்ல முடியும். இதற்காக நீங்கள் எதையும் படித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றும் பல கிராமங்களில் இப்படிப்பட்ட நியாயத் தீர்ப்புகளை, மக்கள் தேர்ந்தெடுக்கும் பஞ்சாயத்தின் தலைவரே கொடுக்கிறார்கள்.
ஆதலால்தாம், ‘‘மக்கள் தங்களது பிரச்சினைகளை, தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்’’ என மகாத்மா கூட அறிவுருத்தியுள்ளார்.
இப்படி அவர்கள் நடுநிலையோடு கொடுக்கும் தீர்ப்பு எப்படிப் பார்த்தாலும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில்தாம் இருக்கும். ஏனெனில், சட்டமும் அப்படித்தான் இருக்கிறது. இருந்தும், நியாயத் தீர்ப்பை வழங்கியவர், மழைக்காக கூட பள்ளியில் ஒதுங்கியிருக்கமாட்டார்.
ஆனால், அவர்கள் எப்போது நடுநிலை தவறுகிறார்களோ, அப்போதே அது கட்டப்பஞ்சாயத்து என்ற பிரச்சினை எழுந்து, தீர்ப்பு சொன்னவரே, நிதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியதாகி விடும்.
எனக்கு தெரிய வேறு யாரும் ‘‘நியாயம்தான் சட்டம்’’ என்பதை எழுத்துப்பூர்வமான தத்துவமாக முன்மொழியவில்லை. ஆனால், இதன் விபரீதம் புரியாமல், ‘‘கண்ணை கருப்புத் துணியால் கட்டியும், கையில் தராசு கொடுத்தும் நீதிதேவதை என்கிற உருவத்தின் மூலமாக சொன்னார்கள்’’.
நமது அறிவு வறுமை மிக்க நீதிபதிகளோ, தத்தமது இஷ்டம்போல கண்ணை மூடிக் கொண்டு, யார் எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தீர்ப்பு சொல்லலாம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க, சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் என்று புளுகுகிறார்கள்.
சட்டம் சரியாகத்தான் இருக்கிறது. அதை ஒழுங்காகப் படித்து, சரியான, நியாயமான தீர்ப்பை எழுது என்று சொல்லும் விதத்தில், நீதிதேவதையின் இடது கையில் நியாயம்தான் சட்டம் என்கிற நூலையும், வலது கையில் பேனாவையும் கொடுத்து நீதிதேவதையை வடிவமைத்து உள்ளேன்.
மொத்தத்தில், நமது இந்திய சாசனம் (அரசமைப்பு) நியாயமான சட்டத்தையே, ‘‘சட்டம்’’ என கோட்பாடு 13 இன் கீழ் பிரகடனம் செய்கிறது. அப்படியில்லாத சட்டங்கள் எதுவுமே செல்லத்தக்கதல்ல. எனவேதாம், ‘‘நியாயம்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்!’’ என்கிறேன்.
6. வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!
ஒரு குழந்தையை பார்த்து, அதன் மீது அக்கறை கொண்டவர்கள் கேட்கும் கேள்விகளில், எதிர் காலத்தில், நீ வக்கீலா, டாக்டரா, இஞ்சினியரா என்று கேட்பார்கள். இப்படி என்னையும் பலர் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம், நாமே ஒரு மர மண்ட, நம்ம போயி எங்க இதெல்லாம் என்று நினைத்தேன். அதேபோல, பனிரெண்டாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டேன்.
ஆனால், இயந்திரவியல் சம்பந்தமான துறைகளில் ஆர்வம் இருந்ததால், பனிரெண்டாம் வகுப்பில் இயந்திரவியல் துறையையே பாடமாக எடுத்து, ஆர்வத்தோடு படித்து தேர்ச்சியும் பெற்றேன். அதன் பின் வேலைப் பார்த்த பால்மர் லாறி என்கிற கண்டெய்னர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் உலகத்தர வெல்டராக தேர்ச்சி பெற்றேன்.
இப்போது சமூகம் சார்ந்த சட்டங்கள் குறித்த ஆய்வுகளை, நூல்களாக, இதழ்களாக, கட்டுரைகளாக, ஒலியாக, ஒலி ஒளியாக மற்ற பிற வடிவங்களில் எழுத்துகளாகவும், கருத்துகளாகவும் பதிவு செய்து கொண்டு இருக்கிறேன். இதற்காக, கணினியையும், இணையத்தையும் கையாளும் திறனையும் கற்றுக் கொண்டேன்.
எனவே, ஒருவருக்கு எப்போது, எப்படிப்பட்ட சிந்தனைகள் தோண்றும் என்று அவருக்கோ அல்லது மற்ற யாருக்குமோ தெரியாது. ஆதலால், குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அதையே படிக்க வைத்தால், நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்பதற்காகவே, எனது படிப்பு விடயத்தை முன்னிருத்துகிறேன்.
சரி, இப்போது நீங்கள் கேட்ட தொழில்கள் எல்லாம் கவுரவமானதா என்று ஆராய்வோம்.
நாட்டின் ஏழை எளிய, வறிய மக்களை வாட்டி, அவர்களது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுவதில் இம்மூன்று துறைகளுமே முன்னணியில் இருக்கிறது. பொறியாளராக ஆக குறைந்தபட்சம் புளு பிரிண்ட் வரையத் தெரிய வேண்டும். இதேபோல மருத்துவராக, குறைந்தபட்சம் ஊசியாவது போடத் தெரிய வேண்டும். இதேபோல், நீதிக்காக வாதாடும் வக்கீல்களுக்கு குறைந்தபட்சம், ஒருவரின் நியாயத்தை கணித்து அதனை எடுத்துச் சொல்ல தெரிய வேண்டும்.
ஆனால், வக்கீல்களுக்கு தெரிந்ததெல்லாம் பொய்யே! இடைத்தரகே!! ஒருசிறு பொய்யே, நன்மை அளிப்பதாக இருந்தால், பேருண்மை எவ்வளவு நன்மையளிக்கும்! ஆதலால், உண்மையின் மதிப்பு எவ்வளவு என்பதை கூட, உணர மறுக்கும் மற்றும் உணர திறனில்லாத மூடர்களே வக்கீல்கள்.
ஆம்! பொய்யே வக்கீல்களது மூலதனமும், மூடத்தனமும் ஆகும். இதிலேயே, வக்கீல்களது அண்டப் புளுகும், ஆகாசப் புரட்டும் உள்ளடங்கி விடுகிறது.
ஆதலால்தாம், வக்கீல் தொழிலை கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களின் தொழில் என்றும், ஆங்கிலத்தில் Lawyers அல்ல; Liars என்று அழகாகவும், அர்த்தத்தோடும் சொல்கிறோம்.
மகாத்மா காந்தி, எனது கட்சிக்காரருக்கு நியாயமிருக்கிறது என்று எப்படி வாதாடி, நியாயத்தை நிலை நிறுத்த முயன்றாரோ அதுபோலவே, வழக்கின் தன்மைக்கும், நேர்வுக்கும் ஏற்ப, எனது கட்சிக்காரர் குற்றம் அல்லது தவறு புரிந்திருக்கிறார். எனவே, அவருக்கு உரிய தண்டனையை கொடுங்கள் அல்லது அவரது உரிமைகோரும் மனுவை (நான் போட்ட மனுவை) தள்ளுபடி செய்யுங்கள் என இவரது தரப்பின் அநியாயத்தை, (அதாவது, எதிர்தரப்பின் நியாயத்தை) நிலை நிறுத்த ஒருபோதும் தவறியதில்லை.
இதனை, அவரது சுயசரிதையான சத்திய சோதனையில் அறியலாம். இப்படி நியாய, அநியாயத்தை புரிந்து வாதாடிய வக்கீல்கள், உலக வரலாற்றில் வேறு எவருமே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன். இதனால்தாம், இவருக்கு உலகில் வேறு யாருக்குமே கிடைக்காத மகாத்மா பட்டம் கிடைத்ததோ!
அப்படியானால், இன்றைய வக்கீல்கள் யார்?
நன்றாக படிப்பவர்கள் எல்லாம் டாக்டர், இஞ்சினியர், தகவல் தொழில் நுட்பம் போன்ற அறிவு சார்ந்த தொழிலுக்கு சென்று விடுகிறார்கள். அப்படியில்லாதவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் துறையே சட்டத்துறை. இவர்களே பின்னர் நீதிபதியாகிறார்கள் என்பது நீதித்துறையின் நடக்கும் கொடுமைகளின், உச்சகட்ட கொடுமை என்பது 2006 ஆண்டைய நிலைப்பாடு.
ஆனால், தற்போது சட்டப்படிப்பு படிப்பவர்களில் சுமார் அறுபது சதவிதிதத்தினருக்கு மேல் குற்றச்சாற்றப் பட்டவர்களே! தண்டனை அடைந்தவர்களே!! ஆவார்கள். இவர்களால் நேரடியாக படிக்க முடியாத போது, அவர்களது மகன் அல்லது மகளை வக்கீலுக்கு படிக்க வைக்கிறார்கள்.
இதனையே நீதியைத்தேடி… வாசகர்கள் பலரும் செய்துள்ளார்கள். நயினாரின் உலாப்பேசி உரையாடல். இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.நயினார் என்கிற வாசகரின் உலாப்பேசி உரையாடலே நீங்கள் மேலே கேட்டதாகும்.
இப்படி படிக்க வைப்பதன் முக்கிய நோக்கம், நாமெல்லாம் ஒரே வக்கீல் ஜாதி என்றுச் சொல்லி, தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்கிற அறிவு வறுமைச் செயல்தாம்.
நீங்கள், எந்த குற்றத்தை வேண்டுமானாலும் செய்து விட்டு, உங்களின் பலத்தால், பணத்தால், அதிகாரத்தால் நீதிபதிகள் உட்பட யாரை வேண்டுமானாலும் குறுக்கு வழியில் சரிகட்டி தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால், இயற்கையின் தண்டனையில் இருந்து யாரும், எப்பொழுதும் தப்பியதில்லை; தப்பவும் முடியாது.
நான் எவ்வளவுதான் விளக்கமாக சொன்னாலும், சட்டம் புரியவில்லை என்று சொல்வதே பலரின் வாடிக்கையாக இருக்கிறதே, இது ஏன் என ஆராய்ந்தேன். ஆய்வின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது. ஆம், சட்டம் குறித்து எவ்வளவு விளக்கம் சொல்லியும், சுயமாக படித்தும் புரியவில்லை என்றால், அவர்களிடம் போதிய நியாயம் இல்லை அல்லது நியாய உணர்வு அறவே இல்லை என்பதே அம்முடிவு.
அதாவது, தாம் மட்டுமே நூற்றுக்கு நூறு சதவிகிதம் நியாயவான் என்கிற குறுட்டுத்தனமான நம்பிக்கை. வக்கீல்களும், நீதிபதிகளும் நியாயத்திற்காக அல்லாமல் தங்களின் தொழிலுக்காக படிப்பதாலேயே, பட்டம் பெற்ற அவர்களுக்கும் கூட, சட்டம் புரியாத புதிராக இருக்கிறது. இனிமேலும், இப்படியேத்தான் இருக்கும்.
இவ்வளவு சொல்லியும் கூட, வக்கீல்கள் பொய் சொல்லது என்ன அவ்வளவு பெரிய, பேரியக்க குற்றமா என்று நீங்கள் எண்ணலாம். ஆம்! ஒருவர் பொய்ச் செல்வதை மட்டும் விட்டுவிட்டால், அவர் காமுகன், திருடன், அயோக்கியன், கொள்ளைக்காரன், கொலைகாரன் என்று எண்ணிலடங்கா, விவரிக்க முடியாத அத்துனை தீயச் செயல்களில் இருந்தும் விடுபட்டு விடலாம்.
ஆம்! இவைகளுக்கெல்லாம் மூலக்காரணம் பொய்யே! நன்றாக யோசித்துப் பார்த்தால், பொய் என்கிற ஒன்றை விட்டு விட்டவரால், இவற்றில் எதையுமே செய்ய முடியாது என்கிற அடிப்படை உண்மையும் புரியும். அத்தோடு, இதனையே தங்களின் மூலதனமாக வைத்துள்ள வக்கீல்களும், முன் வக்கீலாய் இருந்த நீதிபதிகளும் யார்யார், எப்படிப்பட்டவர்கள் என்பதும் மிக நன்றாகவே விளங்கும்.
ஆதலால்தாம், அப்படிப்பட்ட குற்றங்களை புரிபவர்களுக்காக, வக்கீல்கள் தலைமை தாங்கி வாதாடுகிறார்கள். முன் வக்கீலாய் இருந்த நீதிபதிகள் வக்கீல்களின் வக்காலத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கு மேலும் விளங்கவில்லையென்றால், நீங்கள் விலங்காக இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கையில் சிறந்து விளங்க தகுதியில்லாதவராகத்தாம் இருக்க வேண்டும்.
உண்மையானது, இயல்பாக வருவது. ஆதலால், அதற்கு ஞாபக சக்தி அதிகம் தேவையில்லை. ஆனால், பொய்யானது புனைந்து வருவது. ஆதலால், யாரிடம் என்ன பொய்யை, எதற்காகச் சொன்னோம் என ஞாபகம் வைத்துக் கொள்ள அதீத ஞாபகசக்தி தேவை.
உண்மைக்கு துணையையும், துணிவையும் தரும் அற்புதமான ஞாபக சக்தி, பொய் என்னும் அர்ப்பத்தால், அபகரிக்கப்பட்டு சாகடிக்கப்பட்டு விடுவதால்தான், நம் நல்வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை நம்மால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் போகிறது என்கிற உண்மையை வக்கீல்கள், நீதிபதிகள் மட்டுமல்ல, நாமும் உணராத வரை வாழ்வில் உ(ரு)(று)ப்படவே முடியாது.
எனவே, வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! அது நானாகவே இருந்தாலும் அப்படித்தான். ஆதலால்தாம், நான் வக்கீலாகவோ, நீதிபதியாகவோ விரும்பாமல், சமுதாயத்திற்கு சட்ட விழிப்பறிவுணர்வு ஊட்டுவதையே கடமையாக கருதுகிறேன்.