1. நீ வாழ, நீயே வாதாடு!

நான் உங்களிடம் சட்டம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறேனோ, அதை அப்படியே நமது இயல்பான பேச்சு வழக்கில் புத்தகமாக எழுதியுள்ளேன். ஆதலால், எளிமையாக புரிகிறது. இதன் காரணத்தால், சிவகங்கை மாவட்டம், மான்கொம்பு என்கிற கிராமத்தைச் சேர்ந்த திரு.நெமிலியப்பன் என்பவர், நமது முதல் நூலான குற்ற விசாரணைகளை, நூலகத்தில் எடுத்து படித்து விட்டு, தன் மீது சாற்றப்பட்ட பொய்யான வரதட்சினை வழக்கில், வாதாடி விடுதலையாகி விட்டார்.

இதற்கு முன்பாக, திருப்பத்தூரில் யார் மூத்த வக்கீலோ அவரை நியமித்திருந்தும், அவர் முறையாக வாதாட முன் வராமல், புகார் கொடுத்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இவரை சமரசத்திற்கு அழைக்க, அதனை ஏற்க மறுத்து, ‘‘பொய் வழக்கு என நிருபித்து விடுதலையாக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாதாடி விடுதலையாகி விட்டார்’’.

வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, நான் எப்படியும் சென்னையில்தாம் இருப்பேன் என்று அனுமானித்து, எனது நூல்கள் குறித்தும், தொடர்பு எண் அல்லது முகவரி பெறும் பொறுட்டு, ஒவ்வொரு புத்தககடையாக ஏறியிறங்கியும், பலன் இல்லாததால் திரும்பி போய் விடுகிறார்.

பின் விடுதலையானதும், ‘‘என்னைப் பார்க்காமலேயே செத்து விடுவோமோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டு விடவே’’, மீண்டும் சென்னைக்கு வந்து ஒவ்வொரு புத்தக கடையாக, அனைத்து விபரங்களையும் சொல்லி ஏறி இறங்க, ஏதோ ஒரு கடையில் இவ்விணையதள முகவரியை கொண்டு, என்னை எளிதாக கண்டு பிடித்து விடலாம் என ஆலோசனைச் சொல்லி கணினி மையத்தை தொடர்பு கொள்ள சொல்லியிருக்கிறார்கள்.

உடனே இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா கணினியில் தேடி கண்டு பிடிக்க எவ்வளவு செலவாகும்? அதிகபட்சம் பத்து ரூபாய்தான் கேட்பார்கள் என்று சொல்லவே, அதன்படி, அங்கு சென்ற போது கேட்ட போது, பத்து ரூபாய் வாங்கி கொண்டு எனது உலாப்பேசி எண்ணை தேடிப் பிடித்து கொடுத்துள்ளனர். அதன் பிறகு என்னை தொடர்பு கொண்டு, சந்திக்க வருகிறார்.

ஒரு நூலின் வெளியீட்டாளர் யாரோ அவர்களை தொடர்பு கொண்டால், அந்நூலின் ஆசிரியரை தொடர்பு கொள்ள முடியும் என்கிற புரிதல் கூட இல்லாமல் இருந்தவர், ஒரு குற்ற வழக்கில் வாதாடி விடுதலை பெற்றிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! என்னை தேடி கண்டு பிடிக்கும் வரை, அந்நூலை நூலகத்திற்கு கொடுப்பதில்லை என்று கருதி, அதற்கு மேலட்டை போட்டு, வருடக் கணக்கில் பத்திரமாக வைத்திருந்து, கையோடு கொண்டு வந்து விட்டார். நூல் காணாமல் போய் விட்டது என்று சொல்லி, அதற்குறிய பணத்தை கட்டியிருக்கிறார்.

இருநூறு அடி தூரத்திற்கு முன்பே, என்னைப் பார்த்த சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கிறார். பின் வணக்கம் சொன்னார். அவ்வணக்கம் ஒரு சொற்றொடர்போல் இருந்தது. ஆனால், எதிர்காற்று அடித்ததால் என்ன சொன்னார் என்பது புரியவில்லை. அருகில், வந்ததும் என்ன சொன்னீர்கள் என்று கேட்டேன்.

அவரோ, முதல் வணக்கம் சொன்னேன் என்றார். இல்லையே, ஏதோ சொற்றொடர் போல் சொன்னீர்களே என்றேன். அதுவா, ‘‘திருவாரூர் திருமகனே, பேரளம் பெற்றெடுத்த பெருமகனே வணக்கம்’’ என்றேன் என்றார்.

இவரின் திறமையை சமயோசித்தமாக அந்நொடியே எடை போட்டு விட்டேன். சமயோசித்தமாக அவர் வழக்கில் வாதாடியதாக சொன்ன அனுபவங்களை, அவருக்கே தெரியாமல் ஒலிப்பதிவு செய்து விட்டேன். அப்படி பேசுகையில், அவரின் உடலும் பேசியது. இதனை ரகசிய கேமரா வைத்து எடுத்திருந்தால், அவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

பின், அவ்வொலிப்பதிவை அவருக்கு போட்டுக் காண்பித்த போது, சற்று அதிர்ச்சியாகி விட்டார். அதிர்ச்சிக்கு காரணம், அவ்வழக்கில் யார் யார் எப்படி நடந்து கொண்டார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு மரியாதையும் தந்து பேசியிருந்தார்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சங்கதிகள் பல இருந்தாலும், ‘‘இவர் வாதாடிக் கெண்டிருந்த போது நீதிபதிக்கு பசி எடுத்து விடவே, இன்னுமொரு அரை மணி நேரமாகுமா, சாப்பிட்டு வந்துடட்டுமா என்று இவரிடம் அனுமதி கேட்டுள்ளார், நீதிபதி’’ சபாஷ்!

ஆனாலும், அவ்வொலிப்பதிவை அவருக்கு போட்டுக் காண்பித்த எனது செயல் அவருக்கு மிகவும் பிடித்துப் விட்டது. இதை விட சிறப்பாக பேசுகிறேன். அதனை வெளியிடுங்கள் என கேட்டுக் கொண்டார். எதார்த்தமாக நீங்கள் பேசியதைதாம் நன்றாக இருக்கும் எனச் சொன்னேன்.

இக்கருத்தை அவர் ஏற்றுக் கொண்ட பின்னரே, இக்குறுந்தகடு 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? நூலுடன் வெளியிடப்பட்டது. இரண்டு குறுந்தகடுகளைக் கொண்ட இதன் நன்கொடை ரூ 50 ஆகும். நூல்களோடு சேர்த்து வாங்கினால் கொரியர் செலவு கிடையாது.

2. நீதியா! அநீதியா? நீதிக்குச் சமாதியா?!

நீதித்துறையில் வக்கீல்களாலும், நீதிபதிகளாலும் என்னென்ன குறுக்கீடுகள், அவலங்கள் செய்யப்படுகின்றன என்பதை நீதித்துறையால், பழிவாங்கப்பட்ட ஒரு நீதிபதியே (குற்றவியல் நடுவர்) ஒலி ஒளி வடிவில் ஆதாரப் பூர்வமாக பேசியுள்ளார்.

இவரது பேச்சில் சதி செய்யும் சாதியும், மதம் பிடித்த மதமும் நீதித்துறையில் பரவலாக ஊடுருவி உள்ளதை உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு குற்றவியல் நடுவர் சிறையில் அடைக்கப்பட்டு, மிகக் கொடுமையான முறையில் நடத்தப்பட்டிருப்பது இவராகத்தாம் இருக்க முடியும். இவரைப் பற்றி பிணை எடுப்பது எப்படி என்கிற இண்டாவது நூலில், ‘‘நீதிபதிகள் திருந்த என்ன செய்யனும்’’ என்கிற தலைப்பில் எழுதியுள்ளேன். அதைப் படித்தப் பின்னரே என்னை தொடர்பு கொண்டார்.

குற்றச்சாற்றின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர், எப்படி பதவி உயர்வு பெற தகுதியானார்? பதவி உயர்வு பெற தகுதியான ஒருவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்? இதில் எது உண்மை என்பதுதாம் நான் நூலில் எழுப்பியிருந்த கேள்வி.

2008 ஆம் ஆண்டில், இவர் என்னை முதன் முதலில் தொடர்பு கொண்டு சொன்னது, நீதிபதிகள் திருந்த என்ன செய்யனும் என்ற தலைப்பில் எழுதியுள்ளீர்கள். எனக்கு தெரிந்த ஒரே வழி நீதிபதிகளை செறுப்பால் அடிப்பதுதான் என்றார். யாரோ ஒரு பாதிக்கப்பட்ட பாமரன் பேசுகிறார் என நினைத்து சற்றே அதிர்ச்சியாகி, நீங்கள் யார் என்று கேட்ட போதுதான் அனைத்து விபரங்களையும் சொன்னார்.

முதலில், இவரை திருத்துறைப்பூண்டியில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் தனியறையில் அடைத்து, இவரின் மேல் சிறுநீர் கழித்து, பைத்தியமாகும் அளவிற்கு சித்தரவதை செய்து மகிழ்ந்தவர்கள், பின் இவருக்கு பதவி உயர்வுடன் சிதம்பரத்தில் பணியமர்த்தினர்.

பதவி உயர்வுக்கு பிறகு, இவருக்கு ஓய்வூதியம் கூட கிடைக்க கூடாது என திட்டம் தீட்டி, தற்காலிக வேலை நீக்கமோ அல்லது நிரந்தர பணி நீக்கமோ அல்லது பணி முடிப்போ செய்து ஆவண உத்தரவு எதையும் வழங்காமல், தினக்கூலி வேலைக்கு செல்பவர்களை திடீரென்று வேலை இல்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்புவார்களே அதுபோல் கட்டாய ஓய்வளித்து உள்ளார்கள்.

இவருக்கு கிடைக்க வேண்டிய பணிக்கால பலாபலன்கள் எதுவும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. மீண்டும் வேலைகொடு என்று ஒரு தரப்பாக போராடிக் கொண்டிருந்தவர், எனது ஆலோசனையில் பேரில், என் மீதான குற்றத்தை நிறுபித்து தண்டனை வழங்கு எனவும் போராடி வருகிறார்.

இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தேன். தமிழ்நாடு உள்துறையும், சென்னை உயர் நீதிமன்றமும் சேர்ந்து பற்பல கூத்துகளை, குளறுபடிகளை அறங்கேற்றி உள்ளதை உள்ளங்கை நெல்லிக்கணியாக உணர முடிந்தது. அதன் பிறகே, இதனை ஆவணப்படமாக்க வேண்டும் என ஆக்கி உள்ளேன்.

நீதித்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு பாமரன், அப்படி தன்னை பாதிக்கச் செய்த நீதிபதியை செறுப்பால் அடித்த (சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது செறுப்பு வீச்சு) சம்பவங்கள் பல உண்டு. ஆனால், நீதித்துறையில் பணியாற்றிய ஒருவரே, தனக்கு மேலான நிதிபதிளை செறுப்பால் அடிக்காமல் விடுவதில்லை என்று சொல்வது, எங்கே நடந்து விடுமோ என்றே கருத வேண்டியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, மற்ற நீதித்துறை ஊழியர்கள் போல் அநியாயமாக அல்லாமல், இவரும் ஓரளவு சட்டத்தை மீறி பற்பல காரியங்களைச் செய்துள்ளார். ஆனாலும், அவைகள் எந்த விதத்திலும் அநியாயம் என்று சொல்லுவதற்கில்லை. மாறாக, முள்ளை முள்ளால் எடுப்பது போல, குற்றம் புரிவதையே வாடிக்கையாக கொண்டவர்களுக்கு, இவரும் அதிகாரத்தின் பெயரில் குற்றம் புரிந்து, குற்றத்தால் ஏற்படும் வலியை எடுத்துக் காட்டியுள்ளார் என்பதே என் கருத்து.

எது எப்படி இருப்பினும், நான் அவரை பேட்டி எடுத்தவரை போதிய சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால்தாம் இந்நிலைக்கு சென்றுள்ளார் என்பது எனது முடிவு.

இக்குறுந்தகடு 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? நூலுடன் வெளியிடப்பட்டது. இரண்டு குறுந்தகடுகளைக் கொண்ட இதன் நன்கொடை ரூ 100 ஆகும். நூல்களோடு சேர்த்து வாங்கினால் கொரியர் செலவு கிடையாது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book