உலகில் மற்ற எந்த நாடுகளும் வழங்காத சாதி, மதம், இன, பேத, மொழி ஆகியவைகளை கடந்து ஒருவர் எந்த மதத்தை, இனத்தை,மொழியை, நாட்டை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு அவர்களுடைய நாட்டில் என்னென்ன அடிப்படை உரிமைகள் உண்டோ, அவ்வுரிமைகளை எல்லாம்அப்படியே வழங்கிய ஒரே நாடு என்பதால்தான், உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்ற பெருமைக்குறியதாக திகழ்கிறது, நமது இந்திய தாய்திருநாடு.

ஆனால், உண்மையில் மக்களாட்சி நடக்கிறதா என்றால், மக்களாட்சி என்கிற பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் அவ்வேட்பாளர்களது மனைவி, துணைவி,மக்கள் என நடக்கிறது என்பதே கேள்வியும், பதிலுமாக இருக்கிறது.

தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் புலம்புவதையே வாடிக்கையாகவைத்துள்ளன. இதிலும், ஆளுங்கட்சிகளே அதிகமாக புலம்பும் அளவிற்கு, ஐந்து வருடம் செய்த ஆட்சியின் நம்பிக்கையின்மை இருக்கிறது.

மக்களாட்சி என்றால், மக்களால் பொதுத்தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில், மக்கள் ஏன் பிரச்சினையிலேயே வாழ்கிறார்கள்? என்பதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை பலரும்அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, மக்களாட்சி அரசாங்கத்தை அமைக்க, மாபெரும் பொறுப்புல்ல தேர்தல் ஆணையமேஅறியாமல்தான் இருக்கிறதா அல்லது அறிந்தும், அறியாதது போல நடந்து கொள்கிறதா என்பது தெரியவில்லை.

இந்திய அரசமைப்பு கோட்பாடு 19(1)()-இல், சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வுரிமையின் கீழ் இயற்றப்பட்டசட்டங்களின் அடிப்படையில்தான், சங்கங்கள் மட்டுமல்லாது, அறக்கட்டளைகளும், இயக்கங்களும், மக்களாட்சி அரசை நிறுவ போட்டாப்போட்டி போடும்அரசியல் கட்சிகளும் பதிவு செய்யப்படுகின்றன.

இப்படி பதிவு செய்யப்பட்ட சங்கம், அறக்கட்டளை, இயக்கம், அரசியல் கட்சியில் முக்கியமானதொரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்றால்,பொதுக்குழுவை கூட்டி, அதன் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவை அவசியம் பெற வேண்டும். இதனை ரத்தினச் சுருக்கமாகபெரும்பான்மை பலம் என்பார்கள். இப்பலத்தை பெறவில்லை என்றால், அம்முக்கிய முடிவு நிறைவேறாது முடங்கிப் போய் விடும்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சங்கதியே, மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெற வேண்டிய சங்கத்தில், இயக்கத்தில், கட்சியில் கூடும்அனைவருமே கிட்டத்தட்ட ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பார்கள் அல்லது முக்கிய முடிவை எட்ட வேண்டிய பிரச்சினைக்கு உரிய சங்கதியைப்பொருத்தமட்டில் சிறுபகுதியினர் கருத்து வேறுபட்டவர்களாய் இருப்பார்கள்.

இதில், மேன்மேலும் சச்சரவு வரவோ, வளரவோ கூடாது என்ற அடிப்படையில்தான், முன்றில் இரண்டு பங்கு என்ற பெரும்பான்மை முடிவுநிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ஆட்சியைப் பிடிக்க போட்டா போட்டி போடும் கட்சிகளைப் பொருத்தவரை நாற்காலி கொள்ளைக்காக, கூட்டணி போடுகிறார்களே ஒழிய, அடிப்படைகொள்கைக்காக அல்லவே அல்ல என்பது நானறிந்த விசயமட்டுமன்று; ஊரறிந்த உண்மைதான்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவத்தோடு, தேர்தலுக்கு தேர்தல், மாறிமாறி ஆட்சி செய்யும்இருகட்சிகளில் எக்கட்சியில் நம்மைப் போலவே யார்யார் கூட்டு சேருவார்கள் அல்லது சேருகிறார்கள், அதில் எக்கூட்டணி வெற்றி பெறும் என்பதை மட்டுமேகணித்து, கூட்டணியை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் நாளொரு நட்பு, நடப்பு நிலைப்பாடு நாடே அறிந்த விசயம்தான்.

இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சி என எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்என்றாகி விட்டது.

ஆனால், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம் இதுவரையிலும், மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சிசெய்ததில் எப்போதுமே தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விளங்கும் இருகட்சிகளுக்கு மட்டும் இதுவரையிலும்பொருந்தாமல் போனது ஏனோ?!

இனி பொருந்துவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரியவில்லை. காரணம், வேறு எதுவுமே இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும், இவ்விரு கட்சிகளுக்கும்மக்கள் தங்களின் வாக்குரிமை மூலம், மாறி மாறித்தரும் பெரும்பான்மையும், அங்கீகாரமுமே ஆகும்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம், இது வரை தனிப்பெரும்பான்மையோடு நாட்டை ஆட்சிசெய்துள்ள எதிரெதிர் பிரதாண கட்சிகளு க்கும் பொருந்தி விட்டால், மகத்தான மக்களாட்சிக்கும் மக்களுக்கும் பிரச்சினையே இல்லை.

நம் நாட்டைப் பொருத்தவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஒரு சிலவும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சுமார் ஆயிரத்து முன்னூறு உள்ளனஎன்பது தேர்தல் ஆணையத்தின் அண்மைக்கால அறிக்கை. அரசியல் கட்சிகளின் பதிவு என்பதும், அங்கீகாரம் என்பதும் ஒன்றல்ல, வெவ்வேறானது.

சங்கத்தையோ, அரசியல் கட்சியையோ சட்டப்படி பதிவு செய்ய குறைந்தது ஏழு பேர் இருந்தாலே போதுமானது. ஆனால், அங்கீகாரம் என்பது அப்படியல்ல.அச்சங்கத்தை அல்லது கட்சியை அதனோடு உறவாடுவோர்கள் அங்கீகரிக்க வேண்டும். தமக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் அல்லது நடந்து கொள்ள முயலும்என முதலாளி நம்புகிற தொழிலாளர் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அங்கீகரிக்கிறாரோ அதுபோலவே, நமக்கு நல்லது செய்யும் என நம்புகிற கட்சியைபெரும்பான்மையான மக்கள் தேர்தலின் மூலம் அங்கீகரித்து, ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும்.

பெரும்பான்மையை இழந்த கட்சிகளோ, பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள் தங்கள் இஷ்டம்போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம்என்ற எண்ணத்தில் செய்யும் செயல்பாடுகளை எதிர்த்து, தடுத்த நிறுத்தும் எதிர்கட்சிகளாக இருக்கும். இப்படி, எதிர்கட்சியாக தனது கடமையை செவ்வனேசெய்த அரசியல் கட்சிகள் தாம் அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களால் சாதாரணமாகவே அங்கீகரிக்கப்படும் அல்லது சாதனையாக பெரும்பான்மையோடுஆட்சியில் கூட அமர்த்தப்பட்டுள்ளது.

இதிலும், அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற தகுதியை பெறுவதற்கு, பதிவு செய்யப்பட்ட ஓர் கட்சியானது, ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பதிவான ஒட்டுமொத்த வாக்குப்பதிவில் குறைந்தது 6% வாக்கைப் பெற வேண்டும் என்பது அங்கீகாரத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு கோளாகும்.

இந்த அளவுகோளின்படி, இன்றைய நிலையில், அதாவது கடந்த பொதுத்தேர்தல் முடிவின்படி, தேசிய அளவில் ஏழு கட்சிகளும், தமிழ்நாடு மாநில அளவில்மூன்று கட்சிகளுமே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. மற்றவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரத்திற்காக காலம் காலமாககாத்திருக்கும் அல்லது காலா காலத்திற்கும் காத்திருக்கப் போகும் கட்சிகளே என்ற நிலையில்தான் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எல்லாமேஉள்ளன என்றால் மிகையல்ல.

ஏனெனில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் எல்லாம், தேர்தல் வரும் போது, பிரபல கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அல்லது பிரபல கட்சிவேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டாலே நாம் பிரபலமடைந்து விடுவோம், மக்களால் அங்கீகரிக்கப்பட்டு விடுவோம் என்றகுறுட்டுத்தனமான நம்பிக்கையில்தான் இருக்கிறார்களே ஒழிய, வளர்ந்த கட்சிகள் எப்படி வளர்ந்தன? மக்களால் எப்படி அங்கீகரிக்கப்பட்டன? என்பதைஆராய்ந்தறிந்து அதற்கு ஏற்றபடி, மக்களுக்கான களப்பணியை ஆற்றுவதில்லை.

மாறாக, வளர்ந்து விட்ட அக்கட்சிகள் தற்போது என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனவோ, அதே நிலைப்பாட்டில் தங்களையும் ஒத்த கருத்துள்ளவர்களாய்கூட்டணி கட்சியை தேவைப்படும் போது அல்லது ஆட்சிக்கு ஒருமுறை என மாறிமாறி மாற்றிக் கொள்வதனாலேயே, தேர்தல் களத்தில்தனிப்பெரும்பான்மையோடு வெல்வதும் இல்லை. இனியும் வென்று ஆட்சிக் கட்டிலில் அமரப்போவதும் சாத்தியமில்லை.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியல்லாது மக்களுக்கான களப்பணியோடு, தனியாத அரசியல் ஆர்வத்தில், தனியொரு நபராக, சுயேட்சையாக போட்டியிடும்தன்னார்வலர்களை, எங்கே தங்களைவிட்டு போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் மக்கள் அவர்களை அவ்வளவு எளிதில் அங்கீகரித்து தேர்ந்தெடுப்பதில்லை.

அப்படியே அங்கீகரித்து அனுப்பி வைத்தாலும் கூட, பத்தோடு ஒன்னு, பதிணொன்னு. அத்தோடு இதுவொன்னு என்ற நிலையில்தான் செல்லவேண்டியிருக்கிறதே ஒழிய, சுயேட்சையாக போட்டியிட சுயமாக முடிவெடுத்தது போல், சுயேச்சையாக வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எதையுமே சுயமாகசெய்ய முடிவதில்லை.

போட்டி என்றாலே, அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சரிநிகர் சமம் என்ற அடிப்படையில் வயது, எடை, அறிவு போன்ற ஏதோவொரு வகையில் ஒத்திருக்கவேண்டும் என்பதே நியாயமானது என்பதால், அதுவே விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் தகுதிக்கான அளவு கோலாக நிர்ணயிக்கப்படுகிறது.

விளையாட்டாக விளையாடும் விளையாட்டுக்கே இப்படி தகுதி நிர்ணயிக்கப்படும் போது, அரசாள போட்டி போடுபவர்களுக்கு அனைத்து விதத்திலும் சரிநிகர்சமமான தகுதியை நிர்ணயிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கட்டாய கடமையல்லவா?

ஆனால், அரசாள போட்டி போடும் அரசியல் கட்சிகளின் போட்டியைப் பொருத்தவரை இப்படிப்பட்ட நியாயமான எவ்வித தகுதியுமோ போட்டியாளர்களுக்குநிர்ணயிக்கப் படுவதில்லை. இதனால், பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம், தங்களின் வலிமையை, பலத்தை, தகுதியை, தன்னைவிட அனைத்துவிதத்திலும் தகுதியில் குறைந்த சாதாரண எதிர்கட்சி வேட்பாளரிடம் போட்டி போட்டு நிலைநாட்டும் வெற்றி எப்படி உண்மையான, சரி நிகர் சமமானநியாயமான வெற்றியாக கருத முடியும்?

ஆனாலும், மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்த வேதனையான வெற்றிகள் எல்லாம் கடந்த காலங்களில் ஐம்பதாண்டு சாதனைகளாக சட்டப்பேரவையிலேயே கொண்டாடப் பட்டுள்ளது. இவர்களின் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது, இவர்களே முதல்வராகபொறுப்பேற்று உள்ளார்கள்.

உண்மையில், கட்சியின் தலைவரை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில், யாராவது வெற்றி பெற்றால் மட்டுமே, அது மாபெரும் வெற்றியாகும்.இப்படியும் கூட, நடக்குமா என்ற சந்தேகமே வேண்டாம். இதுவும், தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளது.

எனவே, நியாயமாக பார்க்கப்போனால், அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒரே தொகுதியில் போட்டியிட தேவையான சட்டக் கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சித்தலைவரின் கட்சி வெற்றி பெறும் போது மட்டுமே, அவர் தலைமையிலான ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும்.

ஒருவேளை கூட்டணிக்கட்சி தலைவர் வெற்றி பெற்றால், அவர் தலைமையில் ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும். இவ்விரண்டு சாதக சூழ்நிலைகளும்இல்லாத போது, அதற்கான மாற்று வழிவகைகளையும் செய்ய வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வதன் மூலமே, தொங்கு சட்டமன்ற அல்லது பாராளுமன்ற கூட்டணி ஆட்சியில் நிகழும் குழப்பங்களான, எங்களுக்கு இத்தனை மந்திரிபதவி வேண்டும் அல்லது எங்கள் தலைமையில் இத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம் அல்லது எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், எந்தநேரத்திலும் அரசுக்கு தந்த ஆதரவை விலக்கி கொள்வது மற்றும் பெரும்பான்மையைப் பெற மற்ற கட்சிகளுக்கு விலை பேசுவது போன்ற பல்வேறு கூட்டணிகுழப்பங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பிரபல கட்சித் தலைவர், தன்னை விட தகுதி குறைந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக அல்லது பிரதம அமைச்சராகபொறுப்பேற்பது, மக்களாட்சிக்கான பொதுத்தேர்வு என்னும் பொதுத்தேர்தலில் அடிப்படையில் நிகழும் முதல் தோல்வி என்றால், தேர்தலின் முடிவில்உண்மையில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியே, மறைமுகமாக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்பது மக்களாட்சியின் முடிவான தோல்வியாகஇருக்கிறது. எப்படி?

ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும் போதோ தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலின் முடிவில் ஒருகட்சியோ அல்லது ஒருகட்சியின்தலைமையிலான கூட்டணி கட்சிகளோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. நேர்வுக்கு ஏற்ப அதிகாரம் மிக்க ஆளுநரால் அல்லது குடியரசு தலைவரால்வெற்றி பெற்ற அக்கட்சி அல்லது அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது.

இப்படிப்பட்ட ஆட்சியை அடிப்படையில் மக்கள்தானே தேர்ந்தெடுத்தார்கள். அப்படியானால், ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதை கொடுத்தாலும்,கொடுக்காவிட்டாலும், விலையை ஏற்றினாலும், ஏற்றாவிட்டாலும், தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்பொறுமையாக ஏற்றுக் கொள்வதுதானே வாக்களித்த மக்களின் கடமை!

ஆனால், உண்மையில் மக்களாட்சியில், மக்களாட்சிக்காக வாக்களித்த மக்களின் நிலை என்ன? ஆட்சியாளர்கள் விலையை ஏற்றினாலோ அல்லதுஅத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவில்லை என்றாலோ அல்லது தங்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்றாலோ போராட்டம், ஆர்பாட்டம்,சாலை மறியல் போன்ற சட்டத்துக்கு உட்படாத செயலில் இறங்குவது ஏன்?

இப்படி இறங்கியவர்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளுக்கு நன்றிக்கடனாக தங்களின் தவறுகளை, சட்ட விரோத செயல்களை சரி செய்து நல்லதொருமக்களாட்சியை, மக்களுக்கு விருப்பமான ஆட்சியை நிலைநாட்டுவதுதானே ஆட்சியாளர்களின் கடமை?

ஆனால், உண்மையில், கடந்த காலங்களில் நாமறிந்தவரை என்ன நடந்துள்ளது? மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களாட்சியில், மக்களை மகிழ்ச்சியில்வைத்திருக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள், மக்களின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்துவது, வழக்கு பதிவு செய்து தண்டனையைபெற்றுத்தருவது போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவது ஏன்? இதுதான் வாக்களித்தமைக்கு கொடுக்கும் பரிசா?

முன்னுக்கு பின் முரணான இவ்விரண்டு செயல்பாடுகளுக்கும் அடிப்படை காரணம் என்ன என அடிப்படையில் ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு, மக்கள்தங்களின் வாக்குகளை செலுத்தி, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அம்மக்களை ஆள ஆட்சியில் அமர்த்தப்பட்டிருப்பதுபெரும்பான்மை மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர் என்பதே!

உண்மையாக, தேர்தலில் நான்கு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டி போடுவதாகவும், நூறு சதவிகித வாக்குகள் பதிவாவதாகவும் எடுத்துக் கொள்வோம்.இதில் முதல் கட்சிக்கு 27 வாக்குகளும், இரண்டாவது கட்சிக்கு 25 வாக்குகளும், முன்றாவது மற்றும் நான்காவது கட்சிக்கு சராசரியாக தலா 24 வாக்குகளோஅல்லது ஓரிரு வாக்குகள் ஏறக்குறைய வாக்குகளாகவோ பதிவாகிறது என்று எடுத்துக் கொள்வோம்.

இங்கு 27 வாக்குகளைப் பெற்ற முதல் கட்சிதானே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி செய்ய அமர்த்தப்படுகிறது.ஆனால், உண்மையில் இப்படி அமர்த்தப்படும் கட்சியை எதிர்த்து மற்ற மூன்று கட்சிகளுக்கும் வாக்களித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 73நபர்கள் அல்லவா?

இப்படி, பெரும்பான்மை எதிர்போடும், சிறுபான்மை ஆதரவோடும் நடைபெறும் ஆட்சி எப்படி உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியாகஇருக்க முடியும்?

நான்கு கட்சிகள் போட்டி போட்டு, பொறுப்புணர்வோடு நூறு சதவிகித வாக்குகள் பதிவாகும் மக்களாட்சியே, உண்மையான மக்களாட்சியாக இல்லாத போது,கணக்கிலடங்கா கட்சிகளோடு, சுயேச்சைகள் வேறு போட்டி போடும் பொதுத்தேர்தலில், அதிகபட்சமாக சற்றேறக் குறைய எழுபது சதவிகித வாக்குகளேபதிவாகிற வாக்குப்பதிவில், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்ற உறுதியில்லா மின் வாக்குப்பதிவு, கள்ள வாக்கு, இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கும்வாக்கு, இலவசங்களை கொடுத்து இலவசமாக பெறும் வாக்கு, விருப்பம் இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக பதிவாகும் வாக்கு என பல்வேறு தரப்பட்டவாக்குப்பதிவுகளின் மூலமே வெற்றி பெற்று நடைபெறும் ஆட்சி எப்படி மாண்புமிக்க மக்களாட்சியாக இருக்க முடியும்?

மாறாக, நிச்சயமாக, மனசாட்சி இல்லாத, மக்களின் மதிப்பை பெறாத ஆட்சியாகத்தானே இருக்க முடியும். அன்றன்று; அப்படித்தானே இருக்கிறது.அப்படியானால், உண்மையான நியாயமான, மகத்தான மக்களாட்சி மலர இதில் நாம் சொல்லும் சீர்கேடுகள் எல்லாம் இந்திய அரசமைப்பு மற்றும் மக்கள்பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக களையப்பட வேண்டும்.

இதற்கு முன்னோட்டமாக, இதுவரை நடைப்பெற்ற தேர்தல்களில் எல்லாம் செலுத்தியதை விட, தனது சுய அதிகாரத்தை தேர்தல் ஆணையம், தற்போதையபொதுத்தேர்தலில் முழு முனைப்போடு செலுத்தி, மகத்தான மக்களாட்சி மலர முதற்கட்டமாக களமிறங்கி, சீர்கேடுகளை களையெடுக்க முயற்சிக்க வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book