எனதருமை தமிழர்களே என அழைக்க வேண்டியவர், ‘எருமைத் தமிழர்கள்’ என்று தன் நூலுக்கு மிகத் தைரியமான நெஞ்சுரத்தோடு தலைப்பிட்டு, தமிழர்களால் கொஞ்சங்கொஞ்சமாக அழிக்கப்பட்டு வரும் தமிழைக் காப்பாற்ற, தமிழர்களை அழைத்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் இரா. திருமுருகன்.
இந்நூலில் தொன்மை வாய்ந்த தாய்மொழித் தமிழானது, எப்படி தமிழர்களால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை தனக்கே உரிய உயரிய தமிழ்நடையில் விளக்கியிருக்கும் இவர், இலக்கணம், மொழி வளர்ச்சி, இலக்கியம், பாடல் இசை மற்றும் வரலாறு என்கிற துறைகளின் கீழ் சுமார் முப்பது நூல்களை எழுதியுள்ள இவர், எருமைத் தமிழர்கள் நூலை 1998 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.
இந்நூலில் இருந்து எனக்கு பிடித்த, சிந்திக்க வேண்டிய சில வரிகள்…
ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, நாற்காலிக்கே முதலிடம்; ஆங்கிலத்திற்கு அடுத்த இடம்: தமிழுக்கு மூன்றாமிடந்தான்!
இவர்கள் தமிழ்ப்பயிரை, இந்தி மாடு மேயாமல் வேலி போட்டுக் காப்பதை மட்டுமே தமிழ்ப்பணி என்று நினைக்கிறார்கள். வேலிக்குள்ளே இருந்து பயிரை வயிறார மேய்ந்து வரும் ஆங்கில ஆட்டுக்குத் தண்ணீர் குடிப்பாட்டித் தட்டிக் கொடுக்கிறார்கள்!
தமிழே எழுதப்படிக்கத் தெரியாமல், கையெழுத்தை மட்டும் கோலம் போடுவது போல், தமிழில் போடக் கற்றுக் கொண்டவன் கூட, M. பழனி என்பது போல, அதில் ஓர் ஆங்கில எழுத்தையாவது சேர்த்துக் கொள்வதே பெருமை என நினைக்கிறான். தமிழனின் உயிரணுக்களில் அப்படி ஒரு ஆங்கில அடிமைத்தனம் ஊறிக்கிடக்கிறது!
அன்று 6 ஆம் வகுப்பில் மட்டுமே எட்டிப்பார்த்த ஆங்கிலம், இன்று முன்மழலை வகுப்பிலேயே புகுந்து கொண்டு நம் குழந்தைகளை ஆங்கிலேயர்களாக வளர்த்து வருகின்றது.
முகவரி : ஏழிசைச் சூழல், 62 மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி – 605001