சட்ட விழிப்புணர்வுக்கு மத்திய சட்ட அமைச்சகம் நிதி ஒதுக்குவது குறித்து அறிந்து, கேர் சொசைட்டி சார்பில் அதற்கு விண்ணப்பித்ததில், முன்பாக நான் இணையாசிரியராக எழுதிய நீதியைத்தேடி… இதழை தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்கு வழங்க, முதல் முறையாக 2006 இல் ரூ-15,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

உண்மையில், தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், தன்னார்வ அமைப்புகள் கனிசமான தொகையை ஏப்பம் விட்டு விடுவார்கள். ஆனால், கேர் சொசைட்டியைப் பொறுத்தவரை, அனைவரும் தனியார் நிறுவனங்களில் கை நிறைய ஊதியம் பெருபவர்கள் என்பதால், பல சமயங்களில் அவர்களின் சொந்த பணத்தை, சொசைட்டிக்காக செலவு செய்வார்கள்.

இந்நிலையில், எனது விசாலமான சிந்தனையோ ஒரு மாத இதழை மட்டும் நூலகங்களுக்கு கொடுப்பதால், எவ்வித சட்ட விழிப்பறிவுணர்வும் சமுதாயத்தில் ஏற்பட்டு விடாது என்று தீர்க்கமாக முடிவுக்கு வந்தது. மேலும், எனது பத்து வருட ஆராய்ச்சி திட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகமே அங்கீகாரம் வழங்கி உள்ளதாக உணர்ந்தேன்.

ஆதலால், நீதியைத்தேடி… இதழ்களின் தொகுப்பு நூலாக, அதே பெயரில் அச்சிட்டு வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், கேர் சொசைட்டி அங்கத்தினர்களோ, ‘‘சட்ட அமைச்சகம் இதழாக கொடுக்கச் சொன்னதை, நூலாக கொடுத்தால், ஒப்புக் கொள்வார்களா என்கிற கேள்வியை என் முன் வைத்தனர்’’.

நூலாக கொடுக்கச் சொன்னதை, இதழாக கொடுத்தால், ஊழல் செய்து விட்டதாக நிச்சயம் கேள்வி எழும். ஆனால், இங்கு ஊழல் அல்ல. மாறாக, சூப்பரான சூழல் அல்லவா உருவாகியுள்ளது.

நீங்கள் என்னிடம், ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவுக்கான விளக்கத்தை கேட்கிறீர்கள். அதற்கு நேரடியாக பதில் சொல்லி புரிய வைப்பது சற்றே கடினம் என கருதி, அதற்கு முன்பாக வேறு ஒரு விளக்கத்தை சொல்லிய பின் நீங்கள் கேட்ட விளக்கத்தை சொல்லி எளிதாக புரிய வைத்தால், உண்மையில் நீங்கள் மகிழ்ச்சிதானே அடைவீர்கள்! இதை எப்படி முறையற்றதாக கருத முடியும்? என்றதும் ஒப்புக் கொண்டார்கள்.

இவர்களின் கேள்வியை தவறு என்று சொல்ல முடியாது. ஏனெனில், நான் எதற்காக பணம் கொடுத்தேனோ அதை மட்டும்தான் செய்ய வேண்டும் என அற்பத்தனமாக கேள்வி கேட்கும் அதிபுத்திசாலிகள் அரசாங்கத்தில் இருக்கவே செய்கிறார்கள்.

நூலாக வெளியிடுவதற்கு குறைந்தது மூன்று மடங்கு பணம் தேவை என்கிற இன்னொரு சிக்கலும் எழுந்தது. இதனை நீதியைத்தேடி… இதழால் பலனடைந்த பல்வேறு வாசகர்களிடம் கேட்பது கிடைக்கவில்லை என்றால், பிச்சை எடுத்தாவது நூலாக அச்சடித்து கொடுத்து விட வேண்டும் என்றும் முடிவு செய்து, அதற்கான களப்பணியில் இறங்கினேன்.

நிச்சயம் உதவியிருக்க வேண்டிய, லட்சக் கணக்கில் பலனடைந்த ஒரு சிலர் கண்டு கொள்ளவே இல்லை என்றாலும், பலர் கண்டு கொண்டனர். தங்களால் இயன்றதை கொடுத்தனர். இதில், பலனடையாதோரின் பங்கும் வந்தது. பங்கு நன்கொடை தந்தவர்களில், பாமரர்கள் முதல் முனைவர் பட்டம் பெற்ற வாசகர்கள் மட்டுமல்லாது காவலர்கள், வக்கீல்கள், நீதிபதிகளும் உண்டு.

நமது நூல் வெளியீட்டு விழா புகைப்படத்தோடும், ஐந்து நூல்களோடும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்ததில், அவர்களே ஆச்சரியப்பட்டு போனார்கள். 2007 ஆம் ஆண்டில், நாங்கள் நேரடியாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு செல்ல நேர்ந்த போது, மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று, ஊக்கப்படுத்தியதோடு, இந்தியாவில் இதுவரை யாருமே செய்திராத வகையிலான, எங்களின் (நமது) சிறப்பான சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமைக்கு, கடமையாக 2007 இல் ரூ-30,000 ஆகவும், 2008 இல் ரூ-40,000 ஆகவும், 2009 இல் ரூ-30,000 ஆகவும், 2010 இல் ரூ-60,000 ஆகவும் நிதியுதவி அளித்து எனது திட்டம் நிறைவேற முக்கிய காரணமாய் அமைந்தார்கள்.

எனவே, உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக சட்ட அமைச்சகம் நிதியுதவி வழங்கியது கடமை என்றாலும் கூட, நீதியைத்தேடி… வாசகர்களும், சில தன்னார்வலர்களும் வழங்கிய நிதியுதவிக்கு நீங்கள் என்றென்றும் நன்றிக் கடன்பட்டவர்கள். இச்சட்ட விழிப்பறிவுணர்வு நிச்சயம் சமூகத்திற்கு தேவை என்கிற உள்ளுணர்வு உங்களுக்கு எழுந்தால், உங்களால் இயன்ற வகைகளில் எல்லாம் கடமையாற்றுங்கள்.

கடமையில், தாமே நேரடியாக களப்பணியில் இறங்கி கடமையாற்றுவது அல்லது அப்படி கடமையாற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு தேவையான கடமைகளை செய்வது என்ற இரண்டே கடமைகள்தாம் உள்ளது. இதில், சட்ட அமைச்சகம் இரண்டாவது வகையை தேர்ந்தெடுத்தது.

இதில் நீங்கள் எந்த வகை..?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book