சொல்வேந்தர் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டுள்ளேன். இந்த வகையில் 26-10-2014 அன்றைய தங்களது இந்தநாள், இனியநாள் சொற்பொழிவின் மீதான எனது சட்டரீதியான மறுப்பை பதிவு செய்கிறேன்.

அன்றைய நிகழ்ச்சியில், தாங்கள் சிறந்த நீதியரசர் என நம்பும் பிரபா ஸ்ரீதேவன் அவர்களது ஒரு கட்டுரையை முன் வைத்து சிறையில் அடைப்பட்டு கிடக்கும் கைதிகள் குறித்தும், சட்டத்தின் மொழி குறித்தும், காவலர்கள் மற்றும் பொய்யர்களின் (வக்கீல்களை நான் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள், இடைத்தரகர்கள் என்றும், நீதிபதிகளை நிதிபதிகள் என்றே சொல்லுவேன்) பொறுப்பற்ற தன்மை குறித்தும் பேசியுள்ளீர்கள்.

ஆனால், நிதிபதிகளின் பொறுப்பற்ற தன்மையைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மேலும், தங்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக, நிதிபதி பிரபா ஸ்ரீதேவனை முன்னிருத்தியே பேசினீர்கள் என்பதன் மூலம், தங்களுக்கு சட்டத்தைப்பற்றிய போதிய புரிதலில்லை என்பது தெளிவாக புலனாகிறது. என்னால் இயன்ற அளவு சட்டத்தை தெளிவுபடுத்தும் முயற்சியே இம்மடல்.

உண்மையில், தாங்கள் சிறந்த நீதியரசர் என நம்பும் நிதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர் என்பதற்கு அவர் தீர்ப்புரைத்த வழக்கு எண்ணோடு, செய்த தவறென்ன என்பது குறித்த (கு, க)ட்டுரையை இங்கே படித்துப் பாருங்கள்.

இவர்கள் எந்த காரணத்திற்காக நீதிமன்ற அவமதிப்பில் தண்டித்தார்களோ, சம்பந்தப்பட்ட அந்த குற்றவாளி ஜான் டேவிட்டின் விடுதலை தவறு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இவர் மட்டுமன்று, இந்தியாவில் உள்ள எல்லா நிதிபதிகளுமே இப்படித்தான் என்பதற்கு நம் தமிழகத்தை சேர்ந்த நிதிபதி கேனச் சந்துரு மற்றும் சாதா சிவம் ஆகியோர் குறித்த, ஆதாரப்பூர்வமான இக்குட்டுரைகளை படித்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் அறியாத நானென்ன; நீங்கள் நன்றாகவே அறிந்த மகாத்மா காந்தி, பொய்யர்களையும், நிதிபதிகளையும் ‘‘விபச்சாரிகள்’’ என்றும், பகுத்தறிவுப் பெரியார் ‘‘ஈனப்பிறவிகள்’’ என்றும் குறிப்பிடுவதையும் முதலில் படித்துக் கொள்ளுங்கள். கூடவே, இதே வக்கீல் தொழிலை காந்தி எவ்வாறு செய்தார் என்பதை, ‘‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்ற தலைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் தெளிவுபட வேண்டிய சங்கதிக்கு வருவோம். நியாயந்தான் சட்டம். அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் என்பது நான் முன்மொழிந்துள்ள தத்துவங்களில் ஒன்று. இது குறித்து தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரையிது.

இப்படிப்பட்ட பொய்யர்களின் அறிவாற்றல் எவ்வளவு என்பது, தங்களுக்கு தற்போது விளங்கியிருக்கும். இவர்கள் சட்ட நூலை மொழிபெயர்த்தால் எப்படியிருக்கும்? நீங்கள் சொல்வது போல, சட்டம் கடபுடா என்ற வார்த்தைகளில் இல்லை. வேறாக, அதனை எழுதியவர்கள்தான் கடபுடாக்கள்!

காவல்துறை நினைத்தால் எவர் ஒருவரையும்ல பொய் வழக்கில் உள்ளே வைத்துவிடலாம் என்று எழுதியுள்ளதாக சொல்வதன் மூலம், நீதிமன்றக் காவலில் வைக்க போதிய முகாந்திரம் இருக்கிறது என்று குற்றவியல் நடுவர் அல்லது நிதிபதி கையெழுத்திட வேண்டும் என்பதுகூட தெரியாத பிரபா ஸ்ரீதேவனா, உங்களுக்கு நீதியரசர்?

இதைப்பற்றி நீங்கள் சற்றும் சிந்திக்கவில்லையா? இந்தியாவில் மன்னராட்சியா நடக்கிறது, நீதியரசர் என்பதற்கு? போதிய முகாந்திரம் இல்லாமல் நிதிமன்ற காவலில் வைக்க கையெழுத்திடும் நடுவரை அல்லது நிதிபதியை சட்ட விழிப்பறிவுணர்வுள்ள ஒருவர் எப்படியெல்லாம் வறுவறுயென வறுத்தெடுக்க முடியும் என்பதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குற்ற விசாரணை முறை விதி 167(2) ஒருவரை விசாரணை கைதியாக அறுபது நாட்கள் முதல் தொண்ணூறு நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால், இப்படியொரு சட்ட விதி இருக்கிறதென்பது எந்தவொரு பொய்யருக்கும், நிதிபதிக்கும் தெரியாது என்பதை பலமுறை நிரூபித்து, நீதியைத்தேடி… வாசகர்களை பிணையில் வர வைத்துள்ளேன்.

இதில் உங்களுக்கு சந்தேகமென்றால், உங்களுக்கு தெரிந்த பொய்யர் அல்லது நிதிபதியிடம், பிணையில் வருவதற்கென்று மொத்தம் எத்தனை சட்டவிதிகள் உள்ளனயென்று கேட்டுப்பாருங்கள். 436 முதல் 439 வரை சொல்லுவார்கள். ஆனால், நான் எழுதியுள்ள பிணையெடுப்பது எப்படி நூலில் ஐம்பத்தியிரண்டு சட்ட விதிகளை ஆராய்ந்து எழுதியுள்ளேன். இதில், ஒன்றுதான் 167(2) ஆகும்.

இப்படி, ஏற்கெனவே நூற்றாண்டுகளுக்கும் மேலாக பொய்யர்களும், நிதிபதிகளும் அடிக்கும் சட்டத்துக்கு புறம்பாக கூத்துக்களை கருத்தில் எடுத்துக்கொண்டு, சட்ட விழிப்பறிவுணர்வு என்கிற பெயரில் விழிப்பறிவுணர்வில்லாத தகவலை தங்களைப் போன்ற பிரபலங்கள், ஊடகங்களில் தருவதன் மூலம் மக்களிடையே (பீ, பே)தியையும் ஏற்படுத்தி வருகிறீர்கள்.

எனவே, இதுகுறித்து உண்மையை ‘அதே இந்தநாள் இனியநாள்’ பகுதியில் தகவலைச் சொன்னால், தாங்கள் அடைந்த இந்த சட்ட விழிப்பறிவுணர்வை, தங்களின் ஆதரவாளர்களும் அடைவார்கள். செய்வீர்கள் என நம்புகிறேன். எது எப்படியிருப்பினும், இதனை எனது ‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’ நூலில் பதிவு செய்ய உள்ளேன். நன்றி!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book